ஆசியா வுக்கான விஜயத்தை மேற்கொண்டு இந்தியா வந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நேற்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்தார். புதுடில்லியில் ஒபாமாவுக்கு இராஜ மரியாதை வழங்கப்பட்டது. செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்ட பின்னர் 21 மரியாதை வேட்டுக்களும் தீர்க்கப்பட்டன.
இந்தியா இன்றைய உலகில் சிறிய நாடாக தோன்றவில்லை. உலக வல்லரசுகளில் ஒன்றாக மாறிவருகின்றது. பயங்கரவாதத்தை ஒழித்தல், அமைதியை நிலை நாட்டுதல் அமெரிக்க இந்திய வர்த்தக உறவுகளை மேம்படுத்தல் என்பவற்றில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றும். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுடன் உறவு வைப்பதில் அமெரிக்கா பெருமையடைகின்றது என்றும் பராக் ஒபாமா உரையாற்றினார். இந்தியப் பிரதமரைச் சந்தித்த பின்னர் ஒபாமா இந்தியப் பாராளுமன்றத்திலும் உரையாற்றினார்.
ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமையைப் பெற்றுத் தருவதில் அமெரிக்காவின் அபிலாஷை என்னவென்பதையறிவதில் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் அக்கறையாயிருந்தனர். பிரதமரின் இல்லத்தில் இராப்போசன விருந்திலும் ஒபாமா கலந்து கொண்டார். இந்தியாவின் வளர்ச்சி ஐ.நா பாதுகாப்புச் சபையில் அந்நாடு அங்கம் பெறும் சூழலை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவுக்கு ஒபாமா வருவதையொட்டி கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அத்துடன் முக்கியமான உடன்படிக்கைகளும் கைச்சாத்தாகின. அணு உலைகளை அமைப்பது, அணு பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் இந்தியாவைச் சம்மதிக்க வைப்பது, அயல்நாடுகளின் பயங்கரவாத அச்சுறுத்தலை ஒழிப்பது, போன்ற விடயங்கள் இங்கு விசேட கவனமெடுக்கப்பட்டன.
பராக் ஒபாமா இந்தியாவுக்கு விஜயம் செய்ததை பாகிஸ்தான் பெரிதாக விரும்பவில்லை. ஒபாமா பாகிஸ்தான் வரவேண்டுமென்பது இஸ்லாமாபாத்தின் எதிர்பார்ப்பாகும் அத்துடன் சீனாவும் ஒபாமாவின் இந்திய விஜயத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.