முழு உண்மைகளை வெளிக் கொண்டு வராத பாடங்கள்! : வடக்கான்ஆதாம்

Douglas_Devananda_at_Islandsகற்றறிந்த பாடங்கள் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு முன் உரையாற்றிய எமது முன்னாள் தோழரும் இங்குள்ள அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் உரையில் பெரும்பகுதியானவற்றுடன் ஒத்துப்போகும் அதேவேளையில் அவர் சொல்ல மறந்த கதை (சேரனின் படம் அல்ல) சிலவற்றை நாம் கூறிக் கொள்ள வேண்டியுள்ளது. கற்றுக்கொண்ட அனுபவங்கள் புதிய வரலாற்றை பெற்றுத்தரும்! : அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

முதலாவதாக அவர் சிங்கள மக்களை விழித்து இந்த உரையை ஆற்றியுள்ளார் போலுள்ளது. ஏனெனில் அப்பாவி மக்களான உங்களைக் கொன்றொழித்த புலிகளின் தலைமையை உங்கள் மனங்களில் வைத்து நீங்கள் தமிழ் மக்களைப் பார்க்காதீர்கள். தமிழ் மக்களைப் போல் உங்களையும் நேசிக்கும் எங்களைப் போன்றவர்களின் முகங்களுக்கு ஊடாக பாருங்கள் தமிழ் மக்களை பல்லின சமூக மக்கள் வாழும் இலங்கைத் தீவில் ஓர் இனம் உயர்ந்தும், இன்னொரு இனம் தாழ்ந்தும் ஏற்றத் தாழ்வுகளோடு வாழும் அரசியல் சூழ்நிலை இருக்குமாயின் அது இனங்களுக்கிடையிலான கசப்புணர்வையும் முரண்பாடுகளையும் தோற்றுவிக்கவே வழி சமைக்கும் என கூறியுள்ளார்.

கற்றறிந்த பாடங்கள் தமிழ் மக்களுக்கும் வேண்டும் என அவர் நினைக்கவில்லை அல்லது தமிழ் மக்களை விழித்து அப்பாவி மக்களான உங்களை கொன்றொழித்த சிங்கள இராணுவத்தின் ஊடாக சிங்கள மக்களைப் பார்க்காதீர்கள் என்று கூறியிருக்க வேண்டும். அவர் அதை கூற மறுக்கிறார். ஏன்? தமிழ் மக்கள் தெளிந்து விட்டார்கள் என கருதுகின்றாரா? அல்லது அவரைப் போல் எல்லா இனங்களையும் நேசிக்கும் தலைவர்கள் சிங்கள் மக்கள் மத்தியில் இல்லை என நினைக்கிறாரா?

இலங்கைத் தீவிலே வாழும் அனைத்து இனங்களும் செழித்து வாழவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும். அதற்கு எந்தவித ஊசலாட்டமும் இன்றி உண்மைகளை எடுத்து வைப்பதன் மூலமே பாடங்களை கற்க முடியும். அல்லது விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் புலித் தலைமை செய்ததை புலியின் முகவர்கள் தமிழ் மக்களுக்கு மறைத்து விட்டதைப் போன்றே முடியும் என்பது திண்ணம்!

“கடந்த ஐம்பது வருடகால இலங்கை வரலாற்றை மீட்டுப்பார்க்கும்போது ஒரு முக்கியமான உண்மை பளிச்சிட்டுத் தெரிகின்றது. அதாவது சாதாரண தமிழ் மக்களின் நியாபூர்வமான கோரிக்கைகள் சாதாரண சிங்கள மக்களிடத்தில் சரிவர எடுத்துக் கூறப்படவில்லை. அதேபோலவே சாதாரண சிங்கள மக்களின் நட்புணர்வும் இயை புணர்வும் இணைந்து செல்லும் பாங்கும் தமிழ் மக்களிடத்தே எடுத்துக் கூறப்படவேயில்லை. இந்த மௌன இடைவெளியை இல்லாமல் செய்வதன் மூலமாகவே நாம் ஒன்றுபட்ட பிரிக்கப்பட முடியாத இலங்கையை ஏற்படுத்தலாம்” என கூறுகின்றார்.

சரி! இவரது கட்சி எத்தனை கூட்டங்களை சிங்கள மக்கள் மத்தியில் நடத்தியுள்ளது. தமிழ் மக்களின் நிலமைகளை சிங்கள மக்கள் புரிந்து கொண்டார்களா? (என்ன நடக்குது இங்கே ஒன்றுமே புரியவில்லை என்ற கவிதைதான் ஞாபகம் வருகின்றது) இவர் செய்ததெல்லாம் சிவாஜிலிங்கம், சிறிகாந்தா போன்ற சிக்கலான ஆட்களுடன் அரங்கம் அமைத்ததுதான்.! புலிகளை வென்றதற்காக விழா எடுப்பவர்களுடன் இனப்பிரச்சனை பற்றிய விளக்கக் கூட்டம் நடத்துமாறு கோரினால் நன்றாக  இருந்திருக்கும்! மேலும் ஈபிடிபி கட்சியானது சிங்கள மக்கள் மத்தியிலும் சேவைகளைப் புரிந்து தேசிய கட்சியாக வளர வேண்டும். சிங்கள மக்கள் விரும்பியிருந்த போதும் டக்ளஸ் தன்னை ஒரு தமிழ் தலைவனாகவே கருதி குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுகின்றார்.

இவ் ஆணைக்குழு முன் முழுஉண்மைகளையும் பேசுவதன் மூலமே பாடங்களை கற்றறிய முடியும் என்பதே யதார்தமாகும். ஆனால் மாண்பு மிகு மந்திரியார் சிங்கள அதிகார மட்டங்களுக்கு நோகாமல் அவர்களது கடந்த கால நடவடிக்கைகளினால் தமிழ் மக்கள் அடைந்த இன்னல்களை மட்டுப்படுத்திக் கூறியும் புலித் தலமை இழைத்த குற்றங்களை உரத்துக் கூறுவதன் மூலம் (இங்கு கவனிக்கப்பட வேண்டியது அவர் புலிகளின் குற்றங்களை மிகைப்படுத்தி கூறவில்லை) யாரையோ திருப்திப்படுத்த முயற்சிக்கிறார் போலும். தொடர்ந்து வந்த அரசுகளாலும் இராணுவத்தாலும் புலிகளாலும் தமிழ் மக்கள் அடைந்த இன்னல்கள் சொல்லில் அடங்காது. இவற்றைசொல்ல மறுப்பவர்ளை தமிழ் மக்கள் ஒருபோதும் தமது தலைவர்களாக கருத மாட்டார்கள். இவரது உரையில் தமிழ்மக்களை விட சிங்கள மக்களே அதிகம் பாதிப்படைந்துள்ளார்கள் போன்ற கருத்தே தொக்கி நிற்கின்றது.

ஜனநாயக வழியில் முப்பது வருடங்கள் (1947-1977) போராடிய தமிழர்கள் ஏன் ஆயுதப் போராட்டத்திற்கு தள்ளப்பட்டார்கள் என்பதும் இந்த சந்தர்ப்பத்தை அயல்நாடுகள் எவ்வாறு பயன்படுத்திக் கொண்டன என்பதையும் தனது இருப்பு நிலை (மந்திரி பதவி) காரணமாக தெளிவாக எடுத்து வைக்க மறந்து புலிகளுக்கெதிரான பிரசங்கத்தையே (நாமும் ஏற்றுக் கொள்கிறோம்.) செய்துள்ளார். இடையிடையே அரசுகளின் தவறுகளையும் அவர்களின் மனம் கோணாமல் தெளித்துள்ளார்.

சுதந்திரமடைந்த உடனேயே இந்திய வம்சாவழி குடியுரிமை பறிப்புச் சட்டம் அதைத் தொடர்ந்து தனிச்சிங்கள சட்டம் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் என வேகமெடுத்த சிங்கள ஆட்சியாளர்களின் அநியாயங்கள் தரப்படுத்தலில் வந்து நின்ற போதே ஆயுதப் போராட்டத்திற்கான சூழ்நிலை ஏற்பட்டதென்பதை இவர் அங்கு அடித்து சொல்ல மறந்தாரா அல்லது தவிர்த்தாரா?

இணைப்பு மொழியாக இருந்த ஆங்கிலத்தை சுய பாசை திட்டத்தின் மூலம் இல்லாதொழித்து இன்று இவர் கூறும் உலகமயமாக்கலில் ஒரு பகுதியான கோல் சென்றர் தகவல் தொழில் நுட்பம் போன்ற தொழில் வாய்ப்புக்களுக்கு ஆப்பு வைத்தவர்கள் யார்? ஒரு முட்டாள் பிரபாகரனின் எதிர்காலம் பற்றிய அறிவின்மையை எடுத்துக் கூறிய மந்திரியார் தொடர்ந்து வந்த இலங்கை அரசுகளின் மக்களின்; எதிர்காலம் பற்றிய தவறான திட்டங்களினால் தென்கிழக்காசியாவிலேயே அதிக கல்லியறிவு பெற்ற ஒரு நாட்டை சுடுகாடாக்கியது பற்றி கூற மறந்துள்ளார்.

மாறி வரும் உலகப் போக்கை புரிந்து கொண்டு உலக ஒழுங்கைப் புரிந்து கொண்டு……. எனவும் அவர் கூறியுள்ளார். மிக உண்மையான விடயம். இதை புலிகள் புரிந்து கொள்ளாதது மடமை. ஆனால் இவர் செய்யும் அரசியலுக்கு இது மிகவும் தேவைப்படுகின்றது என்பதே எமது கருத்தாகும். நாளை நிலமை மாறி உலக ஒழுங்கு மாறினால் இவரது நிலமை என்ன?

“இலங்கை இந்திய ஒப்பந்தத்துக்குப் பிந்திய காலந்தொட்டு இன்றுவரை இலங்கையில் எந்தவொரு இனக்கலவரங்களும் நடந்ததாக வரலாறு இல்லை. அவ்வாறானதொரு நிகழ்வைத் தூண்டி விடுவதற்கு இலங்கையின் இன்றைய ஆட்சியாளர்கள் விருப்பப்பட்டிருக்கவும் இல்லை. இந்த நிகழ்வானது இலங்கை இந்திய ஒப்பந்தத்துக்குப் பின்னரான இலங்கை அரசின் ஆட்சியாளர்களின் குணாம்ச ரீதியான மாற்றத்தை எம் முன்பாக ஒப்புவித்து நிற்கிறது “

இந்த கருத்தானது தனது அரசியலுக்கு வலு சேர்க்க டக்ளஸ் கூறும் வாய் வார்த்தைகள் ஆகும். டக்ளஸ் கூறும் இக்காலத்தில் ஒரு இனக்கலவரம் என்பது தமிழ் ஈழத்திற்கான அல்லது புலிகளின் அரசியலுக்கான மைல்கல் என்பது முட்டாள் புலிகள் போல் அல்லாது மிகப் புத்திசாதுரியமான இலங்கை அரசிற்கு புரியாதது அல்ல. அதனால் தான் புலிகள் அப்பாவி சிங்கள மக்களை பல தடவை கொலை புரிந்து இனக்கலவரம் ஏற்பட முயற்சி செய்தார்கள் என்பது டக்ளஸிற்கும் புரியாதது அல்ல.

உண்மைகளை தெலைத்து விட்டு அல்லது தமது அரசியல் நலன் கருதி தவிர்த்து விட்டு, வசதியாக மறந்து விட்டு பாடங்களைப் படிக்க முடியாது. எனவே அழகிய இலங்கைத் தீவில் எல்லா இன மக்களும் நன்றாக வாழ பிரச்சனை எங்கே உள்ளது  என அறிய வேண்டும். லண்டனில் இலங்கை தூதரகத்தில் நடந்த சந்திப்பில் ஜனாதிபதி தான் ஒரு பௌத்தர் என கூறுகின்றார். அது அவரது உரிமை. அது அவரது அடையாளம். இதே போல் சிறுபான்மை மக்களும் சொல்லுவதற்கு வழி விட வேண்டும்.!!

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • pandithar
    pandithar

    திருத்தவே முடியாது!… நீங்களே இன்னும் இப்படி இருக்கையில் சாதாரண பொதுமக்கள் எப்படி விளங்கிக்கொள்வார்கள்?… இல்லை… நித்திரை கொள்பவனை எழுப்பலாம். கொள்வதுபோல் நடிப்பவனை எழுப்ப முடியாது.

    கட்டுரையாளரே!… தயவு செய்து இன்னும் கொஞ்சம் படித்து விட்டு அந்த உரையின் அர்த்தத்தை விளங்கி கொள்ளவும்.

    தமிழ் மக்களின் அரசியலுரிமை பிரச்சினையை தீர்ப்தற்கு சிங்கள மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும்> ஆகவே புலிககள் செய்த தவறை எண்ணி இந்த விடயத்தில் தமிழ் மக்களையும் புலிகளாக நினைத்து இதற்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்து விடாதீர்கள் என்றுதானே அவர் கேட்டிருக்கின்றார். உண்மையில் மிக அழகாகவே அதை எடுத்து விளக்கியிருக்கின்றார்.

    அடுத்து> சிங்கள மக்கள் மத்தியில் இவரது கட்சி என்ன செய்தது? இப்படி கேட்டிருந்தார். அது சரி. அவரது வரலாறு என்பது ஈ.பி.டி.பி மட்டுமல்ல.

    ஆரம்பங்களில் கொழும்பில் பெரிய தந்தையார் N.சி.நித்தியானந்தா அவர்களோடு தங்கியிருந்த வேளை தென்னிலங்கை இடது சாரிகளுடனான பரீட்சம் அவருக்கு இருந்தது. அப்போது தமிழர் புனர்வாழ்வுக்கழகம்> என்றும் ஈரோஸ் அமைப்பின் மாணவர் அமைப்பான ஈழ மாணவர் பொது மன்றத்தின் தளச்செயற்பாட்டு பொறுப்பாக இருந்த போதும் சிங்கள இளைஞர்கள் மத்தியிலும் அவர் தனது பிரச்சாரங்களை கொண்டு சென்றிருக்கின்றார். அதன் பின்னர் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பை அவரும் சேர்ந்து உருவாக்கிய பின்னர் தென்னிலங்கை இடது சாரி முற்போக்கு சக்திகளோடு உறவுகளை இறுக பிணைத்து அந்த அமைப்பு வத்திருந்தது. ஆயுதப்பயிற்சியும் சிங்கள இளைஞர்களுக்கு கொடுத்திருந்தது. அத்தோடு தென்னிலங்கை முற்போற்கு சிங்கள இளைஞர்களோடு இணைந்து அரசுக்கு எதிராக சதிப்புரட்சி மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சுமத்தி அந்த அமைப்பின் செயலாளர் நாயகம் தோழர் நாபா அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.

    இது தவிர> ஈ.பி.டி.பி சிங்கள பத்திரிகை ஒன்றையும் வெளியிட்டு வந்தது. ஆனால் அது இடையில் நின்று விட்டது என நினைக்கின்றேன்.

    ஆனாலும். சிங்கள ஊடகங்களுக்கான தொடர்பாளர் ஒருவரை உத்தியோக பூர்வமாக கொண்டிருக்கும் ஒரேயொரு தமிழ் கட்சி ஈ.பி.டி.பி யாகவே இருக்க முடியும்.

    அதற்கு நெல்சன் என்பவர் பொறுப்பாக இருந்து வருவதாக செய்திளே தெரிவிக்கின்றன. தமிழில் ஈ.பி.டி.பி குறித்த செய்திகள் வருகின்றனவோ இல்லையோ கட்டாயம் சிங்களத்தில் வந்து கொண்டிருக்கின்றது.

    ஈ.பி.டி.பி யின் தலைவரை சந்திக்க சென்றாரல் அங்கு இரண்டு ஊடக பிரிவு தனித்தனியாக இயங்கிக்கொண்டிருக்கும்.சிங்கள மீடியா பிரிவு என்றும்> தமிழ் மீடியாபிரிவு என்றும் அவர்களே பேசிக்கொள்வார்கள்.

    ஆனாலும்> இவைகள் சிங்கள மக்களை தெளிவுபடுத்து போதுமானவை அல்ல என்பது என் கருத்து.

    ஆயுதப்போரட்டம் ஏன் தொடங்கப்பட்டது என்பதற்கான தெளிவான விளக்கம் அந்த உரையில் கொடுக்கப்படிருக்கின்றது. ஆனால் கட்டுரையாளர் இல்லை என்கிறார்.

    மாறி வரும் உலகத்தின் போக்கு> உலக ஒழுங்கு குறித்து சொல்லப்பட்ட கருத்தும் அவருக்கே பாதிக்குமாம்.

    இவர் என்னத்தை சாதித்திருக்கிறார்?… சிக்கலான ஆட்களை வைத்து தமிழ் கட்சிகளின் அரங்கத்தை கூட்டியதுதான் மிச்சம்.

    இதில் இருந்தே தெரிகிறது கட்டுரையாளரின் வன்மம். வடக்கின் ஆதாம் எவ்வாறு கட்டுரைகளை வரைகின்றார் என்று ஏனைய இவரது பதிவுகளை வைத்து இவர் யார் என்று கண்டு பிடிக்கலாம்.

    இவரது மனக்காய்ச்சல் எதுவெனஅறியலாம். முன்னுக்கு போகின்றவனை இழுத்து விழுத்தி விட்டு அவன மீது ஏறி நின்று காழ்புணர்ச்சிகளை கொட்டும் வன்மங்களை முதலில் நிறுத்துங்கள். எடுத்தேன் கவுழ்த்தேன் பாய்ந்தடிப்பேன் நிமிர்ந்தடிப்பேன்> என்றில்லாமல் மிகவும் சாணக்கிய தந்திரமான உரை.

    சொல்ல மறந்த கதைகள் யாவும் ஊடக அறிக்கைக்கு அல்ல.

    இது பேச வேண்டிய இடத்தில் பேசுவதற்கு……

    Reply
  • pandithar
    pandithar

    ஈ.பி.டி.பி வெளியிட்டு வந்த சிங்கள பத்திரகையின் பெயர் தூபித….

    Reply