சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

டெஸ்ட் அணிக்கு திரும்புகிறார் முரளி

murali.jpgநியூஸி லாந்துடனான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியில் முத்தையா முரளிதரன் இணைக்கப்பட்டுள்ளார். அத்துடன் முரளிக்கு பதிலாக பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரில் விளையாடிய சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் மற்றும் அஜந்த மெண்டிஸ் ஆகியோருக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது.

இது தவிர, பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக விளையாடாத விக்கெட் காப்பாளர் பிரஸன்ன ஜயவர்தன மற்றும் காயத்தினால் அவதிப்பட்டு வந்த டி.எம். டில்ஷான் ஆகியோரும் டெஸ்ட் அணிக்கு திரும்புகின்றனர்.  இதில் பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம்பிடித்த சுரேவ் ரன்திவ், சுரங்க லக்மால் மற்றும் கௌஷல்ய சில்வா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 18 ஆம் திகதி காலியில் ஆரம்பமாகவுள்ளது.

அணி விபரம்

குமார் சங்கக்கார (தலைவர்), மலிந்த வர்ணபுர, தரங்க பரணவிதான, மஹேல ஜயவர்தன, திலான் சமரவீர, திலகரத்ன டில்ஷா, அன்ஜலோ மத்தியூஸ், சாமர கபுகெதர, முத்தையா முரளிதரன், அஜந்த மெண்டிஸ், திலான் துஷார, நுவன் குலசேகர, தம்மிக்க பிரசாத், பிரஸன்ன ஜயவர்தன (வி.கா.), ரங்கன ஹேரத்.

தரவரிசையில் சானியா முன்னேற்றம்

sania-mirza.jpgலெக் சின்டன் டென்னிஸ் பட்டம், வான்கூவர் டென்னிஸ் தொடரில் இறுதி வரை வந்தது ஆகியவற்றால் இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா மகளிர் ஒற்றையர் உலகத் தரவரிசையில் 9 இடங்கள் முன்னேறி 74-வது இடம் பிடித்துள்ளார்.

மகளிர் இரட்டையர் உலக தரவரிசைகளில் சானியா மிர்சா 49-வது இடத்தில் நீடிக்கிறார்.

ஆடவர் ஒற்றையர் உலகத் தரவரிசையில் இந்திய வீரர் சோம்தேவ் தேவ் வர்மன் 13 இடங்கள் முன்னேற்றம் கண்டு 140-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

லெக் மேசன் டென்னிஸ் தொடரில் உயர் தரவரிசையில் உள்ள மாரின் சிலிச்சை வென்றதன் மூலம் சோம்தேவ் தேவ்வர்மன் இந்த முன்னேற்றத்தை பெற்றுள்ளார்.

பாகிஸ்தான் வீரர் சயீத் அஜ்மலுக்கு அபராதம்

saeedajmal.jpgநேற்று இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற இருபது ஓவர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சங்கக்காராவை வீழ்த்திய பிறகு பாகிஸ்தான் ஆஃப் ஸ்பின்னர் சயீத் அஜ்மல் அவரை வசை பாடியபடி பெவிலியன் நோக்கி செல்லுமாறு செய்கை செய்ததால் அவரது ஆட்டத் தொகையில் 15% அபராதம் செலுத்துமாறு ஆட்ட நடுவர்கள் உத்தரவிட்டனர்.

இலங்கை விளையாடும் போது 14-வது ஓவரில் இது நடந்தது. இந்த மோசமான நடத்தையை நடுவர்களான அஷோக டிசில்வா, விஜேவர்தனே ஆகியோர் கண்டித்தனர்.

இதனால் உடனேயே தவறை உணர்ந்த சயீத் அஜ்மல் இருவரிடம் மன்னிப்பு கேட்டதோடு, ஆட்டம் முடிந்த பின்பு சங்கக்கராவிடம் தன் தவற்றுக்கு மன்னிப்பு கேட்டார்.

இலங்கையுடனான 20க்கு 20 போட்டியில் பாகிஸ்தான் 52 ஓட்டங்களால் வெற்றி

afridi.jpgபாகிஸ் தானுடனான முதல் 20க்கு 20 போட்டியில் 52 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது இலங்கை அணி. இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதிய முதல் 20க்கு 20 போட்டி நேற்று கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டு மைதானத்தில் இரவுப் போட்டியாக நடைபெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றியிட்டிய பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றது.

பாகிஸ்தான் அணிக்கு சஹிட் அப்ரிடி தலைமை தாங்கினார் அவர் தலைமை தாங்கிய முதல் 20க்கு 20 போட்டியில் 37 பந்துகளை எதிர்கொண்டு 50 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். இதேவேளை இம்ரான் 28 பந்துகளை எதிர் கொண்டு 40 ஓட்டங்களையும் பெற்றார். இப்போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய உமர் அக்மல் 20 பந்துகளை எதிர் கொண்டு 30 ஓட்டங்களைப் பெற்றார். இலங்கை அணியின் பந்து வீச்சைப் பொறுத்தவரையில் துஷாரா 2 விக்கெட்டையும், குல சேகர, மெத்திவ், மலிங்க தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

பாகிஸ்தான் அணி 6.1 பந்துகளில் 50 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணி 100 ஓட்டங்களை 12.1 பந்துகளில் பெற்றது. இதேவேளை 4வது விக்கெட் இணைப்பாட்டமாக 50 ஓட்டங்கள் பெறப்பட்டது. அப்போது அப்ரிடி 21 ஓட்டங்களையும், உமல் அக்மல் 28 ஓட்டங்களையும் உதிரியாக ஒரு ஓட்டமும் பெறப்பட்டிருந்தது.பாகிஸ்தான் அணி 150 ஓட்டங்களை 17.5 பந்து களில் பெற்றது. 20 ஓவர் முடிவில் 172 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்தது.

173 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி எனப் பதிலெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 120 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி சார்பாக அணித் தலைவர் சங்கக்கார 38 ஓட்டங்களையும் ஜயசூரிய 23 ஓட்டங்களையும் பெற்றனர். எனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றனர்.

பந்து வீச்சில் நவிட் 3 விக்கெட்டையும் அஜ்மல் 3 விக்கெட்டையும் அப்ரிடி, ஆமிர், அன்ஜும் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதேவேளை பாகிஸ்தான் அணி நாங்கள் தான் 20க்கு 20 உலக சம்பியன் என்பதை மிண்டும் நிரூபித்துவிட்டது மட்டுமல்லாமல் இப்போட்டியில் வெற்றியீட்டி கிண்ணத்தைக் கைப்பற்றியது. ஆட்டநாயகனாக அப்ரிடி தெரிவானார்.

“அகதிகளாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் அதிதிகளாகச் சென்று குடியேறவேண்டும்’

அகதிகளாக வெளியேற்றப்பட்ட எம்மை அதிதிகளாகச் செல்வதற்கான வாய்ப்பை யாழ்.மாநகர சபைக்கு ஐந்து முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதன் மூலம் இறைவன் ஏற்படுத்தித் தந்துள்ளதாக யாழ்.மாநகரசபைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தெரிவு செய்யப்பட்ட சட்டத்தரணி எம்.எம்.றமீஸ் நீர்கொழும்பு பெரியமுல்லையில் அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின்போது கூறினார். இடம்பெயர்ந்து நீர்கொழும்பில் வாழும் யாழ்.முஸ்லிம்கள் ஏற்பாடு செய்த வரவேற்புக் கூட்டம் ஓய்வுபெற்ற ஆசிரியர் உமர்தீன் தலைமையில் பெரியமுல்லை றசாத் மண்டபத்தில் இடம்பெற்றது.

சட்டத்தரணி றமீஸ் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;

அமைச்சர்களான ரிஷாத் பதியுதீன், அமீர் அலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் ஒன்றிணைந்து சரியான முறையில் வியூகத்தை அமைத்து மக்களுக்குத் தெளிவுபடுத்தியதனால் வாக்குகள் சரியான முறையில் பாவிக்கப்பட்டு ஐ.ம.சு.மு. வில் போட்டியிட்ட 4 முஸ்லிம் உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். சுயேச்சைக் குழுவிலும் ஒரு முஸ்லிம் தெரிவு செய்யப்பட்டுள்ளதால் யாழ்.மாநகர சபைக்கு 5 முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு சரித்திரம் படைக்கப்பட்டுள்ளது.

சிறிய சிறிய பிரச்சினைகளைத் தவிர்த்துக் கொண்டு சரியான முறையில் திட்டமிட்டு ஒற்றுமையாகச் செயற்பட்டால் எதையும் சாதிக்க முடியும். முஸ்லிம்களின் வாக்குப் பலத்தின் மூலம் ஆட்சி அமைக்க முடியும் என்ற செய்தியை தெரியப்படுத்தியுள்ளோம். தீர்மானிக்கும் சக்தி முஸ்லிம்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளோம்.

1990 ஆம் ஆண்டு அகதிகளாக வெளியேற்றப்பட்ட எம்மை அதிதிகளாகச் சொந்த மண்ணான யாழ்ப்பாணம் செல்வதற்கான சந்தர்ப்பத்தை 5 முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதன் மூலம் இறைவன் ஏற்படுத்தித் தந்துள்ளான்.

யாழ்ப்பாணத்திற்கு வெளியே நாட்டின் நாலாபாகங்களிலும் சிதறி வாழும் யாழ்.முஸ்லிம்களில் எமக்கு வாக்களித்த, வாக்களிக்காத சகலருக்கும் சேவை செய்ய நான் கடமைப்பட்டுள்ளேன். எனக்கு வாக்களிக்காவதர்களுடன் கோபிக்கமாட்டேன். அரசியலில் கருத்து வேறுபாடு இருப்பது சகஜம். இவற்றை மறந்து ஒற்றுமையாகச் செயல்படுவோம்.

“செடோ’ அமைப்பின் செயலாளர் அஜ்மல் பேசும்போது;

யாழ்.மாநகர சபையில் ஐ.ம.சு.மு. ஆட்சியமைக்கத் தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம் வாக்குகள் அமைந்துள்ளன. முஸ்லிம்கள் அரசுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற குற்றச்சாட்டு பொய்யென்பது யாழ்.தேர்தல் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ளனர். பிரதிமேயர் பதவி முஸ்லிம் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும். 1990 ஆம் ஆண்டு அகதிகளாக வெளியேறும் போது சட்டத்தரணி ரமீஸின் தந்தை பிரதிமேயராக இருந்தார். நாம் மீண்டும் மீள்குடியேறும் போது அவரது மகன் றமீஸ் பிரதிமேயராக இருக்க வேண்டும் என்றார்.

நீர்கொழும்பு மாநகர சபை உறுப்பினர் எம்.ஏ.இசட் பரீஸ் உரையாற்றும் போது; யாழ்.மாநகர சபைக்கு இரண்டு முஸ்லிம்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் 5 முஸ்லிம்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளவம மகிழ்ச்சியைத் தருகிறது. முஸ்லிம்கள் அரசுடன் இருக்கிறார்கள் என்பதற்கு இது நல்லதொரு எடுத்துக் காட்டாகும். இதனை முஸ்லிம்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என்னால் முடிந்த உதவிகளை யாழ்.முஸ்லிம்களுக்காகச் செய்து தருவேன் என்றார்.

90இல் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிகளின் நினைவுதினம் இன்று

batti-0000.jpg1990 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்களின் நினைவாக ஏறாவூரில் சுஹதாக்கள் தினம் மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பிரதேசத்தில் 1990ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 121 முஸ்லிம்களின் 19 ஆவது ஆண்டினை நினைவுகூரும் முகமாக இன்று அப்பிரதேசத்தில் ‘சுஹதாக்கள் தினம்’ அனுஷ்டிக்கப்படுகிறது.

‘சுஹதாக்கள் நிறுவனம்’ விடுத்த அழைப்பின் பேரில் இப்பிரதேசத்திலுள்ள வியாபார நிலையங்கள், சந்தை, தனியார் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.

மாணவர் வரவின்மையால் பாடசாலைகள் இயங்காத போதிலும் க.பொ.த. உயர் தர பரீட்சைகள் சுமூகமாக நடைபெறுகின்றன.

வெளியிடங்களுக்கான போக்குவரத்து வழமைபோல் நடைபெற்றாலும் உள்ளூர் போக்குவரத்து நடைபெறவில்லை. அரசாங்க காரியாலயங்கள் மற்றும் வங்கிகளின் வழமை நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது.

1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி விடுதலை புலிகள் 121 முஸ்லிம்களைக் படுகொலை செய்தனர். பள்ளிவாசல்களில் சுஹாதாக்களின் நினைவாக கத்த முல் குர் ஆன் ஓதல் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

இலங்கை பாகிஸ்தான் இருபது 20 போட்டி இன்று

0308mahela.jpgஇலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருபது 20 சர்வதேச போட்டி ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.  இதில் பாகிஸ்தான் அணிக்கு அதிரடி ஆட்டக்காரர் ஷஹீட் அப்ரிடி தலைவராக செயல்படவுள்ளார்.

அத்துடன் அண்மையில் நடந்த இருபது20 உலகக் கிண்ணத்தில் சாம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான் அணி, கடைசியக நடந்த இலங்கையுடனான ஒருநாள் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளிலும் இலகு வெற்றியீட்டியது. எனவே, இன்றைய தினம் பாகிஸ்தான் அணி இலங்கைக்கு கடும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபுறத்தில் சங்கக்கார தலைமையிலான இலங்கை அணி இருபது 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்த பழியை தீர்ப்பதற்கு இன்று முயற்சிக்கும்.  நடந்து முடிந்த பாகிஸ்தானுடனான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை கைப்பற்றிய இலங்கை அணி இருபது20 போட்டியையும் இலகுவில் விட்டுக்கொடுக்காது என்பது நிச்சயம்.

இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இதுவரை 5 இருபது 20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் பாகிஸ்தான் 3 போட்டிகளிலும் இலங்கை 2 போட்டிகளிலும் வெற்றியீட்டியுள்ளன.

சனத் ஜயசூரியவுடன் ஆரம்ப துடுப்பட்ட வீரராக மஹேல உடவத்த களமிறங்க வாய்ப்பு உள்ளதாக தெரியவருகிறது.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரே இருபது20 போட்டியாக நடைபெறும் ஆட்டம் இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

ஜிம்பாப்வேயை வங்கதேசம் வீழ்த்தியது

cricket1.jpg
ஜிம்பாப்வேயில் உள்ள பலவாயோ மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற வங்கதேச-ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அஷ்ரஃபுல் 103 ரன்கள் எடுத்து வங்கதேச அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்தார்.

வெற்றி பெறத் தேவையான 208 ரன்களை எடுக்க களமிறங்கிய வங்கதேசம் தமீம் இக்பால், சித்திக் மூலம் 4 ஓவர்களில் 30 ரன்கள் என்ற அதிரடித் துவக்கத்தை பெற்றது. சித்திக் 12 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஆனால் அதன் பிறகு ஜோடி சேர்ந்த அஷ்ரஃபுல்-தமீம் இணை 22 ஓவர்களில் 137 ரன்களைச் சேர்த்தனர். தமீம் இக்பால் 68 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தபோது வங்கதேசம் 25.4 ஓவர்களில் 167 ரன்கள் எடுத்து வெற்றிக்கு அருகில் வந்தது.

மொகமது அஷ்ரஃபுல் 102 பந்துகளில் 12 பவுண்டரிகள் 2 சிக்சர் சகிதம் தன் சதத்தை எட்டினார். மறு முனையில் ராகிபுல் ஹஸன் 11 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். வங்கதேசம் 34.3 ஓவர்களில் 211/2 என்று அபார வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட இந்த ஒரு நாள் தொடரில் வங்கதேசம் 1- 0 என்று முன்னிலை பெற்றுள்ளது.

இங்கிலாந்து இன்னிங்ஸ் தோல்வி; டெஸ்ட் தொடர் சமநிலை

cricket.jpgஹெடிங் லேயில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் 4-வது போட்டியில் முதல் இன்னிங்ஸில் 343 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்ட்ரேலியா இங்கிலாந்து அணியை இரண்டாவது இன்னிக்ஸில் 263 ரன்களுக்கு சுருட்டி, 80 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. மிட்செல் ஜான்சன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதன் மூலம் 5 டெஸ்ட்கள் கொண்ட இத்தொடர் தற்போது 1- 1 என்று சம நிலை எய்தியுள்ளது. 82/5 என்று துவங்கிய இங்கிலாந்து 3-வது நாள் ஆட்டம் உணவு இடைவேளைக்கு சற்று பிறகு 263 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படு தோல்வி தழுவியது.

82/5 என்று துவங்கிய இங்கிலாந்து உணவு இடைவேளையின் போது 250 ரன்களை எட்டியது. அதாவது 168 ரன்களை அந்த இரண்டு மணி நேர ஆட்டத்தில் குவித்தது இங்கிலாந்து.

8-வது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த கிரகாம் ஸ்வானும், ஸ்டூவர்ட் பிராடும் 12.3 ஓவர்களில் 108 ரன்களை மின்னல் வேக அதிரடியில் குவித்தனர். எந்த ஒரு விக்கெட்டுக்கும் இடையிலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த வேகத்தில் ரன் குவித்திருப்பது இதுவே இரண்டாவது அதிகபட்சமாகும். முதலில் நேதன் ஆஸ்ட்லேயும், கிறிஸ் கெய்ன்சும் ஜோடி சேர்ந்து இதைவிட வேகத்தில் ரன் குவித்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆஸ்டிலும், கெய்ன்ஸும் 10-வது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்து இங்கிலாந்துக்கு எதிராக 65 பந்துகளில் 118 ரன்களைக் குவித்துள்ளனர். இதுதான் அதிகபட்சம். தற்போது பிராட், ஸ்வான் பார்ட்னர்ஷிப் 8.64 என்ற ரன் விகிதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இவர்கள் அதிரடியில் சிக்கியவர் ஸ்டூவர்ட் கிளார்க் இவர் 11 ஓவர்களில் 74 ரன்கள் கொடுத்து விக்கெட்டுகள் எதையும் கைப்பற்றவில்லை. நேற்று முதலில் ஜேம்ஸ் ஆன்டர்சன் வந்தவுடனேயே ஹில்ஃபென் ஹாஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு ஸ்கோர் 120 ரன்களாக இருந்தபோது மேட் பிரையர் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். 120/7 என்று ஆனபோது ஸ்வானும், பிராடும் இணைந்தனர். முதலில் ஸ்வான் திணறினார். அதிர்ஷ்டவசமாக இரண்டு பவுண்டரிஅகளை அடித்தார். ஆனால் ஸ்டூவர்ட் கிளார்க் பந்தில் பிராட் அடுத்தடுத்து 4 பவுண்டரிகளை ஒரே ஓவரில் அடித்தார்.

அடுத்ததாக இரண்டு 5 ரன்கள் வைடு பால் வீசிய சிடில் அதே ஓவரில் 17 ரன்களை கொடுத்தார். பிராட் அரை சதம் நோக்கி முன்னேறினார். மீண்டும் ஸ்டூவர்ட் கிளார்க் ஓவரில் 16 ரன்கள் இந்த முறை அவரை விளாசியது கிரகாம் ஸ்வான்.

அதன் பிறகு 49 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 61 ரன்களை விளாசிய பிராட், பீட்டர் சிடில் பந்தில் ஆட்டமிழந்தார்.72 பந்துகளில் 7 பவுண்டரிகள் ஒரு சிக்சர் சகிதம் 62 ரன்கள் எடுத்து ஸ்வான் ஆட்டமிழந்தார். ஹார்மிசன் களமிறங்கி 4 பவுண்டரிகளை விளாசி 19 ரன்கள் எடுத்து ஜான்சனிடம் ஆட்டமிழந்தார். கடைசியாக இன்னிங்ஸின் 62-வது ஓவரின் 3-வது பந்தில் கிரகாம் ஆனியன்ஸின் ஸ்டம்ப்களை ஜான்சன் பெயர்க்க பாண்டிங் பின்பு கூறிய “நம்பமுடியாத” வெற்றியை ஆஸ்ட்ரேலியா 3 நாட்களுக்குள் பெற்றது.

ஆட்ட நாயகனாக சதம் எடுத்த ஆஸ்ட்ரேலிய வீரர் மார்கஸ் நார்த் தேர்வு செய்யப்பட்டார்.ஆஸ்ட்ரேலிய அணியில் ஜான்சன் 5 விக்கெட்டுகளையும் ஹில்ஃபென் ஹாஸ் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

கனடா வீராங்கனையிடம் சானியா இறுதிப் போட்டியில் தோல்வி

sania-mirza.jpgகனடா நாட்டில் நடைபெற்ற வான்கூவர் ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் கனடா வீராங்கனை ஸ்டெஃபானி டுபாய்ஸிடம் சானியா மிர்சா 6- 1, 4- 6, 4- 6 என்ற செட் கணக்கில் இறுதிவரை கடுமையாக போராடி தோல்வி தழுவினார். இதனால் டுபாய்ஸ் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

முதல் செட்டில் 6- 1 என்று ஸ்டெஃபானியை ஊதித் தள்ளினார் சானியா. ஆனால் உள் நாட்டு ரசிகர்களின் பலத்த ஆதரவுடன் விளையாடிய ஸ்டெஃபானி தன் ஆட்டத்தை பல்வேறு விதங்களில் மேம்படுத்த சானியா மிர்சா நிறைய தவறுகளிழைக்கத் தொடங்கினார்.

குறிப்பாக தனது சர்வை வெற்றி பெறுவதில் சானியா தடுமாறினார். கடந்த வாரம் லெக்சின்டனில் சாம்பியன் பட்டம் வென்ற சானியா, இந்த முறை வென்று தொடர்ச்சியாக இரண்டு சர்வதேச டென்னிஸ் பட்டங்களை வெல்லலாம் என்ற கனவில் இருந்தார். ஆனால் அந்த கனவு தகர்ந்தது. ரன்னராக வந்த சானியாவிற்கு 6,080 அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகையாக கிடைத்தது.

சானியா பற்றி குறிப்பிட்ட ஸ்டெஃபானி, மற்ற ஆட்டங்களில் மற்ற கனடா வீராங்கனைகள் சானியாவை சற்றே களைப்பாக்கிவிட்டனர் இதனால் அவர் இந்த இறுதியில் சற்றே களைப்படைந்து விட்டார் என்றார்.