பாகிஸ்தானில் அரசியல் நெருக்கடி அதிகரிப்பு

karachci.jpgபாகிஸ்தானில் அரசியல் மோதல்கள் உச்சகட்டத்தை அடைந்திருக்கும் நிலையில் இராணுவம் தலையிடுவதற்கான சாத்தியமும் அதிகரித்திருக்கிறது. தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கி அரசின் தடை உத்தரவை மீறி எதிரணி ஆதரவாளர்களும் வழக்கறிஞர்களும் நேற்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை ஆரம்பித்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இஸ்லாமாபாத்திற்குச் சென்று பாராளுமன்றக் கட்டிடத்தை முற்றுகையிடப் போவதாக எதிரணியினரும் சட்டத்தரணிகளும் சூளுரைத்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி பதவிநீக்கம் செய்த நீதிபதிகளை மீண்டும் பணியில் அமர்த்துவது தொடர்பாக ஜனாதிபதி சர்தாரி அளித்திருந்த உறுதிமொழியை நிறைவேற்றுமாறு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் பாகிஸ்தானின் வழக்கறிஞர்கள் சங்கமும் வலியுறுத்தி வருகின்றனர். பதவி வகிக்கமுடியாமல் தடுக்கும் தீர்ப்பொன்றைக் கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் நவாஸ் ஷெரீப்புக்கும் அவரின் சகோதரருக்கும் வழங்கியிருந்தது. அத்துடன் இத்தீர்ப்பையடுத்து பஞ்சாப் மாகாண அரசை பாகிஸ்தான் மத்திய அரசு பதவிநீக்கியிருந்தது. இது ஜனாதிபதி சர்தாரி மீது நவாஸ் ஷெரீப்பின் ஆத்திரத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை சகல நகரங்களிலுமிருந்தும் ஊர்வலமாகச் சென்று பாகிஸ்தான் பாராளுமன்றத்தை முற்றுகையிடப் போவதாக நவாஸ் ஷெரீப்பும் சட்டத்தரணிகளும் அறிவித்ததன் பிரகாரம் நேற்று நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். இதனால் பல இடங்களில் சட்டத்தரணிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டன.

இதேவேளை பாகிஸ்தானின் இராணுவத் தலையீடு தொடர்பான ஊகங்கள் அதிகரித்துவரும் நிலையில், இராணுவம் நிர்வாகத்தை கைப்பற்றும் சாத்தியம் அறவே இல்லையென நவாஸ் ஷரீப் தெரிவித்திருக்கிறார். 1999 இல் இராணுவ சதிப்புரட்சி மூலம் ஷெரீப் பதிவிநீக்கம் செய்யப்பட்டவராகும். நீதிபதிகள் மீண்டும் பணிக்கமர்த்தப்படும் வரை தமது நீண்ட யாத்திரை தொடரும் என்று ஷெரீப் அறிவித்திருக்கிறார். முன்னர் வாக்குறுதியளித்ததன் பிரகாரம் நீதிபதிகளை மீண்டும் பணிக்கு அமர்த்தியதன் பின்பே சர்தாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது இவ்வாறிருக்க ஜனாதிபதி சர்தாரி செயற்படும் விதம் குறித்து அதிருப்தியடைந்துள்ள இராணுவத் தளபதி கயானி அரசியல் குழப்பத்துக்கு விரைவில் முடிவுகட்டுமாறு கேட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *