பாராளுமன்றத்திற்கான தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 8 இல் இடம்பெறவுள்ள நிலையில் வாக்கெடுப்பின் மூலம் 196 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 7,625 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இலங்கை அரசியல் திட்டத்துக்கு அமைய 22 மாவட்டங்களில் இருந்து மக்களை பிரதிநிதிதுவம் படுத்தும் வகையில் 196 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்.
இருபத்து நான்கு அரசியல் கட்சிகளிலும் 312 சுயேச்சைக் குழுக்களிலும் இவர்கள் களமிறங்கியுள்ளார்கள். 22 தேர்தல் மாவட்டங்களுக்கும் அரசியல் கட்சிகளினூடாக 3859 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களில் 3691 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும் பணிகள் நேற்று நண்பகலுடன் நிறை வடைந்தன. ஆட்சேபம் தெரிவிப்பதற்காக பிற்பகல் 1.30 மணிவரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் முறையாகப் பூர்த்திசெய்யப்படாததால், கட்சிகள் தாக்கல் செய்த 46 வேட்பு மனுக்களும் 35 சுயேச்சைக் குழுக்களின் வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டன. இந்தத் தடவையே கூடுதலான கட்சிகளினதும் சுயேச்சைக் குழுக்களினதும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவான விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி வன்னி மாவட்டத்திற்குத் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது. அந்தக் கட்சியில் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு வேட்பாளரின் பெயர் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் பட்டியலிலும் இடம்பெற்றிருந்ததால் அந்த இரண்டு கட்சிகளின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.
பொதுத் தேர்தலொன்றில் கூடுதலான வேட்பாளர்கள் களமிறங்குவது இதுவே முதற் தடவையாகும். அம்பாறை மாவட்டத்தில் கூடுதலான சுயேச்சைக் குழுக்கள் களமிறங்கியுள்ளன. 07 உறுப்பினர்களைத் தெரிவு செய்யவுள்ள இந்த மாவட்டத்தில் 49 சுயேச்சைக் குழுக்களில்.
கொழும்பு மாவட்டத்தில் 21 அரசியல் கட்சிகளும் 18 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. 858 வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் 15 அரசியல் கட்சிகளும் 12 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. இவற்றின் சார்பில் 324 பேர் களம் இறங்கியுள்ளனர். வன்னித் தேர்தல் மாவட்டத்தில் 16 கட்சிகளும் 14 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. 270 பேர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருக்கின்றனர். திருகோணமலை மாவட்டத்தில் 17 கட்சிகளும் 14 சுயேச்சைக்குழுக்களும் போட்டியிடுகின்றன. 217 வேட்பாளர்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
மட்டக்களப்பில் 17 கட்சிகளும் 28 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. 360 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 18 கட்சிகளும் 48 சுயேச்சைக் குழுக்களும் களம் இறங்கியுள்ள நிலையில், 660 வேட்பாளர்கள் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். புத்தளத்தில் 15 கட்சிகளும் 17 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. இவற்றின் சார்பில் 338 பேர் களம் இறங்கியுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் 16 அரசியல் கட்சிகளும் 14 சுயேச்சைக் குழுக்களும் 300 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. கண்டியில் 14 கட்சிகள் 17 சுயேச்சைக் குழுக்கள் போட்டியிடுகின்றன. இவற்றின் சார்பில் 465 வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர்.
பதுளையில் 12 கட்சிகளும் 05 சுயேச்சைக்குழுக்களும் 187 பேரை நிறுத்தியுள்ளன.
மாத்தளை மாவட்டத்தில் 16 கட்சிகளும் 11 சுயேச்சைக் குழுக்களும் 319 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. இரத்தினபுரி மாவட்டத்தில் 15 அரசியல் கட்சிகளும் 17 சுயேச்சைக் குழுக்களும் 388 வேட்பாளர்களை நிறுத்தியிருக்கின்றன.கம்பஹா மாவட்டத்தில் 14 கட்சிகளும் 15 சுயேச்சைக் குழுக்களும் 699 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். களுத்துறை மாவட்டத்தில் 14 கட்சிகளும் 22 சுயேச்சைக் குழுக்களும் 468 பேரை களமிறக்கியுள்ளன.
தாமிரா மீனாஷி
தேர்தலில் வாக்களிப்பது மட்டும் தான் ஜனநாயகம் என்று மக்களை நம்ப வைப்பதில் அரசியல்வாதிகள் தீவிர கவனம் செலுத்துவது கவலைக்குரியது.. தமது எண்ணங்களை சுதந்திரமாக வெளிப்படுத்தும் உரிமை, விரும்பிய இடத்திற்கு தடையின்றி சென்று வரக்கூடிய நடமாடும் உரிமை இவையெல்லாம் ஒரு ஜனநாயக அமைப்பில் அத்தியாவசியமான அம்சங்கள். இன்றைய சந்தர்ப்பத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நீதி விசாரணை மறுக்கப்பட்ட நிலையில் பலவருடங்களாகத் தடுத்துவைக்கப் பட்டிருக்கிறார்கள். பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டதாக வெற்றிப் பெருமிதம் கொள்ளும் அதே வேளையில் அவசரகால சட்ட விதிகளின் அனுசரணையுடனேயே ஆட்சி நடத்த முடிகிறது. அரசியல்வாதிகள் வெறும் பதவிக்கும் அதனால் கிடைக்கும் வசதிகளுக்கும் ஆலாய்ப் பறப்பதை விட மக்களுடைய அன்றாடப் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கான முனைப்புக்களில் ஈடுபடவேண்டும். மக்களுக்கு சட்டம் ஒழுங்கின் பெயரால் நடத்தப்படும் அன்றாட அடக்குமுறைகளிலிருந்து பாதுகாப்பு கிடைக்க வழி செய்ய வேண்டும்..