December

December

யாழ்.மாநகரசபைக்கான இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாநகரசபைக்கு புதிதாக இணையத்தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய் கிழமை இந்த இணையத்தளத்தை மாநகரசபை முதல்வர் வைபவ ரிதியாக ஆரம்பித்து வைத்தார்.

மாநகர சபை ஆணையாளர் மு.சரவணபவ தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. யாழ் மாநகர சபை இணையத்தளத்தின் முகவரி www.jaffnamc.lk என்பதாகும்.

யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் கைக்குண்டு மீட்பு.

யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக யாழ்.நகருக்குப் பொறுப்பான படைத்தரப்பு தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்திலுள்ள உணவகத்தின் பின்புறத்தில் கை;கண்டு ஒன்று காணப்பட்டது.

நேற்று செவ்வாய் கிழமை காலை பல்கலைக்கழக வளாகத்தில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சுத்திகரிப்பு பணியாளர்கள் கொடுத்த தகவலையடுத்து பல்கலைக்கழக நிர்வாகத்தினர் படையினருக்கு தெரிவியப்படுத்தினர் இதனையடுத்தே இக்குண்டு மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன் தமிழர்களின் ஜனாதிபதிக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்!

Angajan_Ramanathanலண்டனில் இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக புலம்பெயர்ந்த தமிழர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் நேற்று ஆர்ப்பாட்ட நடவடிக்கைகள் நடத்தப்பட்டுள்ளன. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்டக் கிளையினரின் ஏற்பாட்டிலும் படையினரின் ஏற்பாட்டிலும் அந்த ஆர்ப்பாட்ட பேரணிகள் இடம்பெற்றன. இப்பேரணிகள் முதலில் தனித்தனியாக ஒழங்கு செய்யப்பட்டு பின்னர் ஒன்றிணைக்கப்பட்டது.

நேற்று செவ்வாய்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் யாழ்.துரையப்பா விளையாட்டரங்கிலிருந்து ஆரம்பான பேரணி ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிக்கும் பதாதைகளுடன் முற்றவெளிப் பகுதியூடாக யாழ்.பஸ்நிலையத்திற்கு வந்தடைந்தது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் இ. அங்கஜன் அங்கு உரையாற்றினார். பின்னர் அங்கிருந்து ஆஸ்பத்திரி வீதியூடாக சென்று ஆரியகுளம் சந்தி, ஸ்ரான்லி வீதி வழியாக பேரணி மீண்டும் யாழ்.பஸ்நிலையத்தை வந்தடைந்தது.

ஆர்ப்பட்ட நடவடிக்கைக்காக குடாநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் பஸ்கள் மூலம் யாழ்.துரையப்பா விளையாட்டரங்கிற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். மழை பெய்து கொண்டிருந்த நிலையில் இப்பேரணி நடைபெற்றதால் மக்கள் சிரமங்களை எதிர்கொள்ள நேரிட்டது.

ThesamNetLeaks : கொள்வனவு விதிகளை மீறிய யாழ் பல்கலைக்கழக உப வேந்தருக்கான வேட்பாளர் : த ஜெயபாலன்

Vasanthy_Arasaratnam_Prof_UoJஅண்மைக் காலமாக மிகுந்த முக்கியத்துவத்தைப் பெற்றிருந்த யாழ்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தருக்கான தெரிவில் நவம்பர் 27ல் இடம்பெற்ற பல்கலைக்கழக கவுன்சில் உறுப்பினர்களின் தெரிவு புதிய திருப்பத்தை ஏற்படுத்தி இருந்தது. இதுவரை யாழ்-சைவ-வேளாள-ஆண் ஒருவரே பல்கலைக்கழகத்தின் உபவேந்தராகத் தெரிவு செய்யப்பட்டு வந்தார். அதற்கு மாறாக பேராசிரியர் ஹுல் 2006ல் பல்கலைக்கழகக் கவுன்சிலால் தெரிவு செய்யப்பட்டு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட போதும் தமிழீழ விடுதலைப் புலிகள் படுகொலை அச்சுறுத்தலை மேற்கொண்டு பேராசிரியர் ஹுல் ஐ தனது கடமையைச் செய்ய விடாமல் தடுத்தனர். தற்போது பல்கலைக்கழகக் கவுன்சிலால் மூவர் (பேராசிரியர்கள் வசந்தி அரசரட்ணம் ரட்னஜீவன் ஹூல் என் சண்முகலிங்கம்) தெரிவு செய்யப்பட்டு ஜனாதிபதிக்கு அவர்களுடைய பெயர்கள் வழங்கப்பட்டு உள்ளது. இவர்களில் ஒருவரை ஜனாதிபதி நியமிப்பார்.

