‘இலங்கையின் தமிழ் கல்விச் சமூகம்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பார்வை’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ள யாழ் பல்கலைக்கழகம் பற்றி நான் (த ஜெயபாலன்) எழுதிய முன்னுரை இங்கு பதிவிடப்படுகிறது. தேசம்நெற் இல் யாழப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பாக நான் எழுதிய நான்கு கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் இலங்கையில் வெளிவந்துள்ளது. இந்நூலுக்கான அணிந்துரையாக தேசம்நெற் வாசகர்களின் கருத்துக்கள் சில நூலின் இறுதியில் பதிவிடப்பட்டு உள்ளது.
இந்த நூலின் மின்னியல் வடிவம்: UoJ_A_View_By_Jeyabalan_T
._._._._._.
தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கான மே 18, 2009 வரையான தமிழீழ விடுதலைப் போராட்டம், அம்மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு மாறாக உரிமைகள் பறிக்கப்படுகின்ற நிலையையே ஏற்படுத்தியது. மேலும் முப்பது ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட போராட்டமானது பல பத்து ஆண்டுகளுக்குத் தமிழ் மக்களைப் பின்நோக்கித் தள்ளியுள்ளது.
பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களும் சீராக இயங்கினால் மாணவர்கள் இளைஞர்கள் போராட வர மாட்டார்கள் என்பதனை தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் ஒரு கொள்கையாகவே ஏற்றுக்கொண்டனர். இவற்றின் விளைவாகவும் தொடர்ச்சியான யுத்தம் காரணமாகவும் தமிழ்ப் பிரதேசங்களின் கல்விநிலை வீழ்ச்சியடைந்தமை எதிர்வுகூறப்பட்ட ஒன்றே.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இருந்த முரண்நகை என்னவென்றால், தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், அந்த சமூகம் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கு வாய்பாக அமையக் கூடிய கல்வியைத் தொடர்ச்சியாக நிராகரித்தது. அடிப்படை அறிவும் அடிப்படைச் சிந்தனைத் தெளிவுமற்ற மாணவர்கள், இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதற்கு அணி சேர்க்கப்பட்டனர்.
கல்விக் கட்டமைப்புகள் ஆயுதம் தாங்கியவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. கல்விச் சமூகத்தின் உள்ளுணர்வு சிதைக்கப்பட்டு ஆயுதங்களின் கீழ் கல்வி தனது அவசியத்தினை இழந்தது. ஆனால் இன்றோ தமிழ் மக்கள் தங்களைத் தற்காத்துக் கொளவதற்கென இருந்த கல்வி வளத்தையும் சிதைத்துவிட்டு ஆயுதங்கள் மௌனமாகிவிட்டன. இவை மௌனமாக்கப்பட வேண்டியவையே. ஆனால் இந்த ஆயுதங்களால் ஆளப்பட்ட தமிழ் மக்களும் மௌனமாக்கப்பட்டு விட்டனர்.
இலங்கையிலும் சரி, பிரித்தானியாவிலும் சரி, உலகின் எப்பாகத்திலானாலும் சரி ஒரு பெரும்பான்மைச் சமூகத்தினுள் வாழ்கின்ற சிறுபான்மைச் சமூகம் தன்னை தற்காத்துக்கொள்ளவும் தனது உரிமைகளை உறுதிப்படுத்திக் கொள்ளவும் மிகக் கடுமையாகப் போராட வேண்டியுள்ளது. இப்போராட்டமானது பலவகைப்பட்டதானாலும் ஒரு சமூகம் கல்வியில் உயர்நிலையை அடைகின்ற போது அச்சமூகம் தன்னைத் தற்காத்துக் கொள்கின்ற பலத்தினைப் பெறுகின்றது. பொருளாதார வளர்ச்சியின் அடிப்படை அம்சமாக தற்போது கல்வி அமைந்துள்ளது. கல்வியும் பொருளாதாரமும் ஒன்றுடன் ஒன்று நெருக்கமான உறவைக் கொண்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் அதன் இராணுவ பலத்தைக் கட்டி அமைக்க செலவிடப்பட்ட வளங்களை தமிழ்ச் சமூகத்தின் கல்வி வளர்ச்சியை நோக்கித் திருப்பியிருந்தால் இலங்கை வாழ் தமிழ் சமூகத்தின் நிலை இவ்வளவு கீழ் நிலைக்குச் சென்றிருக்க மாட்டாது. இலங்கைத் தமிழ் சமூகம் இன்று அறிவியல் வறுமையாலும் உள்ளுணர்வின் வரட்சியாலும் மிகவும் பாதிக்கப்படுகின்றது.
இதனை மாற்றி அமைப்பதற்கு தமிழ்ச்சமூகம் தன்னை மீண்டும் தற்காத்துக் கொள்ளும் நிலையை எய்துவதற்கும் தனது உரிமைகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் அச்சமூகம் தனது கல்விநிலையை உயர்த்திக்கொள்ள வேண்டும். அது பொருளாதார மீட்சியையும் உறுதிப்படுத்தும்.
தமிழ் மக்கள் தங்கள் கல்விநிலையை உயர்த்திக்கொள்ளக் கல்விக் கட்டமைப்புகள் சீரமைக்கப்பட வேண்டும். கல்விக் கட்டமைப்புகள் சீரமைக்கப்படுவது என்பது கல்லும் சீமெந்துக் கலவையும் கொண்ட கட்டடங்களையல்ல. அகநிலை கட்டமைப்புகள் மறு சீரமைக்கப்பட வேண்டும்.
இதனை தமிழ் சமூகத்தின் உயர்ந்த கல்வி ஸ்தாபனமாக விளங்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பிப்பதே பொருத்தமானதாக அமையும். தமிழீழ விடுதலைப் போராட்டம் சீரழித்த கல்விக் கட்டமைப்புகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் முக்கியமானது. இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அதன் எல்லா அம்சங்களிலுமே கீழ்நிலையிலேயே உள்ளது. அதற்கு புறக் காரணிகளிலும் பார்க்க அகக்காரணிகளே பெரும்பாலும் காரணமாக உள்ளதனை இந்நூலில் உள்ள கட்டுரைகளில் காணலாம்.
பிரித்தானியா போன்ற நாடுகளில் ஒரு மாணவன் அல்லது மாணவி பல்கலைக்கழகம் செல்வது என்பது பெரும்பாலும் அம்மாணவனுடையதோ அல்லது மாணவியினுடையதோ தெரிவாகவுள்ளது. ஒவ்வொரு மாணவனுக்கும் அதற்கான வாய்ப்பு பெரும்பாலும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையில் அவ்வாறு இல்லை. பல்கலைக்கழகம் செல்வது என்பது மாணவ, மாணவியரின் கனவு. மிகக் கடுமையான போட்டியினூடாக மிகக் குறைந்த விகிதமான மாணவ, மாணவிகளே பல்கலைக்கழகம் செல்கின்றனர். அதற்கு இம்மாணவ, மாணவிகளும் அவர்களின் பெற்றோர்களும் மேற்கொள்ளும் அர்ப்பணிப்பு மிக உயர்ந்ததாக உள்ளது.
இவ்வாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சென்றோர் எதிர்கொண்ட பிரச்சினைகளே இந்நூலை உருவாக்கக் காரணமானது. இலங்கைத் தமிழ்ச் சமூகமானது அதன் வரலாற்றில் மிக இக்கட்டான காலகட்டம் ஒன்றில் சிக்கியுள்ளது. இந்நிலையில் இச்சமூகத்தின் உயர்ந்த கல்வி ஸ்தாபனமான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமானது தற்போதைய அதன் கீழான நிலையில் இருந்து மீட்டெடுக்கப்பட வேண்டியது மிக அவசியமானது.
அதற்கான ஒரு வாய்ப்பாக யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தின் உபவேந்தருக்கான தெரிவு நவம்பர் 2010ல் இடம்பெற இருக்கின்றது. புதிய உப வேந்தரைத் தெரிவு செய்யும் தகைமையுடைய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கவுன்சில் அங்கத்தவர்கள் இத்தெரிவை மிகவும் பொறுப்புடன் மேற்கொள்ளவேண்டும். யாழ் பல்கலைக்கழகத்தின் இலக்கையும் தொலைநோக்குப் பார்வையையும் முன்னெடுத்துச் செல்லும் கல்வியியல் ஆளுமையும் முகாமைத்துவத் திறமையும் உடையவரை அவரது தகைமையின் அடிப்படையில் மட்டும் தெரிவு செய்ய வேண்டும் என்று தமிழ்க் கல்விச் சமூகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
த ஜெயபாலன்
ஆசிரியர், தேசம்நெற்.
நவம்பர் 09, 2010.
அண்மைக் காலமாக தேசம்நெற் இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பாக வெளியிடப்பட்ட பதிவுகள்:
மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்
யாழ் பல்கலைக்கழகம் – முப்பத்தாறு வருடங்கள் – முழுமையான சீரழிவு : நட்சத்திரன் செவ்விந்தியன்
தவித்துக் கொண்டிருக்கும் நமது சமூகத்திற்காய் உழைப்போம்: யாழ் பல்கலை. மாணவர் ஒன்றியம்
பேராசிரியர் கைலாசபதி: ஒரு பெரு விருட்சமும் சில சிறு செடிகளும் : கரவை ஜெயம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பார்வை நூலுக்கான முன்னுரை : த ஜெயபாலன்
Jeyarajah
யாழ் பல்கலைக்கழகம் சம்பந்தமாக ஜெயபாலனின் விடாமுயற்சியும் அயராத பங்களிப்பும் நல்ல பயனைத்தரும் என்பதே கல்வி நலன் சார்ந்தவர்களின் விருப்பம். எனவே யாழ் பல்கலைக் கழகம் சம்பந்தமாக தொடர்பு உடையவர்கள் தங்களின் தொடர்புகள் மூலமாவது அந்தப் 13 பேருக்கும் உங்கள் ஆலோசனைகளையும் நேர்மையான கருத்துக்களையும் தெரிவியுங்கள். அது எங்கள் எல்லோரின் கடமையாகும்.
Nathan
ஜெயபாலன்,
உங்களின் யாழ் பல்கலைக்கழகம் பற்றிய கட்டுரைகள் சமூக பெறுப்புணர்வோடு எழுதப்பட்டவை என நினைக்கிறேன். ஆனால் உங்களி வாதங்கள் அனைத்துமே சரியானவை அல்ல. உதாரணமாக
//பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களும் சீராக இயங்கினால் மாணவர்கள் இளைஞர்கள் போராட வர மாட்டார்கள் என்பதனை தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் ஒரு கொள்கையாகவே ஏற்றுக்கொண்டனர். //
இது தவறான வாதம். யாழில் புலிகளுடைய ஆட்சியில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக செயற்பாடுகள் சிறப்பாகவே இருந்தன. A/L 93 batch இல் கணிதத்துறையில் அகில இலங்கையில் முதலிடமும் A/L 95 batch இல் அதே துறையில் இரண்டாமிடமும் யாழ் மாணவருக்கே கிடைத்டதது. இவை எனது நினைவில் உள்ளவை ஆனால் இதைவிட பல இடங்களை அகில இஙை;கை ரீதியாக யாழ் மாணவர்கள் தட்டிச்சென்றுள்ளனர். இவையனைத்தும் யாழ்ப்பாணம் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்தபோதே நடந்தது. பல சன சழூக நிலையங்கள் மின்பறப்பாக்கி ழூலம் இரவில் மின் வழங்கி மாணவர்களுக்கு படிக்க வசதிசெய்ய புலிகளின் கல்விக் கழகமே இலவசமாய் எரிபொருள் வழங்கி உதவி செய்தது. உண்மையில் புலிகள் யாழ்ப்பத்தை விட்டகன்ற பின்பு யாழ் மாவட்டம் கல்வியில் சாதித்தது மிகச் சொற்பமே எனலாம். இதற்கு திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்படும் கலாச்சார சீர்கேடும் ஒருகரணம். புலிகளின் காலத்தில் இவை இருக்கவில்லை. அடிக்கடி குண்டுபோடும் விமானங்கழும் இரவில் கூவும் எறி கணைகழுமே கல்வியை பாதித்தது எனலாம்;
மற்றெரு அடிப்படையில்லா வாதம்
//தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இருந்த முரண்நகை என்னவென்றால், தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், அந்த சமூகம் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கு வாய்பாக அமையக் கூடிய கல்வியைத் தொடர்ச்சியாக நிராகரித்தது. அடிப்படை அறிவும் அடிப்படைச் சிந்தனைத் தெளிவுமற்ற மாணவர்கள், இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதற்கு அணி சேர்க்கப்பட்டனர்.//
புலிகளில் இருந்தவர்கள் அனைவரும் கல்வி அறிவில்லாதவர்களில்லை. தியாகி திலீபன் லெப் கேணல் சந்தோசம் போன்றோர் பல்கலைக்கழக கல்வியை இடையில் விட்டு போராட்டத்தில் இணைந்தவர்கள். இதைவிட மறைந்த பேரசிரியர் துரைராஐh போன்ற பல கல்விமான்கள் வெளியே நின்று போரட்டத்திற்கு ஆதரவு வழங்கினர்.
உங்கள் வாதத்தில் இவர்கள் அறிவு அற்றவர்களா? பல்கலைக்கழகங்கள் போனவர்கள் மட்டும் தான் தான் அறிவாளிகளா?
ஆயுதம் ஏந்தியவர்கள் பலர் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் ஆயுதம் தரித்தார்களே அன்றி பாடசாலை போகாததாலோ பல்கலைக்கழகம் போகாததாலோ அல்ல.
உங்கள் கட்டுரையின் நோக்கம் யாழ் பல்கலைக்கழகத்தை செப்பனிடுவதாக இருந்தால் அதை நேர்மையாக செய்யுங்கள். அதை விடுத்து போகிற போக்கில் புலிகளையும் போட்டுத் தாக்குவதால் கட்டுரையின் நோக்கம் மாற வாய்ப்புண்டு.