21

21

நாவற்குழியில் அத்துமீறிய சிங்களக் குடியேற்றம் தொடர்பாக தேசிய வீடமைப்பு அதிகாரசபை சட்ட நடவடிக்கை எதையும் இன்னும் மேற்கொள்ளவில்லை.

நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் காணியில் சிங்கள மக்கள் அத்துமிறி குடியேறியுள்ள விடயம் குறித்து நடவடிக்கை எடுக்குமுகமாக வீடமைப்பு அதிகார சபையின் யாழ்.மாவட்ட முகாமையாளர் றோயல் ஜெயச்சந்திரன் அதன் கொழும்பு தலைமையகத்திற்கு கடிதம் எழுதி இரண்டு வாரங்களாகியும் இதற்கு சட்டநடவடிக்கைகள் எடுப்பது தொடர்பான எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இவ்விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு அதிகாரசபையின் தலைமை அலவலகத்திலிருந்து தமக்கு தகவல் அறிவிக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு அதிகாரசபையின் யாழ். முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வடபகுதி அலுவலகங்கள் மூடப்படவுள்ளன.

ICRC_Logoசர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் வடபகுதி அலுவலகங்கள் மூடப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அரசாங்கத்தின் கோரிக்கையை அடுத்து யாழ்ப்பாணம், வவுனியா, உட்பட வடக்கிலுள்ள அதன் அலுவலகங்களை மூட முடிவு செய்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் பேச்சாளர் சரசி விஜயரத்ன தெரிவித்துள்ளார்.

வடக்கிலுள்ள இந்த அலுவலகங்களை எப்போது மூடுவது என்பது தொடர்பாக முடிவு செய்யப்படவில்லை எனவும், அரசாங்கத்தோடு கலந்துரையாடி எப்போது மூடுவது என முடிவெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தள்ளார். ஆனால் மன்னாரிலுள்ள அலுவலகம் இம்மாத இறுதியில் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

வடக்கிலுள்ள அலுவலகங்கள் மூடப்பட்டதும் கொழும்பிலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் வடக்கின் பணிகளை மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞான அறிவைப் மக்கள் மத்தியில் பரப்பியதற்காக கலாநிதி மிகுந்தனுக்கு தேசிய விருது.

யாழ்.பல்கலைக்கழக விவசாய உயிரியல் துறைத்தலைவராகவும் விரிவுரையாளராகவும் பணியாற்றும் கலாநிதி மிகுந்தனுக்க இவ்வாண்டிற்கான தேசிய விருது (National Award for Popularization of Science) வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் விஞ்ஞான அறிவை மக்கள் மத்தியில் பரப்புவதில் சிறப்பாக பணியாற்றியமைக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சும், தேசிய விஞ்ஞான மன்றமும், இணைந்து இவ்வருடத்திற்கான தேசிய வீருதை வழங்கியுள்ளன.

கலாநிதி மிகுந்தன் யாழ்.பல்கலைக்கழகத்தின் தொழில் வழிகாட்டல் அலகின் பணிப்பாளராகவும், யாழ்.விஞ்ஞான சங்கத்தின் இவ்வருடத்திற்குரிய தலைவராகவும் பணியாற்றி வருகின்றனார். அத்துடன் பத்திரிகை சஞ்சிகைகளில் தொடர்ந்து அறிவியல் கட்டுரைகளையும் எழுதி வருகின்றார்.

வடக்கில் மூன்று வர்த்தக மையங்கள் அமைக்கப்படவுள்ளன.

வடபகுதியில் மூன்று வர்த்தக வலயங்கள் அமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். மன்னார், கிளிநொச்சி, வவனியா ஆகிய இடங்களில் இந்த வர்த்தக மையம் அமைக்கப்படும் எனவும் அதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறிய மற்றும், நடுத்தரத்தைக் கொண்ட தொழில் நடவடிக்கைகள் இந்த வலயங்களில் செயற்படுவதற்கரிய வசதிகள் செய்து கொடுக்கப்படும் எனவும், இந்த வர்த்தக வலயங்கள் அமைக்கப்படுவதன் மூலம் வடமாகாண உற்பத்திப் பொருட்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும் எனவும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

யாழ். இராணுவத் தளபதிக்கு சமாதானத்திற்கான விருது வழங்கப்படவுள்ளது.

Mahinda_Hathurusinghe_Major_Generalயாழ் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவிற்கு சமாதானத்திற்கான விருது பிலிப்பைன்ஸ் நாட்டில் வழங்கப்படவுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் உயர் பயிற்சிகளைப் பெற்றுத் திரும்பிய பின்னர் வன்னியில் அவர் கடமையாற்றினார். வன்னியில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு அவர் ஆற்றிய பணிகள் காரணமாக இந்த விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 24ஆம் திகதி பிலிப்பைனஸில் வைத்து இவ்விருது வழங்கப்படவுள்ளதால் இன்று ஞாயிற்றுக்கிழமை அவர் பிலிப்பைன்ஸ் தலைநகரான மணிலாவிற்கு பயணமாகின்றார். விருது பெற்று நாடு திரும்பியதும், எதிர்வரும் மாதம் 10ஆம் திகதி கொழும்பு மண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மண்டபத்தில் வைத்து அவருக்கு பாராட்டு நிகழ்வு ஒன்று நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவதாசனின் உண்ணாவிரதம் : ”கோரிக்கையை விரைவில் தாம் நிறைவேற்றுவதாக உறுதி” நீதி அமைச்சின் உயர் அதிகாரிகள்

K Thevathasanதிரு. மனோ கணேசன் எம். பி. மற்றும் திரு. குமரகுருபரன் ஆகியோர் திரு. தேவதாசனின் கோரிக்கையை நீதி அமைச்சர் திரு. அத்தாவுட செனிவிரத்னவின் கவனத்திற்கு கொண்டு வந்ததைத் தொடர்ந்து அமைச்சரின் பணிப்பின் பேரில் நீதி அமைச்சின் உயர் அதிகாரிகள் நியூ மகசின் சிறைச்சாலைக்குச் சென்று தேவதாசனைச் சந்தித்தனர். அவரது கோரிக்கையை விரைவில் தாம் நிறைவேற்றுவதாக உறுதி மொழி அளித்து உண்ணாவிரதத்தைக் கை விடும்படி கேட்டுக் கொண்டனர்.

அத்துடன் தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த தேவதாசனின் உடல் நிலை மிகவும் மோசமடைந்து செல்வதைக் கண்ட சக அரசியல் கைதிகளும் உண்ணாவிரதத்தைக் கை விடும்படி அவரை வலிந்து வற்புறுத்தியதை தொடர்ந்து நேற்று 20-11-2010 இலங்கை நேரம் பிற்பகல் 3:00 மணிக்கு தேவதாசன் பழரசம் அருந்தி தனது உண்ணா விரதத்தை முடித்துக் கொண்டார்.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் நூற்றுக் கணக்கான இளைஞர்களும் யுவதிகளும் (இவர்களில் பெரும்பான்மையோர் தமிழர்) வருடக் கணக்காக விசாரணையின்றி தடுத்துவைக்கப் பட்டுள்ள நிலையை அனைத்து மக்களுக்கும் தெரியப் படுத்துவதும் இக்கொடும் சட்டத்தை இலங்கையின் சட்டப் புத்தகத்தில் இருந்து நீக்கி நாட்டின் அனைத்து மக்களும் உண்மையான சுதந்திரத்துடன் வாழ உலகெங்கும் பரந்து வாழும் இலங்கை மக்கள் இலங்கை அரசாங்கத்தை வற்புறுத்தி தனக்கும் சக அரசியல் கைதிகளுக்கும் நீதி கிடைக்க உதவ வேண்டும் என்பதே தனது பணிவான கோரிக்கை எனவும் அவர் தெரிவித்தார்.

Related News:

தேவதாசனின் உண்ணாவிரதம் : ”கோரிக்கையை விரைவில் தாம் நிறைவேற்றுவதாக உறுதி” நீதி அமைச்சின் உயர் அதிகாரிகள்

இரண்டாவது பதவிக் காலத்திலாவது சிறைக்கைதிகளை விடுவியுங்கள் – ஜனாதிபதிக்குக் கடிதம்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள க தேவதாசன் நீதி கேட்டு உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கிறார். 

சிறையில் இருந்து க தேவதாசன்: சிறைக்கு வெளியே மக்களுக்காகப் போராடியவர் சிறைக்குள் தனக்கான போராட்டத்தை ஆரம்பிக்கிறார்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பார்வை நூலுக்கான முன்னுரை : த ஜெயபாலன்

Front_Cover_UoJ_A_View‘இலங்கையின் தமிழ் கல்விச் சமூகம்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பார்வை’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ள யாழ் பல்கலைக்கழகம் பற்றி நான் (த ஜெயபாலன்) எழுதிய முன்னுரை இங்கு பதிவிடப்படுகிறது. தேசம்நெற் இல் யாழப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பாக நான் எழுதிய நான்கு கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் இலங்கையில் வெளிவந்துள்ளது. இந்நூலுக்கான அணிந்துரையாக தேசம்நெற் வாசகர்களின் கருத்துக்கள் சில நூலின் இறுதியில் பதிவிடப்பட்டு உள்ளது.

இந்த நூலின் மின்னியல் வடிவம்: UoJ_A_View_By_Jeyabalan_T

._._._._._.

தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கான மே 18, 2009 வரையான தமிழீழ விடுதலைப் போராட்டம், அம்மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு மாறாக உரிமைகள் பறிக்கப்படுகின்ற நிலையையே ஏற்படுத்தியது. மேலும் முப்பது ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட போராட்டமானது பல பத்து ஆண்டுகளுக்குத் தமிழ் மக்களைப் பின்நோக்கித் தள்ளியுள்ளது.

பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களும் சீராக இயங்கினால் மாணவர்கள் இளைஞர்கள் போராட வர மாட்டார்கள் என்பதனை தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் ஒரு கொள்கையாகவே ஏற்றுக்கொண்டனர். இவற்றின் விளைவாகவும் தொடர்ச்சியான யுத்தம் காரணமாகவும் தமிழ்ப் பிரதேசங்களின் கல்விநிலை வீழ்ச்சியடைந்தமை எதிர்வுகூறப்பட்ட ஒன்றே.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இருந்த முரண்நகை என்னவென்றால், தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், அந்த சமூகம் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கு வாய்பாக அமையக் கூடிய கல்வியைத் தொடர்ச்சியாக நிராகரித்தது. அடிப்படை அறிவும் அடிப்படைச் சிந்தனைத் தெளிவுமற்ற  மாணவர்கள், இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதற்கு அணி சேர்க்கப்பட்டனர்.

கல்விக் கட்டமைப்புகள் ஆயுதம் தாங்கியவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. கல்விச் சமூகத்தின் உள்ளுணர்வு சிதைக்கப்பட்டு ஆயுதங்களின் கீழ் கல்வி தனது அவசியத்தினை இழந்தது. ஆனால் இன்றோ தமிழ் மக்கள் தங்களைத் தற்காத்துக் கொளவதற்கென இருந்த கல்வி வளத்தையும் சிதைத்துவிட்டு ஆயுதங்கள் மௌனமாகிவிட்டன.  இவை மௌனமாக்கப்பட வேண்டியவையே. ஆனால் இந்த ஆயுதங்களால் ஆளப்பட்ட தமிழ் மக்களும் மௌனமாக்கப்பட்டு விட்டனர்.

இலங்கையிலும் சரி, பிரித்தானியாவிலும் சரி, உலகின் எப்பாகத்திலானாலும் சரி ஒரு பெரும்பான்மைச் சமூகத்தினுள் வாழ்கின்ற சிறுபான்மைச் சமூகம் தன்னை தற்காத்துக்கொள்ளவும் தனது உரிமைகளை உறுதிப்படுத்திக் கொள்ளவும் மிகக் கடுமையாகப் போராட வேண்டியுள்ளது. இப்போராட்டமானது பலவகைப்பட்டதானாலும் ஒரு சமூகம் கல்வியில் உயர்நிலையை அடைகின்ற போது அச்சமூகம் தன்னைத் தற்காத்துக் கொள்கின்ற பலத்தினைப் பெறுகின்றது. பொருளாதார வளர்ச்சியின் அடிப்படை அம்சமாக தற்போது கல்வி அமைந்துள்ளது. கல்வியும் பொருளாதாரமும் ஒன்றுடன் ஒன்று நெருக்கமான உறவைக் கொண்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் அதன் இராணுவ பலத்தைக் கட்டி அமைக்க செலவிடப்பட்ட வளங்களை தமிழ்ச் சமூகத்தின் கல்வி வளர்ச்சியை நோக்கித் திருப்பியிருந்தால் இலங்கை வாழ் தமிழ் சமூகத்தின் நிலை இவ்வளவு கீழ் நிலைக்குச் சென்றிருக்க மாட்டாது. இலங்கைத் தமிழ் சமூகம் இன்று அறிவியல் வறுமையாலும் உள்ளுணர்வின் வரட்சியாலும் மிகவும் பாதிக்கப்படுகின்றது.

இதனை மாற்றி அமைப்பதற்கு தமிழ்ச்சமூகம் தன்னை மீண்டும் தற்காத்துக் கொள்ளும் நிலையை எய்துவதற்கும் தனது உரிமைகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் அச்சமூகம் தனது கல்விநிலையை உயர்த்திக்கொள்ள வேண்டும். அது பொருளாதார மீட்சியையும் உறுதிப்படுத்தும்.

Front_Cover_UoJ_A_Viewதமிழ் மக்கள் தங்கள் கல்விநிலையை உயர்த்திக்கொள்ளக் கல்விக் கட்டமைப்புகள் சீரமைக்கப்பட வேண்டும். கல்விக் கட்டமைப்புகள் சீரமைக்கப்படுவது என்பது கல்லும் சீமெந்துக் கலவையும் கொண்ட கட்டடங்களையல்ல. அகநிலை கட்டமைப்புகள் மறு சீரமைக்கப்பட வேண்டும்.

இதனை தமிழ் சமூகத்தின் உயர்ந்த கல்வி ஸ்தாபனமாக விளங்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பிப்பதே பொருத்தமானதாக அமையும். தமிழீழ விடுதலைப் போராட்டம் சீரழித்த கல்விக் கட்டமைப்புகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் முக்கியமானது. இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அதன் எல்லா அம்சங்களிலுமே கீழ்நிலையிலேயே உள்ளது. அதற்கு புறக் காரணிகளிலும் பார்க்க அகக்காரணிகளே பெரும்பாலும் காரணமாக உள்ளதனை இந்நூலில் உள்ள கட்டுரைகளில் காணலாம்.

பிரித்தானியா போன்ற நாடுகளில் ஒரு மாணவன் அல்லது மாணவி பல்கலைக்கழகம் செல்வது என்பது பெரும்பாலும் அம்மாணவனுடையதோ அல்லது மாணவியினுடையதோ தெரிவாகவுள்ளது. ஒவ்வொரு மாணவனுக்கும் அதற்கான வாய்ப்பு பெரும்பாலும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையில் அவ்வாறு இல்லை.  பல்கலைக்கழகம் செல்வது என்பது மாணவ,  மாணவியரின் கனவு.  மிகக் கடுமையான போட்டியினூடாக மிகக் குறைந்த விகிதமான மாணவ, மாணவிகளே பல்கலைக்கழகம் செல்கின்றனர்.  அதற்கு இம்மாணவ,  மாணவிகளும் அவர்களின் பெற்றோர்களும் மேற்கொள்ளும் அர்ப்பணிப்பு மிக உயர்ந்ததாக உள்ளது.

இவ்வாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சென்றோர் எதிர்கொண்ட பிரச்சினைகளே இந்நூலை உருவாக்கக் காரணமானது. இலங்கைத் தமிழ்ச் சமூகமானது அதன் வரலாற்றில் மிக இக்கட்டான காலகட்டம் ஒன்றில் சிக்கியுள்ளது. இந்நிலையில் இச்சமூகத்தின் உயர்ந்த கல்வி ஸ்தாபனமான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமானது  தற்போதைய அதன் கீழான நிலையில் இருந்து மீட்டெடுக்கப்பட வேண்டியது மிக அவசியமானது.

அதற்கான ஒரு வாய்ப்பாக யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தின் உபவேந்தருக்கான தெரிவு  நவம்பர் 2010ல் இடம்பெற இருக்கின்றது.  புதிய உப வேந்தரைத் தெரிவு செய்யும் தகைமையுடைய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கவுன்சில் அங்கத்தவர்கள் இத்தெரிவை மிகவும் பொறுப்புடன் மேற்கொள்ளவேண்டும். யாழ் பல்கலைக்கழகத்தின் இலக்கையும் தொலைநோக்குப் பார்வையையும் முன்னெடுத்துச் செல்லும் கல்வியியல் ஆளுமையும் முகாமைத்துவத் திறமையும் உடையவரை அவரது தகைமையின் அடிப்படையில் மட்டும் தெரிவு செய்ய வேண்டும் என்று தமிழ்க் கல்விச் சமூகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

த ஜெயபாலன்
ஆசிரியர், தேசம்நெற்.
நவம்பர் 09, 2010.

அண்மைக் காலமாக தேசம்நெற் இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பாக வெளியிடப்பட்ட பதிவுகள்:

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் உடனான நேர்காணல்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்

‘Tamillain-Barre’ Syndrome’ மும் தமிழ் சமூகத்திற்கான புதிய அரசியல் கலாச்சாரத்தின் அவசியமும் : த ஜெயபாலன்

யாழ் பல்கலைக்கழகம் – முப்பத்தாறு வருடங்கள் – முழுமையான சீரழிவு : நட்சத்திரன் செவ்விந்தியன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் யை ஆதரிப்போம்! : ரி கொன்ஸ்ரன்ரைன்

தவித்துக் கொண்டிருக்கும் நமது சமூகத்திற்காய் உழைப்போம்: யாழ் பல்கலை. மாணவர் ஒன்றியம்

பேராசிரியர் கைலாசபதி: ஒரு பெரு விருட்சமும் சில சிறு செடிகளும் : கரவை ஜெயம்

‘யாழ் பல்கலைக்கழக மாணவிகள் தற்கொலை முயற்சி!’ யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் – அரச அதிபர் சுயாதீன விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். : த ஜெயபாலன்

யாழ் பல்கலையின் உபவேந்தர் தெரிவுக்கு பேராசிரியர் ஹூலுக்கு ஆதரவாக மேற்கொண்ட கையொப்ப ஆவணம் அமைச்சர் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டது : த ஜெயபாலன்

”யாழ் பல்கலைக்கழகம் தொடர்பான தேசம்நெற் கட்டுரைகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை.” பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல்

ஈபிடிபி தோழர்களே! நல்லதொரு இதயவீணை செய்து அதை நலங்கெடப் புழுதியில் எறிந்திட வேண்டாம். : ரி சோதிலிங்கம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பார்வை நூலுக்கான முன்னுரை : த ஜெயபாலன்