::விளையாட்டு

Sunday, August 1, 2021

::விளையாட்டு

இலங்கை மற்றும் சர்வதேச விளையாட்டுச் செய்திகள்.

ஒலிம்பிக்கில் போட்டி இலக்கத்தை சட்டை ஊசியால் குத்திச்சென்ற இலங்கை வீரர் – சமூக வலைத்தளங்களில் விமர்சனம் !

டோக்கியோவில் நடந்துவரும் ஒலிம்பிக் போட்டிகளில் இன்று நடந்த போட்டியில் பங்கேற்ற இலங்கை வீராங்கனை பற்றி சமூக வலைத்தளங்களில் விமர்சனம் குவிந்து வருகின்றன.

Gallery

நிமாலி நியனாராச்சி என்ற இவர் 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்கேற்றார்.

தனது போட்டி இலக்கத்தை அவர் சட்டை பின் ஒன்றின் மூலம் கட்டி தொங்கவிட்டு காட்சிப்படுத்தியுள்ளதே விமர்சனங்களுக்கு வித்திட்டுள்ளது.

இந்தியாவை துவம்சம் செய்த இலங்கை – மிரட்டிய BirthdayBoy ஹசரங்கா !

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. 2 போட்டிகள் முடிந்த நிலையில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன.
இந்நிலையில் இரு அணிகளும் மோதும் 3-வது மற்றும் கடைசி போட்டி நேற்று நடைபெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய  இந்தியா தொடக்கத்தில் இருந்தே தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் ஓட்டம் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். கெய்க்வாட் 14 ஓட்டங்கள் எடுத்தார். அதன்பின்னர் களமிறங்கிய வீரர்களும் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். 36 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகள் சரிந்தன.
3வது போட்டியில் அபார வெற்றி - டி20 தொடரை கைப்பற்றியது இலங்கை
அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 23 ஓட்டங்கள் சேர்த்தார். இதனால் இந்திய அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 81 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
இலங்கை சார்பில் ஹசரங்கா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தசுன் ஷனகா 2 விக்கெட் எடுத்தார்.
இதையடுத்து 82 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அவிஷ்கா பெர்னாண்டோ 12 ஓட்டங்களுடனும், பானுகா 18 ஓட்டங்களுடனும்,  சமரவிக்ரமா 6 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
இறுதியில், இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்துவெற்றி பெற்றது. தனஞ்செய டி சில்வா 23 ஓட்டங்களுடனும் , ஹசரங்கா 14 ஓட்டங்களுடனும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தனர். இதன்மூலம் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை 2-1 என கைப்பற்றியது.

தனுஷ்க குணதிலக்க மற்றும் குசல் மென்டீஸ் ஆகியோருக்கு 24 மாதங்கள் போட்டித் தடை !

இங்கிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுப் பயணத்தின் போது, பிரித்தானிய கட்டுப்பாடுகளை மீறிய இலங்கை கிரிக்கெட் அணியின் மூன்று வீரர்களுக்குமான தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, நிரோஷன் திக்வெல்லவிற்கு 18 மாதங்கள் போட்டித் தடையும், தனுஷ்க குணதிலக்க மற்றும் குசல் மென்டீஸ் ஆகியோருக்கு 24 மாதங்கள் போட்டித் தடையும் விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு, ஶ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு இந்த தண்டனையை பரிந்துரை செய்துள்ளது.

தனுஷ்க குணதிலக்க, நிரோஷன் திக்வெல்ல மற்றும் குசல் மென்டீஸ் ஆகியோர், இன்று (29) இந்த குழுவின் முன் அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வனிந்து ஹசரங்க – சர்வதேச தரப்படுத்தலில் இரண்டாமிடத்துக்கு முன்னேற்றம் !

T20 சர்வதேச தொடருக்கான பந்துவீச்சாளர்களுக்கான புதிய தரப்படுத்தலை இன்று (புதன்கிழமை) சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

அதன்படி 720 புள்ளிகளுடன் இலங்கை அணியின் வீரர் வனிந்து ஹசரங்க இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

முதலிடத்தில் தென்னாபிரிக்க அணியின் வீரர் தப்ரெஸ் ஷம்ஸி 792 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளார்.

முன்னர் இரண்டாவது இடத்தில் இருந்த ஆப்கானிஸ்தான் அணியின் வீரர் ரஷீத் கான் 3 ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் – தங்கம் வென்ற 13 வயதான ஜப்பானின் மோம்ஜி நிஷியா !

நடைபெற்றுவரும் டோக்கியோ ஒலிம்பிக்கில், முதன்முறையாக பெண்கள் ஸ்ட்ரீட் ஸ்கேட்போர்டிங்கில் 13 வயதான ஜப்பானின் மோம்ஜி நிஷியா தங்கபதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.

இந்த போட்டியில் 13 வயது பிரேசில் வீராங்கனை ரேய்சா லீல் வெள்ளிப் பதக்கமும், ஜப்பானின் 16 வயது ஃபனா நகாயாமா வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஸ்கேட்போர்டிங்கில் முதல்முறையாக தங்கபதக்கம் வென்றது குறித்து மோம்ஜி நிஷியா கூறுகையில்,

‘நான் வெற்றி பெறுவேன் என்று எதிர்பாக்கவில்லை. ஆனால் என்னை சுற்றியிருந்தவர்கள் எனக்கு உற்சாகமூட்டினர். நான் வெற்றி பெற்றதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக்கில் வெற்றி பெறுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் இளம் வீராங்கனை என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி’ என கூறினார்.

இதற்கு முன்பு ஒலிம்பிக்கில் குறைந்த வயதில் பதக்கம் வென்றவர் என்ற பெருமை மர்ஜோரி ஜெஸ்ட்ரிங்கிடம் இருந்தது. ஸ்பிரிங்போர்ட் விளையாட்டிற்காக 1936ஆம் ஆண்டு பெர்லினில் நடைபெற்ற போட்டியில் பதக்கம் வென்ற இவருக்கு வயது 13 வருடம் 267 நாட்கள் அதாவது நிஷியாவை காட்டிலும் 63 தினங்கள் இளையவர்.

ஆண்களுக்கான ஸ்ட்ரீட் ஸ்கேட்போர்டிங்கில் ஜப்பானை சேர்ந்த 22 வயது யூடூ ஹோரிகோம் தங்கப் பதக்கம் வென்றார்.

இலங்கை – இந்தியா மோதும் இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி ஒத்திவைப்பு !

இலங்கைக்கு அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் சகலதுறை வீரர் குர்னால் பாண்டியாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மற்ற வீரர்களுக்கு பரிசோதனைகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர்களுக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டால் போட்டி நாளை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீனத்தை அடக்கும் இஸ்ரேலுடன் விளையாட மாட்டேன் – ஒலிம்பிக்கில் இருந்து விலகிய வீரர் !

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இஸ்ரேல் வீரருக்கு எதிராக விளையாட மறுத்த அல்ஜீரிய ஜூடோ வீரரை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.

அல்ஜீரிய ஜூடோ வீரரான Fethi Nourine என்பவரே விவாதத்துக்குரிய இந்த முடிவை மேற்கொண்டுள்ளார். முதல் சுற்றில் சூடான் வீரரை சமன் செய்த நிலையில், இரண்டாவது சுற்றில் இஸ்ரேலிய வீரருடன் மோத வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆனால் Fethi Nourine மற்றும் அவரது பயிற்சியாளர் ஆகிய இருவரும் இதற்கு மறுப்பு தெரிவித்ததுடன், போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இந்த முடிவை முன்னெடுத்ததாக Fethi Nourine விளக்கமளித்துள்ளார்.

2019ல் நடந்த உலக ஜூடோ சாம்பியன் போட்டியிலும், இதே இஸ்ரேலிய வீரருடன் மோதும் நிலை ஏற்பட்ட போது Fethi Nourine போட்டியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

இவ்வருட ஒலிம்பிக்கிலும் பங்கேற்றுள்ள அகதிகள் ஒலிம்பிக் அணி – 29 வீரர்கள் பங்கேற்பு !

32-வது ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் நடைபெற்றது. ஒலிம்பிக்கில் பங்கேற்கும் 204 நாட்டு அணியினரும் தங்களது தேசிய கொடியுடன் மிடுக்காக அணிவகுத்து சென்றனர். போட்டியை நடத்தும் நாடான ஜப்பான் நாட்டின் தேசியக்கொடி முதலில் கொண்டுவரப்பட்டது. அதன்பின்னர் மற்ற நாடுகளின் வீரர், வீராங்கனைகள், அணிவகுத்து அரங்கினுள் நுழைந்தனர்.

இதேபோல் ஒலிம்பிக் போட்டியில் இரண்டாவது முறையாக பங்கேற்கும் அகதிகள் ஒலிம்பிக் அணி வீரர்களும் தங்கள் கொடியுடன் அணிவகுத்து சென்றனர்.

அகதிகள் ஒலிம்பிக் அணி 2016 ஆம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் முதல்முறையாக பங்கேற்றது. போர் உள்ளிட்ட காரணங்களுக்காக தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் அகதிகளாக தங்கியுள்ளவர்களின் ஒலிம்பிக் கனவை நனவாக்கும் வகையில் அகதிகள் ஒலிம்பிக் அணி என்ற அணியை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உருவாக்கியது.
இதன்மூலம், சொந்த நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தங்கியுள்ள அகதிகள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த அணி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் நிர்வகிக்கப்படுகிறது. அகதிகள் ஒலிம்பிக் அணியில் 29 வீரர்-வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.

ஆரம்பித்தது பதக்க வேட்டை – இவ்வருட ஒலிம்பிக்கின் முதல் தங்கம் சீனாவுக்கு !

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் பெண்கள் 10மீ ஏர் ரைஃபிள் துப்பாக்கி சுடுதல்  போட்டி இன்று நடைபெற்றது. இறுதிப்போட்டிக்கான தகுதிச்சுற்றில் இரண்டு தென்கொரிய வீராங்கனைகள் மற்றும் நோர்வே, சீனா, அமெரிக்க வீராங்கனைகள் உள்பட 8 பேர் தகுதி பெற்றனர்.
இறுதி போட்டியில்  சீனாவைச் சேர்ந்த யாங் கிங் 251.8 புள்ளிகள் பெற்று ஒலிம்பிக் சாதனை படைத்ததுடன், தங்கப்பதக்கத்தையும் வென்று அசத்தினார். இதன்மூலம் சீனா டோக்கியோ ஒலிம்பிக்கில் முதல் தங்கப்பதக்கத்தை வென்றது.
இரண்டாவதாக, ரஷியாவைச் சேர்ந்த கைலாஷினா அனஸ்டாசிட்ட 251.1 புள்ளிகள் பெற்று வெள்ளி வென்றார். அடுத்து , சுவிட்சர்லாந்தை சேர்ந்த சரிஸ்டென் நினா 230.6  புள்ளிகளுடன் வெண்கல பதக்கம் வென்றார்.
தகுதிச்சுற்றில் சீன வீராங்கனை 6-வது இடத்தையும், ரஷிய வீராங்கனை 7-வது இடத்தையும், சுவிட்சர்லாந்து வீராங்கனை 8-வது இடத்தையும் பிடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

09 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கைக்கு ஓர் வெற்றி – கொண்டாடித்தீர்த்த ரசிகர்கள் !

இலங்கை சென்றுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி விட்டது.
இந்நிலையில், இந்தியா-இலங்கை மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில்  நடந்தது.
நாணயச்சுழற்சியில்  வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது. மழை குறுக்கீட்டின் காரணமாக போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. அதையடுத்து இரு அணிகளுக்கும் 47 ஓவர்கள் மட்டும் நிர்ணயித்து மீண்டும் போட்டி தொடங்கப்பட்டது.
அதன்படி,  நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவரில் இந்திய அணி 43.1 ஓவர்களில் 225 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.  இந்திய அணியில் அதிகபட்சமாக பிரித்வி ஷா 49 ஓட்டங்களும், சஞ்சு சாம்சன் 46ஓட்டங்களும் , சூர்யகுமார் யாதவ் 40 ஓட்டங்களும் எடுத்தனர்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் அகில தனஞ்சய 3 விக்கெட்டுக்களையும், பிரவீன் ஜயவிக்கிரம 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
மீண்டும் மழை குறுக்கிட்டதால் 227 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு இலங்கை அணி களமிறங்கியது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் அவிஷ்கா பெர்னாண்டோ  சிறப்பாக ஆடி 76 ஓட்டங்களுடன் அணியை பலப்படுத்தி ஆட்டமிழந்தார். பானுகா ராஜபக்ச 65ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 227 ரன்களை எடுத்து ஆறுதல் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம்  9 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையில் வைத்து இந்தியாவை வெற்றிகொண்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
இந்தியா சார்பில் ராகுல் சாஹர் 3 விக்கெட்டும், சகாரியா 2 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா, கிருஷ்ணப்பா கவுதம் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இலங்கை அணிக்கு உதிரியாக மட்டுமே 30 ஓட்டங்கள் கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என தொடரைக் கைப்பற்றியது.
ஆட்ட நாயகன் விருது அவிஷ்கா பெர்னாண்டோவுக்கு அளிக்கப்பட்டது. தொடர் நாயகன் விருது சூர்யகுமார் யாதவுக்கு வழங்கப்பட்டது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி 25ம் தேதி நடைபெற உள்ளது.