வெளிநாட்டு உறவுகளில் புதிய கொள்கையை பின்பற்றப்போவதாக அமெரிக்கா அறிவிப்பு

hillary.jpgஉலக நாடுகளுடனான உறவில் புதிய கொள்கையொன்றைக் கடைப்பிடிக்க அமெரிக்காவின் புதிய நிர்வாகம் தீர்மானித்திருப்பதாக அந்நாட்டின் துணை ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அண்மைய வருடங்களாக விரிசலடைந்திருந்த ரஷ்யாவுடனான உறவை மீண்டும் புதுப்பிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ள பைடன் ஈரானுடன் பேச்சுகளை ஆரம்பிக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பல விவகாரங்களை சாதகமான அணுகுமுறையினூடாக கையாள்வதற்கு அமெரிக்கா தயாராகவுள்ள அதேவேளை நட்பு நாடுகளும் இவ்வாறான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டுமென எதிர்பார்ப்பதாக பைடன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாகிஸ்தானை தவிர்த்து ஆப்கானிஸ்தானில் எந்தவொரு தந்திரோபாய வெற்றியையும் அடைய முடியாதென எச்சரித்துள்ள பைடன் இப்பிராந்தியத்தின் நிலைமை மோசமடைந்து வருவது அமெரிக்காவுக்கு மட்டுமல்ல அனைத்து நாடுகளுக்குமே பாதுகாப்பு அச்சுறுத்தலை தோற்றுவிக்குமென தெரிவித்துள்ளார். ஜேர்மனியின் மூனிச் நகரில் நடைபெற்று வரும் பாதுகாப்பு மாநாட்டில் சர்வதேச தலைவர்கள் மற்றும் பாதுகாப்பு நிபுணர்கள் மத்தியில் உரையாற்றிய பைடனின் உரையில் ஒபாமா நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கை அணுகுமுறை, காலநிலை மாற்றம் மற்றும் உலக பொருளாதார நெருக்கடி போன்ற முக்கிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

உலக நாடுகளுடனான உறவில் புதிய அணுகுமுறையொன்றைக் கடைப்பிடிப்பதென்ற புதிய நிர்வாகத்தின் தீர்மானத்துடன் நான் ஐரோப்பாவுக்கு வந்துள்ளேன். உலக நாடுகளின் விவகாரங்களை உள்வாங்கி அதனை அவதானித்து இது தொடர்பில் ஆலோசனை நடத்துவோம். அமெரிக்காவுக்கு உலகம் தேவை. உலகத்திற்கு அமெரிக்கா தேவையென கருதுகிறேன். எமது அரசாங்கம் மிக உயர்ந்த இலக்குகளைக் கொண்டுள்ளது. எமது நாட்டுக்கு வெளியில் படைப்பலத்தை பிரயோகிக்காமல் ஜனநாயக ரீதியில் விவகாரங்களைக் கையாள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா தொடர்பில் அதனுடனான உறவை மீள சீரமைக்க ஜனாதிபதி ஒபாமா விரும்புகிறார். பல விவகாரங்கள் தொடர்பில் எம்மால் இணைந்து பணியாற்ற முடியும். ஆனால், ஒவ்வொரு விடயத்திலும் அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்து செயற்படுவது சாத்தியமற்றது. சில விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். ஆனால், பொதுவாக எமக்கிடையில் இணக்கம் ஏற்படும் விடயங்களில் நாம் தொடர்ந்து இணைந்து செயற்பட வேண்டும்.

மத்திய ஐரோப்பாவில் ஏவுகணைப் பாதுகாப்பு கவசத்தை அமைக்கும் திட்டத்தை அமெரிக்கா தொடர்ந்து முன்னெடுக்கும். இதேவேளை, ஈரானின் நடவடிக்கைகளுக்கேற்ப அந்நாட்டுடனான தொடர்புகள் பேணப்படும். நேட்டோ கூட்டமைப்பு மற்றும் ரஷ்யாவுடன் நாம் அதிகளவான ஆலோசனைகளை நடத்தும் அதேவேளை எமது நட்பு நாடுகளிடமிருந்து அமெரிக்கா உதவிகளை எதிர்பார்க்கும். உதாரணத்திற்கு குவாண்டனாமோ தடுப்பு முகாம் மூடப்படும்போது அங்கிருக்கும் கைதிகளை ஏனைய நாடுகள் ஏற்றுக்கொள்வது போன்ற விடயங்களில் நாம் ஏனைய நாடுகளுடன் தீவிர ஆலோசனைகளை நடத்துவதுடன் அவற்றிடமிருந்து உதவிகளையும் எதிர்பார்ப்போம் எனத் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *