சிவக்குமார்

சிவக்குமார்

பிரதேசசபை உறுப்பினர் சிவக்குமார் மரணம்: தற்கொலையா? கொலையா?

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் உயிரிழந்த நிலையில் சடலமாக இன்று காலை (July 11, 2021) கண்டெடுக்கப்பட்டுள்ளார். சாவகச்சேரி பிரதேச சபையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் போட்டியிட்டு உறுப்பினராக தெரிவாகியிருந்த, இராமாவில் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் கஜேன் (வயது 28) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த திங்கள் யூலை 5 வவுனியா தோணிகல் பகுதியில் உதயச்சந்திரன் சஞ்ஜீவ், வீட்டிற்கு வெளியே காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்டார். விபுலானந்தா கல்லூரியில் தரம் 10இல் கல்வி பயிலும் இம்மமாணவர் வீட்டில் தனது பெற்றோருடன் தூங்கச் சென்றவர் காலையில் வீட்டிற்கு வெளியே காயங்களுடன் மரணித்த நநிலையில் கண்டெடுக்கப்பட்டார். இச்சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு உள்ளாகவே பிரதேசசபை உறுப்பினர் சிவக்குமாரின் மரணம் கொலையா? தற்கொலையா? என்று நிலையில் வந்து நிற்கின்றது.

தமிழ் மக்கள் மத்தியில் தற்கொலைகளின் எண்ணிக்கை, வன்செயல் நடவடிக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையிலும் தமிழ் அரசியல் வாதிகள் யாரும் இதுபற்றி இதுவரை எவ்வித கவனமும் செலுத்தவில்லை. எவ்வித விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு இருக்கவும் இல்லலை. இந்நிலையில் பிரதேசசபை உறுப்பினர் ஒருவருடைய மரணமே கொலையா? தற்கொலையா? என ஊசாலாடிக்கொண்டுள்ளது.

தங்களைச் சார்ந்த ஒரு இளம் அரசியல் வாதியின் மரணமே இவ்வாறு கேள்விக்குறியாகி நிற்பதைத் தொடர்ந்தாவது இந்த அரசியல் வாதிகள் சிந்திப்பார்களா? எனக் கேள்வி எழுப்புகின்றார் சாவகச்சேரியயைச் சேர்ந்த தேநீர்க்கடை உரிமையாளரான தவநேசன். தேசம்நெற்க்கு தவநேசன் மேலும் தெரிவிக்கையில் யாழ் நகர மேயரும் அவருடைய கட்சியினரும் முதலில் இந்த வன்முறை, தற்கொலை விடயங்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அவர்களிடம் அதிகாரம் இல்லாவிட்டால் இதற்கு எதிரான போராட்டங்களை அவர்கள் முன்னெடுக்கலாம் எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில், சிவகுமார் கஜேன் (வயது 28) ருடைய மரணம் கொலையா? தற்கொலையா என்ற கோணத்தில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ். மாநகர சபை முதல்வர் மணிவண்ணனுக்கு ஆதரவாக செயற்படுவதாக தமிழ் காங்கிரஸ் கட்சியினரால் ஏற்கனவே கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் பட்டியலில் ஒருவராக இவர் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக மேயர் மணிவண்ணனின் நெருங்கிய மற்றுமொரு உறுப்பினரான பார்தீபன் வரதராஜன் உடன் தொடர்புகொள்ள முயற்சித்த போதும் உடனடியாக தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள முடியவில்லை. பார்தீபனுடைய முகநூலிலும் நல்லூர் பூங்கா பற்றிய பதிவே காணப்படுகின்றது. இறந்த சிவகுமார் பற்றிய எப்பதிவுகளும் இல்லை. மேயர் மணிவண்ணனின் முகநூலிலும் தனக்கு ஆதரவான பிரதேசசபை உறுப்பினரின் மரணம் தொடர்பான எவ்வித பதிவுகளும் காணப்படவில்லை.

அதேசமயம் தேசம்நெற் க்கு பிந்திக் கிடைத்த தகவல்களின் படி இவருடைய மரணம் தற்கொலையாக இருக்க வாய்ப்புகள் இருப்பதாக பிரதேசசபையுடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் விசாரணைகள் முடிவடையும் வரை உறுதியாக எந்த முடிவுக்கும் வர முடியாது எனத் அவர்கள் தெரிவிக்கின்றனர். தற்கொலையாக இருந்தால் அதற்கு என்ன காரணம் என்பதும் தெரியவரவில்லை. இவருக்கு திருமண நிச்சயம் நடந்திருப்பதாகவும் சில முகநூல் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகவலை எம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை.

மேயர் மணிவண்ணனுக்கு ஆதரவான பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் ஓராண்டுக்கு முன்னதாக தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரியவருகின்றது. கோப்பாய் பிரதேச சபையைச் சேர்ந்தவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. இத்தற்கொலை தொடர்பாகவும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் மரணிக்கின்றனர் என்பது தற்செயலான நிகழ்வுகளா? அல்லது வேறு காரணங்கள் உள்ளனவா? என்பது ஆராயப்பட வேண்டியதொன்று என கடந்த ஆண்டு மரணித்த கோப்பாய் பிரதேச சபை உறுப்பினரின் ஊரவரான, தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத பெண் தேசம்நெற் க்கு தெரிவித்தார்.