வெளிநாட்டுச் செய்திகள்

வெளிநாட்டுச் செய்திகள்

கொரோனா தடுப்பூசி தயாரிப்பினால் பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலைக்கு வந்த மருந்து நிறுவனங்களின் உரிமையாளர்கள் !

அமெரிக்க வர்த்தக நிறுவனமான ‘போர்ப்ஸ்’, உலக அளவில் பெரும் பணக்காரர்கள் தரவரிசை பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு, சுகாதாரத்துறையில் புதிதாக பெரும் பணக்காரர்களாக உருவெடுத்துள்ள 50 புதுமுகங்களை அந்த பத்திரிகை பட்டியலிட்டுள்ளது.
அதில், கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்துள்ள அமெரிக்க மருந்து நிறுவனமான மாடர்னா, ஜெர்மனி மருந்து நிறுவனமான பயோஎன்டெக் (பைசர் தடுப்பூசி) ஆகிய நிறுவனங்களின் உரிமையாளர்களும் அடங்குவர். கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ததால், பங்குச்சந்தையில் அந்த நிறுவனங்களின் பங்கு மதிப்பு உயர்ந்ததாலும், பெருமளவு முதலீடு அதிகரித்ததாலும் அவர்களின் வருவாய் உயர்ந்துள்ளதால் இந்த பட்டியலில் அவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

“The deal is done ” முடிவு செய்யப்பட்டது பிரெக்சிட் வர்த்தக ஒப்பந்தம் – இங்கிலாந்து பிரதமர் போரிஸ்ஜோன்ஸன் ட்வீட் !

இங்கிலாந்தும்  ஐரோப்பிய ஒன்றியமும் பிரெக்சிட் வர்த்தக ஒப்பந்தம் குறித்து  பல மாதங்களாக கடுமையான பேச்சுவார்த்தை நடத்தி வந்தன.  பல மாதங்களாக இடம்பெற்ற கடுமையான பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இங்கிலாந்தின் உடனடி விலகல் பொருளாதார பாதிப்பை  குறைக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

நான்கு ஆண்டு கால பிரெக்சிட் பேச்சுவார்த்தை, ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டதுபோல் தோன்றுகிறது. ஜனவரி 1-ம் தேதி பிரெக்சிட் மாற்றக்காலம் முடிவடையும் நிலையில், ஆளுக்கொரு பக்கம் கோபமாக வெளியேறுவதை விட, சுமூகமாக ஒரு முடிவெடுத்து ஒரு நல்ல ஒப்பந்தத்துடன் பிரிந்து செல்லலாம் என இங்கிலாந்தும் , ஐரோப்பிய ஒன்றியமும் முடிவு செய்துள்ளது.

பிரெக்சிட் : நெருங்கும் பொருளாதாரம் – பிரியும் அரசியல் ! | வினவுஇங்கிலாந்து  சார்பில் லார்டு பாரஸ்ட் ஐரோப்பிய ஒன்றியம் சார்பில் மைக்கேல் பார்னியர்  மற்றும் சட்ட நிபுணர்கள் இணைந்து தவறேதும் இல்லாதபடி கவனமாக உருவாக்கப்பட்ட அந்த ஒப்பந்தம் குறித்து நேற்றிரவு தனது சக அமைச்சர்களுடன் கலந்தாலோசித்துள்ளார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ்ஜோன்ஸன்.

பிரெக்சிட்டின் முக்கிய பிரச்சினைகளான வரி விதிப்பு இல்லாத ஒற்றைச் சந்தை அனுமதி, ஐரோப்பிய நீதிமன்றத்திற்கு அடிபணியத் தேவையின்மை என இங்கிலாந்து  விரும்பியது போலவே உருவாக்கப்பட்டுள்ளது. இப்போதைய கொரோனா குழப்பத்தின் மத்தியில் இன்னொரு குழப்பம் நேராமல் இது தடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், “ஒப்பந்தம் முடிவடைந்தது” என பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ்ஜோன்ஸன் டுவீட் செய்துள்ளார், இங்கிலாந்து ஐரோப்பாவின் நட்பு நாடாகவும் “முதலிட சந்தையாகவும்” இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் கூறுகையில், “நாங்கள் இறுதியாக ஓர் ஒப்பந்தத்தைக் கண்டுபிடித்துள்ளோம். இது ஒரு நீண்ட மற்றும் முடிவில்லா  சாலையாக இருந்தது. ஆனால் அதன் முடிவில் எங்களுக்கு ஒரு நல்ல ஒப்பந்தம் கிடைத்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா – அணிவகுத்த 10 ஆயிரத்துக்கும் அதிகமான சரக்கு லாரிகள் !

இங்கிலாந்தில் புதியவகை கொரோனா வைரஸ்  பரவி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் பழைய கொரோனா வைரசை விட மிகவும் வேகமாக பரவுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால், அந்நாட்டில் பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் புதியவகை கொரோனா பரவுவது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அந்நாட்டுடனான விமான போக்குவரத்தை பல நாடுகள் தடை செய்துள்ளன. குறிப்பாக பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் இங்கிலாந்துடனான எல்லையை மூடியுள்ளது. இதனால், இங்கிலாந்துடனான சாலைப்போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்துடனான எல்லையை பிரான்ஸ் மூடியதையடுத்து ஆயிரக்கணக்கான சரக்கு லாரிகள் இருநாட்டு எல்லையிலேயே நிறுத்தப்பட்டன. 10 ஆயிரத்துக்கும் அதிகமான சரக்கு லாரிகள் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றதால் இரு நாட்டு எல்லையிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சரக்கு லாரிகள் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் ஐரோப்பிய நாடுகளில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படலாம் என அச்சம் நிலவியது.
இதையடுத்து, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் இடையே இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அந்த பேச்சுவார்த்தையில், இங்கிலாந்தில் இருந்து சரக்கு லாரிகளை பிரான்ஸ் எல்லைக்குள் நுழைய அதிபர் இம்மானுவேல் மெக்ரான் சம்மதம் தெரிவித்தார். ஆனாலும், எல்லையிலேயே லாரி டிரைவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. பரிசோதனைக்கு பின்னரே சரக்கு லாரிகள் இங்கிலாந்தில் இருந்து பிரான்சுக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர்.

கிறிஸ்துமஸ் விழாவை குடும்பத்துடன் கொண்ட சொந்த ஊருக்கு திட்டமிட்டிருந்த சரக்கு லாரி டிரைவர்கள் பலரும் இரு நாட்டு எல்லை மூடல் விவகாரத்தால் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். இன்னும் ஆயிரக்கணக்கான லாரிகள் இங்கிலாந்து-பிரான்ஸ் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. அதிகாரிகள் ஒரு மணி நேரத்தில் அதிகபட்சமாக 200 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்துவருகின்றனர்.

எத்தியோப்பியாவில் கொடூரம் – இன ரீதியிலான மோதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகொலை !

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோப்பிய நாட்டின் மேற்குப் பகுதியில் தன்னாட்சி அதிகாரம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 100 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

எத்தியோப்பியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட 2வது இனக்குழு அம்ஹாராக்கள். இப்பகுதியில் உள்ள அம்ஹாராக்கள் மீது சமீபத்தில் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேற்கு ஒரோமியா பிராந்தியத்தில் நவம்பர் 1-ம் தேதி நடந்த ஒரு கிளர்ச்சி தாக்குதலில் குறைந்தது 54 பேர் கொல்லப்பட்டதாக அம்னஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் அங்கு மீண்டும் 100க்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு ஊடகம் ஒன்று, பெனிஷங்குல் – குமுஸ் பிராந்தியத்தின் மெட்டகல் மண்டலத்தில் நேற்று(23.12.2020) அதிகாலை இந்த தாக்குதல் நிகழ்ந்ததாக சாட்சிகளை மேற்கோள் காட்டி ஒரு தனி அறிக்கை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.

நேற்று மாலை தொலைதூர கிராமங்களில் சிலர் சுற்றிவளைத்து மக்களுக்கு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர். ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கை 200க்கு மேல் என்று அங்குள்ள முக்கிய அரசியல் கட்சியின் தேசிய இயக்கத் தலைவர் பெலட் மொல்லா தெரிவித்துள்ளார். மேலும், இந்த தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பது தெரியவில்லை என்றும் அவர்கள் குமுஸ் போராளிகள் என்று பெலட் குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் கட்சியான பெனிஷங்குல்-குமுஸ் செழிப்பு கட்சி ஒரு அறிக்கையில்,” ஆயுதக் கொள்ளைக்காரர்கள்” இந்த தாக்குதலை செய்துள்ளதாகக் கூறியுள்ளது.

அந்நாட்டு பிரதமர் அபி அகமது அப்பகுதிக்குச் சென்று இதற்கு முன் நடந்த தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களை நீதிக்கு முன் நிறுத்த வேண்டியதன் அவசியம் குறித்து பேசிய ஒரு நாள் கழித்து, இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது. 80க்கும் மேற்பட்ட இனங்களைக் கொண்ட ஒரு நாட்டில் தேசிய ஒற்றுமையை வளர்க்க அபி அகமது முயற்சிப்பதால் இனப் பதட்டங்கள் ஒரு பெரிய சவாலாக கருதப்படுகிறது.

இதேபோன்ற தாக்குதல்களைத் தொடர்ந்து 300 க்கும் மேற்பட்ட மக்களை இடமாற்றப்பட்டுள்ளனர் என மனித உரிமைகள் ஆணையம் கவலையுடன் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் காட்டுத்தீயாய் பரவும் புதிய வகை வைரஸ் – 57 இடங்களில் கண்டுபிடிப்பு !

உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரித்தானியா தற்போது 6-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், பிரித்தானியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 21 இலட்சத்து 10 ஆயிரத்து 314 ஆக அதிகரித்துள்ளது.

இது ஒருபக்கமிருக்க பிரித்தானியாவில் பரவும் புதிய வைரஸ் உலக மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரித்தானியாவில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் எந்தெந்த பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது வரை, புதிய வகை கொரோனா வைரஸ், பிரித்தானியாவைச் சுற்றி 57 இடங்களில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வைரஸின் மரபணுவை வரிசைப்படுத்திய ஆய்வாளர்கள், இங்கிலாந்தில் 45 இடங்களிலும், ஸ்காட்லாந்தில் ஆறு இடங்களிலும், வேல்ஸில் ஆறு இடங்களிலும் எடுக்கப்பட்ட மாதிரிகளைக் கண்டறிந்துள்ளனர்.

இதற்கமைய, கிளாஸ்கோ, லின்வுட், நியூட்டன் மெர்ன்ஸ், ஏர்டிரி, போன்ஹில் மற்றும் லென்ஸி ஆகிய பகுதிகளிலும், கிராமப்புறமான நார்தம்பர்லேண்டில் ரோத் பரிக்கு அருகிலும், நியூகேஸில்-ஆன்-டைன் மற்றும் லோ பெல்லுக்கு அருகிலுள்ள கேட்ஸ்ஹெட்டில், கவுண்டி டர்ஹாமில் பிஷப் ஆக்லாந்து ஆகிய பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், கும்ப்ரியாவில் பென்ரித் அருகில், மிடில்ஸ்பரோ, லங்காஷயரில் ஹர்ஸ்ட் கிரீன், கிளெக்ஹீட்டன், ஹல் அருகே உள்ள போக்லிங்டனில், மெர்ஸ்சைட்டின் வடக்கில், கிராஸ்பி மற்றும் கிர்க்பிக்கு அருகில் இரண்டு பகுதிகள், மத்திய மான்செஸ்டரின் ஒரு பகுதி, தெற்கு யார்க்ஷயரில் மால்ட்பி அருகே, ரெக்ஷாமில் ஒரு பகுதி மற்றும் செஷயரின் பர்ட்டனில் ஒரு பகுதியிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேலும், ஸ்டாபோர்ட்ஷையரில் மேட்லாக் அருகில், நாட்டிங்ஹாம்ஷையரில் ஈக்ரிங் அருகில், லிங்கன்ஷையரில் உட்ஹால் ஸ்பா, ஸ்டாஃபோர்ட்ஷையரில் ஸ்டாபோர்டுக்கு அருகில், லெய்செஸ்டர் பகுதியில், ஓகாமுக்கு அருகிலுள்ள அப்பர் ஹம்பிள்டன், நார்விச் அருகிலுள்ள டெரெஹாம், இப்ஸ்விச் அருகே ஸ்டோமார்க்கெட், கேம்பிரிட்ஜ்ஷையரில் வில்லிங்ஹாம் அருகே, கெட்டெரிங்கில், கோவென்ட்ரிக்கு அருகிலுள்ள கெனில்வொர்த்தில், பர்மிங்காமின் ஓல்ட்பரி பகுதிக்கு அருகிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், வொர்செஸ்டரில், ஹியர்போர்டில், பிஷ்கார்ட், நீத், பிரிட்ஜெண்ட், பாரி மற்றும் நியூபோர்ட்டில், பிரிஸ்டலில், பிரிட்ஜ்வாட்டருக்கு அருகில் மற்றும் எக்ஸிடெர் அருகில், தெற்கு கடற்கரையில் டோர்செஸ்டருக்கு அருகில், தாட்சம் அருகிலுள்ள நியூபரியில், வின்செஸ்டருக்கு அருகிலுள்ள நியூ ஆல்ரெஸ்போர்டில், பில்லிங்ஷர்ஸ்ட் அருகில், டோர்கிங்கில், ஹெயில்ஷாம் அருகில், கேன்டர்பரிக்கு அருகில் (இந்த புதிய வைரஸ் தோன்றியதாக கருதப்படுகிறது), மத்திய லண்டனில், ஆக்ஸ்போர்டு அருகில், செயின்ட் ஆல்பன்ஸுக்கு அருகிலுள்ள வெல்வின் கார்டன் நகரில், பிரைன்ட்ரீ அருகில், பெட்போர்டுக்கு அருகிலுள்ள ஸ்டாக்ஸ்டனிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 

பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர ஐரோப்பிய யூனியன் அனுமதி !

அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி 95 சதவிகிதம் செயல் திறன் கொண்டது என தெரியவந்தது. இந்த தடுப்பூசி கொரோனா வைரசை தடுப்பதில் முக்கிய பங்காற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசியின் செயல்திறன் அறிவிக்கப்பட்ட உடன் தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர இங்கிலாந்து, அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய யூனியன் உள்பட பல நாடுகளிடம் பைசர் நிறுவனம் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தது.

இதையடுத்து, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் பைசர் நிறுவன தடுப்பூசிக்கு அனுமதியளித்ததையடுத்து அந்நாடுகளில் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. ஆனால், 27 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐரோப்பிய யூனியனில் கொரோனா தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.

தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிப்பது தொடர்பாக ஐரோப்பிய யூனியனியன் கமிஷன் நேற்று ஆலோசனை நடத்தியது. அந்த ஆலோசனை கூட்டத்தில் ஐரோப்பிய யூனியனில் பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கோண்டுவர அனுமதி வழங்கப்பட்டது.

இதன் மூலம் ஐரோப்பிய யூனியனில் உள்ள 27 நாடுகளுக்கும் பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பின்னர் டிசம்பர் 27-ம் திகதி முதல் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. ஒரே நாளில் ஐரோப்பிய நாடுகளில் பைசர் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ள சம்பவம் வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் முக்கியத்துவம் பெறுகிறது.

ஜோ பைடனின் வெற்றி செல்லுபடியற்றது – மீண்டும் ட்ரம்ப் தரப்பு நீதிமன்றில் மனுத்தாக்கல் !

அமெரிக்காவில் கடந்த மாதம் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஆனால் ஜனாதிபதி டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாததோடு தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகவும் குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் பல்வேறு மாகாண கோர்ட்டுகளில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் அனைத்துமே ரத்து செய்யப்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகளை மாற்றி அமைக்கக் கோரி டிரம்ப் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறுவதற்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

இதற்கிடையில் அமெரிக்க தேர்தல் சபை ஜோ பைடனின் வெற்றியை உறுதி செய்தது. ஆனாலும் டிரம்ப் தரப்பு தேர்தல் முடிவை மாற்றி அமைப்பதற்கான தங்களது சட்டப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் தேர்தல் முடிவை மாற்றியமைக்க கோரி டிரம்ப் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில் பென்சில்வேனியா மாகாணத்தில் ஜோ பைடனின் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும், பென்சில்வேனியா மாகாணத்தின் தேர்தல் சபை உறுப்பினர்களை மாகாண சட்டமன்றம் தேர்வு செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தேர்தல் சபை உறுப்பினர்களின் வாக்குகள் வருகிற ஜனவரி மாதம் 6-ந்தேதி எண்ணப்பட உள்ள நிலையில், அதற்கு முன்பாக இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் எனவும் டிரம்ப் தரப்பு கோரியுள்ளது.

“புதிய வகை கொரோனா வைரஸையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் பைசர் தடுப்பூசிக்கு உள்ளது” – ஜெர்மனி சுகாதாரத்துறை மந்திரி ஜென்ஸ் ஸ்பான் 

இங்கிலாந்தில் புதியவகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் பழைய கொரோனா வைரசை விட மிகவும் வேகமாக பரவுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால், அந்நாட்டில் பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் புதியவகை கொரோனா பரவுவது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அந்நாட்டுடனான விமான போக்குவரத்தை இந்தியா உட்பட பல நாடுகள் தடை செய்துள்ளன. இதற்கிடையில், பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி கடந்த சில நாட்களுக்கு முன்னரே இங்கிலாந்து, அமெரிக்கா போன்று நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மார்டனா தடுப்பூசியும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அமெரிக்காவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஸ்புட்னிக் வி தடுப்பூசி ரஷியாவில் பயன்பாட்டில் உள்ளது.
இந்நிலையில் தற்போது இங்கிலாந்தில் புதியவகை கொரோனா வைரஸ் பரவுவதால் தற்போதைய தடுப்பூசிகள் பயனளிக்காமல் செல்லலாம் என பரவலான கருத்துக்கள் நிலவி வந்தன. இந்நிலையில், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளே தற்போதைய புதிய கொரோனா வைரசையும் கட்டுப்படுத்தும் என ஐரோப்பிய யூனியனில் உள்ள சுகாதாரத்துறை விஞ்ஞானிகள் நம்புவதாக ஜெர்மனி சுகாதாரத்துறை மந்திரி ஜென்ஸ் ஸ்பான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

தற்போதுவரை நமக்கு கிடைத்த தகவலின்படி, புதியவகை கொரோனா வைரஸ் பயன்பாட்டில் உள்ள தடுப்பூசியில் (பைசர் தடுப்பூசி) எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. புதிய வகை கொரோனா வைரசையும் தற்போதுள்ள தடுப்பூசிகள் கட்டுப்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த பைசர் நிறுவனமும், ஜெர்மனியை சேர்ந்த பயோன்டெக் நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்கி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்தின் முதல் டோசை எடுத்து கொண்டார் புதிய ஜனாதிபதி ஜோ பைடன் !

அமெரிக்காவில் கொரோனா தொற்று எண்ணிக்கையும், உயிரிழப்பும் அதிக அளவில் உள்ளன. இவற்றில் பிற நாடுகளை பின்னுக்கு தள்ளி விட்டு முதல் இடம் பிடித்து உள்ளது அந்த நாடு.
இதற்கிடையே கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்து கண்டறியப்பட்டது அமெரிக்க நாட்டு மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தியது.
சமீபத்தில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். அடுத்த ஆண்டு ஜனவரியில் அவர் பதவி ஏற்க இருக்கிறார்.
இந்நிலையில், அமெரிக்காவின் டெலாவேயர் மாகாணத்தில் நியூவார்க் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஜோ பைடனுக்கு கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்தின் முதல் டோஸ் உட்செலுத்தப்பட்டு உள்ளது.
அப்போது பேசிய அவர், மருந்து கிடைக்கும்பொழுது அதனை எடுத்துக் கொள்ளுங்கள் என நாட்டு மக்களை  வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த பைசர் நிறுவனமும், ஜெர்மனியை சேர்ந்த பயோன்டெக் நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்கிமை குறிப்பிடத்தக்கது.

முக கவசம் அணியாது செல்பி எடுத்த சிலி ஜனாதிபதிக்கு 3,500 அமெரிக்க டாலர் அபராதம்  !

தென் அமெரிக்க நாடான சிலி கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக உள்ளது. அங்கு இதுவரை 5 லட்சத்து 81 ஆயிரத்து 135 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் 16 ஆயிரத்து 51 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். எனவே அங்கு வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சிலியில் முக கவசம் அணிவது கட்டாயமாக உள்ளது. பொதுவெளியில் முக கவசம் அணியாமல் இருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். அதாவது முக கவசம் தொடர்பான விதிமுறையை மீறிய நபர்களுக்கு அபராதம் அல்லது சிறை தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கும் சட்டம் அமலில் உள்ளது.

இந்த நிலையில் அந்த நாட்டின் ஜனாதிபதியே முக கவசம் தொடர்பான விதிமுறையை மீறியதால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மாத இறுதியில் ஜனாதிபதி செபாஸ்டியன் பெனெரா தனது சொந்த ஊரான கச்சாகுவா நகரில் உள்ள கடற்கரைக்கு சென்றபோது, அங்கிருந்த ஒரு பெண்ணின் விருப்பத்துக்காக அவருடன் செல்பி படம் எடுத்துக்கொண்டார். அப்போது ஜனாதிபதி செபாஸ்டியன் பெனெரா முக கவசம் அணிந்திருக்கவில்லை. எனவே இந்த செல்பி படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி சர்ச்சைக்குள்ளானது.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் சிலி அரசு, ஜனாதிபதி செபாஸ்டியன் பெனெராவுக்கு 3,500 அமெரிக்க டாலர் அபராதம் விதித்துள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி செபாஸ்டியன் பெனெரா தனது செயலுக்காக மன்னிப்பும் கோரியுள்ளார்.