ஆஸ்தி ரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீக்கு இறந்தோர் எண்ணிக்கை 173 ஆக உயர்ந்துள்ளது. தீயை அணைக்க தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் உள்ள காடுகளில் கடந்த சனிக்கிழமை அன்று தீ விபத்து ஏற்பட்டது. அங்கு வீசும் அனல் காற்று, வெப்பம் காரணமாக தீ மேலும் பல இடங்களுக்கு பரவியது. சுமார் 30 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் தொலைவுக்கு தீ கொளுந்து விட்டு எரிந்தது. தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் எவ்வளவோ முயற்சி மேற்கொண்டும் உடனடியாகப் பலன் உண்டாகவில்லை.
இந்த தீ விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்தனர். இதுவரை 173 பேர் உயிரிழந்திருப்பது தெரிய வந்திருப்பதாக, காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், 750-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பலாகின. பொது மக்களின் உடமைகளுக்கும் பலத்த சேதம் உண்டானது. காட்டுத் தீயில் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
கடந்த 100 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் இந்த அளவுக்கு பெரிய தீவிபத்து ஏற்பட்டதில்லை என்று ஆஸ்திரேலிய நிர்வாகம் தெரிவித்துள்ளது. காட்டுத் தீயால் கடும் பாதிப்பை சந்தித்திருக்கும் மேரிஸ்வில்லி, கிங்ஸ்லேக் ஆகிய இரு நகரங்களுக்கும் மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இரு ஊர்களிலும்தான் அதிக அளவிலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.