யாழ். மாநகரசபைத் தேர்தலில் இடம்பெயர்ந்தோர் வாக்களிக்க ஆறு மாவட்டங்களில் 17 வாக்களிப்பு நிலையங்கள்

election_cast_ballots.jpgயாழ். மாநகரசபைத் தேர்தலில் இடம்பெயர்ந்து வாழ்வோர் வாக்களிக்க ஆறு மாவட்டங்களில் பதினேழு வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படுமென தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. வெளி மாவட்டங்களில் இடம்பெயர்ந்து வாழும் யாழ்.மாநகரசபை வாக்காளர்களில் 6242 பேர் தமக்கு வாக்களிக்க வசதி செய்துதருமாறு தேர்தல் திணைக்களத்திடம் கோரியதையடுத்து இவர்களுக்கு கொத்தணி வாக்குச்சாவடிகளை அமைக்கமுடிவு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் வாழும் 324 வாக்காளர்கள் வாக்களிக்க மட்டக்குளி சென் ஜேம்ஸ் மகாவித்தியாலயம், பவிலியன் ஒவ் பிளசரணங்கர விளையாட்டு மைதானத்திலும் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். கம்பஹா மாவட்டத்தில் வாழும் 849 வாக்காளர்கள் வாக்களிக்க சென்பீற்றர்ஸ் முஸ்லிம் மகாவித்தியாலயம், தளுவ கொட்டுவ சென் அன்ரனிஸ் வித்தியாலயம் ஆகியவற்றில் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.

களுத்துறை மாவட்டத்தில் வாழும் வாக்காளர்கள் 320 பேருக்கு கெனமுல்ல ஜீவன் முஸ்லிம் மத்திய கல்லூரியில் வாக்களிப்பு நிலையம் நிறுவப்படும். புத்தளம் மாவட்டத்தில் வாழும் வாக்காளர்கள் 4550 பேருக்கு இம் மாவட்டத்தில் ஏழு வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். இவர்களுக்கு புளிச்சங்குளம் சமத்பாறுக் மத்திய மகா வித்தியாலயம், ஸாகிரா பாத்திமா தேசியபாடசாலை, தில்லையடி மகாவித்தியாலயம் பல்விய சிங்கள மகா வித்தியாலயம், நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயம், பலப்பிட்டிய அலக்ஸா தேசியப் பாடசாலை ஆகிய பாடசாலைகளில் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.

அநுராதபுரம் மாவட்டத்தில் வாழும் நூற்றி இருபது வாக்காளர்களுக்கு இங்கிரிகொள்ளாவ முஸ்லிம் மகா வித்தியாலயம், கட்டுகொல பொதுநோக்கு மண்டபம், அநுராதபுரம் விழிப்புலனற்றோர் செவிப்புலனற்றோர் சிறார் பாடசாலை, நச்சன்டுவ முஸ்லிம் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.

இதேவேளை, குடாநாட்டில் தென்மராட்சி கைதடி, கொடிகாமம் நலன்புரி நிலையங்களில் வாழும் வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக அரியாலை பார்வதி வித்தியாலயத்தில் வாக்களிப்பு நிலையம் அமைக்கப்படும். வெளி மாவட்டங்களில் அமைக்கப்படும் வாக்களிப்பு நிலையங்களின் வாக்குப் பெட்டிகள் அந்தந்த மாவட்ட செயலகங்களில் எண்ணப்பட்டு வாக்கு எண்ணிக்கை யாழ். மாவட்ட தேர்தல் திணைக்களத்துக்கு அறிவிக்கப்படும்.

யாழ். மாவட்டத்தில் யாழ். மாநர சபை வாக்காளர் வாக்களிக்க எழுபது வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படுமென யாழ். மாவட்ட தேர்தல் ஆணையாளர் பொன்னுத்துரை குகநாதன் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *