ஒசாமாவை தப்ப விட்டது புஷ் நிர்வாகமே; அமெரிக்க செனட் உறுப்பினர் புகார்

ஆப்கானிஸ்தான் மலைப் பகுதியில் ஒளிந்திருந்த அல்-கொய்தா தலைவர் ஒசாமாவை இராணுவ அதிகாரி உத்தரவால் பிடிக்க முடியாமல் போனது, என அமெரிக்க செனட் தெரிவித்துள்ளது.

அமெரிக்க செனட்டின் வெளி விவகாரக் குழு தலைவர் ஜோன் கெர்ரி தனது அறிக்கையில் கூறியுள்ளதாவது :-அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் மீது தாக்குதல் நடந்த சில மாதங்களிலேயே ஆப்கானிஸ்தானின் டோரா போரா மலை பகுதிகளில் ஒளிந்திருந்த அல்-கொய்தா தலைவர் ஒசாமாவை அமெரிக்க படைகள் சுற்றி வளைத்தன. அப்போதே ஒசாமாவை உயிரோடு அல்லது சுட்டு வீழ்த்தி பிடித்திருக்கலாம்.

ஆனால், இராணுவ தலைமை அதிகாரியின் உத்தரவின் காரணமாக, அப்போது அமெரிக்க படைகளில் அங்கிருந்து வெளியேறி விட்டன.

அப்போதே சுட்டு வீழ்த்தியிருந்தால், தொடரும் பயங்கரவாத சம்பவங்களை தடுத்திருக்கலாம். அப்போது செய்த தவறால் ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் இன்று பயங்கரவாதம் தாண்டவமாடுகிறது.

எதிரியை ஒழிப்பதற்காக படையோடு ஆப்கானுக்கு சென்றாகி விட்டது. அங்கு சென்றபின் எதிரியை கொல்வதற்கு என்ன தயக்கம் வேண்டியிருக்கிறது? பாகிஸ்தானுக்கு சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலை பகுதிகளை அமெரிக்க படைகள் முற்றுகையிட்டு, பாகிஸ்தான் வழியை அடைத்திருந்தால், ஒசாமாவின் கதை முடிந்திருக்கும்.

அதை புஷ் நிர்வாகத்தில் இருந்த ரம்ஸ்பீல்டு போன்றவர்கள் செய்ய தவறி விட்டனர். எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் செய்த தவறினால் இன்று பல நாடுகளிலும் அல்-கொய்தா ஆதரவுடன் பயங்கரவாதிகள் கொடி கட்டி பறக்கின்றனர். இவ்வாறு ஜான் கெர்ரி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *