நூலகம்

நூலகம்

நூல்கள் அறிமுகம், விமர்சனம் மற்றும் நூல் வெளியீட்டு விழாக்கள் பற்றிய பதிவுகளும் செய்திகளும்.

இலங்கைத் தமிழ் ஆவணங்கள்: ஆவணப்படுத்துதல் – வரலாறு – அதன் முக்கியத்துவம்: இராசையா மகேஸ்வரன்

இராசையா மகேஸ்வரன், B.A(Hons), Master of Library & Information Science சிரேஷ்ட துணைநூலகர், பேராதனை பல்கலைக்கழகம், இலங்கை.

அறிமுகம்:
உலகில் சகல நாடுகளிலும் ஆவணக்காப்பகங்கள் உண்டு. ஆவணக்காப்பகங்கள் என்பது குறிப்பேடுகளை, வெளியீடுகளை தொகுத்து வைத்து பாதுகாக்கும் இடமாகும். இன்றைய ஆவணங் களை வருங்காலத்தவர்களுக்கு பாதுகாத்து வழங்குவது இதன் பணிகளுள் முக்கியமானதாகும். இலங்கையில் ஆவணப்பாதுகாப்புக்கு நீண்டகால வரலாறு உண்டு. மூன்றாம் நூற்றாண்டில் மன்னர்காலந்தொட்டு இலங்கையின் பௌத்தமடாலயங்களிலும், கோயில்களிலும், நூல்கள் பாதுகாக்கப்பட்டும், பயிலப்பட்டும் வந்துள்ளன. மகாவிகாரைகள், அபயகிரி விகாரை ஆகியன ஆவணப்பாதுகாப்பு நிலையங்களாக விளங்கியிருந்தன. இலங்கையில் 3ம் நூற்றாண்டு முதல் ஆவணப்பாதுகாப்பு ஆரம்பிக்கப்பட்ட போதும் ஐரோப்பிய ஆட்சிக்காலத்திலேயே 16ம் நூற்றாண்டில் ஆவணப்படுத்துதல், நூலகம் என்பன முறைப்படி ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பண்டைக்காலத்தில் மன்னர்களால் வழங்கப்பட்டவை குறித்துவைத்த ஆவணம்“பின்பொத்” (Pinpoth) என அழைக்கப்பட்டது. இதனை வைத்துக்காத்தவர் “பொத் வருன்” (Poth Varun) நூல்காப்பாளர் என அழைக்கப்பட்டுள்ளனர். கோட்டை இராச்சியகாலத்தில் (1415 -1597) மன்னரால் வழங்கப்பட்ட வாய்மூல தண்டனைகளைக் குறித்துவைத்த “முகவெட்டி” (Mukavetti) என்ற ஆவணம் பயன்படுத்தப்பட்டதாவும், கண்டி இராச்சியகாலத்தில் ஆவணங்களை ‘மகாமோட்டி’ (Mahamoutti) பாதுகாத்ததாக வரலாறுகளில் காணப்படுகின்றன. இக்காலத்தில் மன்னர்கள் கொடையாக வழங்கிய காணிகளுக்கான ஓலைச்சீட்டு (olai Sittu’ , ‘Cul Put’) என அழைக்கப்பட்டதுடன் இவ்வாவணங்களை எழுதுபவரும், பாதுகாப்பவரும் ‘எழுதுனர்’ (liannah) எனவும் அழைக்கப்பட்டதாகவும் வரலாற்றில் காணப்படுகின்றது. அநுராதபுரகாலத்தில் (300-1017) மன்னரது இராச்சிய நிதிக்கணக்குகள் ‘பண்டக பொத்தகம்’ (Pandaka–Pottagam) என அழைக்கப்பட்டுள்ளது. அதேபோல் வரிஅறவிட்டவை ‘வரி பொத்தகம்’ (Vari-Pottagam) என அழைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வரலாற்றினை கூறும் மகா வம்சம், சூலவம்சம் என்பன தீபவம்சம் (Dipawamsa, Attakatha) எனும் 4ம்-6ம் நூற்றாண்டு ஆவண ஏடுகளைத் துணைக்கொண்டு எழுதப்பட்டுள்ளன.

போர்த்துக்கேயரே (1515-1656) ஆவணப்படுத்துதலை 16ம் நூற்றாண்டில் ஆரம்பித்துள்ளனர். ஓல்லாந்தர் (1640 – 1796) போர்த்துக்கேயரிடமிருந்து கொழும்பை 1656இல் கைப்பற்றியபோது ஆவணப்படுத்தப்பட்ட ஆவணங்களை கையளிக்கமறுத்து போத்துக்கேயர்கள் அழித்துள்ளனர். ஓல்லாந்தர் 1660-1662 காலப்பகுதியில் ஆவணப்படுத்துனர் (Record Keeper – Mr.Pieter de Bitter) நியமிக்கப்பட்டுள்ளார். இக்காலத்தில் பல நிர்வாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு காலி, யாழ்ப்பாணம், திருகோணமலை, கொழும்பு என ஆவணப் படுத்துதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒல்லாந்தர்களிடமிருந்து பிரித்தானியர் (1796-1947) இலங்கையை கைப்பற்றிய போது 1798 இல் ஒல்லாந்தரினால் (டச்சுக்காரர்) ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளன. 1815இல் கண்டிஇராச்சியம் பிரித்தானியரால் கைப்பற்றப்பட்டபோது கண்டி ஆவணங்கள், அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் மாவட்டக்காரியாலயங்களில் ஆவணக்காப்பாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். 1870களில் நூலகங்களும், 1877ல் நூதனசாலையும் நூலகமும் (Museum and Library) ஆரம்பிக்கப்பட்ட பின் உள்ளுர் வெளியீடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. அச்சகம் மற்றும் வெளியீட்டாளர் சட்டம் 1885ல் கொண்டு வரப்பட்டுள்ளது. இலங்கை 19ம் நூற்றாண்டிலே நூல்கள் ஆவணப்படுத்தலை ஆரம்பித்துள்ளது. 1902ம் ஆண்டு ஆவணக்காப்பாளர் பதவிக்கு ஒருவர் நியமிக்கப்பட்டு கொழும்புக் கச்சேரியில் ஓர் அலுவலகமும் அமைக்கப்பட்டுள்ளது. 1902ம் ஆண்டு ஆவணப்படுத்தலில் ஒரு திருப்புமுனையாக ஆவணப்படுத்தல் மீண்டும் மாவட்டமட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கண்டி, யாழ்ப்பாணம், காலி, கொழும்பு ஆகிய இடங்களில் நூதனசாலைகள் (Museums) ஏற்படுத்தப்பட்டுள்ளன. 1942-1943 காலப்பகுதியில் 2ம் உலகயுத்தகாலத்தில், ஜப்பான் கொழுப்பில் குண்டுபோட்டதால், ஆவணக்காப்பகம் கொழும்பிலிருந்து நுவரெலியாவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதேவேளை பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் (1876-1947) காலனித்துவநாடுகளின் வெளியீடுகள் காலனித்துவ பதிப்புரிமைச்சட்டத்தின் கீழ் (Colonial copy right Act) சேர்க்கப்பட்டு பிரித்தானிய நூதனசாலையில் ஆவணப்படுத்தப்பட்டது.

1796 இலிருந்து 1948 வரையிலான காலப்பகுதி வெளியீடுகள், ஆவணங்கள் பிரித்தானியாவில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. 1947 இலங்கை சுதந்திரம் பெற்றபின், சிலகாலம் கல்வியமைச்சின் கீழ் ஆவணக்காப்பகம் காணப்பட்டுள்ளது. 1951இல் அச்சக பதிப்புச்சட்டம் (“Printing press ordinance” 1951–20ம் சட்டம்) கொண்டுவரப்பட்டுள்ளது. 1952 இல் இலங்கை தேசிய நூல்விபரப் பட்டியலுக்கான உபஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்ட பின், கல்வி அமைச்சிலிருந்து ஆவணக்காப்பகம் உள்ளுராட்சி மற்றும் கலாசாரஅமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. 1962இல் முதலாவது தேசிய நூற்பட்டியல் பேராதனைப் பல்கலைக்கழகத்திலிருந்தே வெளியிடப் பட்டதுடன், இதன் வெளியீட்டுக்கு பிரித்தானிய தேசியநூல் விபரப்பட்டியலின் பிரதமஆசிரியர் திரு.எ.ஜெ.வேல்ஜ்ஜின் சேவையும் பெறப்பட்டுள்ளது. 1963 தொடக்கம் வித்தியலங்கார பல்கலைக்கழகத்தில் ஆவணங்கள் ஆவணப்படுத்தப்பட்டு 1975இல் ஆவணக்காப்பகம் பதியகட்டிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. 1974ஆம் ஆண்டிலிருந்து தேசியநூற்பட்டியல் தேசியசுவடிகள் திணைக்களத்திலிருந்து தேசியநூலகசபை பொறுப்பில் விடப்பட்டுள்ளது.

இத்தேசிய நூற்பட்டியல் சட்டவைப்பு நூற்சேர்க்கையின் அடிப்படையில் தயாரிக்கப்படுகின்றது. 1962 தொடக்கம் 1974ஆம் ஆண்டு வரையிலான தேசியநூற்பட்டியல் தேசியசுவடிகள் திணைக்களத் தினால் வெளியிடப்பட்டுள்ளது. 1974ஆம் ஆண்டு 48ஆம் இலக்கச்சட்டத்தின் மூலம் இத்திணைக் களம் தேசிய ஆவணக்காப்பகம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதன் நோக்கம், 1974ஆம் ஆணடு 48ஆம் இலக்கச்சட்டத்திலும், 1981ம் ஆண்டு 30ஆவது இலக்கச்சட்டத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 1885ஆம் ஆண்டின் அச்சகம் வெளியீட்டு பதிவுச்சட்டத்திற்கு அமைவாக, அச்சகங்களும் வெளியீட் டாளர்களும் சகல நூல்களினதும் பிரதிகள் ஐந்தினை வழங்கவேண்டும். இதில் ஒரு பிரதி 1973க்குப் பின், தேசியநூலகசபைக்கு வழங்கப்பட வேண்டும். இன்னுமோர் பிரதி 1952இலிருந்து போராதனை பல்கலைக் கழகநூலகத்திலும், ஒரு பிரதி சுவடிகள் திணைக்களத்திலும் சட்டச்சேர்க்கையாக (Legal depository) ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

1951 அச்சக வெளியீட்டாளர்கள் சட்டத்தின் பின், 1973இல், 45வது சட்டமாக தேசியசுவடிகள் சட்டம் (The National Archives Low no 48, 1973) கொண்டுவரப்பட்டது. 1973இல், 51வது சரத்துக் கேற்ப இலங்கை தேசிய நூலகசேவைகள் சபை(The Sri Lanka National Library service Board), ஸ்தாபிக்கப்பட்ட பின், இலங்கையில் வெளியிடப்படும் சகல வெளியீடுகளும் சட்டப்படி இச்சபை மூலம் ஆவணப்படுத்தப்பட்டுவருகின்றன. 1976 இல் இலங்கை தேசியநூலகசேவைகள் (The Sri Lanka National Library service), உருவாக்கப்பட்டதுடன் 1990 ஆம் ஆண்டில் இலங்கை தேசிய நூலகம் (The Sri Lanka National Library), ஆரம்பிக்கப்பட்டது. 1986ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் வெளியிடப்படும் நூல்களுக்கு சர்வதேசதராதர நூல்எண் (ISBN) வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இலங்கையில் சர்வதேசதராதர நூல்எண் (ISBN) பெற்றுக்கொண்டால் மாத்திரமே இலங்கை தேசிய நூற்பட்டியலில் (National Bibliography) பதியப்படுகின்றது. இலங்கையைச்சேருந்தவர்கள் சர்வதேசதராதரநூல் எண்களை (ISBN) வேறு நாடுகளில் பெற்றுக் கொண்டால் இலங்கையரது நூலாயினும் இலங்கை தேசியநூற்பட்டியலில் பதியப்படுவதில்லை.

இலங்கை உள்நாட்டு யுத்தம் நடைபெற்றகாலத்தில் ‘தமிழ் ஈழம்’ பிரதேசத்தின் வெளியீடுகள், ஆவணங்கள் தமிழ்ஈழவிடுதலை போராட்ட இயக்கங்களின் மூலம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இவை 2009இல் நடைபெற்ற யுத்தத்தினால் அழிந்துள்ளதாகக் கருதப்படுகின்றது. இதேபோல் யாழ்ப்பாணம் குரும்பசிட்டி கனகரத்தினம் என்னும் தனிநபரால் ஆவணப்படுத்தப்பட்ட தமிழ்ஆவணங்கள் பற்றிய தகவல்களையும் அறிந்துகொள்ள முடியவில்லை.

ஆய்வின் பிரச்சினைகள்:
இலங்கையில் தமிழ்ஆவணங்கள் முழுமையாக ஆவணப்படுத்தப்பட்டுவதில்லை. தமிழ் நூல்கள் பல இந்தியாவிலும் பிறநாடுகளிலும் அச்சிட்டு வெளியிடப்படுவதும், இலங்கையில் வெளியிடப்படும் நூல்களுக்கு சர்வதேசதராதர நூல்எண் பெறப்படாமையும் எழுத்தாளர்கள், வெளியீட்டாளர்களின் அக்கறையின்மையும் போதிய தமிழ் உத்தியோகத்தர்களின்மையும், பாராமுகத்தன்மையும் தேசிய நூற்பட்டியலில் தமிழ்நூல்கள் பதியப்பட்டு ஆவணப்படுத்தப்படாதுள்ளன. இதனால் ஆய்வாளர்கள், எதிர்காலசந்ததியினர் இவை பற்றி அறியமுடியாதுள்ளன.

ஆய்வு முறை:
வரலாற்று துணையுடன் இலக்கிய வரலாற்று ஆய்வு நூல்களின் ஆதாரங்களுடன் இத்துறைசார்ந்த இரண்டாம் நிலை சான்றுகளுடன், களநிலையில் நேரடி அவதானிப்புகளுடனும், விளக்கநிலை வாயிலாகவும் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. ‘நூல் தேட்டம்’ என்ற நூல்பட்டியல் ஆவணம் முதலாம் தொகுதி முதல் ஐந்தாம் தொகுதி வரை அவதானிக்கப்பட்டது. வெளியீட்டாளர்களின் விலைப்பட்டியல்கள், நூலகங்களில் வைப்பிலுள்ள நூல்கள், வகுப்பாக்கப்பட்டியல்கள் ஆகியன அவதானிக்கப்பட்டது. இவற்றுள் அநேகமான நூல்கள் நூல்தேட்டத்தில் பதியப்பட்டுள்ளதால், நூல்தேட்ட பதிவுகளை அடிப்படையாகக் கொண்டே கணிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வில் துண்டுப்பிரசுரங்கள், பாடசாலை பாடநூல்கள், பரீட்சைகளை அடிப்படையாகக் கொண்ட நூல்கள், வினாவிடைகள் வர்த்தமானி வெளியீடுகள், அரசதிணைக்கள அறிக்கைகள் ஆகியன தவிர்க்கப்பட்டுள்ளது.

ஆய்வின் நோக்கம்:
இலங்கைத்தமிழ் ஆவணங்களை ஆவணப்படுத்துதல் பூரணமாக நடைபெறவில்லை என வெளிக் காட்டல், இலங்கைத்தமிழ் ஆவணங்களை ஆவணப்படுத்துதலில் உள்ள இடர்பாடுகளை கண்டறிதலும், இவற்றினை களையும் வழிமுறைகளை கண்டறிதலும் தீர்வு காண்பதுமே இவ்வாய்வினது நோக்கமாகும்.

ஆய்வின் போது கண்டறிந்தவையும் அவதானிப்புகளும்:
‘சுவடிகள் ஆற்றுப்படை’ என்ற நான்கு தொகுதிகளாக எஸ்.ஏச்.எம்.ஜெமீல் இலங்கை முஸ்லீம் எழுத்தாளர்களது நூல்களை ஆவணப்படுத்தியுள்ளார். சா.ஜோ.செல்வராஜா மட்டக்களப்பு மாவட்ட நூலியல் தொடர்பான வரலாற்றினை ஆவணப்படுத்தியுள்ளார். க.குணராசா (செங்கை ஆழியான்) இலங்கை நாவல்கள் பற்றியும், கனக செந்திநாதன், தில்லையூர் செல்வராஜன் மற்றும் பேராசிரியர் பூலோகசிங்கம் ஆரம்பகால வெளியீடுகள் பற்றியும் ஆவணப்படுத்தியுள்ளனர். இதே போல் புகலிட மண்ணிலே நூல்களின் பதிவுகளை ஒன்று திரட்டியும் இலங்கையில் வெளியிடப்பட்ட நூல்களினது பதிவுகளையும் ‘நூல்தேட்டம்’ என்ற நூல்தொகுதியாக இலண்டனில் உள்ள நூலகர் என்.செல்வராஜ் வெளியிட்டுள்ளார். ஆயிரம் நூல்களுக்கு ஒரு தொகுதி; என்ற வகையில் ஆறு (6) நூல் தேட்டங்கள் வெளியிட்டுள்ளதுடன் இலங்கைத்தமிழர்களது, மலேசிய, சிங்கப்பூர் வாழ் இலங்கைத் தமிழர்களால் வெளியிடப்பட்ட நூல்கள் ஒரு தேட்டமாகவும் வெளியிடப்பட்டுள்ளன. தொடந்தும் இலங்கைத் தமிழ்நூல்களை பதிந்து வெளிகொணர்தலில் ஈடுபட்டுள்ளார்.

ஆய்வுக்காக உதாரணமாக, 2005ஆம் ஆண்டினை நோக்குவோமாயின், “நூல்த்தேட்டம்” என்ற நூலின் பதியப்பட்டுள்ள தமிழ் நூல்களினை எடுத்துக்கொண்டால், தொகுதி; ஒன்று – ஆறு வரை மட்டும் 2005ஆம் ஆண்டில் 361 இலங்கைத்தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் பதியப்பட்டு காணப்படுகின்றன. இந்நூல்களில் இலங்கையில் 197 நூல்களும், சென்னையில் 99 நூல்களும், இங்கிலாந்தில் 24 நூல்களும், கனடாவில் 13 நூல்களும், ஜேர்மனியில் 08 நூல்களும், பாரிஸில் 07 நூல்களும், அவுஸ்ரேலியாவில் 05 நூல்களும், நோர்வேயில் 03 நூல்களும், டென்மார்க்கில் ஒரு நூலும் வெளியிடப்பட்டதாக பதியப்பட்டுள்ளன. இது 2005ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நூல்களின் பதிவின் இறுதி முடிவல்ல. பின்தொடரும் ஏனைய தொகுதிகளிலும் 2005ஆம் ஆணடு வெளியீடுகள் பதிப்படவுள்ளன. ஆனால் இலங்கைத் தேசியநூல்பட்டியலில் (National Bibliogrphy) 91 இலங்கைத்தமிழ் நூல்கள் மட்டுமே பதியப்பட்டுள்ளன. இதில் இரண்டு இந்தியாவில் வெளியிடப்பட்ட நூல்கள் மத்திரமே பதியப்பட்டுள்ளன. 270 இலங்கைத்தமிழ்நூல்கள் பதியப்படாது காணப்படுகின்றது. எனவே இலங்கை தேசியநூல்பட்டியலானது பூரணமானதல்ல என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

மணிமேகலை பிரசுரம் வெளியிட்டுள்ள விலைப்பட்டியலில் 72 இலங்கை நூலாசிரியர்களின் நூல்கள் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளமையைக் காணக்கூடியதாகவுள்ளது. ஆனால் இலங்கை தேசிய நூல்பட்டியலில் ஒரே ஒரு நூல் மாத்திரமே பதியப்பட்டுள்ளது. இது இலங்கை தேசியநூற் பட்டியலானது பூரணமானதல்ல என்பதற்கு மற்றொரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். அத்துடன் இலங்கை நூலங்களில் வைப்பிலுள்ள பல நூல்களுக்கும், இலங்கை தேசிய நூல்பட்டியலில் பதிவுகளைக் காணமுடியவில்லை. இதுவும் தேசியநூல்பட்டியலானது பூரணமானதல்ல என்பதற்கு ஒரு சிறந்ததோர் எடுத்துக்காட்டு ஆகும்.

மேலும், புகலிட மண்ணிலே இலங்கைத்தமிழர் நூல்களை ஒன்று திரட்டியும், இலங்கையிலே ஒன்று திரட்டியும் ஈழத்தமிழர் தேசியநூல்களின் ஆவணப்படுத்தலினை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான பணியை மேற்கொள்ளும் அமைப்புகளாவன:

 ஐரோப்பிய தமிழ் ஆவணக்காப்பகமும் ஆய்வகமும்.(European Tamil Documentation and Research centre-ETDRC.)
 உலகத்தமிழ் நூலகம் ஸ்காப்ரோ, ஒன்றாரியோ, கனடா.
 வல்வை ஆவணக் காப்பகம், கனடா
 முல்லை அமுதன் ஆவணக்காப்பகம்
 தமிழ்தகவல் மையம் – ஆவணக்காப்பகம் – (Tamil Information centre-TDC Library)
 மலையகஆவணக்காப்பகம் -புசல்லாவ,- (இந்திய வம்சாவளி இலங்கையரது ஆவணங்கள்)
 பிரித்தானிய நூலகம் (British Library)
 இலண்டன் பல்கலைக்கழக நூலகம்- (SOAS–School of Oriental and African Studies Library, University of London)

தமிழ் நூல்களின், வெளியீடுகளின் ஆவணப்படுத்துதலில் காணப்படும் பிரச்சினைகள்
1. இலங்கையில் ஆவணப்படுத்துதலில் தொடர்ச்சியின்மை:

2. இலங்கை தவிர்ந்த பிறநாடுகளில் தமிழ் நூல்கள் வெளியிடுதல்:
2.1.1 நூல்களை வெளியிடுவோர், எழுத்தாளர்கள், வெளியீட்டாளர்கள் செலவு குறைவு மற்றும் சந்தைவாய்ப்பு போன்ற பொருளாதார காரணங்களினால் பல இலங்கைத் தமிழ் நூல்களை தமிழ்நாட்டில் வெளியிடுகின்றனர். இவ்வாறு சென்னையில் வெளியிடப்பட்ட நூல்களுக்கு பதிவுகள் எதுவும் இலங்கையில் இல்லை. இவற்றுக்கு சர்வதேச தராதர எண் பெறப்படுவதும் இல்லை. எனவே, இவை இந்தியாவிலும் பதிவுசெய்யப்படுவதும் இல்லை.

2.1.2 1983-85 ஆண்டுக்காலப்பகுதியில் அரசியல்காரணங்களுக்காக பல நூல்கள் தமிழ் நாட்டில் வெளியிடப்பட்டு இலங்கை தவிர்ந்த பிற நாடுகளுக்கு விநியோகிக்கப்பட்டன. இவை இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரசுரங்களாகும். இவ்வெளியீடுகளின் பதிவுகள் இந்தியாவிலும் இலங்கையிலும் இல்லை.

2.1.3 தமிழகத்தில் சென்னையில் வெளியிடுவதற்கான காரணங்களில் பிரதானமானது, சென்னையில் வெளியீட்டாளர்களின் மூலம் வெளியிடப்படும் நூல்களை தமிழகஅரசு கொள்வனவு செய்வதே. எனவே எழுத்தாளர்கள் இந்தியாவில் வெளியிட ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வாறு வெளியீடு செய்யும் போது தமிழகஅரசுக்கு விற்பனை செய்யும் நோக்குடன் இரண்டாம் பதிப்புகூட ‘இரண்டாம் பதிப்பு’ என குறிப்பிடப்படாது வெளியிடப்படுகின்றன.

2.1.4 ஈழத்து எழுத்தாளர்கள் தமது நூல்களின் முதல் பதிப்பினை இலங்கையில் வெளியிட்டு வரையறுககப்பட்ட விநியோகம் காரணமாக மீண்டும் தமிழகத்தில் மீள்பதிப்புச் செய்து இந்திய வாசகர்களுக்காக வெளியிடுகின்றனர். மாநிலமொழி அல்லாத நூல்களுக்கு விதிக்கப்படும் இறக்குமதி கட்டுப்பாடுகள் இருந்தபோதும், தமிழ்மொழி என்பதால் இலங்கை நூல்களுக்கு கட்டுப்பாடுகள் எதுவும் தமிழ்நாட்டில் இல்லை.

2.1.5 இந்தியாவில் வெளியிடப்படும் நூல்களுக்கு சர்வதேச தராதர எண்(ISBN) பெறப்படாமைக்கு வெளியீட்டாளர்கள், அச்சகங்கள் “தீர்வை அல்லது வரி“ யிலிருந்து விலக்குப் பெற்று தப்புவதற்காக என கருதலாம்.

2.2 புலம்பெயர்ந்தோர் வெளியீடுகள்

2.2.1 1786இல் மலேசியாவின் பினாங்கு தீவினை கைப்பற்றிய பின் ஆங்கிலேயரால் வரவழைக்கப்பட்டு பின் அங்கு குடியேறிய இலங்கைத்தமிழர்களும், 1950களுக்கு முன் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு தொழில் நிமித்தம் குடியேறிய இலங்கைத்தமிழர்களது வெளியீடுகளும் நூல்களும் எங்கும் பதியப்படவில்லை. மலேசியா வாழ் யாழ்ப்பாணத்தமிழர்கள் ‘இலங்கைத்தமிழர்’ என்ற வரையறைக்குள்ளும் அடக்கப்படவில்லை.

2.2.2 உள்நாட்டு–தமிழ்ஈழ யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்து இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மன், நோர்வே, டென்மார்க், சுவிற்சலாந்து, கனடா, கென்யா, அவுஸ்திடேலியா, ஐக்கியஅமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், பிஜி போன்ற நாடுகளில் வாழும் இலங்கைத்தமிழர்களது வெளியீடுகளும் நூல்களும் எங்கும் பதியப்படாது ஆவணப்படுத்தப்படாது காணப்படுகின்றன. புலம்பெயர்ந்தநாடுகளில் புலம்பெயர்ந்தோர் வெளியீடுகள் அந்த அந்த நாடுகளில் தேசியநூற் பட்டியலில் இடம்பெறுவதும் இல்லை. ஆவணப்படுத்தப்பட்டு இருப்பில்∕சட்டவைப்பில் வைக்கப்படுவதுமில்லை.

3.இலங்கை தேசியநூற்பட்டியலில் பதியப்படாமை:
3.1 இலங்கையில் வெளியிடப்படும் நூல்களில் சர்வதேசதராதர எண் பெறப்படாதவை தேசிய நூற்பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்படாதது போல் அச்சகம், வெளியீட்டாளர் சட்டப்படி கையளிக்கப்படாத தமிழ் நூல்களைத் ‘தேடிப்பெறல்’ இடம்பெறுவதுமில்லை.

3.2 இலங்கையில் கலாசார அமைச்சின் மூலம் சாகித்திய விருது வழங்கப்பட்ட நூல்கள் சிலவற்றின் பதிவுகளும் தேசிய நூற்பட்டியலில் காணப்படவில்லை. முன்னர் இலங்கையில் வெளியிடப்பட்ட நூல்களுக்கு மடடும் சாகித்திய விருது வழங்கப்பட்டது. தற்போது பல சிறந்த எழுத்தாளர்கள் இலங்கையில் வெளியிடுவது செலவு அதிகம் என்ற காரணத்தினால் இந்தியாவில் அச்சிடுகின்றனர். அவற்றுக்கு விருதும் வழங்கப்படுகின்றன. ஆனால், இவை ஆவணப்படுத்தப்படவில்லை. தேசியநூற்பட்டியலிலும் இல்லை. அதனால் சட்டவைப்பிலும் இல்லை.

4 உள்நாட்டு யுத்தமும் அதன் தாக்கமும்:
4.1 இலங்கையின் யுத்தசூழல்காரணமாக புலம்பெயர்ந்தோர் தம் நூல்களை இலங்கையில் வெளியிடுவதற்கு பயங்கொள்ளுகின்றனர். ஈழமக்கள் விடுதலை தொடர்பான தகவல்கள் இருப்பின் இலங்கையில் வெளியீட்டாளர்கள் பல விசாரணகளுக்கு முகம்கொடுக்க வேண்டியிருப்பதால் பல நூல்கள் இந்தியாவில் வெளியிடப்பட்டன. தற்போது இந்தியாவிலும் வெளியிடுவது சிக்கலாகியுள்ளதால் ஐரோப்பாவில் வெளியீட்டு முயற்சிகள் சிறப்புப்பெற்றுள்ளன. ஆனால் இவை இலங்கையில் தேசிய நூற்பட்டியலில் சேர்ப்பதற்கு எவ்வித பிரயத்தனமும் எடுக்கப்படவில்லை.

4.2 ‘ஈழம்’ என்ற வார்த்தைப்பிரயோகமும் இலங்கையில் நூல்களை அச்சிட்டு வெளியிட பல சிக்கல்களை தோற்றுவித்துள்ளமை மற்றொரு காரணமாகும். வடகிழக்கு தமிழ் எழுத்தாளர்கள் தமது விடுதலை பிரச்சினைகள் தொடர்பான இலக்கிய நூல்களை இலங்கையில் வெளியிடாமல் வெளி நாடுகளிலேயே வெளியிட்டனர். இந்தப் பதிப்புத்தளமாக இந்தியாவே அமைந்தது.

4.3 யுத்தசூழலில் இலங்கை வெளியீட்டாளர்கள், பதிப்பகத்தார் ஈழத்தமிழரின் நூல்களை வெளியிட ஆர்வம் காட்டவில்லை. இவர்கள் எழுத்தாளர்களை அணுகவும் இல்லை. இச்சந்தர்ப்பத்தினை இந்திய வெளியீட்டாளர்கள், பதிப்பகத்தார் பயன்படுத்திக்கொண்டார்கள்.

5. எழுத்தாளர், வெளியீட்டாளரின் புறக்கணிப்பும் திணைக்களத்தின் புறக்கணிப்பும்:
5.1தமிழ் பிரதேசஅச்சகங்களும், வெளியீட்டாளர்களும், பதிப்பகத்தார்களும் அச்சகச் சட்டமூலத்தின்படி சுவடிகள் காப்பகத்துக்கு ஒழுங்காக நூல்களை அனுப்பிவைக்காமை
5.2 தமிழ்நூல்கள் சுவடிகள் காப்பகததக்கு அனுப்ப வேண்டும் என்ற அக்கறையின்மை,
5.3 தேசிய சுவடிகள் திணைக்களத்துக்கு தமிழ் நூல்கள் கிடைக்காமை,
5.4 இலங்கைச்சுவடிகள் திணைக்களத்திலும், தேசியநூலகத்திலும் தமிழில் வேலைசெய்யக் கூடிய தேவையான தமிழ்ஆட்பலமின்மை நூற்பட்டியல் தயாரிப்பில் பின் தங்கியநிலை ஏற்பட ஒரு காரணமாகின்றது. இதனால் எதிர்கால சந்ததியினரின் ஆய்வுகளுக்குத் தேவையான பதிவுகள் குறைவடைந்துள்ளமை மாத்திரமல்லாது ஆவணப்படுத்துதல் இல்லாது போயுள்ளமை பெரும்குறைபாடு.

தீர்வும் முடிவுரையும்:
இலங்கையில் நூற்பதிவு இலக்கத்துடன் வெளியீட்டாளர் வெளியிடுவதை ஊக்கப்படுத்த வேண்டும்.
தமிழக அரசு இலங்கை தமிழ்நூல்கள் வெளியிடுவோரை “நூல் பதிவு” இலக்கம் பெற வேண்டும் என கட்டாயப்படுத்த வேண்டும். நூல் வெளியீட்டாளரும் நூல் பதிவு இலக்கம் பெற ஆர்வம் காட்டவேண்டும். நூல் பதிவு இலக்கம் பெறாமல் வெளியிடுவோரிடம் நூல் வெளியிடுவதை தமிழ் எழுத்தாளர்கள் தவிர்த்துக் கொள்ளவேண்டும்.
வெளியீடுகள் அனைத்தும் தேசிய நூலகத்திற்கு பெற்றுக் கொடுக்கப்பட்டு தேசியநூல் பட்டியலில் பதிவு செய்ய வழிகோல வேண்டும். இதற்காக அரசாங்கத்தினை வலியுறுத்த வேண்டும்.
.
தமிழ் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட வேண்டும். பாராமுகப்போக்கு தவிர்க்கப்பட வேண்டும். இலங்கையிலும், பிறநாடுகளிலும் சட்டப்படி நூல்பதிவுஎண் பெறாத நூல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் படுவது மூலம் நூற்பதிவினை ஊக்குவிக்க வேண்டும். அரச சார்பற்ற நிறுவனமாக எழுத்தாளர், வெளியீட்டாளர்கள் ஒன்றிணைந்து ஒரு ஆவணகாப் பகத்தினை அமைத்து தமிழ்நூல் ஆவணப்படுத்தலினை மேற்கொள்ள ஆவனசெய்ய வேண்டும்.

புகலிடநாடொன்றில் முழுமையான ஆவண காப்பகம் ஒன்றினை நிறுவுதல் வேண்டும். தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய தமிழ் ஆவணக்காப்பகத்துக்கு எழுத்தாளர், வெளியீட்டாளர்கள் நூல்களை வழங்க வேண்டும்
சுவடிகள் திணைக்களம், தேசிய நூலகம் ஆகியன தமிழ் நூல்களை தேடிப்பெற வேண்டும். மற்றும் சர்வதேசதராதர எண் பெறாத நூல்களையும் தேசிய நூல்பட்டியலில் சேர்த்து பதியப்படவேண்டும். மேலும் புலம்பெயர்ந்தவர்களின் நூல்களையும் தேடிப்பெறல் வேண்டும். சுயதணிக்கைக்குட்படாது இலங்கையை சேர்ந்த, புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் நூல்களை சுவடிகள் திணைக்களம், தேசிய நூலகம் ஆகியனவற்றுக்கு வழங்க வேணடும்.

தமிழ் சாகித்திய பரிசு மற்றும் விருதுகள் வழங்கும் போது நூல் பதிவு இலக்கம் பெற்ற நூல்களை மட்டும் மதிப்பீடு செய்து பரிசுகள் வழங்கவேண்டும்.
உசாத்துணை நூல்கள்:
• கனக.செந்திநாதன், ‘ஈழத்து இலக்கிய வளர்ச்சி’ கொழும்பு, அரசு வெளியீடு, (1964)
• செல்வராஜ், என்., “மலேசிய சிங்கப்பூர் நூல்தேட்டம் -தொகுதி – 1”, ஐக்கிய இராச்சியம், அயோத்தி நூலக சேவைகள்;, 2007.
• செல்வராஜ்,என்., “நூல்தேட்டம் – தொகுதி – 1-5”, ஐக்கிய இராச்சியம், அயோத்தி நூலக சேவைகள், 2002-2008.
• செல்வராஜ், என்., “வேரோடி விழுதெறிந்து”, கொழும்பு, ஞானம் பதிப்பகம், 2009.
• நடராசா, எப், எக்ஸ், சி.,‘ஈழத்துதமிழ் நூல் வரலாறு’ கொழும்பு, அரசு வெளியீடு, 1970.
• பூலேகசிங்கம், பொ., “தமிழ் இலக்கியத்தில் ஈதை;தமிழர் பெருமுயற்சிகள்”, கொழும்பு, குமரன் இல்லம்’, 1970.
• மகாலட்சுமி, தி.,நிர்மலா, சூ., பூமிநாதன், த., ‘சுவடிச்சுடர்’,சென்னை, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், 2002.
• ஜெமீல்,எஸ்,எச்,எம், “சுவடிஆறறுப்படை” கல்முனை, இஸ்லாமிய நூல் வெளியீட்டுப்பணியகம், 1994
• Maheswaran, R.,(2007), “Bibilometric Study of Tamil Publications in Sri Lanka in 2005” , Colombo, University Librarian association of Sri Lanka.
• National Library of Sri Lanka: Colombo; Sri Lanka National Library Service Board, 1995.

Wimalaratne, K, D, G,. “An Introduction to the National Archives in Sri Lanka,

”Colombo, Social Science Research Centre, National Science Council of Sri Lanka, 1978.

”நூலகத்தில் முறைகேடாக நடந்தவர்கள் மீது ஏன் சட்டநடவடிக்கை எடுக்கவில்லை?” பொலிஸ் அதிகாரியிடம் நல்லிணக்க ஆணைக்குழு கேள்வி.

Jaffna_Libraryசில வாரங்களுக்கு முன்னர் யாழ்.பொதுநூலகத்திற்குள் முறைகேடாக நடந்து கொண்டவர்களுக்கெதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவர் சி.ஆர்.டி.சில்வா பொலிஸாரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமர்வுகளை நடத்தி வரும் நல்லிணக்க ஆணக்குழுவினர் நேற்று ஞாயிற்றுக் கிழமை காலை 9மணியளவில் யாழ்.பொது நூலகத்திற்குச் விஜயம் செய்தனர். அப்போது பொதுநூலக நூலகரிடம் அண்மையில் தென்னிலங்கையிலிருந்து சென்ற சுற்றுலாப்பயணிகள் யாழ்.நூலகத்தில் நடந்துகொண்ட முறை குறித்து ஆணைக்குழுவின் தலைவர் கேட்டறிந்துள்ளார். நடந்த விடயங்களையும் நூலக ஒழங்கு விதிகள் குறித்தும் நூலகர் விளக்கியுள்ளார். இது குறித்து சட்ட நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனையடுத்து ஆணைக்குழுவின் தலைவர் பொலிஸ் அதிகாரியை அழைத்து இந்த அசம்பாவித சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களுக்கு எதிராக ஏன் சட்டநடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார். அதற்கு பொலிஸ் அதிகாரி மௌனம் சாதித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

நூலக ஒழுங்கு விதிகள் மீறப்பட்ட ஒரு நிகழ்வை சிங்கள – தமிழ் உரிமை சிக்கலாக சித்தரிப்பது சின்னத்தனம்! : யாழ் ஆய்வறிவாளர் அணியம்

Welcome_to_Jaffnaகடந்த சனி மாலை (October 25, 2010) தென்னிலங்கையிலிருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் பலர் யாழ் பொது நூலகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து நிகழ்ந்த ஒரு நூலக ஒழுங்கு விதி மீறல் பிரச்சினை, யாழ் பிரதேச பத்திரிகைகளாலும், இவைகளது ஊடக அனுசரணையுடன் – தமிழ் இனவாத  அரசியல்வாதிகளாலும், இணையங்களாலும், ஒரு சிங்கள – தமிழ் இன உறவுச் சிக்கலாக சித்தரிக்கப்பட்டு இன விரிசல் ஏற்படுத்தப்பட்டு வரும் செயற்பாடுகளை நாம் வன்மையாகக் கண்டிக்க விரும்புகின்றோம்.

சிங்கள சகோதர மக்களின் யாழ் வருகைகளுக்கு எதிராக கடந்த ஒரு வருட காலமாக செய்யப்பட்டுவரும் இன விரிசலை ஏற்படுத்தும் பிரச்சாரங்களின் இன்னொரு அங்கமாகவே இச் சம்பவமும்  சித்தரிக்கப்பட்டு வருவதை சுய சிந்தனையுள்ள எவரும் இலகுவில் இனங்கண்டு கொள்வர்.

யாழ் பொது நூலகத்தினரின் நிர்வாகத் தவறுகள் நிமித்தமும், சுற்றுலாப் பயணிகளின் வருகையால் நூலக ஊழியர்கள்மேல் அதிகரித்த வேலைப்பழுவின் விளைவாகவும், நூலக ஊழியர்களுக்கும் உல்லாசப் பயணிகளுக்கும் இடையில் இருந்த மொழிப் பிரச்சினை மற்றும் பரஸ்பர புரிந்துணர்வின்மை பாற்பட்டும் எழுந்த இந்தப் பிணக்கு நூலக ஒழுங்கு விதிகள் சம்பந்தமானதொன்று என்பதே சரியான பார்வையாகும். இந் நிலையில், இச் சம்பவமன்றி, இதனை ஒரு சிங்கள-தமிழ் இன உறவுச் சிக்கலாக சித்தரித்து, 1981 யாழ் நூலக எரிப்புச் சம்பவத்துடன் இணைத்து –எழுதி – அறிக்கைகள்விட்டு, தமிழ் இனவெறியை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம்பெற முயல்வதே மிக இழிவான இன வெறிச் செயல் என இங்கு நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இச் சம்பவம்பற்றி விரிவாக விசாரித்து உறுதியாகத் தெரியவரும் விடயங்களின்படி, மேற்படி சம்பவம் நடைபெற்ற தினத்திற்கு முந்தைய தினம் தென்னிலங்கை உல்லாச பயணிகள் பலர் பொது நூலகத்தை பார்வையிட வந்திருந்ததாகவும்,  துரதிருஸ்டவசமாக அன்று போயா விடுமுறை தினமாகையால் அவர்களால் நூலகத்தை பார்வையிட முடியாதிருந்ததாகவும், இந்நிலையில், நூலக வாசலில் கடமையிலிருந்த காவலாளி அவர்களை மறுநாள் மாலை வருமாறு அறிவுறுத்தியிருந்ததாகவும், இதன்படி அவர்கள் சம்பவம் நடந்த தினமான மறுநாள் மாலை நூலகத்தை பார்வையிட வந்தபோது நூலகத்தின் உள்ளே இலங்கை மருத்துவர் சங்க மாநாடு நடப்பதை காரணம்காட்டி அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்ததாகவும், அதன் பின்னர் நூலக காவலாளியின் வேண்டுகோளின்பேரிலேயே தாம் வந்திருந்தபடியினால் தம்மை உள்ளேவிட அனுமதிக்க வேண்டுமெனக்கோரி சுற்றுலாப் பயணிகள் சிலர் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதாகவும், அதில் ஒருவர் தான் ஜனாதிபதி அலுவலகத்தில் தொழில் புரிபவராகையால் தம்மை உள்ளே நுழைய அனுமதிக்க வேண்டுமென வற்புறுத்தியதாகவும், இவருடன் இன்னும் பலரும் இணைந்து தம்மையும் உள்ளே நுழையவிடுமாறு தொடர்ந்து வற்புறுத்தியதாகவும், இதனால் மேலதிக படையினர் வரவழைக்கப்பட்டதாகவும், இதன் பின்னர் யாழ் மாநகர முதல்வரின் உத்தரவின் பேரிலேயே உல்லாசப் பயணிகள் அனைவரும் நூலகத்தினுள் நுழைய அனுமதிக்கப்பட்டதாகவும், இதனைத் தொடர்ந்து நூலகத்தினுள் நுழைந்த இவ் உல்லாசப் பயணிகளில் ஒரு சிலர் மட்டும் அசாதாரணமாக நடந்துகொண்டதாகவும் அறியப்படுகிறது.

இவை தவிர, தென்னிலங்கை சுற்றுலாப்பயணிகள் அனைவரும் அடாவடியில் ஈடுபட்டதாகவும், முறைகேடாக நடந்ததாகவும், அனுமதியின்றி நுழைந்ததாகவும், நூலகத்தை முற்றுகையிட்டதாகவும் வெளிவந்த செய்திகளும், கண்டனக் குரல்களும், கடிதங்களும், அறிக்கைகளும், இனவெறியூட்டி அரசியல் ஆதாயம்பெற எழுதப்பட்ட வெறும் அவதூறுகளாகவே நாம் அறிந்து கொள்கிறோம்.

உண்மை நிலைமைகள் இப்படியிருக்க, தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள் பலர் கடந்த ஒரு வருடத்திற்கும் அதிகமாக எவ்வித பாரிய பிரச்சினையுமின்றி பொது நூலகத்தை பார்வையிட்டுத் திரும்பிவருகின்றதொரு பின்னணியில்,  சம்பவத்திற்கு முந்தையதினம் நூலகத்தை பார்வையிட வந்த உல்லாசப் பயணிகள் நூலக காவலாளியின் கட்டளையை ஏற்று அமைதியாகத் திரும்பிச் சென்றதை கவனத்தில் கொள்ளத் தவறி, வெகு தொலைவிலிருந்து வந்து தரம் குறைந்த தங்குமிட சூழ்நிலையில், தெருவிலும் – திண்ணையிலும் – யாழ் திறந்தவெளியிலும், தங்கி திரும்பும் உல்லாசப் பயணிகளை சம்பவம் நடைபெற்ற அன்று நூலகத்தை பார்வையிட வருமாறு அழைத்து பின்னர் அவர்கள் நுழைய அனுமதி மறுத்தது நூலக நிர்வாகத்தின் பெரும் தவறு என்பதையும் எண்ணிப்பார்க்க மறந்து, தற்செயலான இந்தச் சம்பவத்தை புனைந்து பூதாகரமாக்கி முழுச் சிங்கள மக்களுக்கு எதிராகவும் சேறு பூசி, தமிழ் உணர்வாளர்களை உருவேற்றி அரசியல் ஆதாயம்பெறும் அற்பத்தனமான ஆசையில் ’81 நூலக எரிப்புச் சம்பவத்துடன் இதனை இணைத்து செய்திகளும், அறிக்கைகளும், கடிதங்களுமாக ‘நேர்முக வர்ணணைகள்’ செய்துவரும் யாழ் ஊடகங்களையும், இணையங்களின் ஒன்றியங்களையும், அரசியல் பிரகிருதிகளையும் நாம் வன்மையாகக் கண்டிக்க விரும்புகின்றோம்.

அத்துடன் தென்னிலங்கையிலிருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகளுக்கு உள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு அவர்கள் வாசலில் தரித்து நின்ற வேளையில், நூலகத்தைப் பயன்படுத்த வந்திருந்த சில தமிழ் மக்களும், மருத்துவர்சங்க மாநாட்டிற்கு வந்திருந்த தமிழ் மருத்துவ மாணவர்களும் நூலகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட விடயம்; இந்தச் சுற்றுலாப் பயணிகளுக்கு தவறான சமிக்ஞைகளை தந்திருக்கும் சாத்தியமுண்டு என்பதையும் இந்தப் பத்திரிகைகளும், கண்டன அறிக்கைகள்விடும் கனவான்களும் கவனத்தில் கொள்ள தவறியுள்ளனர் என்பதை இங்கு நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

மேலும், முதல் நாள் நூலக காவலாளியின் முடிவை ஏற்று நூலகத்தை பார்வையிடும் ஒரே காரணத்திற்காக மட்டும் மறுநாள்வரை தமது பயண ஏற்பாடுகளை சுற்றுலாப் பயணிகள் எவரும் பின்போட்டிருப்பின், மறுநாளும் அவர்கள் நூலகத்தை பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டது எவ்வாறு அவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்து ஆத்திரத்தை ஊட்டியிருக்கும் என்பதையும் இவைகளும் இவர்களும் எண்ணிப் பார்த்திருக்காதது கவலைக்குரியது. இது தவிர, நூலகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட ஒரு சிலர் மட்டும் அசாதாரண நடத்தையில் ஈடுபட்டிருந்த நிலையிலும், அதுவும் நூலகத்திற்கு எதுவித சேதத்தையும் இவர்கள் எவரும் ஏற்படுத்தியிருக்காதபோதும், உல்லாசப் பயணிகள் அனைவரும் அடாவடித்தனங்களில் ஈடுபட்டதாக செய்திகளை பத்திரிகைகள் திட்டமிட்டு திரித்து வெளியிட்டுவரும் தர்மத்தையும் நாம் இங்கு கேள்விக்குட்படுத்த விரும்புகின்றோம்.

இலங்கையிலுள்ள இனங்களுக்கு இடையிலான அரசியல் உரிமைப் பிரச்சினைகள் ஆக்கபூர்வமாகத் தீர்க்கப்பட  சகல இனங்களுக்கு இடையிலான உறவும் மிக ஆரோக்கியமாக பேணப்பட வேண்டியது அத்தியாவசியமானதொரு தேவையாகவுள்ள நிலையில், அரசியல் ஆதாயங்களுக்காக இன வெறியை எண்ணை ஊற்றி எரிய வைக்கும் வேலை முறைகளை தவிர்க்க வேண்டுமென நாம் சகல தரப்பினரையும் வற்புறுத்துகின்றோம்.

அத்துடன், சுற்றுலாப் பயணிகள் அனைவரும் பொது நூலகத்தை வந்து பார்வையிட இயலுமான சகல ஏற்பாடுகளையும் நூலக நிர்வாகம் உடன் செய்யவேண்டுமென நாம் வேண்டுகிறோம்.

மேலும், நூலகத்தை பார்வையிடவரும் சுற்றுலாப் பயணிகளின் அதிகரிப்பினால் நூலக ஊழியர்களின் மேல் வரும் வேலைப்பளுவை ஈடுசெய்யும் நடவடிக்கைகளையும் நூலக நிர்வாகம் உடன் எடுக்க வேண்டியது மிகவும் அவசியம் என்பதையும் நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

30 ஒக்டோபர் 2010 
YARL ANALYTICAL RESEARCHERS’ LEAGUE
 P O Box 165, Jaffna
._._._._._.

October 29, 2010

தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகளின் யாழ் வருகையும் யாழ் நகர் எதிர் கொள்ளும் பிரச்சினைகளும் : விஸ்வா

Jaffna_Libraryபோரிற்குப் பின் முற்றிலும் எதிர்பாராத வகையில் ஆயிரக்கணக்கான தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகளின் யாழ் வருகை யாழ் மாவட்டத்தில் நிர்வாக நெருக்கடிகளை ஏற்படுத்தி உள்ளது.  யாழ்ப்பாணம் வந்த தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள் சிலர் யாழ் நூலகத்தில் நடந்துகொண்ட முறை தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே தமிழ் – சிங்கள இனங்களிடையே உள்ள நம்பிக்கையின்மையை மேலும் மோசமாக்குவதுடன் இவ்வாறான சம்பவங்கள் இன உறவுகளை மேலும் கீழ்நிலைக்கே இட்டுச் செல்கின்றது.

யாழ். பொது நூலகத்திற்குள் தங்களை அனுமதிக்க வேண்டும் எனக்கோரி சிக்கல்களை ஏற்படுத்திய தென்னிலங்கையில் இருந்து வந்த சில சுற்றுலாப் பயணிகள் யாழ் பொது நூலகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததும் இல்லாமல் அநாகரிகமான முறையிலும் நடந்து கொண்டமையும் தெரிந்ததே. ஒக்ரோபர் 23ல் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக இன்று (ஒக்ரோபர் 29 2010) வெள்ளிக்கிழமை யாழ்.நூலக கேட்போர் கூடத்தில் கலந்துரையாடல் ஒன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெறுகின்றது. கடந்த 23ஆம் திகதி யாழ். நூலகத்தைப் பார்வையிட வந்த தென்பகுதி சுற்றுலாப் பயணிகள் சிலரின் நடவடிக்கைகளால் நூலகப் பணியாளர்கள் மற்றும், யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள நெருடலான மனஉணர்வுகள் குறித்தும் மற்றும், தென்பகுதி சுற்றுலாப் பயணிகள் தொடர்பான விடயங்கள் குறித்தும் இக்கலந்துரையாடலில் ஆராயப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து யாழ். மாநகர சபை உறுப்பினர் அ பரஞ்சோதி ஒக்ரோபர் 27, 2010 பிரேரணை ஒன்றை முன்மொழிந்தும் இருந்தார். அன்று குறிப்பிட்ட சுற்றலாப் பயணிகள் நடந்து கொண்ட விதம் குறித்து தமது ஆதங்கத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். இச்சம்பவம் பற்றி அ பரஞ்சோதி வருமாறு கூறுகின்றார், ”பொது நூலக கேட்போர் கூடத்தில் மருத்துவச் சங்க மாநாடு ஒக்ரோபர் 22 முதல் ஒக்ரோபர் 24 ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றது. இது நடைபெற்ற மூன்று நாட்களும் மாலை 5.30 மணியின் பின்னரே நூலகத்திற்குள் பார்வையாளருக்கான நேரம் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை தெற்கு சுற்றுலாப் பயணிகள் சுமார் 300 பேர் வரையிலானோர் நூலக வாசலில் குவிந்தனர். உள்ளே விடுமாறு கலவரத்தில் ஈடுபட்டனர். வாயில் காவலாளி தடுத்த வேளையில் கதவின் பூட்டை உடைத்துக் கொண்டு அவர்கள் உள்ளே நுழைய முற்பட்ட போது நிலமை எல்லை மீறவே, மாநகர முதல்வருக்கு அறிவிக்கப்பட்டது. முதல்வர் பொலிஸாருக்கு அறிவித்து பொலிஸார் அவ்வடத்திற்கு வந்து சமரசம் செய்வதில் ஈடுபட்டனர். உடனே குறித்த சுற்றுலாப் பயணிகள் இராணுவத்தினருக்கு அறிவித்தனர். அவர்களால் கதவு திறக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளே விடப்பட்டனர். உள்ளே சென்றவர்கள் புத்தக அடுக்கிலிருந்த புத்தகங்களை எடுத்து சிதறியடித்து அருவருக்கத்தக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அங்கிருந்த வாசகர்கள் தெரிவித்தனர். இக்குழப்பம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், வாசகர்கள் பலர் அச்சத்தினால் நூலகத்தை விட்டு பின் கதவினூடாக வெளியேறிவிட்டனர். நடைபெற்றுள்ள சம்பவம் நாகரீகமற்ற ஆக்கிரமிப்பு நடவடிக்கை எனவு அங்கிருந்த வாசகர்கள் தெரிவித்தனர்.

நூலகம் என்பது அமைதி வழியில் பயன்படுத்தப்படும் ஒரு இடமாகும். இது சுற்றுலாப் பயணிகளுக்கான உல்லாசபுரியல்ல என்பதை சம்பந்தப்பட்டோர் புரிந்து கொள்ளவேண்டும்’’ இவ்வாறு அ பரஞ்சோதி தெரிவித்திருந்தார்.

மேலும் தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளினால் யாழ். குடாநாட்டு நிர்வாக ஒழுங்குகளில் பல சிக்கல்கள் தோன்ற ஆரம்பித்துள்ளன. தொடர்ந்தும் ஒவ்வொரு நாளும் யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வருகின்ற நூற்றுக்கணக்கான சிங்கள மக்கள் தங்குவதற்கு கிடைத்த இடங்களைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். தற்போது நாவற்குழியிலுள்ள அரச களஞ்சியமும் அவர்களிடம் தங்குமிடமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படை அதிகாரிகளின் குடும்பங்கள், அவர்களின் நண்பர்களின் குடும்பங்கள் தங்குவதற்கு நாவற்குழி அரச களஞ்சியம் பயனபடுத்தப்படுவதாக களஞ்சிய ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமும் நூற்றுக் கணக்கில் இவர்கள் சுற்றுலா வருவதால் இவர்களுக்கான தங்குமிடங்களாக பாடசாலைகளும் அரசாங்க கட்டடங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இரவில் இவர்கள் பாடசாலைகளில் தங்கிவிட்டுச் செல்லும் போது, காலையில் பாடசாலைக்கு வரும் மாணவர்கள் பல சுகாதார சீர்கேடுகளுக்கு முகம் கொடுக்கும் நிலையும் தோன்றி வருகின்றது.

தென்பகதி சுற்றலாப் பயணிகள் யாழ்ப்பாணத்தில் பல்வேறு பொது இடங்களில் தங்கிவருவதால் எற்பட்டுள்ள இச்சிக்கல்களை தவிர்க்கும் முகமாக இவர்கள் யாழப்பாணத்தில் தங்கும் பொது இடங்கள் குறித்த விபரங்கள் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தால் திரட்டப்பட்டு வருகின்றன. பிரதேசச் செயலர்கள், கிராம அலுவலர்கள், மூலமாக இத்தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன. இத்தகவல்கள் குறித்த அறிக்கை அரசாங்க அதிபரிடம் சமர்ப்பிக்கப்படும்.

தென்பகுதியிலிருந்து வரும் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளுக்குப் போதுமான இடவசதிகளை மேற்கொள்ள முடியதாத நிலை யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள நிலையில் அவர்கள் தங்கக்கூடிய பொது இடங்களை அடையாளம் கண்டு அதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது.

ஒரே மேடையில் ஐந்து நூல்கள் அறிமுகம் – புத்தகக் கண்காட்சியும் இடம்பெற்றது! : வி. ரி. இளங்கோவன் & கலையரசன்

Book_Launchடென்மார்க் நாட்டில் ஒரே மேடையில் ஐந்து நூல்களின் அறிமுக விழாவும், புத்தகக் கண்காட்சியும் சிறப்புற நடைபெற்றன.

டென்மார்க் நாட்டிலிருந்து வெளிவரும் ‘இனி” சஞ்சிகை – இணையத்தள வாசகர் வட்டம், நெதர்லாந்து ‘கலையகம்” வாசகர் வட்டம், பாரிஸ் ‘முன்னோடிகள்” இலக்கிய வட்டம் சார்பில் ஒழுங்குசெய்யப்பட்ட இவ்விழா டென்மார்க் வெஜன் நகரில் கடந்த ஞாயிறு (10 – 10 – 2010) சிறப்புற நடைபெற்றது.

பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் (தமிழ், முஸ்லீம்) குத்துவிளக்கேற்றி விழாவை ஆரம்பித்துவைத்தனர்.

Ilankovan_V_Tபுத்தகக் கண்காட்சியை வி. ரி. இளங்கோவன் ஆரம்பித்துவைத்தார். இலங்கை எழுத்தாளர்கள் பலரின் நூல்களும், சஞ்சிகைகளும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.

இவ்விழாவில், ஜீவகுமாரன் எழுதிய ”யாவும் கற்பனை அல்ல”, கலையரசன் எழுதிய ”ஆபிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா”, த. துரைசிங்கம் எழுதிய ”தமிழ் இலக்கியக் களஞ்சியம்”, வேதா இலங்காதிலகம் எழுதிய ”உணர்வுப் பூக்கள்”, வி. ரி. இளங்கோவனின் சிறுகதைத் தொகுப்பான ”இளங்கோவன் கதைகள்” ஆகியன அறிமுகம் செய்யப்பட்டன.

எழுத்தாளர்கள் வி. ரி. இளங்கோவன், ஜீவகுமாரன், கலையரசன், ‘எதுவரை” ஆசிரியர் பௌசர், கரவைதாசன், ‘சஞ்சீவி” முரளிதாஸ், கொக்குவில் கோபாலன், வேதா இலங்காதிலகம், சரஸ்வதி கோபால், திருரவிச்சந்திரன், எம். சி. லோகநாதன், வேலணையூர் பொன்னண்ணா, லிங்கதாசன், உளவியல் நிபுணர் சிறிகதிர்காமநாதன் ஆகியோர் விழாவின் நிகழ்வுகளில் உரைநிகழ்த்தினர்.

நடிக விநோதன் த. யோகராசா தலைமையில் ”மெல்லத் தமிழ் இனி…” என்னும் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க கவிஞர் வி. ரி. இளங்கோவன் ”சிறப்புக் கவிதை” வழங்கினார்.

குறிப்பிட்டபடி பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமாகிய விழா இரவு 11 மணிவரை நடைபெற்றபோதிலும் மண்டபம் நிறைந்த மக்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Audienceடென்மார்க் நாட்டின் பல நகரங்களிலிருந்தும், பிரான்ஸ், நெதர்லாந்து, பிரித்தானியா நாடுகளிலிருந்தும் படைப்பாளிகள், இலக்கிய ரசிகர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

கலைநிகழ்ச்சிகள் எதுவும் இடம்பெறாது, ஓர் முன்மாதிரியான இலக்கிய நிகழ்வாகவும், பெண்கள் அதிகளவில் நிகழ்ச்சிகள் முடியம்வரை கலந்துகொண்டு சிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.

மூன்று இலக்கிய அமைப்புகளின் ஆதரவுடன் இவ்விழா ஒழுங்குசெய்யப்பட்டிருப்பினும், நிகழ்வுகளை சிறப்புற ஒழுங்கமைத்து, சகல வசதிகளையும் ஏற்படுத்தி, விழாவினை மெச்சத்தக்கவகையில் நடாத்திமுடித்திட முன்னின்று அயராதுழைத்த  ஒருங்கிணைப்பாளர், ‘இனி” சஞ்சிகை – இணையத்தள ஆசிரியர் சத்தியதாஸ் (கரவைதாசன்) அனைவரினதும் பாராட்டுக்களுக்கும் உரித்தானார்.

 BookReviewPanel

டென்மார்க் தமிழரைக் கவர்ந்த ஆப்பிரிக்க நூல் – சில குறிப்புகள் : கலையரசன்

அன்று, டென்மார்க் நாட்டில், வயன் நகரில், “ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா” நூல் அறிமுகம் இனிதே நிறைவேறியது. டென்மார்க் இலக்கிய ஆர்வலர், கரவைதாசனின் “இனி” அமைப்பின் சார்பில் ஒருங்கமைக்கப்பட்டது. வயன் நகர கலாச்சார மையம், அன்றைய நிகழ்வையொட்டி மறைந்த டென்மார்க் தமிழ் இலக்கியவாதி முல்லையூரான் ஞாபகார்த்த மண்டபமாகியது. விடுமுறை நாளை பயனுற கழிக்க விரும்பிய டென்மார்க் தமிழர்கள் 150 பேரளவில் நிகழ்வுக்கு சமூகமளித்தமை குறிப்பிடத் தக்கது. டென்மார்க் ஐரோப்பாவின் சிறிய நாடுகளில் ஒன்று. லண்டன், பாரிஸ் நகரங்களைப் போலல்லாது, டென்மார்க் முழுவதும் தமிழர்கள் பரந்து வாழ்வது குறிப்பிடத்தக்கது. தமிழ் இலக்கிய ஆர்வலர்கள், 300 கி.மி. தூரத்தில் இருந்து கூட நூல் அறிமுக நிகழ்வுக்காக வந்திருந்தனர். நேரம் பிந்தியும் சிலர் வந்து கொண்டிருந்தமையால், மண்டபம் நிறைந்து காணப்பட்டது.

Kalaiyarasanகலையரசனின் “ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா” நூலை விமர்சித்து, இரண்டு பேச்சாளர்கள் வேறு பட்ட பார்வையில் சொற்பொழிவாற்றினார்கள். முதலில் விமர்சித்த டென்மார்க்கில் வாழும் மனோதத்துவ டாக்டர் கதிர்காமநாதன், தமிழில் இது போன்ற நூல் வருவது இதுவே முதல் தடவை என்று குறிப்பிட்டார். கலையரசன் இந்த நூலை எழுதுவதற்கு முன்னர், நெதர்லாந்தில் அகதியாக வாழ்ந்த காலத்தில் பல ஆப்பிரிக்கர்களோடு பழகியிருக்கிறார். சில ஆப்பிரிக்க நாடுகளுக்கு நேரில் சென்று பார்த்திருக்கிறார். இவற்றை நூலை வாசிக்கும் பொழுது அறிந்து கொண்டதாக குறிப்பிட்டார். “ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா” என்ற தலைப்பு ஏன் வந்தது என நூலாசிரியர் விளக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். “ஆப்பிரிக்காவில் இருந்து தான் மனித இனம் தோன்றியது என்ற விஞ்ஞான கண்டுபிடிப்பை மெய்ப்பிக்கும் பொருட்டு அந்த தலைப்பு வைக்கப் பட்டிருக்கலாம்.” என தான் கருதுவதாக குறிப்பிட்டார்.

டாக்டர் கதிர்காமநாதன் தனது விமர்சனத்தில் இன்னொரு விளக்கத்தையும் கேட்டிருந்தார். ஆப்பிரிக்காவில் சாதி அமைப்பு இல்லை என்றும், அங்கே கோத்திரங்கள் அல்லது இனக்குழுக்கள் மாத்திரம் இருப்பதாகவும், இது பற்றிய விளக்கம் தருமாறு நூலாசிரியரை கேட்டுக் கொண்டார். தனக்கு ஏற்கனவே ஆப்பிரிக்கா பற்றிய பரிச்சயம் இருப்பதாகவும், தன்னிடம் வரும் ஆப்பிரிக்க நாடுகளின் நோயாளிகளிடம் இருந்தே பல விஷயங்களை அறிந்து கொண்டதாகவும் கூறினார். அவர்கள் கூறிய கதைகள் பல இந்த நூலில் இடம்பெற்றுள்ளன என்றும் குறிப்பிட்டார். இருப்பினும் நூலில் வரும் பல தகவல்களை புதிதாக கேள்விப்படுவதாக சில உதாரணங்களை குறிப்பிட்டார். சிம்பாப்வேயில் அகப்பட்ட கூலிப்படையினருடன் தொடர்பு வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட மார்க் தாட்சர் விவகாரம், வெகுஜன ஊடகங்களில் வெளிவராத செய்தியாகும். கட்டுரைகளின் தலைப்புக்கள் கவித்துவம் மிக்கதாக இருந்தமை தன்னைக் கவர்ந்ததாக தெரிவித்தார். “நைல் நதி, ஆப்பிரிக்காவின் நீளமான இரத்த ஆறு” போன்ற தலைப்புகளின் உள்ளடக்கத்தை சிலாகித்துப் பேசினார்.

Fouzerஇரண்டாவதாக நூலை விமர்சித்த பவுசர் பிரிட்டனில் இருந்து வந்து கலந்து கொண்டு சிறப்பித்தார். பவுசர் இலங்கையில் வெளிவந்த மூன்றாவது மனிதன், தற்போது லண்டனில் இருந்து வரும் எதுவரை ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியராவார். “சமூக நலன் சார்ந்த சிறந்த நூல்களை பதிப்பிடுவதில் புகழ் பெற்ற கீழைக்காற்று பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது. இதிலிருந்தே ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா என்ற நூலின் முக்கியத்துவம் தெளிவாகின்றது.” என்ற முகவுரையுடன் ஆரம்பித்தார். பவுசர், ஆப்பிரிக்க நாடுகளின் பிரச்சினையை, ஏகாதிபத்திய தலையீடு என்ற கோணத்தில் இருந்து பார்த்தார். குறிப்பாக கொங்கோவின் முதலாவது பிரதமர் லுமும்பா கொலையில், பின்னணியில் இருந்த ஏகாதிபத்திய சதி பற்றிய கண்டனங்களை முன்வைத்தார். கொங்கோவில் அண்மைக்காலமாக நடந்த யுத்தத்தில் மில்லியன் கணக்கான மக்கள் மாண்ட போதிலும், வெகுஜன ஊடகங்கள் கண்டுகொள்ளாததை சாடினார். மேலும் சுதந்திரமடைந்த ஆப்பிரிக்க நாடுகளின் சட்டங்கள் யாவும், காலனிய எஜமானர்களால் எழுதப்பட்டவை, அவற்றை மாற்ற முடியாது என்பதையும் நினைவூட்டினார்.

இறுதியாக நன்றியுரை கூற எழுந்த கலையரசன், டாக்டர் கதிர்காமநாதன் கேட்ட விளக்கங்களுக்கு பதில் கூறி தனது உரையை ஆரம்பித்தார். ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா என்ற தலைப்பு அர்த்தம் பொதிந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஐரோப்பியர்கள் காடுகளில் வாழ்ந்த காலத்தில், எகிப்தில் உயர்ந்த நாகரீகம் கொண்ட சமுதாயம் காணப்பட்டது. ஐரோப்பியர்களின் நாகரீகம் கிரேக்கத்தில் தோன்றியது என்று சொல்கின்றனர். ஆனால் அதே கிரேக்கர்கள், எகிப்தில் இருந்தே நாகரீகத்தை கற்றுக் கொண்டனர். இது போன்ற வரலாற்று தகவல்கள் பல நூலில் பலவிடங்களிலும் வருகின்றமையை சுட்டிக் காட்டினார். மேலும் ஆப்பிரிக்காவில் சாதி அமைப்பு, சோமாலியா, மொரிட்டானியா போன்ற நாடுகளில் இருப்பதை எடுத்துக் காட்டிப் பேசிக் கொண்டிருந்த பொழுது, கதிர்காமநாதன் குறுக்கிட்டார். “சோமாலியாவில் இனக்குழுக்கள் தமக்குள் மோதிக் கொண்டன, அவை சாதிகள் இல்லை.” என்றார். அதற்குப் பதிலளித்த கலையரசன், “ஆப்பிரிக்காவில் இனக்குழுக்கள் இருப்பதையும், அவற்றுள் ஏற்றத்தாழ்வு நிலவுவதையும் மறுக்கவில்லை. ஆனால் இங்கே சாதி அமைப்பு என்பது தீண்டாமையை அடிப்படையாக கொண்டது. சோமாலிய சமூகம் கோத்திரங்களாக பிளவுண்ட போதிலும், சாதிகளும் இருக்கின்றன.” இதன் பொழுது மேடையில் இருந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கரவைதாசன், “சாதியமைப்பு இந்திய உபகண்டத்திற்கு மட்டும் உரிய சிறப்பம்சம் அல்ல. ஜப்பானிலும் சாதிகள் இருக்கின்றன.” என்றார்.

கலையரசன் தனது உரையில், “ஐரோப்பியர்கள் எம்மையும், ஆப்பிரிக்கர்களையும் ஒன்றாகவே பார்க்கின்றனர். முன்னாள் காலனிய அடிமை நாடுகள் என்ற வகையில் எமது நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து படிப்பினையை பெற்றுக் கொல்லலாம்.” என்று தனது உரையை முடித்துக் கொண்டார்.

Dark_Europeஆப்பிரிக்கா பற்றிய நூல்கள் தமிழில் அரிதாகவே வந்திருந்த படியால், கலந்து கொண்ட மக்கள் அனைத்தையும் உன்னிப்பாக செவிமடுத்துக் கொண்டிருந்தனர். விமர்சனங்கள் முடிவுற்றதும், ஆர்வ மேலீட்டுடன் ஆளுக்கொரு நூலை வாங்கிச் சென்றனர். டென்மார்க்கில் வளர்ந்த இரண்டாவது தலைமுறையை சேர்ந்த இளைஞர்கள் கூட வந்து நூல் வாங்கியமை குறிப்பிடத்தக்கது. வந்திருந்த மக்கள் எல்லோரும், டென்மார்க்கில் நூல் அறிமுகத்தை ஒழுங்கு செய்த ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி கூறத் தவறவில்லை. இனி வருங்காலங்களில் இது போன்ற நிகழ்வுகளை அடிக்கடி நடத்துமாறு கேட்டுக் கொண்டனர்.

‘புத்தனின் பெயரால் திரைப்பட சாட்சியம்’ நூல் வெளியீடும் ஆவணப்பட திரையிடலும்

Yamuna Rajendiranஒக்ரோபர் 24 இல் சினிமா விமர்சகர் யமுனா ராஜேந்திரனின் ‘புத்தனின் பெயரால் திரைப்பட சாட்சியம்’ என்ற நூலும் ஆர் ஆர் சீனிவாசனின் ‘அண்ணா நூறு: ஒரு வரலாற்றுப் பார்வை’ என்ற ஆவணப்படத் திரையிடலும் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள உயிர்மை பதிப்பகத்தின் இந்நூலை ஈழ நண்பர்கள் திரைக்கலை ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது இந்நிகழ்வு ரொல்வேர்த் கேர்ள்ஸ் ஸ்கூலில் நடைபெற உள்ளது.

( நிகழ்வு விபரம்: 24 ஒக்ரோபர் 2010 மதியம் 13:00 முதல் 17:00 வரை. Tolworth Girls School Hall, Fullersway North, Tolworth, KT6 7LQ )

‘முப்பது ஆண்டுகால ஈழப்போராட்டத்தின் விளைவாக ஈழமக்கள் வந்தடைந்திருக்கும் உளவியல் சிக்கல் உக்கிரமான படைப்பு நிலைக்கு அவர்களைக் கொண்டு சேர்த்திருக்கின்றது. வரலாற்று நூல்களின் வழி எவரும் வந்தடையும் புரிதலை விடவும் ஈழப்போராட்டம் குறித்துப் பேசும் இந்த நூலில் விவரிக்கப்படும் திரைப்படங்கள் அளிக்கும் என்பதனை நாம் நிச்சயமாகவே சொல்ல வேண்டும்.’ என ஈழ திரைக்கலை ஒன்றியம் இந்நூல் வெளியீடு தொடர்பான தமது பிரசுரத்தில் குறிப்பிட்டு உள்ளனர். 

இந்நிகழ்விற்கு கண குறிஞ்சி தலைமை தாங்குகின்றார். ஆர் புதியவன் யமுனா ராஜேந்திரனின் ‘புத்தனின் பெயரால்: திரைப்பட சாட்சியம்’ நூல் அறிமுகத்தை மேற்கொள்ள மு புஸ்பராஜன் எஸ் வேலு ஆகியோர் நூலை வமர்சனம் செய்கின்றனர்.

ஆர் ஆர் சீனிவாசனின் ‘அண்ணா நூறு: ஒரு வரலாற்றுப் பார்வை’ பற்றி ஈழ நண்பர்கள் திரைக்கலை ஒன்றியம், ‘இந்தியாவில் நிலவும் சமூக ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்துக் காலம் காலமாக எப்போதுமே மக்களாட்சிக்கான போராட்டம் இருந்து வருகிறது. அதில் தமிழகத்தின் திராவிட இயக்கம் உலக சமூகநீதி வரலாற்றில் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், மற்றும் திராவிட இயக்கம் வழியாக அறிஞர் அண்ணாவின் அரசியல், மனிதாபிமான சிந்தனைகளை அறிய முற்படுகிறது இந்த 133 நிமிட ஆவணப்படம்” என்று குறிப்பிட்டு உள்ளது.

நிகழ்வின் இறுதியில் யமுனா ராஜேந்திரன் தொகுப்புரை வழங்க எஸ் சிறிதரன்நன்றியுரை வழங்குவார்.

டென்மார்க் நாட்டில் நூல் அறிமுகமும் புத்தகக் கண்காட்சியும்

Book_Launch_Denmark10Oct10டென்மார்க் நாட்டில் தமிழ் இலக்கிய நூல்களின் அறிமுகவிழாவும், புத்தகக் கண்காட்சியும் நடைபெறவுள்ளன. ஒக்ரோபர் மாதம் 10 -ம் திகதி (10 – 10 – 2010) ஞாயிறு  டென்மார்க் விஜென் (Vejen) நகரில் நடைபெறவுள்ள இவ்விழாவில் கலையரசன் எழுதிய ‘ஆபிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா”, வி. ஜீவகுமாரன் எழுதிய ‘யாவும் கற்பனை அல்ல”, வேதா இலங்காதிலகம் எழுதிய ‘உணர்வுப் பூக்கள்” த. துரைசிங்கம் எழுதிய ‘தமிழ் இலக்கியக் களஞ்சியம்” உட்பட மற்றும் சில நூல்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

எழுத்தாளர்கள் வி. ரி. இளங்கோவன், ஜீவகுமாரன், பௌசர், வேதா இலங்காதிலகம், கரவைதாசன் உட்படப் பலர் கருத்துரை வழங்கவுள்ளனர். ஈழத்து எழுத்தாளர் பலரின் நூல்கள், சஞ்சிகைகள் கண்காட்சியில் இடம்பெறவுள்ளன.

Book_Launch_Denmark10Oct10டென்மார்க் நாட்டிலிருந்து வெளிவரும் ‘இனி” சஞ்சிகை – இணையத்தள வாசகர் வட்டம், நெதர்லாந்து ‘கலையகம்” வாசகர் வட்டம், பாரிஸ் ‘முன்னோடிகள்” இலக்கிய வட்டம் சார்பில் இதற்கான ஒழுங்குகள் மேற் கொள்ளப்பட்டு உள்ளன. ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலிருந்தும் கலை இலக்கிய இரசிகர்கள் இவ்விழாவில் கலந்துகொள்வரென எதிர்பார்க்கப்படுகிறது.

http://kalaiy.blogspot.com/

வியூகம் இதழ் 2 ஒரு பார்வை: பாராளுமன்றமும் புரட்சியாளர்களும்… தேவை ஒரு புதிய கோட்பாடு : மீராபாரதி

Viyoogam_02_Coverநட்புடன் நண்பர்களுக்கு…
முதலில் வியூகம் இதழ் 2இல் உள்ள “பாராளுமன்றமும் புரட்சியாளர்களும்” என்ற கட்டுரை தொடர்பாக எனது கருத்தைக் கூற அழைத்தமைக்கு வியூகம் நண்பர்களுக்கு நன்றிகள். இன்றைய சூழலில் நம்பிக்கையுடன் இவ்வாறான ஒரு வேலைத்திட்டத்தை நண்பர்கள் முன்னெடுப்பதில் உள்ள மன பொருளாதார கஸ்டங்களைப் புரிந்துகொள்கின்றேன். இவ்வாறன தடைகளையெல்லாம் தாண்டி இராண்டாது இதழை வெளியீட்டமை மகிழ்வான விடயமே. வியூகம் இதழ் 2 முக்கியமான நான்கு கட்டுரைகளை தாங்கி வெளிவந்துள்ளது. அவையாவன “சிங்கள தேசியவாதத்தின் தோற்றம் குறித்து” “சுழலியலும் நிலைத்து நிற்கக்கூடிய வளர்ச்சியும்”; “விட்டு வேலைக்கு ஊதியம் தொடர்பான முன்மொழிவுகள்” “பாராளுமன்றமும் புரட்சிகர சக்திகளும்” மற்றும் ஆசிரியர் தலையங்கம் என்பனவாகும். இதில் முதலாவதும் மூன்றாவதும் சிறந்த மொழிபெயர்ப்புகள்.

நான் கருத்துக் கூறவேண்டிய கட்டுரை “பாராளுமன்றமும் புரட்சிகர சக்திகளும்” ஏன்பதாகும்.
இது மிகவும் முக்கியமானதும் ஆழமான கருத்துக்களைக் கொண்டதும் இந்த இதழின் அரைவாசிப் பக்கங்களை ஆதிக்கம் செய்துள்ள கட்டுரை. இக் கட்டுரை தொடர்பான கருத்தை அல்லது விரிவான விமர்சனத்தை முன்வைப்பதற்கு ஆகக் குறைந்தது இரு தடவைகளாவது வாசிக்க வேண்டியதுடன் விரிவான பரந்த ஆழமான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய விடயங்களைக் கொண்டதுமாகும். அப்பொழுதுதான் ஒரு ஆரோக்கியமான விவாதத்தை நோக்கி இக் கட்டுரையை நகர்த்துவதற்கு இக் கட்டுரை தொடர்பாக முன்வைக்கும் கருத்துக்கள் பயன்படும். ஆனால் ஒரு கிழமை அவகாசத்திற்குள் அவ்வாறன ஒன்றை செய்யமுடியாது என்பதை நீங்கள் எல்லோரும் புரிந்துகொள்வீர்கள் என நம்புகின்றேன். ஆகவே நான் இங்கு முன்வைக்கும் கருத்துக்கள் இக் கட்டுரைபற்றிய ஒரு சுருக்கமான அறிமுகமாகவும் மற்றும் எனது தேடல்களுக்கும் அறிவுக்கும் அனுபவத்திற்கும் உட்பட்டதாகவும் ஆகவே மட்டுப்படுத்தப்பட்டதாகவுமே இருக்கும் என்பதை புரிந்துகொள்வீர்கள் என நம்புகின்றேன். இந்தடிப்படையில் சில கேள்விகளையும் இறுதியில் முன்வைக்கின்றேன்;.

இக் கட்டுரையை பின்வருமாறு முக்கியமான பகுதிகளாகப் பிரிக்கலாம் எனக் கருதுகின்றேன்.
முதலாவது “வர்க்கம், அரசு, அரசாங்கம் மற்றும் பாராளுமன்றத்தின் தோற்றமும் இவை உருவாக்கிய
மேலாதிக்க சித்தாந்தமும் – ஒரு மார்க்சிய பார்;வை”
இரண்டாவது “ரஸியப் புரட்சி, மற்றும் சோவியத்யூனியன் கால ஆனுபவங்கள் – லெனினின் பார்வையில்”
மூன்றாவது “கட்சியும் பாராளுமன்றப் பாதையும்; புரட்சியாளர்களும் – ஒரு கோட்பாட்டுப் பிரச்சனை”
நான்காவது “புரட்சியாளர்களனதும் மார்க்ஸியவாதிகளதும் இடதுசாரிகளதும் பாராளுமன்ற பாதை – நேர் மறை,
எதிர் மறை அனுபவங்கள் – ஒரு வரலாற்றுப் பார்வை”
ஐந்தாவதும் இறுதிப் பகுதியும் “நமது நிலைப்பாடும் செயற்படுவதற்கான வழிமுறைகளும்”

என்று பல்வேறு உப தலைப்புகளைக் கொண்டதாக பிரிக்கலாம். ஆனால் நான் மேற்குறிப்பிட்டவாறு உப தலைப்புகளை வரிசைக் கிரகமாக கட்டுரையில் முன்வைக்கப்படவில்லை. இவ்வாறன ஒரு தொடர்ச்சியில்லாது ஒன்றிக்கும் பின் ஒன்று என மாறி மாறி இருப்பதானது வாசிப்பவர்களின் தொடர்ச்சியான ஒரு புரிதலுக்கு தடையாக இருப்பதாக அல்லது இருக்கலாம் என ஒரு வாசகராக உணர்கின்றேன். உப தலைப்புகளுடன் தொடர்ச்சியான தன்மை ஒன்று இருந்திருப்பின் வாசிப்பவர்களுக்கு விடயங்களைப் புரிந்துகொள்வதற்கு இலகுவானதாக இருந்திருக்கும் என நம்புகின்றேன். இவ்வாறு கூறுவதானது எந்தவகையிலும் கட்டுரையின் முக்கியத்துவத்தையும் அது கூறும் விடயங்களையும் குறைத்து மதிப்பிடுவதாகாது என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்வீர்கள் என நம்புகின்றேன். ஏனனில் மேற்குறிப்பிட்டவாறான உப தலைப்புகளின் அடிப்படையில் விடயங்களை விரிவாகவும் ஆழமாகவும் கட்டுரை ஆராய்கின்றது. அதாவது கோட்பாடு, மூலோபாயம் தந்திரரோபாயம் மற்றும் செயற்பாடு என்றடிப்படையில் நோக்கமாகக் கொண்டு கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதலில் “வர்க்கம், அரசு, அரசாங்கம், மற்றும் பாராளுமன்றத்தின் தோற்றமும் இவை உருவாக்கிய மேலாதிக்க சித்தாந்தமும் – ஒரு மார்க்சிய பார்வை” ஏன்ற உப தலைப்பிற்;குள் கட்டுரைiயில் மார்க்ஸின் 1843ம் ஆண்டிலிருந்து 1872ம் ஆண்டு வரை எழுதிய நூல்களில் உள்ள கருத்துக்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதைத் தவிர ஏங்கல்ஸ் லெனின் ஆகியோரது நூல்களும் இதில் கூறப்பட்ட கருத்துக்களை வலியுறுத்தப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதனடிப்படையில் பின்வருவனவற்றை முக்கிய நிலைப்பாடுகளாக மார்க்ஸியப் பார்வையில் சுட்டிக்காட்டுகின்றது. என நான் விளங்கிக்கொள்கின்றேன்.

வர்க்கங்களுக்கு இடையிலான முரண்பாடே அரசு தோன்றுவதற்கு காரணம் ஆகும். ஆகவே அரசு என்பது வர்க்கங்களுக்கு இடையிலான முரண்பாட்டால் வரலாற்றில் இடையில் தோன்றியது. ஆகவே வரலாற்றில் அது நிரந்தரமாக நிலைபெற்றும் இருக்காது என்றும் வர்க்கங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் இல்லாதுபோகும் பொழுது அரசு என்பது தேவையற்ற ஒன்றாகி வலுவிழந்து இல்லாது போகின்றது. ஆதிக்க வர்க்கங்களுக்கு இடையிலான போட்டியில் இறுதியாக முதலாளித்துவ வர்க்கம் தனது முழுமையான கட்டுப்பாட்டை அரசின் மீது செலுத்தும்வகையில் ஆதிக்க வர்க்கங்களுடனான உதாரணமாக நிலப்பிரபுத்துவ வர்க்கத்துனடான சமரசங்களுடாக வெற்றிபெறுகின்றது. இந்த சமரசத்தின்; விளைவாகவே அனைத்து ஆதிக்க வர்க்கங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அரசாங்கம் உருவாக்கப்படுகின்றது. இதில் பொதுவாக அரசு என்பது அடிப்படையில் முதலாளித்துவ வர்க்கத்தின கருவியாக செயற்படுகின்றது. இந்த அரசைக் கட்டிக்காப்பதற்காக அரசின் இயந்திரமாக அரசாங்கமும் மற்றும் சமூக நிறுவனங்களான கல்வி சமயங்கள் காவற்துரை இராணுவம் என்பனவறின் துணையுடன் செயற்படுகின்றது. ஆகவே அரசு என்பது நடுநிலையானதல்ல எனவும் சுரண்டப்படும் வர்க்கத்தை அடக்குவதற்கான கருவியாக செயற்ப்படுகின்றது. ஏனனில் முதலாளித்துவ அரசானது முதலாளிகள் அதிகாரத்திலும் இருப்பதற்கும் தொழிலாளர்கள் அடக்கப்படுவதற்கும் பயன்படுத்தப்படுவதுடன் அவ்வாறே தன்னைக் கட்டமைத்துமுள்ளது.

மறுபுறம் கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆதிக்கம் செலுத்திய சிந்தனையாளர்களான கிராம்சி அல்தூசார் போன்றவர்களின் கருத்துக்கள் இக் கட்டுரையில் பயன்படுகின்றன. கிராம்சியின் முக்கியமான கேள்வி ஒன்று இங்கு எடுத்தாளாப்படுகின்றது. அதாவது அரசானது தொழிலாளர்களை அடக்கி ஒடுக்கி சுரண்டுகின்ற முதலாளித்துவ வர்க்கத்தின் கருவி எனின் எவ்வாறு இந்த ஆளும் வர்க்கமானது தான் அடக்குபவர்களிடம் இருந்தே தனது ஆட்சிக்கான சம்மதத்தைப் பெருகின்றது. இதற்குக் காரணமாக சிந்தாந்த மேலான்மை என்ற கருத்தின்; முக்கியத்துவத்தை கிராம்சி வலியுறுத்துகின்றார். அதாவது அரசு என்பதை ஆதிக்கம் மற்றும் மேலான்மை என்பவற்றின் இணைவாகவே இவர் பார்க்கின்றார். அல்துசாரோ இதை சிந்தாந்த அரச இயந்திரம் என்று ஒரு கட்டமைப்பாகவே அழைக்கின்றார். அதாவது தமது ஆதிக்கத்தை தொடர்வதற்காக வன்முறையை மட்டும் நம்பிருக்காது சிந்தாந்தம் ஊடான ஆதிக்க வழிமுறைகளான கல்விமுறை, மத நிறுவனங்கள், குடும்பம், மற்றும் அரசியல் கட்சிகள் என்பவற்றிக்கூடாக ஆற்றுகின்றனர். முதலாளித்துவ கட்சிகள் தமது சித்தாந்த மேலான்மையை நிறுவுவதற்கு இவ்வாறு பண்முகத்தன்மையுடன் செயற்படுகின்றனர். மேலும் சில சிந்தனையாளர்கள் அரச கட்டமைப்பு மற்றும் தனிநபர் சார்ந்ததும் இவற்றுக்கும் இடையிலான இயங்கியல் உறவின் அடிப்படையிலும் பார்த்தனர். மனிதர்கள் சித்தாந்தத்துடன் நேரடியாக தொடர்பு கொண்டவர்கள் அல்ல. மாறகா சித்தாந்தத்தினுடாகவே தொடர்புகொள்கின்றனர் என்பதும் இது ஆதிக்க சித்தாந்தமாக இருப்புது உண்மையானவையே என்ற கருத்து முக்கியத்துவமானதும் ஆழ்ந்து கவனிக்கப்படவேண்டிய ஒன்றுமாகின்றது. இத்துடன் இன்னுமொன்றையும் வலியுறுத்த விரும்புகின்றேன். ஆதாவது மனிதர்களது பிரக்ஞையற்ற ஒரு நிலையே தம்மையே அடக்கி ஒடுக்குகின்ற இச் சிந்தாத்தங்கைளை ஏற்றுக்கொள்வதுடன் இச் சிந்தாந்தங்களினுடாகவே சிந்திக்கவும் தொடர்பும் கொள்கின்றனர் என்பதை நாம் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டியவர்களாக உள்ளோம். இதனால்தான் மனித பிரக்ஞையின் நிலை தொடர்பாக எனது கட்டுரைகளில் நான் தொடர்ந்தும் முக்கியத்துவமளித்து வலியுறுத்துகின்றேன்.

அரச அதிகார வர்க்கமும் முதலாளித்து வர்க்கமும் தேச நல்ன்கள் எனக் குறிப்பிடுவது தமது மூலதனத்தின் நலன்களே. இவ்வாறு நம்பும் படியே சகல சமூக நிறுவனங்களினுடாகவும் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். ஆகவே இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக செயற்படுகின்றனர். மேலும் இவர்களால் உருவாக்கப்ட்ட தனிச்சொத்துரிமை சட்டமானது பல்வேறு எதிர்விளைவுகளை சமூகத்தில் ஏற்படுத்தியபோதும் அவை குற்றங்களாக கருதப்படுவதில்லை. இவ்வாறு முதாலாளித்துவ வர்க்கம் தனது செயற்பாடுகளை தங்ககு தடையின்றி தொடர்வதற்கான சகல வசதிகளையும் அதிகாரவர்க்கம் செய்து கொடுக்கின்றது என உதாராணங்கள் மூலம் நிறுபிக்கின்றனர். இதேபோல் முதாலாளித்துவ வர்க்கமும் அதிகாரவர்க்கத்தின் தேவைகளை அதாவது தனக்காக மேற்கொள்ளும் அரசியல் சமூகம் சார்ந்த நடவடிக்கைகளுக்காக நிறைவேற்றுகின்றன. குறிப்பாக பணத்தின் தேவை முக்கியமானது. இந்தப் பணத்தை முதலாளிகள் தமது மூதலிலிருந்தல்ல மாறகா தொழிலாளர்களை சுரண்டுவதன் மூலமாகவே சேகரித்த மேலதிக பணத்திலிருந்தே அதிகாரவர்க்கத்திற்கு கொடுக்கின்றனர்.

ஆகவே சுரண்டப்படும் வர்க்கங்கள் இந்த அரசைக் கைப்பற்றாது தமது இலக்குகளை உதாரணமாக வர்க்கமற்ற சமுதாயத்தை அடையமுடியாது என்கின்றனர். மேலும் இவ்வாறு கைப்பற்றப்படும் அரசை தமது நோக்கங்களுக்காக அப்படியே பயன்படுத்த முடியாது என்பதால் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை நிறுவ வேண்டும் எனவும் வாதிடுகின்றனர். இதன் நீட்சியாக வர்க்க முரண்பாடுகள் இல்லாது போகும் போது அரசும் அதன் தேவைகளும் இல்லாது போகும். ஆகவே, முதலாளித்துவ அரசுக்குப் பதிலாக புரட்சியின் பின் பட்டாளிவர்க்க சர்வாதிகாரம் கொண்டது தான் புரட்சிகர அரசு என முன்வைக்கப்படுகின்றது. இவ்வாறான புரட்சிகர அரசை வன்முறையுடன் கூடிய புரட்சி இல்லாது முதலாளித்து அரசை இல்லாது ஒழிக்க முடியாது எனவும் கூறுகின்றனர்.

அதேவேளை அரசு தொடர்பாக இப்படியான ஒரு கோட்பாட்டை அல்லது கருத்தை இலகுவாக முன்வைக்கலாமா என்கின்ற் கேள்வியையும் எழுப்புகின்றனர். காரணம் அரசுக்கும் பொருளாதாரத்திற்கும் இடையிலான உறவு இருக்கின்றதா அல்லது இரண்டும் சார்பளவில் சுயாதினமாவையா? அரசு ஆளும் வர்க்கத்தின் அடிமையாகவா அல்லது அதன் நலன்களைக் காப்பனவாக மட்டுமா செயற்படுகின்றது?. அவ்வாறு எனின் எப்படி தொழிலாளர்களது நலன்கள் மற்றும் அவர்களது உரிமைகள் தொடர்பான சட்டங்களையும இயற்றுகின்றது?. என சில கேள்விகளையும் முன்வைக்கின்றர்.

பாராளுமன்றம் என்பது மன்னராட்சி மற்றும் நிலப்பிரபுத்துவ வர்க்கம் மற்றும் வளர்ந்து வந்த முதலாளித்து வர்க்கத்திற்கும் இடையிலான மோதல்களின் விளைவாக இவர்களைக் பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் உருவான ஒரு பொதுவான அமைப்பு. இதிலிருந்து எவ்வாறு கட்சிகள் குறிப்பாக சட்ட வல்லுனர்களை பிரதிநிதிகளாக கொண்ட கட்சிகள் உருவாகின்றன என குறிப்பிடுகின்றனர். இவ்வாறன பிரதிநிதிகளாக ஆளும் வர்க்க ஆண்களாகவே ஆரம்பத்தில் இருந்தனர். பின்பு படிப்படியாக போராட்டங்களின் மூலம் தொழலாளர் பிரதிநிதிகளுக்கும் பெண்களுக்கும் மற்றும் பல்வேறு நிறத்தவர்களுக்கும் அந்தந்த நாட்டின் தன்மைக்கு ஏற்ப அங்கத்துவம் கிடைத்தன. ஆகவே முதலாளித்துவ மற்றும் ஆதிக்க சக்திகள் தமது ஆட்சி அதிகாரத்தை தொடர்ந்தும் தக்க வைத்துக்கொள்வதற்காக இவ்வாறன குழுக்களுக்கிடையில் சமரசபோக்குகளை அரசு, அரசாங்கம் மற்றும் பாராளுமன்றம் என்பவற்றில் உருவாகின என்கின்றனர். இந்தடிப்படையில் பாராளுமன்றம் மற்றும் அதற்கான தேர்தல்கள் என்பது வரையறுக்கப்பட்ட பாத்திரத்தையே வகிக்கின்றது என்கின்ற போதும் இவற்றில் பங்குபற்றுவதற்கும் இவற்றினுடாக செயற்படுவதற்குகான அரசியல் உரிமைகள் சமூக விடுதலைக்கான பயணத்தில் முக்கியத்துவமானவை என்கின்றனர்.

ஆகவே பாரளுமன்றத்தில் புரட்சியாளர்கள் பங்குபற்றுவதற்கான முக்கியமான காரணங்களை ஆதராங்களாக சிலவற்றை முன்வைக்கின்றனர். இதற்காக லெனினின் கருத்துக்களையும் சோவியத்யூனியனின் கொம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கைகளையும் அப்படியே ஆதாரமாக முன்வைக்கின்றனர். இதனை “சோவியத்யூனியன் கால ஆனுபவங்கள் குறிப்பாக லெனினின் பார்வையில்” என்ற உப தலைப்புக்குள் அடக்கியிருக்கலாம். இவ்வாறான ஒரு நீண்ட இணைப்பை கட்டுரையின் ஒரு பகுதியாக சேர்த்தமைக்காக இவர்கள் தமது கவலையை தெரிவித்தபோதும் அதன் முக்கியத்துவம் கருதி வெளியீடுவதாக கூறுகின்றார்கள். இதில் கூறப்படுகின்ற விடயங்கள் முக்கியத்துவமானவை ஆனால் நான் ஏற்கனவே குறிப்பிட்ட படி இவ்வாறான பகுதிகளை கட்டுரையின் தொடர்ச்சியாக இல்லாது உப தலைப்புகளுடன் வெளிப்படுத்தும் பொழுது வாசிப்பவர்கள் புரிந்துகொள்வதற்கு இலகுவானதாக இருந்திருக்கும்.

அடுத்த பகுதி “கட்சியும் பாராளுமன்றப் பாதையும் புரட்சியாளர்களும் ஒரு கோட்பாட்டுப் பிரச்சனை.” இதில் முதன்மையான கருத்தாக முன்வைக்கப்படுவது, பராளுமன்றத்தை “செயல்பூர்வமான புறக்கணிப்புடன்” பொது மனிதர்களின் அரசியல் உரிமை பற்றிய பிரக்ஞையை, வாதப்பிரதி வாதங்களுக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களினுடாக வளர்ப்பதற்கான ஒரு களமாக பார்க்கின்றனர். தேர்தல் காலங்களில் பொது மனிதர்கள் அரசியல் கருத்துக்களை அறிவது தொடர்பான விழிப்படன் இருப்பதாலும் அவர்களே தேடுவதாலும் அவர்களிடம் செல்வதற்கான நல்லவொரு சந்தர்ப்பமாக கருதுகின்றனர். மேலும் ஆதிக்க முதலாளித்துவ சக்திகளின் சித்தாந்த மேலாண்மையை விமர்சிப்பதற்கான பொது தளமாக இது இருக்கின்றது. புரட்சிகர சக்திகளை பொது மனிதர்கள் புர்pந்துகொள்வதற்கான ஒரு சந்தர்ப்பமாக இந்த களங்கள் பயன்படுகின்றன. ஏனனில் அராஜகவாதிகள் நினைப்பதுபோல் போல் எடுத்த எடுப்பில் அரசை கைப்பற்றவோ கவிழ்க்கவோ முடியாது. திட்டமிட்ட செயற்பாடுகள் மூலமாக படிமுறையாகத்தான் செய்யலாம்;. இந்தடிப்படையில் பாராளுமன்றம் என்பது கடந்து செல்லவதற்கான ஒன்றே தவிர அதன் மூலம் முழுமையான நோக்கத்தை அடையமுடியாது. ஆகவே பாராளுமன்றத்திற்கு வெளியேயான செயற்பாடுகளையும் சமாந்தரமாக முன்னெடுக்க வேண்டும். ஆகவே புரட்சியாளர்கள் பல்வேறு வழிமுறைகளை அதாவது சாத்தியமான அனைத்து வழிமுறைகளையும் பன்முகத்தன்மைகளையும் சமூகமாற்றத்திற்கான செயற்பாட்டிற்காக பயன்படுத்தவேண்டும் என்கின்றனர்.

சோவியத் புரட்சியின் பின்பு கடந்த 60 ஆண்டுகளில் பரட்சியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட பாராளுமன்ற செயற்பாடுகளின் அனுபவங்களையும் அதை எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்பதையும் அடுத்த பகுதிக்குள் அடக்கலாம். அதாவது, “புரட்சியாளர்களின் பாராளுமன்ற பாதை நேர் எதிர் மறை அனுபவங்கள் ஒரு வரலாற்றுப் பார்வை” என்ற உப தலைப்புக்குள் இதை அடக்கலாம். இதன் மூலம் பாராளுமன்றப் பாதையின் நேர் எதிர் மறைப் பாத்திரங்களை விவாதிக்கின்றனர். உதாரணமாக சிலி நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றியபோதும் அதைத் தொடர்ந்தும் காப்பாற்ற முடியாமல் போனமையும் இந்தியாவில் தொழிலர்களுக்கு எதிராக மார்க்ஸிய கட்சிகளின் மாநில அரசாங்கங்கள் செயற்பட்டதையும் இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாத அரசியலமைப்பையே இந்த மார்க்ஸியவாதிகள் வடிவமைத்ததையும் பாராளுமன்றத்தின் எதிர்மறை காரணங்களாக குறிப்பிடுகின்றனர். மறுபுறம் நிகரக்குவா வெனிசுலா பொலிவியா நேபாள்ம் போன்ற நாடுகளில் பாராளுமன்றத்தைக் கைப்பற்றிது மட்டுமல்லாது முதலாளி வர்க்கம் மற்றும் அமெரிக்க அரசுகளின் மறைமுக நேரடி அழுத்தங்களுக்கு எதராகப் போராடி புரட்சிகரமான முடிவுகளையும் செயற்பாடுகளையும் முன்னெடுத்தனர் என பாராளுமன்றப் பாதையின் நேர்மறை உதாரணங்களையும் விளக்குகின்றனர்.

மேலும் குளோபல் சௌவுத் எனக் கூறப்படுகின்ற மூன்றாம் உலக நாடுகளில் கட்சி, பாராளுமன்றம், மற்றும் தனிநபர் சார்ந்த பிரச்சனைகளையும் அலசுகின்றனர். ஏனனில் இவை ஐரோப்பிய நாடுகளிலிருந்து வித்தியாசமான தனித்துவமான பண்புகளைக் கொண்டிருக்கின்றன எனக் கூறுகின்றனர். அதாவது எவ்வாறு ஒரு தனிமனிதர் முழு ஆதிக்கத்தையும் தன்னுள் கொண்டிருக்கின்றார் என்பதையும் அவரே அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தியாகவும் இருக்கின்றார் என்பதையும் விளக்குகின்றனர்.

இறுதிப் பகுதியை “நமது (வியூகம்) நிலைப்பாடும் செயற்படுவதற்கான வழிமுறைகளும்” எனக் கூறலாம். மார்க்சிய வுராலாற்றில் பாராளுமன்றம் தொடர்பாக மூன்று பார்வைகள் உள்ளதாக கூறுகின்றனர். ஒன்று பாராளுமன்றப் பாதையே ஒரு வழி என அதில் முழுமையாக நம்பியும் தங்கியும் தேங்கியும் சரணாகதியடைந்திருப்பவர்களது நிலைப்பாடு. இரண்டாவது முற்றகாப் புறக்கணிப்பவர்களான அராஜகவாதிகளது நிலைப்பாடு. மூன்றாவது பாராளுமன்றப் பாதையின் வரையறைகளைப் புரிந்துகொண்டு சமூக மாற்றத்திற்காக அதை எவ்வாறு ஆரோக்கியமாக தமது இலக்கு நோக்கி பயன்படுத்துவது என்ற நிலைப்பாடு. வியூகம் குழுவினர் மூன்றாவது பாதையையே தமது பாதையாக கொண்டுள்ளதுடன் அதற்கான வரையறைகள் பொறுப்புகள் என்ன என்பது தொடர்பாகவும் கவனங் கொண்டுள்ளனர். புரட்சிகர சக்திகளின் சித்தாந்த மேலான்மையை நிறுவுவதற்கான பாதைகளில் இதுவும் ஒரு முக்கியமான செயற்பாட்டிற்கான வழி என்கின்றனர்.

எனது முதலாவது கேள்வி லெனினின் அறிக்கையின் அல்லது கோட்பாட்டு வெளிவந்த பின் பாட்டாளிவர்க்க சர்வதிகாரம் நடைமுறைப்படுத்தப்பட்ட அனுபவத்தை குறிப்பாக சோவியத்யூனியன் மற்றும் சீனாவிடம் இருந்தும் நாம் பெற்றிருக்கின்றோம். இந்த சர்வதிகாரமானது பல அல்லது சில அடிப்படை பிரச்சனைகளை தீர்த்திருந்தாலும் மனிதர்களை தங்க குண்டிற்குள் அடைத்தது போலானது எனவும் குறிப்பிடலாம். இதன் அர்த்தம் முதலாளித்து அரசிற்குள் அனைத்தும் நன்று என்பதல்ல. ஆனால் முதலாளித்துவ அரசின் கீழ் அனுபவிக்கப்படுகின்ற அடிப்படை ஐனநாயகம் மனித உரிமைகளைக் சோவியத் மற்றும் சீன அரசின் கீழ் வாழ்கின்ற மனிதர்கள் அனுபவித்தார்களா என்பது கேள்விக்குரியே. ஏனனில் இவ்வாறன ஐனநாயக உரிமைகள் எல்லாம் இந்த நாடுகளில் அர்த்தமிலந்து காணப்படுகின்றன. ஒரு கட்சி ஆட்சிமுறை பன்முகத்தன்மையையும் ஐனநாயக உரிமைகளையும் ஒருபுறம் அழித்துள்ளது என்றால் மிகையல்ல. மறுபுறம் புரட்சிகர கட்சியே ஆதிக்க வர்க்கமாக மாறியுள்ளமை கண்ணால் காண்கின்ற உண்மை. முதலாளித்துவ அரசு கைப்பற்றப்பட வேண்டும் இல்லாது செய்யப்படவேண்டும் என்பதில் கருத்துவேறுபாடு இல்லை. ஆனால் பாட்டாளி வர்க்க சர்வதிகாரம் என்ற சொல்லாடல் அல்லது அந்த செயற்பாட்டுமுறைமை இப்பொழுதும் சரியானது என ஏற்றுக்கொள்கின்றோமா? ஆம் எனின் மேற்குறிப்பிட்ட பிரச்சனைகள் தொடர்பான பதில் என்ன? ஏற்றுக்கொள்ளவில்லை எனின் மாற்று செயற்பாட்டு முறைமை என்ன? என்பதற்கான பதில்கள் முன்வைக்கப்படவேண்டும். இதன் தொடர்ச்சியாக வன்முறை செயற்பாட்டின் மூலம் அரசை கைப்பற்றுவது தொடர்பான விரிவான விளக்கமும் முன்வைக்கப்படவேண்டும். ஏனனில் வன்முறை பாதை என்பது ஆணாதிக்கப் பார்வையிலமைந்த ஒரு செயற்பாட்டு வடிவம் என்பதே எனது புரிதல்.

இரண்டாவது தனிமனிதர்களும் புரட்சிகர கட்சியும் சமூகமும் பொது மனிதர்களும் மற்றும் இவற்றுக்கு இடையிலான உறவுகள் தொடர்பான பிரச்சனை. புரட்சி நடைபெற்ற நாடுகளில் குறிப்பாக மேற்குறிப்பிட்ட இரு நாடுகளிலும் தனிமனிதர்கள் குறிப்பாக கட்சித் தலைவர்கள் மிகப் பெரும் அதிகாரம் உள்ள ஆதிக்க சக்திகளாக எவ்வாறு வளர்ச்சி பெற்றனர். இவ்வாறான வளர்ச்சியை தடுப்பதற்கு புரட்சிகர கட்சிக்குள் பொறிமுறை வடிவங்கள் இல்லையா? இந்த நாடுகளில் புரட்சியின் பின் சமூக கட்டமைப்பிலும் பொது மனிதர்களது வாழ்விலும் ஆதிக்க சிந்தனைகளிலும் மாற்றங்கள் இடம் பெற்றனவா? இடம் பெற்றன எனின் எவ்வாறான மாற்றங்கள்.?. இல்லை எனின் ஏன் மாற்றம் ஏற்படவில்லை? புரட்சி நடைபெற்று இவ்வளவு காலத்தின் பின் இன்று இந்த மனிதர்களினதும் சமூகத்தினதும் அதன் ஆதிக்க சித்தாந்தத்தினதும் நிலை என்ன? இவைபற்றிய ஆய்வுகள் முக்கியத்துவமானவை இல்லையா?

வெற்றி பெற்ற புரட்சிகள் எல்லாம் சரியான கோட்பாடு இருந்ததனால் மட்டும் வெற்றி பெற்றன எனக் கூறலாமா? அதற்கான சூழலும் ஆதிக்க சக்திகளது பலவீனமான நிலையும் புரட்சிகளின் வெற்றிக்கு காரணமாக இருக்கவில்லையா?

மூன்றாவது மார்க்ஸ்pன் புகழ் பெற்ற வசனம் இதுவரை தத்துவவாதிகள் சமூகத்தை வியாக்கினமே செய்து வந்தனர். ஆனால் நாம் சமூகத்தை எப்படி மாற்றப் போகின்றோம் என்ற நடைமுறை செயற்பாட்டுற்கான தத்துவத்தை முன்வைக்கின்றோம் என்றார். இதுவே இவர் கடந்தகாலத்திலிருந்து தன்னை முறித்துக் கொண்டு உருவாக்கிய புதிய கோட்பாடு எனலாம். இதேபோல் லெனின் மார்க்ஸின் முன்மொழிவான முதலாளித்துவ சமூகத்தில் ஏற்படும் வர்க்க முரண்பாடுகளின் உச்சத்தில் தான் புரட்சி சாத்தியம் என்பதற்கு மாறாக நிலவுடமை சமூகக் கட்டமைப்பின் இறுதிக் கட்டங்களில் அல்லது முதாலாளித்து சமூக அமைப்பிற்கான ஆரம்ப கட்டங்களில் இருந்த ரஸ்சிய சமூகத்தில் அன்றைய சுழ்நிலைகளால் புரட்சி சாத்தியம் என கண்டு முன்னெடுத்தார். இதுவே இவர் மார்க்ஸியத்தின் உதவியுடன் உருவாக்கி புதிய கோட்பாடு எனலாம். இதேபோல் மாவோவும் இறுக்கமாக நிலவிய சீன நிலவுடைமை சமுதாயத்தில் அதுவும் முதலாளித்துவ வாசனை அற்ற கிராமப் புறங்களிலிருந்தே சீனப் புரட்சியை ஆரம்பித்தார். இப்படி வெற்றி பெற்ற ஒவ்வொருவரும் தம் தம் சமூக சுழ்நிலைகளுக்கு ஏற்பவே புதிய கோட்பாடுகளை உருவாக்கி புரட்சியை வழிநடாத்தினர். வியூகம் குழுவினர் இவ்வாறு தமது நிலைப்பாடாக முன்வைக்கும் தமிழ் சமூகம் அதற்கான மாற்றம் தொடர்பான புதிய கோட்பாடு என்ன?

பாராளுமன்றம் தொடர்பாக மார்க்ஸ் மற்றும் லெனினின் வாதங்களை முன்வைத்தனர். பல்வேறு நாடுகளில் வரலாற்று ஆதராங்களை நேர் எதிர் அனுபவங்களை முன்வைத்தனர். இதன் மூலம் பாராளுமன்றத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதில் எந்த முரண்பாடு இல்லை. ஆனால் கடந்த காலங்களில் புரட்சியாளர்கள் பாராளுமன்றத்தைப் பயன்படுத்தியதிலிருந்து பெற்ற நேர்மறை எதிர்மறை அனுபவங்களில் இருந்து நாம் கற்றது என்ன? கடந்த காலங்களில் பாராளுமன்றத்தை பயன்படுத்திய புரட்சியாளர்களிலிருந்து வியூகம் குழுவினர் எந்தவகையில் வேறுபடுகின்றனர்.? இவற்றிலிருந்து எவ்வாறான புதிய கோட்பாட்டை முன்வைக்கின்றார்கள்? அல்லது பாராளுமன்றத்திற்கு செல்வதை நியாயப்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட சாதகமான வாதங்களா இவை?

இலங்கை இடதுசாரிகள் குறிப்பாக சிங்கள தேசத்தின் இடதுசாரிகளில் என்எஸ்எஸ்பி அதனது தலைவர் விக்ரமபாகுவின் தலைமையில் தொடர்ச்சியாக அரசாங்கத்தின் ஜனநாய விரோத மற்றும் இனவாத செய்றபாடுகளுக்கு எதிராக செயற்பட்டபோதும் மற்றும் தேசிய இனப் பிரச்சனை தொடர்பாக சுயநிர்ணைய உரிமையை ஏற்றுக்கொண்டு அதற்காக செயற்பாடுகளை மதிக்கலாம் ஆதரிக்கலாம். ஆனால்; சமூக மாற்றம் புரட்சி என்ற தளத்தில் அவர்களது செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டனவாக அல்லது பூச்சிய நிலையிலையே இருக்கின்றன. இவர்கள் பாராளுமன்ற தேர்தல் காலங்களில் மட்டும் துடிப்பாக செயற்படுகின்றவர்களா மட்டுமே இருக்கின்றனர். இதற்கு காரணம் இவர்களிடம் காணப்படும் மட்டுப்படுத்தப்பட்ட பழைமைவாத மார்க்ஸிய கருத்துக்களா? அல்லது புதிய கோட்பாடுகள் தொடர்பான அக்கறையினமா? ஒரு முறை விக்கிரமபாகுவிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதாவது தங்களது வீட்டின் விலாசமாக இன்றும் தங்களது சாதிய அடையாளம் உள்ளது என்றும், இது நீங்கள் இன்னும் சாதிய அடையாளத்தை பயன்படுத்துகின்றீர்கள் என்பதற்கு சாட்சியாகவும் இருக்கின்றது என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அவ்வாறு சாதிய அடையாளத்தை முனநிறுத்தவில்லை எனின் அதை ஏன் மாற்றக் கூடாது எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அந்த அடையாளத்தைத்தான அனைவரும் குறிப்பாக தபால் தருகின்றவர் அறிந்து வைத்திருக்கின்றர். ஆகவே கடிதங்கள் வந்து சேர்வதற்கு வசதியான தெரிந்த அடையாளமாக அது உள்ளது என ஒரு பொருப்பற்ற உப்புச்சப்பற்ற பதிலை கூறியிருந்தார்.. மேலும் சமூக மாற்றம் ஒன்று நடைபெற்றபின் அதன் தேவை இருக்காது என்றும் அப்பொழுது அந்த அடையாளம் பயன்படுத்தப்படமாட்டாது என்றார். என்னைப் பொருத்தவரை இது ஒரு முக்கியமானதும் விமர்சனத்திற்கும் உரிய ஒரு விடயமாகும். இங்குதான் நாம் நம் மீதான ஆதிக்க சக்திகளது சித்தாந்தங்களை பிரங்ஞைபூர்வமாக நாம் கட்டுடைப்பு செய்யவேண்டும் என்பது எனது உறுதியான நிலைப்பாடு. அதாவது நாம் சமூக மாற்றத்திற்காக செயற்படும் அதவேளை சமாந்தரமாக நம்மை நாம் மாற்றுவதற்கான வழிவகைகளை மேற்கொள்ளவேண்டும். புரட்சி ஏற்படும்வரை காத்திருப்பதோ அல்லது புரட்சியின் பின் மாறிவிடுவோம் என்பதோ பொறுப்பற்ற தப்பிக்கும் காரணமே. இவ்வாறு நாம் செய்வது நடைமுறை வாழ்வில் கஸ்டமானதாக இருந்தபோதும், நடைமுறை வாழ்க்கையில் சாத்தியமான சகல கணங்களிலும் தளங்களிலும் புரட்சிகரமானவர்களாக நாம், நம் உள் தன்மையிலும், சிந்தனையிலும், வெளி பழக்கவழக்கங்களிலும், உறவுகளிலும்; மாறாதவரை, நாம் எதிர்பார்க்கின்ற சமூக மாற்றத்தை முழுமையாக சாத்தியமாக்க முடியாது என்பது நாம் ஆழமாக புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான ஒரு விடயமாகும்.

மறுபுறம் வியூகம் நண்பர்கள் உயிர்பு காலத்திலிருந்து புதிய கோட்பாடுகளை உருவாக்குவதில் அக்கறை உள்ளவர்களாகவும் அதை நோக்கிய முழுமையாக பங்களிப்புடன் செயற்படுகின்றவர்களாகவும் இருக்கின்றனர். ஆனால் பொதுவான சமூக தளத்தில் அவர்களது செயற்பாடு என்பது பூச்சியம் என்றே கூறவேண்டும். இவ்வாறான செயற்பர்ட்டின் வெளிப்பாடுதான் 1998ம் ஆண்டு கட்சியாக தம்மை பிரகடனப்படுத்தி பொது மனிதர்கள் மத்தியில்செயற்பட ஆரம்பித்தபோது அவர்கள் எதிர்கொண்ட அமைப்புத்துறை மற்றும் தனிமனித செய்பாடுகள் தொடர்பான் பிரச்சனைகள். இந்தப் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க முடியாது இரண்டு வருடங்களுக்குள் கட்சியை களைக்கவேண்டி ஏற்பட்டது. எனது புரிதலில் இதற்கு காரணம் கோட்பாட்டுருவாக்கத்தில் அக்கறையாக செயற்படும் அதேவேளை சமூக மட்டத்திலான செயற்பாடின்மை காரணம் எனலாம். அதாவது தாம் உருவாக்கிய கோட்பாட்டை சரியானதா பிழையானதா என யதார்த்த சமூக அரசியல் நீரோட்டத்துடன் சமாந்தரமாக உரசிப்பார்க்காததே காரணம் என்பேன். இவை இரண்டும் சமாந்தரமாக நடைபோடவேண்டும் என்றே கருதுகின்றேன்.

சமூக மாற்றத்திற்கா செய்ற்படுகின்றவர்களின் வழிகாட்டியாக இருக்கின்ற மார்க்ஸ் லெனின் மாவோ போன்ற பிரதான கோட்பாட்டாளர்கள் சிந்தனையாளர்களாக இருந்தால் என்ன, அதன் பின் வந்த பிற புரட்சியாளர்களாக இருந்தால் என்ன, அனைவரும் அந்த சுழலுக்கான கோட்பாட்டை தாம் உருவாக்கிய அதேநேரம் நடைமுறை அரசியலிலும் பங்கெடுத்ததுடன் அதற்கும் வழிகாட்டினர் என்பதே எனது அறிவு. நடைமுறை அரசியலுக்கு உடாகத்தான தமது கோட்பாடுகளை செழுமைப்படுத்தின்ர் என்பதே எனது புரிதல். ஆனால் தமிழ் சுழலில் உதாரணமாக செந்தில் வேல் தலைமையிலான புதிய ஐனநாயக கட்சியினர் நீண்ட காலமாக இடதுசாரி அரசியலில் செயற்படுகின்றனர். ஆகக் குறைந்ததது அவ்வாறான ஒரு தோற்றத்தை தருகின்றனர். ஆனால் அவர்களிடம் காணப்படும் மரபுவாத சிந்தனையும் அதை அப்படியே பின்பற்றுகின்ற போக்கும் புதிய கோட்பாடுகள் தொடர்பான அக்கறையீனமும் அவர்கள் செயற்படும் சமூகத்தில் குறிப்பான எந்தவொரு தாக்கத்தையும் அவர்களால் ஏற்படுத்த முடியாமலிருக்கின்றது. மறுபுறம் வியூகம் நண்பர்கள் புதிய கோட்பாட்டுருவாக்கத்தில் காண்பிக்கும் அக்கறையை நடைமுறை அரசியலில் காண்பிப்பதாக தெரியவில்லை. பொதுவான அரசியலில் செயற்படுவதற்காக தமக்கான கோட்பாட்டை உருவாக்கும் வரை காத்திருப்பதாகவே தெரிகின்றது. அவ்வாறு இவர்கள் கோட்பாட்டை உருவாக்கும் பொழுது புறச் சுழல் புதியதொரு நிலைமைக்கு மாறியிருக்கும். மீண்டும் அப் புதிய சுழலுக்கு ஏற்ப புதிய கோட்பாட்டின் தேவை ஏற்படும். இதுவே கட்ந்தகாலத்திலும் நடந்தது. இப்பொழுதும் இவர்களுக்கு நடக்கின்றது என்றால் மிகையல்ல. ஆகவே வியூகம் நண்பர்கள் தாம் இருக்கின்றன நாடுகளில் ஒரு சிறு குழுவையாவது அமைத்து கோட்பாட்டுருவாக்கத்திற்கு சமாந்தரமாக நடைமுறை அரசியல் செயற்பாட்டிலும் பங்குபற்றுவதே ஆரோக்கியமானது என்பது எனது நிலைப்பாடு. ஆல்லது 2000ம் ஆண்டும் தமிழிழ மக்கள் கட்சிக்கு ஏற்பட்ட நிலைமையே மீண்டும் இவர்கள் உருவாக்கப் போகும் கட்சிக்கு எதிர்காலத்தில் எற்படும் என்பதில் சந்தேகமில்லை.

உதராணமாக கனடாவில் வாழும் பெரும்பான்மையான தமிழ் பேசும் மனிதர்கள் தமது வர்க்க சாதிய சமூக மற்றும் புலம் பெயர் தகுதி அல்லது அந்தஸ்திற்கு ஏற்ப லிபரல் கட்சிக்கும் பழைமைவாதக் கட்சிக்குமே அதிகமாக ஆதரவளித்து வாக்களிக்கின்றனர். புதிய ஐனநாயக கட்சி பல விடயங்களில் லிபரல் கட்சியை போன்றது எனவும் வெற்றி பெறாத கட்சி என்ற கருத்துக்கள் பொது மனிதர்கள் மத்தியில் சர்வசாதராரணமாக நிலவுகின்றது. இருப்பினும் தமிழ் பேசும் மனிதர்களைப் பொருத்தவரை தமது அரசியல் கோரிக்கைகளுக்காகவும் இலங்கையின் தமிழ் பேசும் மனிதர்களின் அரசியல் விடுதலைக்காகவும் உறுதியாக ஆதரவளிப்பது மட்டுமல்ல குரலும் கொடுக்கின்ற கட்சி புதிய ஐனநாயக கட்சி என்றால் மிகையல்ல. தமிழ் தேசிய விடுதலைக்கான அரசியலின் அடிப்படையில் இக் கட்சிக்கே தமிழ் பேசும் மனிதர்கள் ஆதரவளிக்கவும் இக் கட்சியின் சார்பாகவே தமது பிரதிநிதிகளை ஒன்றுபட்டு நிறுத்தவும் வேண்டும். அவ்வாறு செய்ய முடியுமாயின் நிச்சயமாக புலம் பெயர் தமிழ் பேசும் மனிதர்களுக்கான கனடியப் பிரதிநிதி ஒருவரை தெரிவுசெய்யலாம். ஆனால் தமிழ் பேசும் மனிதர்கள் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டு விட்டு தமக்கு யார் இடம் தருகின்றார்களோ அவர்களுடனையே சந்தர்ப்பவதா பயன்படுத்தும் அரசியலில் ஈடுபடுகின்றனர். இதற்கு காரணம் தமிழ் பேசும் மனிதர்களுக்கான ஒழுங்கான அரசியல் கட்சி இல்லாமையே. ஆவ்வாறு ஒரு கட்சியை உருவாக்குவதன் மூலம் கனடிய புலம் பெயர் தமிழ் சமூகத்தில் சித்தாந்த மேலாதிக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் இம மனிதர்களை சமூக நலன் சார்ந்த அரசியல் செயற்பாட்டிற்காக வழிநடாத்தலாம். இதையே வியூகம் குழுவினர் தமது கோட்பாட்டு செயற்பாடடுக்கு சமாந்தரமாக பொதுவான தளத்தில் தமது ஆரம்ப செயற்பாடாக முன்னெடுக்கவேண்டும். ஏனனில் எதிர்கால அரசியல் என்பது தளத்திலும் புலத்திலும் சர்வதேரீதியிலும் என் மூன்று தளங்களில் செயற்படவேண்டியிருக்கும். மற்றது புலத்தில் இருக்கின்றவர்களில் அதிகமானவர்கள் தள அரசியல் கதைத்தாலும் அங்கு சென்று செயற்படமாட்டார்கள் என்பது திண்ணம். ஆகவே அவர்கள் புலம் பெயர் அரசியலில் ஈடுபடுவதன் மூலமே தமிழ் தேசிய விடுதலைக்கான சமூக விடுதலைக்கான பங்களிப்பை சிறிதளவாவது செய்யலாம். இதை உணர்ந்து வியூகம் குழுவின்ர் செயற்படுவார்களா அல்லது அக்கறை உள்ளவர்களுக்கு வழிகாட்டுவார்களா?

வியூகம் இதழ்கள் 1-2 இல் ஒன்றை நீங்கள் நன்றாக கவனித்தால் ஒரு விடயத்தைப் புரியலாம். அதாவது இக் கட்டுரைகள் ஒரு குழுவின் அல்லது தனிமனிதரின் கருத்துக்களையா பிரதிபலிக்கின்றன என்பதில் சஞ்சிகை முழுக்க தடுமாற்றம் காணப்படுகின்றது. சில கட்டுரைகளில் பொதுவான தளத்தில் “நாம்” எனவும் சில இடங்களில் தனிநபர்சார்ந்து “நான்” என்ற சொற்பிரயோகங்கள் மாறி மாறி வருகின்றன. இது பார்ப்பதற்கு சிறிய பிரச்சனையாக இருக்கல்hம். ஆனால் இது முக்கியமான ஒரு பிரச்சனை. வியூகம் ஒரு குழுவாக செயற்படுகின்றதாயின் இவர்கள் முன்வைக்கும் கருத்துக்கள் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் கருத்துக்களாக இருப்பதுடன் இக் கட்டுரைகளில் அவை பிரதிபலிக்கவேண்டும். அல்லது தம் குழுவிற்குள் அவ்வாறான ஒருமித்த பார்வை அல்லது அனைத்துக் கருத்துக்களிலும் உடன்பாடு இல்லை எனின் அதை பொது இடத்தில் முன்வைத்து வெளிப்படுத்து வேண்டும். மேலும் இந்த இதழ்களில் வரும் கருத்துக்கள் கட்டுரையை எழுதியவரின் சொந்தக் கருத்துக்கள் எனவும் வீயூகத்தின் கருத்துக்கள் அல்ல எனவும் குறிப்பிடப்பட வேண்டும். மேலும் இவர்கள் அனுப்பு மின்னஞ்சல்களில் அனுப்புகின்றவர்களின் பெயர் ஒன்றும் இருக்காது. மற்றும் நாம் அனுப்பும் மின்னஞல்கள் மற்றும் கேள்விகளுக்கான பதில்கள் மட்டுமல்ல ஆகக் குறைந்தது மின்னஞ்சல் கிடைத்ததா என கூட உறுதிசெய்வதில்லை. இவ்வாறான செயற்பாடுகள் இவர்களது பொறுப்பற்றதன்மையை அக்கறையின்மையை காண்பிக்கின்றது.

இச் சந்தர்ப்பத்தில் மனிதர்களின் பண்பு தொடர்பாக நிச்சயமாக கதைக்கப்பட வேண்டும். குறிப்பாக புரட்சிகர மற்றும் சமூக மாற்றத்திற்கான அரசியல் கதைப்பவர்களிடம் இது குறித்த பிரக்ஞை நிச்சயமாக இருக்க வேண்டும். நாம் ஏன் அரசியல் செயற்பாட்டில் ஈடுபடுகின்றோம். அரசியலில் அக்கறை இருப்பதற்கு என்ன காரணம்? அநீதி நடப்பதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியவில்லையா என்பதாலா? அல்லது மனித இனத்தின் மீதான அன்பினால், மனிதர்கள் சுரண்டப்படாது கஸ்டப்படாது சகல உரிமைகளையும் அனுபவித்துக்கொண்டு நலமாக இன்பமாக வாழவேண்டும் என்ற உயர்ந்த நோக்கமா? ஆல்லது புpற தொழில்கள் போல் இதுவும் பணம் பெருக்கும் ஒரு தொழிலா? அல்லது பணம் இருப்பவர்களுக்கான பொழுது போக்கான செயற்பாடா அல்லது தமது சமூக அந்தஸ்ததை நிறுவிக்கொள்வதற்கான ஒரு வழியா? இப்படி பல காரணங்களுக்கா சாதாரண அரசியலில் மட்டுமல்ல புரட்சிகர அரசியலில் கூட ஈடுபடுகின்றவர்கள் பலர் இருக்கின்றார்கள்.

நாம் எந்தளவு உயர்ந்த இலட்சியங்கள் கோட்பாடுகள் தத்துவங்கள் கருத்துகள் என்பவற்றைக் கதைக்கலாம் எழுதலாம். ஆனால் அடிப்படையில் நாம் கதைப்பதன்படி எழுதுவதன் படி நமது இலட்சியக் கனவுபடி ஒரு சிறிதளவாவது செயற்படுகின்றோமா அல்லது மாற்றத்திற்கான முதற்படியகா நம்மை மாற்றுகின்றோமா அல்லது அது தொடர்பாக பிரக்ஞையாவது கொண்டுள்ளோமா என்றால் இல்லை என்றே கூறுவேன். இது தொடர்பான பிரக்ஞை இல்லாது தம்மை மாற்றுவதைப் பற்றிய அக்கறை இல்லாது இருப்பவர்கள் அனுவமும் கல்வியறிவு குறைந்தவர்கள் என்றால் புரிந்துகொள்ளலாம். ஆனால் பல கால வித விதமான சமூக அரசியல் செயற்பாட்டு அனுபவங் பெற்றுக்கொண்டவர்களும் சமூகப் பிரக்ஞையுடன் உயர் கல்வி கற்றவர்களும் கூட இவ்வாறு நடந்து கொள்வது நம்பிக்கையீனத்தையே தருகின்றது. குறிப்பாக நமது பொதுவான சமூக பிரச்சனைகளை கதைக்கும் போது; குறிப்பாக தனிநபர்சார்ந்த பிரச்சனைகளை வெளிப்படையாகவும் நேரிடையாகவும் கதைக்கும் பண்பு நம்மிடம் இல்லை. மாறாக ஒருவருக்கு பின்னால் கதைக்கும் பண்பே பரவலாக காணப்படுகின்றது. ஒருவருக்குப் பின்னால் கதைப்பது தவறல்ல. ஆனால் அதற்கு முதலில் குறித்த நபருக்கு முன்னால் கதைத்த அல்லது விமர்சனத்தை வைத்த பின்பே அந்த நபர் இல்லாதபோது கதைப்பது பண்பாகும். அப்பொழுது அதில் தவறில்லை. ஆனால் நாம் மறுதலையாகவே செய்கின்றோம். குறித்த நபருக்கு முன்னால் அவரது வாழ்க்கை கல்வி தொழில் சமூக பதவி தரம் அந்தஸ்து என்பவற்றைப் பொருத்து அவருடனான உறவின் தரத்தைப் பேணுகின்றோம். குறித்த நபர் தொடர்பான விமர்சனங்கள் இருந்தால் அவரது சமூக அந்தஸ்து தேவை என்பவற்றுக்கு ஏற்ப விமர்சனங்களை தவிர்க்கின்றோம் அல்லது காரசாரமாக முன்வைக்கின்றோம். இவ்வாறு விமர்சனங்கள் முன்வைக்காமல் இருப்பதற்கு இன்னுமொரு காரணம் இருக்கின்றது. விமர்சனங்களை ஆரோக்கியமாக ஏற்கின்ற மனப் பக்குவம் பண்பு நம்மிடம் இல்லை. மறுபுறம் ஒருவரை நம்க்கு பிடிக்கவில்லை அல்லது உடன்பாடு இல்லை எனின் மூன்றாம்தர பாணியிலான ஆரோக்கியமற்ற பிரயோசனமற்ற விமர்சனங்களை முன்வைப்பது. இவ்வாறன அனுபவங்களே கடந்தகால செயற்பாடுகளின் மூலம் நான் பெற்றவை. இவ்வாறான எதிர்மறை மனிதப் பண்புகள் மற்றும் மனித உறவுகளை நாம் கொண்டிருக்கும் பொழுது சமூக மாற்றத்தை எப்படி ஏற்படுத்துவது. தனி மனித மாற்றம் அவசியமில்லையா? சக மனிதர்களுடனான நமது உறவுகள் மேம்படத்தேவையிலலையா?

இன்று இக் கூட்டத்திலும் இதற்கு முன் வியூகம் ஒழுங்கு செய்த கூட்டங்களுக்கும் வந்த பலர் நாம் முன்பு தமிழிழ மக்கள் கட்சியாக செயற்பட்டபோது எம்மைக் கண்டுகொள்ளவே இல்லை. புறக் கணித்தார்கள். ஜான் மாஸ்டர் இன்று செய்வதைத் தான் அன்றும் செய்தார். ஆனால் அன்று இவருக்கு கனடாவிலுள்ள வேறு நபர்களின் ஆதரவு இருந்தது. இன்று அவர்கள் ஆதரவு இல்லை என்றவுடன் இவர்கள் ஆதரிக்கின்றார்கள். ஆகவே இங்கு கருத்துக்களுக்கா கொள்கைகளுக்கா அல்லது தனி மனிதர்களுக்கா முக்கியத்துவம் கொடுத்து நாம் செயற்பட விரும்புகின்றோம் என்பது எனக்கு கேள்வியாகவே இருக்கின்றது. அன்று ஒரு மாற்றாக உருவான அக் கட்சியை திறந்த மனதுடன் விமர்சனங்களை முன்வைத்து ஆதரித்திரிந்தால் தமிழ் பேசும் மனிதர்களுக்கு எதிரான போர் நடைபெற்றபோது புலிகளின் தலைமைக்கு சார்பற்ற பொது மனிதர்களின் நலன் சார்ந்த உரிமைகள் சார்ந்த ஒரு போராட்டத்தை நாம் ஆகக் குறைந்தது புகலிட நாடுகளிலாவது மேற்கொண்டிருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்ய முடியாமல் போய்விட்டது. இதற்கு இப்படியான நமது பண்புகள் தான் காரணம் என்றால் மிகையல்ல.

கட்சிக்குள் புலிகள் இருக்கின்றார்கள் என கூறி அன்று கட்சியை புறக் கணிகத்தவர்கள் இன்று வியூகம் குழுவினர் முன்வைக்கும் கருத்துக்களின் படி முன்னால் புலி உறுப்பினர்களை இனிவருங் காலங்களில் உள்வாங்குவது தவிர்க்க் முடியாது என்பதற்கு என்ன சொல்லப்போகின்றார்கள். நான் இப்படி கூறியவுடன் நான் இன்னாரின் ஆள் என உடனடியாக முத்திரை குத்தாதீர்கள். இன்று நான் எந்த அமைப்பு சாரத ஒரு நபர். ஆனாhல் சமூக மாற்றத்திலும் அதற்காக செயற்பட வேண்டும் என்பதில் மட்டும் அக்கறை கொண்டுள்ள மனிதர். ஆகவே நான் முன்வைக்கும் சந்தேகங்கள் மற்றும் பிரச்சனைகளுக்கே முக்கியத்தும் கொடுங்கள். இதன் மூலம் அவற்றுக்கான தீர்வுகளை கண்டுபிடிப்போம். மாறாக வழமைபோல் முத்திரை குத்தி முன்வைக்கும் பிரச்சகைகளை ஓதுக்கிவிடாதீர்கள்.

இப்படியானவர்கள் தான் சமூமாற்றம் மற்றும் புரட்சிகர அரசியல் என்பவற்றில் அக்கறை கொண்டு செயற்படுகின்றோம். உயர்ந்த தத்துவங்கள் கோட்பாடுகள் கருத்துக்கள் என்பவற்றை அள்ளி விசுகின்றோம். என்னைப் பொருத்தவரை நமது மாபெரும் தவறுகளுக்கான அடிப்படை முரண்பாடு இங்குதான் இவ்வாறன பண்புகள் சிந்தனைகள் செயற்பாடுகளில்தான் ஆரம்பிக்கின்றது என்கின்றேன். இதற்குக் காரணம் நாம் எவ்வளவுதான் நமது வாசிப்புக்கள் எழுத்துக்கள் தொடர்பாக பிரக்ஞையாக இருந்தாலும் நம்மைப் பற்றிய பிரக்ஞை நம்மிடம் மிகக் குறைவாகவே இருக்கின்றது. அதாவது நமக்கு வெளியே உள்ள அனைத்தையும் பற்றி ஒரளவாவது பிரக்ஞையுடன் செயற்படுவோம் செயற்படலாம். ஆனால் நமக்குள்ளே நடப்பவை பற்றிய நம் மன சிந்தனையோட்டங்கள் தொடர்பான பிரக்ஞை என்பது நம்மிடம் மிகக் குறைவு அல்லது இல்லவே இல்லை எனக் கூடக் கூறலாம். புரட்சிகர முன்னேறிய கோட்பாடு என்பது பிரக்ஞையுடன் தமக்கு வெளியில் அதாவது சமூகத்தில் நடப்பவற்றவை அறிவது புரிவதும் அதிலிருந்து உருவாக்குவதுமாகும். இது உள் அதாவது தனிமனித பிரக்ஞையில் மாற்றத்தை ஏற்படுத்துமா? ஒரு புரட்சியில் தனிமனித பிரக்ஞையின் முக்கியத்துவம் என்ன? இவைபற்றிய விரிவான விளக்கத்தை இவர்கள் முன்வைக்க வேண்டும். மனிதப் பிரக்ஞை என்பது முக்கியமான விடயமாக இருந்தபோதும் அது தொடர்பாக விரிவாக கதைப்பதற்கு இது பொருத்தமான இடமல்ல என்பதாலும் இன்றைய எனது பணி அதுவல்ல என்பதாலும் இத்துடன் நிறுத்திக்nhகள்கின்றேன்.

இறுதியாக புரட்சி செய்வது அல்லது சமூகமாற்றத்திற்கான செயற்பாடு என்பது ஒரு அரசாங்கத்தை அல்லது முதலாளித்துவ கம்பனி ஒன்றை நிர்வகிப்பதற்காக செயற்படுவதைவிட பன்மடங்கு ஆற்றலும் மனித வலுவும் தேவைப்படுகின்ற ஒன்று. விஞ்ஞானிகளை விடவும் சமூக அறிஞர்கள் சிந்தனையாளர்களை விடவும் புரட்சியாளர்கள் தமது முழுமையான உடல் மனம் மற்றும் சிந்தனை செயற்பாட்டு பங்களிப்பை முழுமையாகவும் பிரக்ஞைபூர்வமாகவும் வழங்க வேண்டியவர்களாக உள்ளார்கள். அவ்வாறு வழங்காதவிடத்து மேற்குறிப்பிட்ட நிறுவனங்களாலையே முழுநேரம் வேலை செய்தும் தமது நோக்கங்களை நிறைவு செய்ய அவர்களால் முடிவதில்லை. அப்படியிருக்கும் பொழுது இவ்வாறான புரட்சிகர வேலைகளை அரை நேரம் வேலை செய்து நமது உயர்ந்த நோக்கங்களை அடையளாமா என்பது என்முன் உள்ள மிக்பெரிய கேள்வி. ஏனனில் என்னிடம் சிலர் முன்னாள் அல்லது இடதுசாரி மார்க்ஸிய அரசியலில் ஈடுபட்டவர்கள் பின்வருமாறு கூறினார்கள். சில முன்னாள் தோழர்கள் கட்சி அங்கத்தவர்கள் போராளிகள் முழுநேரம் கட்சி வேலை செய்ததால்தான் அவர்களது குடும்பம் அழிந்தது அல்லது கஸ்டப்பட்டது. தம்மைப் போல பகுதி நேரம் வேலை செய்திருந்தால் அவ்வாறு நடைபெற்றிருக்காது என. ஆகவே நண்பர்களே சமூக மாற்றத்திற்கான செய்ற்பாட்டில் எது சரியான பாதை? முழமையான அர்ப்பணிப்பா? ஆல்லது பகுதி நேர பங்களிப்பா? ஆல்லது பொழுது போக்கான செயற்பாடா?

புpன்வரும் குறிப்புகள் கடந்த காலங்களில் பழகிய உறவுகளிலிருந்து நான் பெற்ற அனுபவங்கள்.

பல் வேறு தொழிற்சங்க அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து இப்பொழுது வயதுபோனதன் காரணமாக பேச்சு தடுமாறும் பலர் நம் மத்தியில் இருக்கின்றனர். இவர்கள் கதைக்கும் பொழுது குறிப்பாக அரசியல் கதைக்கும் பொழுது அவர்களை புறக்கணிப்பது அல்லது நையாண்டி செய்வது. இவ்வாறு பலவற்றை அவர்களுக்கு எதிராக அல்லது அவர்களை அசிங்கப்படுத்த செய்கின்றோம். இந்த் வயதுப் புறக்கணிப்பும் மதியாமையும் எதானால் செய்கின்றோம்? நாம் செய்கின்ற அரசியலுக்கும் இதற்கு சம்பந்தம் இல்லையா?

பொது இடங்களில் கதைக்கும் பொழுது தாம் மிகவும் நியாயமானவர்களாகவும் உயர்ந்த பண்புள்ளவர்களாகவும் சிலர் கதைக்கின்றனர். ஒரு முறை தமிழீழ மக்கள் கட்சியின் தமிழீழம் பத்திரிகை விற்பதற்காக ஒரு நபரிடன் வீட்டுக்கு தொலைபேசியில் அழைத்து அனுமதி பெற்றுவிட்டே சென்றிருந்தேன். அவருக்கு அந்தப் பத்திரிiகையை வாங்க விருப்பமில்லை. தன்னிடம் தற்பொழுது பணம் இல்லை எனவும் விட்டில் பல இடங்களிலும் தேடித் தேடி ஒரு சதம் ஐந்து;சதம் போன்ற சில்லறைகளைச் சேர்த்து 25 சதமோ 50 சதமோ தந்தார். இப்படித்தான் இவர்கள் அரசியல் செய்பவர்களை பகிடி செய்து துன்புறுத்துவது. புத்திரிகை வாங்க விருப்பமில்லை எனின் விருப்பமில்லை என நேரடியாக கூறலாம். அதுவே நேர்மையான பண்பு.

இன்னுமொருவர் பெயர் பெற்ற மனித உரிமையாளர் மற்றும் சிந்தனையாளர். என்னுடன் என்ன பிரச்சனையோ எனக்குத் தெரியாது ஆனால் என்னைக் கண்டவுடன் திரும்பிவிடுவார். ஆல்லது வேறு வழியில் சென்றுவிடுவார். அதாவது என்னுடன் கதைப்பதை தொடர்ந்து தவிர்க்கின்றார். எதுவும் என்னுடன் பிரச்சனை என்றால் நேரடியாக கதையுங்கள் என மின் அஞ்சலும் அனுப்பியிருந்தேன். கதைப்போம் என் பதில் எழுதியிருந்தார். ஆனால் நேரில் கண்டவுடன் பழைய கதையே. ஒருவர் என்னுடன் கதைக்க விரும்பாதபோது அவருக்கு தொந்தரவு செய்வதை நான் விரும்புவதில்லை. ஆனால் பிரச்சனை என்னுடன் கதையாமலிருப்பதல்ல. சமூக அக்கறை உள்ள ஒருவர் அரசியல் செயற்பாட்டில் ஈடுபடுகின்றவர் மனித உரிமைகளில் அக்கறை உள்ளவர் மற்றும் மனிதர்களின் நூண்உணர்வுகளை புரிந்துகொள்ளக் கூடியவர் என அறியப்பட்டவரின் செயற்பாடுகள் இப்படித்தான் இருக்கும் எனனின் அவர் எழுதுபவைகளிலும் பேசுபவைகளிலும் உள்ள அறம் என்ன? அர்த்தம் என்ன.? பயன் என்ன? அல்லது அவ்வாறு தன்னை வெளிப்படுத்துவதற்காக பகட்டு வேசமா?

சிலர் மனிதர்கள் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி தாம் விரும்பியவர்களை கட்சியின் அதிகாரப்பிடங்களுக்கு தள்ளிவிடுவதும் விருப்பாதவர்களை வெட்டி விடுவதும் என மனிதர்களையும் அவர்களுடனான உறவுகளை கையாள்பவர்கள். அதாவது மறைமுக செயற்பாடுகள் மூலமாக பயன்படுத்தி தமது நோக்கங்களை முன்னெடுப்பவர்கள்.

இன்னுமொருவர் சமூக மாற்றத்திற்கான அரசியல் செயற்பாட்டாளர். ஆனால் மனித நட்பைவிட தனது உடமைகளை மிகப் பெரிதாக மதித்து நட்பை கொச்சைப்படுத்தி உதறியவர். தனது தவறை இவர் உணர்ந்தார என்பதெல்லாம் எனக்குத் தெரியாது.

தமிழ் பேசும் சமூகத்தில் இருக்கின்ற மார்க்ஸியர்கள் கம்யூனிஸட்டுக்கள் தமது வீடுகளுக்குள் சாதி பார்ப்பதும் தமது பெண்களை அடக்குவதும் அவர்களது வேலைகளுக்கு மதிப்பு கொடுப்பாததும் சர்வசதாரணமாக நடைப்பவை. இவர்களது பிரக்ஞை சமூகத்தை கட்டமைப்பு அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பதைப் பற்றி மட்டுமே. தம்மைப் பற்றிய தமது பிரக்ஞை நிலைபற்றிய மற்றும் சக மனித உறவுகள் பற்றிய பிரக்ஞையில்லாதவர்களாகவே இவர்கள் தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர்.

ஆனால் இவ்வாறன மனிதர்களுடன்தான் நாம் ஆரம்ப அரசியல் செயற்பாடுகளையும் செய்யப்போகிறோம் எனின் நாம் நமது நோக்கத்தை அடைவோம் என்பதில் எனக்கு சந்தேகமே.

புரட்சிகர மாற்றம் என்பது சமூகத்தில் நடப்பது அல்லது சமூகத்தில் உருவாக உழைப்பது மட்டுமல்ல ஒவ்வொரு தனி மனிதரிலும் புரட்சிகர மாற்றத்திற்கான அடிப்படைகளாவது உருவாகவேண்டும். புரட்சி செய்யும் மனிதர்கள் புரட்சியாளர்கள் அல்ல. மாறாக அவர்கள் எந்தளவு தாம் நம்பும் கோட்பாடுகள் கொள்கைகளின் அடிப்படையில் தம்மை மாற்றியுள்ளார்கள் அல்லது மாற்ற முற்படுவதற்கு முயற்சிக்கின்றார்கள் என வாழ்பவர்களளே உண்மையான புரட்சியாளர்கள் என்பது எனது நிலைப்பாடு.

நட்புடன்
மீராபாரதி

மே 18 இயக்கம் தொடர்பான மேலதிக வாசிப்பிற்கு:

வியூகம் இதழ் 2- ஒரு பார்வை: பாராளுமன்றமும் புரட்சியாளர்களும்…- தேவை ஒரு புதிய கோட்பாடு : மீராபாரதி

வியூகம் சஞ்சிகையின் இதழ் 2 வெளியீடு

தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் மீள்மதிப்பீடும் கலந்துரையாடலும் – மே 18 இயக்கம் : ஜெயபாலன் த

பிற்போக்கு தலைமைகளையும், கைக்கூலிகளையும் தோற்கடிப்போம்!

இடதுசாரி முன்னணித் தோழர் விக்கிரமபாகுவை ஆதரிப்பதாக ‘மே 18 இயக்கம்’ முடிவு!

பாராளுமன்ற ஜனநாயகமும் ஜனநாயக முன்னணியும் : ரகுமான் ஜான்

இலங்கையில் தேர்தலும் தமிழ் மக்களது அரசியல் எதிர்காலமும் : கலந்துரையாடல்

 ‘ஜனநாயகப் பண்போடு நடந்துகொண்டால் மட்டுமே சரியான வழியில் நிற்பவருடன் மற்றவர் இணைந்துகொள்ள முடியும்’ ரகுமான் ஜான் – வியூகம் வெளியீடு தொகுப்பு : த ஜெயபாலன்

‘விவாதக் களத்திற்கான தளத்தின் ஆரம்பமே வியூகம்’ ரொறன்ரோ வியூகம் வெளியீட்டு நிகழ்வில் ரகுமான் யான்

இரயாகரன் சார்! எனக்கொரு உண்மை தெரிந்தாக வேணும் : த ஜெயபாலன்

மே 18 இயக்கமும் வியூகம் வெளியீடும் : த ஜெயபாலன்

தமிழர் அரசியல்ரீதியாக தம்மை ஒழுங்கமைத்துக் கொள்வதை நோக்கி… : ரகுமான் ஜான்

இதுவும் கடந்து போம்: புலியெதிர்ப்பின் அரசியல்: தேசபக்தன்
 
நடந்து முடிந்ததும்! நடக்க வேண்டியதும்!!! : தேசபக்தன்

அமுதுப் புலவர் பற்றிய ஆய்வுநூல் ஒன்று. : என் செல்வராஜா (நூலகவியலாளர்)

Selvarajah_Nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறப்புக் கலைமாணிப் பட்டதாரிகளை உருவாக்கி வெளியேற்றி வருவதை நாம் அறிவோம். பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளிலும் பயிலும் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தேர்வுக்காக ஒவ்வொருவரும் துறைத்தலைவரால் அங்கீகரிக்கப்பட்ட, தெரிந்தெடுத்த ஒரு விடயத்தை வைத்து விரிவான ஆய்வினை மேற்கொண்டு 100 பக்கம் வரையிலான ஆய்வாக அதனைத் தமது இறுதித் தேர்வின் ஒரு பகுதியாக தாம் சார்ந்த துறைப்பீடத்திற்கு வழங்குவதுண்டு.

மற்றைய பல்கலைக்கழகங்களைப் போலல்லாது  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமக்கென்று ஒரு பதிப்பகப் பிரிவினை ஒருபோதும் கொண்டிராததால், இவ்வாய்வுகளை நூலுருவில் கொண்டுவந்து அதனைத் தான் சார்ந்த சமூகத்திற்கு வழங்கித் தமது கல்விசார் அடைவினை சமூகமயப்படுத்துவதற்கும், அவ்வாய்வேடுகள் பரவலாக சமூகத்தின் பிற புத்திஜீவிகளிடம் சென்றடையச்செய்து பல்கலைக்கழகத்தின் கற்றல் கற்பித்தல் மற்றும் ஆய்வுப் புலமையை பட்டைதீட்டிக்கொள்வதற்கும் இன்றளவில் வாய்ப்பில்லாது போய்விட்டது. இதனால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தான் சார்ந்துள்ள தமிழ்ச் சமூகத்துடன் மேற்கொள்ளக்கூடிய ஒரு உறவுப்பாலத்தை போக்குவரத்திற்காகத் தடைசெய்துவருகின்றது.

இதனால், ஆய்வினை மேற்கொள்ளும் பட்டதாரிகள் தாம் பெரும் பணச்செலவினதும் உடல் உழைப்பினதும் கால விரயத்தினதும் பெறுபேறாக உருவாக்கிய ஆய்வுகள் கிணற்றில் போட்ட கற்களாக பல்கலைக்கழக பீடங்களின் துறைத்தலைவர்களின் இறாக்கைகளில் தஞ்சமடைவதுடன் தமது பிறவிப் பெரும்பயனை எய்திவிடுகின்றன. ஒரு சில சந்தர்ப்பங்களில் மாத்திரம் ஆய்வு மாணவரின் சுயமுயற்சியால், அல்லது இவ்வாய்வு பற்றிய தகவல் அறிந்த சிலரால் வெளியாரின் உதவியுடன் நூலுரவாக்கி வெளியிட்டுள்ளனர். இத்தகைய ஆய்வுகளை நூலுரவாக்கி வெளியிடுவதில் மற்றைய பதிப்பகங்களைவிட, கொழும்பு குமரன் புத்தக இல்லம் அதீத அக்கறை காட்டிவருவதும் இங்கு குறிப்பிடப்படவேண்டும்.

இந்நிலையில் நூலுரவாக்கப்பட்ட அய்வுகள் பற்றிய பட்டியலையோ, அவற்றின் இருப்பு பற்றிய தகவல்களைக்கூட பல்கலைக்கழகங்கள் பேணிவருவதாகத் தகவல் இல்லை. பல்கலைக்கழக வட்டாரத்தின் மூலமல்லாது, தினசரிப் பத்திரிகைச் செய்திகளின் வாயிலாகவே இவ்வாய்வுநூல்களின் இருப்பு பற்றி அறியமுடிகின்றமை கவலைக்குரியதாகும்.

அமுதுப் புலவருக்கு அஞ்சலி: விடைபெறுவீர் அமுதுப் புலவரே….. : என்.செல்வராஜா (நூலகவியலாளர், லண்டன்.)

இவ்வகையில் அண்மையில் எனக்குக் கிட்டிய பத்திரிகைத் தகவல்- 2006ஆம் ஆண்டு தமிழ்த்துறையில் இறுதித்தேர்வினை மேற்கொண்ட டயானா மரியதாசன் என்பவர் தனது சிறப்புக் கலைமாணித் தேர்வுக்காக லண்டனில் புலம்பெயர்ந்து வாழ்ந்து அண்மையில் 23.2.2010 அன்று மறைந்த இளவாலை அமுதுப் புலவர் பற்றிய விரிவான ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளார் என்பதாகும். இவரது ஆய்வு தமிழுக்கும் அமுதென்று பேர் என்ற தலைப்பில் 99 பக்கங்களில் ஒரு நூலாக வெளிவந்துள்ளது. இதனை அருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் வெளியிட்டுள்ளார். 2006இல் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வென்ற வகையில் இது அவரது மறைவுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், இளவாலைக் கிராமத்தை வாழ்விடமாகவும் கொண்டவர் அமுதுப் புலவர். இளவாலை தம்பிமுத்து –சேதுப்பிள்ளை தம்பதியினரின் மகனாக 1918ம் ஆண்டு செப்டெம்பர் 15ம் திகதி பிறந்த இவர், தன் ஆரம்பக் கல்வியை புனித சார்ள்ஸ் வித்தியாலயத்திலும், இடைநிலைக்கல்வியை யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரியிலும், உயர் கல்வியை கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையிலும், பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டவர். யாழ்ப்பாணம் காவிய பாடசாலையிலும், நாவலர் பாடசாலையிலும் தமிழ்த்துறைப் பண்டிதர் வகுப்பில் பயின்றிருந்த இளவாலை அமுது, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வித்துவான் பட்டத்தையும், இலங்கைக் கல்வித் திணைக்களத்தின் பண்டிதர் பட்டத்தையும் பெற்றவர்.
ஓய்வுபெற்ற முதலாம் தர ஆசிரியரான இவர், இளவாலை அமுது என்று ஈழத்துத் தமிழ்; இலக்கிய உலகில் பரவலாக அறிமுகமானவர். 1984ம் ஆண்டு முதல் தாயகத்திலிருந்து குடும்பத்துடன் புலம்பெயர்ந்து வந்து லண்டன் மிடில்செக்ஸ் பிரதேசத்திலுள்ள ஹரோ நகரின் நோர்த்ஹோல்ட் பகுதியில் தான் மரணிக்கும்வரை வாழ்ந்துவந்தார்.

அமுதுப் புலவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டினைக் கெளரவிக்கும் வகையில் பல்வேறு அறிவுசார் நிறுவனங்களும் அவரைக் கௌரவித்திருக்கின்றன. இவரின் சமய இலக்கியத் தொண்டினை கௌரவித்து 2004ம் ஆண்டில் ரோமாபுரியில் பரிசுத்த பாப்பரசரினால் செவாலியர் விருது வழங்கப்பட்டது. பின்னர் 2005இல் இலங்கை அரசு கலாபூஷணம் விருதையும் அமுதுப் புலவருக்கு வழங்கியிருந்தது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கொளரவ இலக்கிய கலாநிதிப் பட்டத்தையும் அதே ஆண்டில் வழங்கியிருந்தது. 2006இல் கனடாவிலிருந்து தமிழர் தகவல் நிறுவனம், தமிழர் தகவல் விருதினையும் வழங்கியிருந்தது.

அமரர் இளவாலை அமுது பற்றிய ஆறு இயல்களைக்கொண்ட இவ்வாய்வு நூலின் இயல் ஒன்றில் அமுதுப் புலவரின் வாழ்க்கை வரலாறும், இயல் இரண்டில் அவரது கவிதைப் படைப்புகள் பற்றியும், இயல் மூன்றில் அவரது ஆய்வு நூல்கள் பற்றியும், இயல் நான்கில் அவரது வாழ்க்கை வரலாற்று நூல்கள் பற்றியும், இயல் ஐந்தில் அவரது பிற பணிகள் பற்றியும் பேசும் இவ்வாய்வின் ஆறாம் இயல் அமுதுப் புலவரின் வாழ்வும் பணிகளும் பற்றிதொரு விரிவான மதிப்பீடாக அமைந்துள்ளது. அமுதுப் புலவரின் இலக்கிய உலா, விருது வழங்கல், பிறந்த தினம், மேடைப் பேச்சுக்கள் என்பன பற்றிய புகைப்படக்காட்சிப் பதிவுகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. 

இலங்கையில் இந்நூல் 200 ரூபாவுக்கு புத்தக விற்பனை நிலையங்களில் பரவலாக விற்பனையிலுள்ளன.

வியூகம் சஞ்சிகையின் இதழ் 2 வெளியீடு

Viyoogam_02_Coverமே 18 இயக்கத்தின் கோட்பாட்டு சஞ்சிகையான வியூகம் சஞ்சிகையின் 2வது இதழ் வெளியீடு ரொறன்ரோவில் செப்ரம்பர் 12ல் நடைபெறவுள்ளது. சிங்கள தேசியவாதத்தின் தோற்றம் பாராளுமன்றமும் புரட்சிகர சக்திகளும் சூழலியலும் நிலைத்து நிற்கக்கூடிய வளர்ச்சியும் வீட்டு வேலைக்கு ஊதியம் தொடர்பான முன்மொழிவுகள் போன்ற கட்டுரைகளுடன் வியூகம் இதழ் 2 வெளியாகி உள்ளது.

2009 மே 18க்குப் பின் உருவான அரசியல் திருப்புமுனையை தளமாக்கி உருவாகிய மே 18 இயக்கம் கோட்பாட்டு தளத்தின் அவசியத்தை உணர்ந்து வியூகம் என்ற கோட்பாட்டு சஞ்சிகையையும் ஆரம்பித்தனர். இதன் முதலாவது இதழின் வெளியீடு ரொறன்ரோ லண்டன் பிரான்ஸ் ஆகிய நகரங்களில் இடம்பெற்றது. மே 18 இயக்கம் தத்துவார்த்த விவாதத்துடன் மட்டும் தன்னை மட்டிறித்திக் கொள்ளாமல் யதார்த்த அரசியலிலும் தன்னை ஈடுபடுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டது. ஜனாதிபதித் தேர்தல் பாராளுமன்றத் தேர்தல்களில் யதார்த்தபூர்வமான அரசியல் முடிவுகளை மேற்கொண்டிருந்தது. மேலும் பொதுத்தளத்தில் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டு வருகின்றது.

Viyoogam_02_Coverபல்வேறு அரசியல் பின்னணிகளில் இருந்தவர்களையும் ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் கொண்டுவரும் நோக்கில் முன்னைய அரசியலின் தொடர்ச்சியாக இல்லாமல் புத்வேகத்துடன் ஆரம்பிப்பதற்காக மே 18 இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மே 18 2009 ஒரு மிக முக்கியமான திருப்புமுனை. அதிலிருந்து முகிழ்த்துள்ளது மே 18 இயக்கம். புலம்பெயர் சூழலில் காணப்படுகின்ற தத்துவார்த்த தனிநபர் வித்தகப் போட்டிக்குள் தன்னை உட்படுத்திக் கொள்ளாது மே 18 இயக்கம் அதன் அரசியலை முன்னெடுக்கின்றது.

ஆயினும் புலம்பெயர் நாடுகளில் புரட்சியைக் குத்தகைக்கு எடுத்துக்கொண்டவர்கள் போன்று செயற்படுகின்ற கீபோட் புரட்சியாளர்களை மே 18 இயக்கத்தின் செயற்பாடுகள் அச்சத்திற்கு உள்ளாக்கியது. அதனால் அதற்கு எதிரான காழ்புணர்வுகள் கீபோட் புரட்சியாளர்களிடம் இருந்து வெளிப்பட்டதில் ஆச்சரியம் இல்லை. மக்கள் என்ற முகமூடிக்குள் தனிநபர் சார்ந்த விம்பங்களைக் கட்டிக்கொண்டு இவர்கள் செய்கின்ற அரசியலுக்கு மே 18 இயக்கத்தின் இரண்டாவது இதழ் இன்னமும் அச்சுறுத்தும்.

வியூகம் இதழ் 2 இன் வெளியீட்டு நிகழ்வுகள் பற்றிய விபரம்:
May_18_Movement_Viyoogam02

மே 18 இயக்கம் தொடர்பான மேலதிக வாசிப்பிற்கு:

தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் மீள்மதிப்பீடும் கலந்துரையாடலும் – மே 18 இயக்கம் : ஜெயபாலன் த

பிற்போக்கு தலைமைகளையும், கைக்கூலிகளையும் தோற்கடிப்போம்!

இடதுசாரி முன்னணித் தோழர் விக்கிரமபாகுவை ஆதரிப்பதாக ‘மே 18 இயக்கம்’ முடிவு!

பாராளுமன்ற ஜனநாயகமும் ஜனநாயக முன்னணியும் : ரகுமான் ஜான்

இலங்கையில் தேர்தலும் தமிழ் மக்களது அரசியல் எதிர்காலமும் : கலந்துரையாடல்

 ‘ஜனநாயகப் பண்போடு நடந்துகொண்டால் மட்டுமே சரியான வழியில் நிற்பவருடன் மற்றவர் இணைந்துகொள்ள முடியும்’ ரகுமான் ஜான் – வியூகம் வெளியீடு தொகுப்பு : த ஜெயபாலன்

‘விவாதக் களத்திற்கான தளத்தின் ஆரம்பமே வியூகம்’ ரொறன்ரோ வியூகம் வெளியீட்டு நிகழ்வில் ரகுமான் யான்

இரயாகரன் சார்! எனக்கொரு உண்மை தெரிந்தாக வேணும் : த ஜெயபாலன்

மே 18 இயக்கமும் வியூகம் வெளியீடும் : த ஜெயபாலன்

தமிழர் அரசியல்ரீதியாக தம்மை ஒழுங்கமைத்துக் கொள்வதை நோக்கி… : ரகுமான் ஜான்

இதுவும் கடந்து போம்: புலியெதிர்ப்பின் அரசியல்: தேசபக்தன்
 
நடந்து முடிந்ததும்! நடக்க வேண்டியதும்!!! : தேசபக்தன்

மரணத்தின் வாசனை: போர் தின்ற சனங்களின் கதை : என் செல்வராஜா, (நூலகவியலாளர்)

Smell_of_Death_Book_Coverஇளம் படைப்பாளி, த.அகிலன் எழுதியுள்ள மரணத்தின் வாசனை என்ற அருமையானதொரு சிறுகதைத் தொகுப்பு நூலொன்று வெளிவந்துள்ளது. “போர் தின்ற சனங்களின் கதை” என்ற உப தலைப்புடன் வெளிவந்துள்ள இந்தச் சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் த.அகிலன், ஈழ விடுதலைப் போரின் ஆரம்ப காலகட்டத்தில் அதாவது 1983இல் வடபுலத்தில் பிறந்தவர். மரணத்துள் வாழ்ந்த ஒரு சமூகத்தின் பிரதிநிதியாக இன்று கொள்ளத்தக்கவர். தான் புலம்பெயர்ந்து வந்தபின்னர், உறவினருடன் அவ்வப்போது மேற்கொண்ட தொலைபேசி உரையாடல்களினூடாகத் தன் செவிகளுக்குள் வந்துசேர்ந்த பன்னிரண்டு மரணச்செய்திகளின் வாயிலாக விரியும் உறவின் பரிமாணமே இச்சிறுகதைகளாகும். ஒவ்வொரு கதையும் ஒரு மரணத்தை மட்டுமல்லாது, அந்த மரணத்துக்குரியவரின் வாழ்வு – அவ்வாழ்வினோடு தனது வாழ்வு பின்னப்பட்ட சூழல் என்பன மிக அழகாகவும் உணர்ச்சிகரமாகவும் போர்க்கால இலக்கியமாக இச்சிறுகதைத் தொகுதிக்குள் பதிவாகியுள்ளன. இந்நூல் சென்னையிலிருந்து வடலி வெளியீடாக 180 பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் முதலாவது பதிப்பு ஜனவரி 2009இலும், 2வது பதிப்பு மே 2009இலும் வெளியிடப்பட்டுள்ளது.

இத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பன்னிரு சிறுகதைகளும், முன்னதாக அப்பால் தமிழ் என்ற இணையத்தளத்தில் மரணத்தின் வாசனை என்ற தொடராக வெளிவந்திருக்கின்றன. இச்சிறுகதைத் தொகுதிக்கான முன்னுரையையும் அப்பால் தமிழ் இணையத்தள நெறியாளரான திரு.கி.பி.அரவிந்தன் அவர்கள் பாரிசிலிருந்து வழங்கியிருக்கிறார்.

அவர் நூலுக்கு வழங்கிய தனது முன்னுரையில் குறிப்பிடும் சில வரிகளை வாசகர்களுடன் நானும் பகிர்ந்துகொள்கின்றேன்.

“மரணத்துள் வாழத்தொடங்கிய ஈழத்தமிழ் சமூகத்தில் 1983இல் பிறக்கும் த.அகிலன் எதிர்கொள்ளும் மரணங்களே, அம்மரணங்கள் வழியாக அவனுள் கிளறும் உணர்வுகளே இவ்வெழுத்துக்கு வலிமையைச் சேர்க்கின்றன. மரணத்தின் வாழ்வினுள் பிறந்து அதன் வாசனையை நுகர்ந்து வளரும் ஒரு முழுத் தலைமுறையின் பிரதிநிதியாகவே த.அகிலன் எனக்குத் தென்படுகின்றான். அந்தத் தலைமுறையின் எண்ணத் தெறிப்புகளே இங்கே எழுத்துக்களாகி உள்ளன. தந்தையைப் பாம்புகடித்தபோது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்புத் தடுக்கின்றது. அப்படி அதன் பின் அகிலன் எதிர்கொள்ளும் ஒவ்வொரு மரண நிகழ்வின் பின்னாலும் இராணுவ ஆக்கிரமிப்பின் கொடுங்கரங்கள் தடம் பதிக்கின்றன. இந்த மரணத்தின் வாசனை என்பதே ஆக்கிரமிப்பின் நெடிதான். மரணத்தினுள் வாழ்வு என்பதன் ஓரம்சம் இராணுவ ஆக்கிரமிப்பு என்றால் அதன் அடுத்த அம்சம் ஊர்விட்டு ஊர் இடம் பெயர்தல். அகிலன் ஊர்விட்டு ஊர் இடம்பெயர்கிறான் காடுகள் ஊர்களாகின்றன. ஊர்கள் காடுகளாகிப் போகின்றன. அலைதலே வாழ்வாகிப் போகின்றது.” இது கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்கள் அகிலனின் நூலுக்கு வழங்கிய முன்னுரையின் ஒரு பகுதியாகும்.

Smell_of_Death_Book_Coverத.அகிலனின் மொழிநடை வித்தியாசமானது. இடையிடையே ஈழத்தமிழரின் பேச்சு வழக்கில் கலந்து அமைந்தது. இந்த மொழி வழக்கில் இடையிடையே இயல்பாகக் கலந்துவரும் அங்கதச் சுவையே அவரது சிறுகதைகளுக்கு வெற்றியைத் தேடித்தருகின்றது என்று நம்புகின்றேன். தமிழகத்தில் வெளிவந்துள்ள இந்த ஈழத்து நூல் வெற்றிகரமான சந்தை வாய்ப்பினையும் அங்கு பெற்று இரண்டாவது பதிப்பும் வெளிவந்திருக்கின்றது என்பது அவர் பயன்படுத்தியுள்ள சுவையான ஈழத்து மொழி நடையை தமிழக வாசகர்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டார்கள் என்பதை எமக்கு உணர வைக்கின்றது. இந்த நூலின் தொடக்கத்தில் சொல் விளக்கக் குறிப்புகள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். சில பிராந்திய சொற் பிரயோகங்கள் ஈழத்து வாசகர்களையே விளக்கக் குறிப்பினை நாடவைக்கும் என்பதால், தமிழகத்தில் வெளியிடப்படும் ஈழத்தமிழரின் பிராந்திய மொழிவழி நூல்களுக்கு சொல் விளக்கக் குறிப்புகள் தவிர்க்கமுடியாதவையாகும்.

இந்நூல் ஈழத்தின் போர்க்கால சமூக வரலாற்றில் ஒரு முக்கிய காலகட்டத்தினை எம் முன் கொண்டுவந்து நிறுத்துகின்றது. அந்தச் சூழலில் அகிலனுடன் வாழ்ந்துவந்துள்ள எமக்கு, இன்று சிறுகதைகளாக வாசிக்கும்போது, உணரப்படும் பகைப்புலங்கள் பல நினைவுகளை கனத்த நெஞ்சுடன் அசைபோட வைக்கின்றன. ஒவ்வொரு கதையை வாசித்த பின்னரும் நீண்டநேரம் அந்த அசைபோடல் எமது உள்ளத்தில் எங்கோ ஒரு மூலையில் நிலைத்து நின்று குறுகுறுக்கின்றது. மரணத்துள் வாழ்ந்த ஈழத்தமிழர்களின் சமூக வாழ்வின் ஒரு பக்கத்தை தமிழகத்தின் வாசகர்கள் உணர்வுபூர்வமாகத் தரிசிக்கவும் இந்நூல் வழிகோலுகின்றது. ஈழத்து இலக்கிய வரலாற்றில் – குறிப்பாக புலம்பெயர் இலக்கிய வரலாற்றின் ஒரு பரிமாணத்தை இந்நூல் பதிவுசெய்கின்றது என்றால் அது மிகையாகாது. இந்த நூல் இந்திய விலையில் 125 ரூபாவாக தமிழகத்திலும், வடலி வெளியீட்டாளர்களின் இணையத்தளத்திலும் விற்பனைக்குள்ளது.