அண்மைக்காலமாக தேசம்நெற் யாழ் பல்கலைக்கழகத்தின் திரைமறைவில் இடம்பெற்ற நிர்வாகச் சீர்கேடுகள், மோசடிகள், பாலியல் துஸ்பிரயோகங்கள், கல்வித் தரத்தின் சீரழிவுகள் என்பனவற்றை வெளிக்கொண்டு வந்ததன் பயனாக என் சண்முகலிங்கம் தவிர்ந்த ஏனைய தகுதியற்ற வேட்பாளர்கள் நிராகரிக்கப்பட்டனர். யாழ் பல்கலைக்கழகத்தின் உப வேந்தருக்கான தெரிவில் ஆரம்பத்தில் முன்னணி வேட்பாளர்களாகக் கருதப்பட்ட பேராசிரியர் எஸ் சத்தியசீலன், பேராசிரியர் என் ஞர்னகுமாரன் ஆகியோர் நவம்பர் 27ல் முதல் மூவருக்குள் தெரிவு செய்யப்படவில்லை. யாழ் பல்கலைக்கழகத்தின் நிர்வாகச் சீர்கேடுகள், மோசடிகள், பாலியல் துஸ்பிரயோகங்கள், கல்வித் தரத்தின் சீரழிவுகள் என்பனவற்றுக்கு காரணமானவர்களில் ஒருவராக அடையாளம் காட்டப்பட்ட கடந்த மூன்று ஆண்டுகள் உப வேந்தராக இருந்த பேராசிரியர் என் சண்முகலிங்கம் யாழ் பல்கலைக்கழகக் கவுன்சிலால் தெரிவு செய்யப்பட்ட மூவரில் ஒருவராக உள்ளார்.

யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முன்னணிப் பேராசிரியர்களின் திருவிளையாடல்கள் அம்பலத்திற்கு வந்ததால் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் மட்டுமே யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, ஒப்பீட்டளவில் தகுதியான ஒரே வேட்பாளர் ஆனார். அதனால் தேசம்நெற் இன் தொடர்ச்சியான பிரச்சாரங்கள் அவருக்கு சாதகமாக இருந்ததுடன் அரசியல் ரீதியான ஆதரவும் அவருக்கு கிடைத்தது.

உப வேந்தருக்கான தகமை அடிப்படையில், கல்வித் தகமையாக இருந்தாலென்ன நிர்வாக – முகாமைத்துவத் திறனாக இருந்தாலென்ன பேராசிரியர் ஹுல் ஏனைய அனையவர்களைக் காட்டிலும் மிக உச்சத்திலேயே உள்ளார். ஆனால் அவருக்கான அரசியல் ஆதரவு மிகக்கீழ் நிலையிலேயே உள்ளது. ஆனால் கல்வித் தகமை, நிர்வாக – முகாமைத்துவத் திறன் அடிப்படையில் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் கீழ் நிலையில் (பேராசிரியர் ஹுல் உடன் ஒப்பிடுகையில்) இருந்தபோதும் அவருக்கான அரசியல் ஆதரவு மேல்நிலையில் உள்ளது. அதனால் அவரை யாழ் பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக ஆக்குவதற்கான வாய்ப்பு நிறையவே உள்ளது.

பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் யாழ் பல்கலைக்கழகத்திற்குள் இருந்து போட்டியிட்டவர்களில் அப்பதவிக்கான தகமையைக் கொண்டிருந்தார். ஆனால் தற்போது வெளிக்கொண்டுவரப்பட்டு உள்ள, ஆவணங்கள் பேராசிரியர் வசந்தி அரசரட்ணத்தின் கரங்களும் கறைபடிந்தவை என்பதனை நிரூபிக்கின்றது.

யாழ் பல்கலைக்கழகத்தில் பல மோசடிகள் மூடி மறைக்கப்படுகின்றன. பல்கலைகழகத்தின் பெயருக்கு நல்லதல்ல என்று கூறி மோசடிகள் தொடர்ச்சியாக மூடிமறைக்கப்பட்டதால் யாழ் பல்கலைக்கழகம் மிகச் சீரழிவுக்கு சென்றுள்ளது. பல்வேறு மட்டங்களிலும் உள்ளவர்கள் மோசடியில் ஈடுபட்டு அவை மூடிமறைக்கப்படும் போது அவர்கள் உயர்நிலைக்குச் செல்லும் போது மேலும் மேலும் மோசடிகளில் ஈடுபட்டு அவற்றை பல்கலைக்கழகத்தின் பெயரைப் பாதுகாப்பதாகக் கூறி மூடிமறைக்கின்றனர். அதனால் பல்கலைக்கழகம் பற்றி தேசம்நெற் இல் வெளிக்கொண்டு வரப்பட்ட விடயங்கள் மிகச்சொற்பமானவையே எனவும் மோசடியும் ஊழல்களும் குவிந்துள்ளதாகவும் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2003ல் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் பல மில்லியன் ரூபாய் பெறுமதியான கணணி வலையமைப்பு மற்றும் பாகங்களை பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு வாங்குவதற்கு நடவடிக்கை எடுத்துக் கொண்டார். இவ்வாறான பெரும்தொகைக் கொள்வனவுகள் பல்கலைக்கழக விதிமுறைகளுடாகவும் ரென்டர் முறையிலுமே மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் பேராசிரயர் வசந்தி அரசரட்ணம் இந்த விதிமுறைகளை மீறி நேரடியாக M/S Delvon Computers (Pvt) Ltd, என்ற நிறுவனத்துக்கு கொள்வனவுக் கட்டளையை வழங்கி உள்ளார். இந்நிறுவனம் ஓய்வுபெற்ற இராணுவ கேணல் தர தளபதி ஒருவருடையது என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கொள்வனவு பல்கலைக்கழக விதிமுறைகளுடாகவும் ரென்டர் முறையினூடாகவும் மேற்கொள்ளப்படாமையினால் இக்கொள்வனவுக்கான நிதியினை வழங்க நிதிக்குழு தாமதித்தது. அவர்கள் குறிப்பிட்ட கொள்வனவு தொடர்பான கணக்கியல் பதிவுகளில் கேள்விகளை எழுப்பினர். அப்போதைய உப வேந்தர் மோகனதாஸ் இவ்விடயத்தை நிதிக்குழுவிற்கு குறிப்பிட்டு இருந்தார். அதன் பின்னர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் முன்னர் வழங்கிய தொகையைக் குறைத்து புதிய தொகையை வழங்கியதாக தெரியவருகிறது.

மருத்துவ பீடத்திற்கான கணணி வலையமைப்பு மற்றும் அதற்கான பாகங்களைக் கொள்வனவு செய்ய WHO, 963400.00 ரூபாய்களை மட்டுமே யாழ் பல்கலைக்கழகத்திற்கு வழங்கி இருந்தது. ஆனால் பேராசிரியர் வசந்தி அரசரடணம் தனக்கு வழங்கப்பட்ட நிதி வரையறைக்கு பலமடங்கு அதிகமாக கொள்வனவு விதிகளை மீறி நேரடியாக கொள்வனவுக் கட்டளையை வழங்கி இருந்தார். ஆனால் இது கேள்விக்கு உட்படுத்தப்பட்ட போது கொள்வனவுத் தொகை குறைக்கப்பட்டது. அப்படி இருந்துமே அப்போதைய சந்தை நிலையிலும் பார்க்க அதிகமாகவே இருந்தது.
 
இது தொடர்பாக நிதிக்குழுவின் ஒக்ரோபர் 25 2004ல் இடம்பெற்ற 247வது கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது 2003ல் 1163550.60 ரூபாய்க்கு பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் பல்கலைக்கழக விதிமுறைகளையும், ரென்டர்முறைகளையும் மீறி கொள்வனவை மேற்கொண்டதாக அப்போதைய உபவேந்தர் மோகனதாஸ் 247வது நிதிக் குழு கூட்டத்திற்கு வழங்கிய குறிப்பில் குறிப்பிட்டு உள்ளார்.
 
நிதிக்குழுவின் 233வது கூட்டத்திற்கு பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் வழங்கிய குறிப்பில் வேலைத்திட்டத்திற்கு ஆன செலவீனம் ரூபாய் 2,080,839.18 ஆல் அதிகரித்து உள்ளதாகக் குறிப்பிட்டு இருந்தார். அதாவது மொத்த செலவீனம் ரூபாய் 2,080,839.18 + 963,400.00  = 3 044 239.18.  வழங்கப்பட்ட நிதிவரையறைக்கு (963400.00 ரூபாய்) அதிகமாகவே பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் செலவீனத்தை மேற்கொண்டார்.

இந்த அதீத செலவீனத்தை மருத்துவ பீடத்தின் தகவல்தொழில் நுட்பத்திற்கு யுனிவசிற்றி கிறான்ட் கொமிசனால் ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து தருமாறு பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் நிதிக்குழுவின் 233வது கூட்டத்திற்கு வழங்கிய குறிப்பில் கேட்டு இருந்தார்.

Delvon நிறுவனம் கேட்டுக்கொண்ட நிதியை வழங்காமல் ஓராண்டுவரை கூட்டங்களில் விவாதித்து ஒக்ரோபர் 30 2004 ல் இடம்பெற்ற நிதிக் குழுவின் 291வது கூட்டத்தில் பல்கலைக்கழகக் கவுன்சில் (Council Memo 277/17(e)) இது தொடர்பாக பேராசிரியர் வசந்தி அரசரட்ணத்தை கண்டித்து இருந்தது. எதிர்காலத்தில் இது தொடர்பான அனைத்து விடயங்களும் பல்கலைக்கழக விதிமுறைகளுடாகவும் (through Bursar) ரென்டர் முறையினூடாகவுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் பல்கலைக்கழகத்தின் சார்பில் Delvon  நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டதால் பல்கலைக்கழக நிதிக் குழு பல்வேறு அழுத்தங்களாலும் குறைக்கப்பட்ட ஆனாலும் சந்தை நிலையிலும் அதிகமான கட்டணத்தை நிறுவனத்திற்கு வழங்கியது.

இவ்வாறான மோசடிகள் நிர்வாகச் சீர்கேடுகள் வடக்கு, கிழக்கு பல்கலைக்கழகங்களிலும் அவற்றின் வளாகங்களிலும் மலிந்து காணப்படுகின்றன. இப்பல்கலைக்கழகங்களின் உயர் பதவிகளில் உள்ளவர்களே இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்ற போது ‘கற்பித்தலும் ஆய்வும் இணைந்து பாரபட்சமற்ற உண்மையைத் தேடுவதே பல்கலைக்கழகம்’ என்ற வரைவிலக்கணம் இழக்கப்பட்டுவிடுகின்றது.

அண்மைக் காலமாக தேசம்நெற் இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பாக வெளியிடப்பட்ட பதிவுகள்:

‘இலங்கையின் தமிழ் கல்விச் சமூகம்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பார்வை’ நூலின் மின்னியல் வடிவம்: UoJ_A_View_By_Jeyabalan_T

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் உடனான நேர்காணல்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்

‘Tamillain-Barre’ Syndrome’ மும் தமிழ் சமூகத்திற்கான புதிய அரசியல் கலாச்சாரத்தின் அவசியமும் : த ஜெயபாலன்

யாழ் பல்கலைக்கழகம் – முப்பத்தாறு வருடங்கள் – முழுமையான சீரழிவு : நட்சத்திரன் செவ்விந்தியன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் யை ஆதரிப்போம்! : ரி கொன்ஸ்ரன்ரைன்

தவித்துக் கொண்டிருக்கும் நமது சமூகத்திற்காய் உழைப்போம்: யாழ் பல்கலை. மாணவர் ஒன்றியம்

பேராசிரியர் கைலாசபதி: ஒரு பெரு விருட்சமும் சில சிறு செடிகளும் : கரவை ஜெயம்

‘யாழ் பல்கலைக்கழக மாணவிகள் தற்கொலை முயற்சி!’ யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் – அரச அதிபர் சுயாதீன விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். : த ஜெயபாலன்

யாழ் பல்கலையின் உபவேந்தர் தெரிவுக்கு பேராசிரியர் ஹூலுக்கு ஆதரவாக மேற்கொண்ட கையொப்ப ஆவணம் அமைச்சர் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டது : த ஜெயபாலன்

”யாழ் பல்கலைக்கழகம் தொடர்பான தேசம்நெற் கட்டுரைகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை.” பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல்

யாழ் பல்கலைக்கழகத்தின் இலக்கையும் தொலைநோக்கு பார்வையையும் முன்னெடுத்துச் செல்லும் கல்வியியல் ஆளுமையும் முகாமைத்துவத் திறமையும் உடையவரை உபவேந்தராகத் தெரிவு செய்யுங்கள்! : த ஜெயபாலன்

ஈபிடிபி தோழர்களே! நல்லதொரு இதயவீணை செய்து அதை நலங்கெடப் புழுதியில் எறிந்திட வேண்டாம். : ரி சோதிலிங்கம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பார்வை நூலுக்கான முன்னுரை : த ஜெயபாலன்

தமிழ் கல்விச் சமூகத்தின் மகுடம் யாழ். பல்கலைக்கழகம் – அதன் துணைவேந்தர் தெரிவிற்கான தேர்தல் ஒரு அலசல்

ThesamNetLeaks : கொள்வனவு விதிகளை மீறிய யாழ் பல்கலைக்கழ உப வேந்தருக்கான வேட்பாளர் : த ஜெயபாலன்

போரின் போது முல்லை மாவட்டத்தில் உடமைகளை கைவிட்டவர்கள் அவற்றை மீட்டுச்செல்ல அனுமதி.

இறுதிகட்ட யுத்தத்தின் போது இடம்பெயர்ந்து வந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் தங்கள் உடமைகளை கைவிட்டவர்கள் தங்களின் உடமைகளை எடுத்துச் செல்வதற்கான அனுமதியைப் பெறும் விண்ணப்பத்தை புதுக்குடியிருப்பு உதவி அரசாங்க அதிபர் செயலகத்தில் சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

முல்லை மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு உதவி அரசாங்க அதிபர் பிரிவைச் சேர்ந்த உடையார்கட்டு வடக்கு, சுதந்திரபுரம், தேவிபுரம், வள்ளிபுரம், இரணைப்பாலை. ஆகிய கிராமசேவையாளர் பிரிவுகளில் பொருட்களைக் கைவிட்டவர்களே இவ்வாறான நடைமுறையைக் கடைப்பிடிக்குமாறு கோரப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் உரிமையாளர்கள் வாகனங்கள் தவிர்ந்த ஏனைய தங்கள் பொருட்களை எடுத்துச்செல்ல முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் இருந்து இலங்கை திரும்பிய கலாநிதி விக்கிரமபாகு மீது தாக்குதல்!

Wikramabahu Karunaratnaநவசமசமாஜக் கட்சியின் பொதுச்செயலாளரும் இடதுசாரி முன்னணியின் தலைவருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன இன்று கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து தாக்கப்பட்டு உள்ளார். விமான நிலையத்தின் அதிகாரிகள் பொலிஸார் முன்னிலையில் கலாநிதி விக்கிரமபாகுவைத் தாக்கியதாக ஒரு செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது. கலாநிதி விக்கிரமபாகுவை வரவேற்பதற்காக கட்சி ஆதரவாளர்களும் மனித உரிமைவாதிகளும் தொழிற்சங்கவாதிகளும் மனித உரிமைவாதிகளும் சட்டத்தரணிகளும் கூடி இருந்ததாகவும் அவர்களுக்கு முன்னிலையிலேயே சீருடை அணிந்த அதிகாரிகள் கலாநிதி விக்கிரமபாகுவைத் தாக்கியதாகவும் அச்செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது.

அண்மையில் லண்டன் வந்திருந்த கலாநிதி விக்கிரமபாகு லண்டனில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்விலும் உரையாற்ற அழைக்கப்பட்டு இருந்தார். மேலும் லண்டனில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களிலும் கலாநிதி விக்கிரமபாகு கலந்துகொண்டு இலங்கை அரசுக்கு எதிரான கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். நடந்து முடிந்த வன்னி யுத்தத்தில் 100,000 பேர்வரை மரணமடைந்ததாகவும் கலாநிதி விக்கிரமபாகு தெரிவித்து இருந்தார்.

விமானநிலையத்திற்கு வெளியே கலாநிதி விக்கிரமபாகு வரவும் ஒரு டசின் வரையான சீருடை அணிந்த விமானநிலைய அதிகாரிகள் விக்கிரமபாகுவைச் சூழ்ந்து ‘துரோகி’ என முழக்கமிட்டு உள்ளனர். ‘மகிந்தவால் இணைக்கப்பட்ட நாட்டை, துரோகி பிரிக்கப் பார்க்கிறாய்!” என சீருடை அணிந்த விமான நிலைய அதிகாரிகள் முழங்கி உள்ளனர். மேலும் கலாநிதி விக்கிரமபாகு வானில் ஏறி அவ்விடத்தை நீங்கும்வரை இவர்கள் கோசம் எழுப்பி உள்ளனர்.

கலாநிதி விக்கிரமபாகுவின் வருகை பற்றி செய்தி சேகரிக்கச் சென்ற எம்ரிவி ஊடகவியலாளர் பிரேம் லால் லங்கா ஈ-நியூஸ் ஊடகவியலாளர் சாந்த விஜயசூரிய ஆகியோரும் தாக்கப்பட்டதாக அச்செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது.

டிசம்பர் 02ல் ஒக்ஸ்போர்ட் யூனியனில் ஜனாதிபதி ராஜபக்ச உரையாற்ற இருந்ததற்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்களுக்கு கலாநிதி விக்கிரமபாகுவும் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜெயலத் ஜெயவர்த்தனவும் முக்கிய காரணமாக இருந்ததாக அரச தரப்பில் தற்போது கடுமையான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு உள்ள நிலையில் இத்தாக்குதல் இடம்பெற்று உள்ளது.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக லண்டனில் உள்ள லங்கா சாசமாஜக் கட்சி உறுப்பினருடன் தொடர்பு கொண்ட போது கலாநிதி விக்கிரமபாகு மீது எவ்வித தாக்குதல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் ஆனால் அவரைக் காண வந்திருந்தவர்கள் விமான நிலைய அதிகாரிகளால் தாக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். சிருடை அணிந்த விமான நிலைய அதிகாரிகள் சிலர் ‘துரோகி’ என்றும் ‘நாட்டைப் பிரிக்க வந்த துரோகி’ என்ற வகையிலும் கோசங்களை எழுப்பியதாகவும் தெரிவித்தார். கோசங்களை எழுப்பியவர்கள் கலாநிதி விக்கிரமபாகுவை ஏற்றிச் செல்ல வந்த வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இத்தாக்குதலினால் வாகனம் மிக மோசமாக சேதமடைந்து உள்ளது.

நவம்பர் 28ல் கலாநிதி விக்கிரமபாகு தேசம்நெற் ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார். (இன்று இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன உடன் சந்திப்பு.) நீண்டகாலமாக தமிழ் மக்களின் உரிமைகளுக்காகக் குரல்கொடுத்து வருகின்ற கலாநிதி விக்கிரமபாகு சென்ற கூட்டத்திலும் தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமைக்காக குரல் கொடுத்து இருந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக கலாநிதி விக்கிரமபாகு உடன் தொடர்புகொள்ள முயற்சிக்கப்பட்ட போதும் உடன் தொடர்புகொள்ள முடியவில்லை.

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக படையினரின் உதவி பெறப்பட்டுள்ளது.

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் கடும் மழைகாரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினையடுத்து படையினரின் உதவி பெறபட்டுள்ளது. 57வது படைப்பிரிவினரின் உதவி பெறப்பட்டுள்ளதோடு, திருகோணமலையிலிருந்து கடற்படையினரின் உதவியும் கோரப்பட்டள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக பல பாதைகள் துண்டிக்கபட்டுள்ள நிலையில் பொதுமக்களுக்காக நிவாரணப் பொருட்கள் கடற்படையினரின் படகுகள் ஊடாகவே தற்போது கொண்டு செல்லப்படுகின்றன.

கிளிநொச்சியில் தட்டுவன்கொட்டி, கண்டாவளை ஆகிய கிராமங்களுக்கான ஒரேயொரு பாதையும் துண்டிக்கபட்டுள்ளது. தட்டுவன்கொட்டியில் சுமார் 80 குடும்பங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு நிர்க்கதியான நிலையிலுள்ளன. இவர்களுக்கான போக்குவரவு மற்றும், நிவாரண உதவிகளை வழங்குவதற்கு தற்போது கடற்படையினரின் படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. முல்லை மாவட்டத்திலும் பல வீதிகள் வெள்ளத்தால் துண்டிக்கபட்ட நிலையில் அப்பகுதி மக்களுக்கான உதவிகளை மேற்கொள்வதற்கும் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தால் இடம்பெயர்ந்து பாடசாலைகளிலும் பொது இடங்களிலும் தங்கியுள்ள மக்களுக்கு துரிதமாக உதவிகளை வழங்கும் நோக்கில் நேற்று திங்கள் கிழமை கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தில் அவசர உதவி வழங்கும் மாநாடு ஒன்று இடம்பெற்றுள்ளது. உதவி அரசாங்க அதிபர்கள், உள்ளூராட்சி திணைக்கள உத்தியோகத்தர்கள், இராணுவ அதிகாரிகள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.

இதேவேளை, நேற்றும் இன்றும் மழை பெய்வது தணிந்து, காலநிலை ஓரளவு சீராகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் சீரான முறையில் வழங்கப்படுவதில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்

வன்னியில் மீளக்குடியமர்ந்துள்ள மக்களுக்கு பல்வேறு பட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்ற போதும் அவை பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீராகச் சென்றடைவதில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். நெற்செய்கையாளர்கள். தோட்டச்செய்கையாளர்கள், கால்நடை வளர்ப்போர் என பலவேறு தரப்பினருக்கும் நிறுவனங்களால் வழங்கப்படுகின்ற உதவிகளை குறிப்பட்ட சிலரே பெற்றுக்கொள்ள முடிவதாகவும,; எதுவித முன்னறித்தலும் இல்லாமல் இவை வழங்கப்படுவதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதே வேளை, வீடமைப்பு வீட்டுச் சேதங்களுக்கான உதவிகள், குடிநீர்க்கிணறுகள் இறைத்துக்கொடுத்தல் போன்ற பணிகளும் அரசசார்பற்ற நிறுவனங்களால் மேற்கொள்ளபட்டு வருகின்றன இவை கூட தேவைப்படுவோருக்கு சரியான முறையில் கிடைப்பதில்லை என தெரிவிக்கப்படுகின்றது கிராமசேவை அலுவலர்களின் அக்கறையின்மை மற்றும், கிராம அபிவிருத்திச்சங்களைச் சேர்ந்தவர்களின் சுயநலமான செயற்பாடுகள் காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

க.பொ.த பரீட்சையில் தோற்றவிருக்கும் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு விசேட பரீட்சை நிலையங்கள்.

000stud.jpgஇலங்கையில் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைகள் எதிர்வரும் 13ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் இப்பரீட்சைக்குத் தோற்றவுள்ள முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு விசேட பரீட்சை நிலையங்கள் ஒழங்கு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா, யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களில் இவர்களுக்கான பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு, பூசா முகாமிலும் பரீட்சை நிலையம் அமைக்கபட்டுள்ளது. பூசா முகாமிலுள்ள 55 முன்னாள் புலி உறுப்பினர்கள் க.பொ.த பரீடசைக்குத் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அநுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் 153 முஸ்லிம் குடும்பங்கள் மீள்குடியமர்ந்துள்ளன. மேலும் 350 குடும்பங்கள் மீள்குடியேறுவதற்கு பதிவு செய்துள்ளன.

1990 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளால் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களில் 153 குடும்பங்கள் தற்போது யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 350 குடும்பங்கள் யாழ்ப்பாணத்தில் மீள்குடியமர்வதற்காக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகளால் வெளியேற்றபட்ட முஸ்லிம் மக்கள் இதுவரை புத்தளம், நீர்கொழும்பு, பாணந்துறை, கொழும்பு ஆகிய இடங்களில் வசித்து வந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் தற்போது மீளக்குடியமர்ந்துள்ள முஸ்லிம் மக்கள் பலர் இருப்பிட வசதிகளின்றி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அம்மக்களுக்கு கூடார வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்குமாறும், யாழ்.முஸ்லிம்களின் மனிதஉரிமைகளுக்கான நலன் விரும்பிகள் என்ற அமைப்பு யாழ். அரச அதிபரிடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது.