செய்திகள்

Thursday, September 23, 2021

செய்திகள்

செய்திகள்

இலங்கையில் கொரோனா தாண்டவம் – 11 நாட்களில் 2000 பேர் பலி !

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 11 நாட்களில் 2 ஆயிரத்து 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆகஸ்ட் 14 முதல் 24 வரையான காலப்பகுதியிலேயே குறித்த மரணங்கள் பதிவாகியுள்ளன என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் நாளாந்தம் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி 14ஆம் திகதி 161 பேரும், 15ஆம் திகதி 167 பேரும், 16ஆம் திகதி 171 பேரும், 17ஆம் திகதி 170 பேரும், 18ஆம் திகதி 186 பேரும், 19ஆம் திகதி 195 பேரும், 20ஆம் திகதி 198 பேரும், 21ஆம் திகதி 183 பேரும், 22 ஆம் திகதி 194 பேரும், 23ஆம் திகதி 190 பேரும், 24ஆம் திகதி 198 உயிரிழந்துள்ளன.

 

இதே நேரம் தற்போதைய கொரோனா பரவல் நிலவரப்படி இலங்கையில்,

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் 2 ஆயிரத்து 139 பேர் பூரண குணமடைந்து இன்று (வியாழக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 51 ஆயிரத்து 69 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் இதுவரையில் 4 இலட்சத்து 7 ஆயிரத்து 768 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேநேரம், கொரோனா தொற்றினால் இதுவரையில், 7 ஆயிரத்து 948 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“கொரோனா நிவாரண நிதிக்காக முழுச்சம்பளத்தை கொடுத்தால் என்னால் உயிர்வாழ முடியாது.” – ஆளுங்கட்சி உறுப்பினர் வேதனை !

கொரோனா நிவாரணநிதியத்தின் செயற்பாடுகளுக்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய இந்த மாத சம்பளத்தை முழுமையாக வழங்குவதாக ஒப்புக்கொண்டிருந்தனர். முக்கியமாக ஆளுங்கட்சியினர் ஏகமனதாக தங்களது சம்பளத்தை வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சிறுவர், மகளிர் விவகார இராஜாங்க அமைச்சரான பியல் நிஸாந்த கொவிட் நிதியத்துக்கு தனது சம்பளத்தை வழங்க முடியாதென தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ,

கொவிட் நிதியத்திற்கு முழுச் சம்பளத்தையும் வழங்குவதற்கு ஆளும் கட்சியின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரான டிலான் பெரேரா இந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள பொதுஜன முன்னணியின் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை நடந்த ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

“இன்று அரசியல்வாதிகள் பலரும் சம்பளத்தை கொவிட் நிதியத்திற்காக அன்பளிப்பு செய்கின்றனர். எனக்கு சம்பளத்தை முழுவதும் அளிக்க முடியாது அவ்வாறு முழு சம்பளத்தையும் அளித்தால் என்னால் உயிர்வாழ முடியாதென்பதால் அரைச்சம்பளத்தை அன்பளிப்பு செய்கின்றேன்.

எனது தந்தையார் த பினான்ஸ் நிறுவனத்தில் முதலிட்டதால் நட்டமடைந்தார். அதனால் இன்று முழுச் சம்பளத்தையும் நிதியத்திற்கு அளித்துவிட்டால் நான் பொருளாதார பக்கத்தில் சிரமத்தை எதிர்கொண்டுவிடுவேன்” என அவர் தெரிவித்தார்.

“ஆப்கானிஸ்தானில் ஒரு கோடி குழந்தைகள் ஆபத்தில்.” – யுனிசெப் கவலை !

ஆப்கானிஸ்தானில் ஒரு கோடிக்கும் அதிகமான குழந்தைகள் மனிதாபிமான உதவிகளுக்காகக் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியமான யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஆனால் இதுவரை அங்கு ஆட்சி அமைப்பதில் தீர்வு எட்டப்படவில்லை. தலைநகர் காபூலில் உள்ள ஹமீது கர்சாய் சர்வதேச விமான நிலையத்துக்கு வெளியே இன்னமும் ஆயிரக்கணக்கான மக்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் குறைந்தது ஒரு கோடி குழந்தைகளாவது மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளுக்குக் காத்திருப்பதாக யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு அங்கு லட்சக்கணக்கான குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடுகளுக்கு ஆளாகக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக உணவுத் திட்டத்தின் செயல்பாட்டு இயக்குநரான டேவிட் பெஸ்லி கூறுகையில்,

“ஆப்கானிஸ்தான் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு சதவீதம் பேர், அதாவது 1.4 கோடி பேர் உணவு பாதுகாப்பின்மையினால் பாதிக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக அங்கே வறட்சி, உள்நாட்டு கிளர்ச்சி, பொருளாதார மந்தநிலை ஆகியன நிலவி வருகின்றன. இத்துடன் அங்கு கடந்த சில நாட்களாக கொரோனா பரவலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது” என்றார்.

ஆப்கானிஸ்தானில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களில் பல்வேறு நாடுகளும் முதலீடு செய்திருந்தன. சர்வதேச அமைப்புகளும் முதலீடு செய்திருந்தன. ஆனால், இப்போது அங்கு ஆட்சி அதிகாரம் தலிபான்கள்வசம் சென்றுள்ளதால் உலகவங்கி உதவிகளை நிறுத்தியுள்ளது. 2002 தொடங்கி இதுவரை உலகவங்கி ஆப்கனுக்கு 5.3 பில்லியன் டாலர் வரை வழங்கியுள்ளது. கடந்த வாரம் சர்வதேச நிதியமும் அது அளித்துவந்த பல்வேறு உதவிகளை நிறுத்திவிட்டது. என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் 4 இலட்சத்தை கடந்த கொரோனத்தொற்று !

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்தைக் கடந்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று வரையில், நாட்டில் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 98 ஆயிரத்து 801 ஆக பதிவாகியிருந்தது.

இந்த நிலையில், கடந்த நான்கு நாட்கள் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிசோதனைகளின் முடிவுகள் தாமதமாக வெளியாகிய நிலையில், மேலும் 4 ஆயிரத்து 484 பேருக்கு தொற்று உறுதியானமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 3 ஆயிரத்து 285 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் 2 ஆயிரத்து 163 பேர் பூரண குணமடைந்து இன்று வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து, இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 48 ஆயிரத்து 930 ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம், கொரோனா தொற்றினால் இதுவரையில், 7 ஆயிரத்து 750 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்லாந்து வீரர்களின் வேகத்துக்கு முன்னால் முதல் இன்னிங்சில் பணிந்தது இந்தியா !

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.நாணயச்சுழற்சியில்  வென்ற இந்திய அணியின் தலைவர் விராட் கோலி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணி களமிறங்கியது.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 40.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 78 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதில் கேஎல் ராகுல், பும்ரா, சமி ஆகியோர் ஓட்டமெதுவுமின்றி  வெளியேறினர். அதிகபட்சமாக ரோகித் சர்மா 105 பந்துகளை சந்தித்து 19 ஓட்டங்களை எடுத்தார்.
இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன், ஓவர்டேன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் ராபின்சன், சாம் கரன், தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
தொடர்ந்து முதலாவது இனிங்சில் களமிறங்கியுள்ள இங்கிலாந்து அணி 06 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 21 ஓட்டங்களுடன் துடுப்பெடுத்தாடி வருகின்றது.

பல்கலைகழக பகிடிவதை தொடர்பில் மாணவர்கள் பொலிஸாரிடம் நேரடியாக முறைப்பாடு செய்ய சட்ட திருத்தம் !

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறுகின்ற பகிடிவதை மற்றும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யக்கூடிய வகையில் சட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதுவரை காலமும் பல்கலைக்கழக அதிகாரிகளால், பொலிஸாரிடம் முறைப்பாடு செய்து சட்டத்தை அமல்படுத்த முடியாத நிலை இருந்ததாக கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி, கல்வி நிறுவனங்களில் பகிடிவதை மற்றும் பிற வன்முறை சம்பவங்களை தடை செய்வதற்கான சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் தலைமை நிர்வாக அதிகாரி அல்லது அவரது பிரதிநிதி பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பாக பொலிசாரிடம் முறைப்பாடு செய்ய முடியுமான வகையில் சட்டங்கள் திருத்தப்படும், என்று கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

“மங்களசமரவீர ஜனாதிபதியாகியிருந்தால் தமிழர் இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் பிரகாசமடைந்திருக்கும்.” – எம்.கே.சிவாஜிலிங்கம் இரங்கல் !

“இன மத பேதங்களை கடந்து செயல்பட்டவர் மங்களசமரவீர ஜனாதிபதியாகியிருந்தால் தமிழர் இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் பிரகாசமடைந்திருக்கும்.” என  என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

Valvettithurai.org :: Tamil News, News about Valvai. (Valvettiturai,  Valvai, VVT, வல்வெட்டித்துறை, வல்வை)

அரசியல்வாதியான மங்கள சமரவீர அவர்கள் இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு அல்ல என்று உறுதியாகக் கூறியவர். பல்லின ,பல்மத நாடு என்று உரத்துக் சொன்ன குரல் மங்களவின் குரல்.

தெற்கில் தெய்வேந்திரமுனையில் பிறந்த மங்கள வடக்கில் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை முனையிலுள்ள உலக சாதனை வீரன் ஆழிக்குமரன் நினைவு நீச்சல் தடாகத்தை ஆறு கோடி ரூபா செலவில் நிர்மாணித்து திறந்து வைத்தவர்.

அமரர் மங்கள சமரவீர அவர்களினால் ஆட்சி பீடம் ஏறியவர்கள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண தவறிவிட்டனர். மங்கள சமரவீர நாட்டின் ஐனாதிபதி பிரதமர் பதவிகளில் இருந்திருந்தால் இனப்பிரச்சனைகள் தீர்க்கக் கூடிய வாய்ப்புகள் பிரகாசமாக இருந்திருக்கும்.

இனமத பேதமற்ற அரசியல் தீர்வுக்காக போராடிய அமரர் மங்கள சமரவீர அவர்களின் இறப்பிற்கு தமிழ் மக்கள் சார்பில் எமது இதய அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

பைசர் தடுப்பூசியின் இரண்டு டோஸையும் பெற்றுக்கொண்ட மங்கள சமரவீர எப்படி இறந்தார்..?

இலங்கையில் கொரோனாவின் வேகம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. முக்கியமாக உயிரிழப்புக்கள் இன்னும் அதிகமாகிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் கொரோனாத்தொற்றுக்கு உள்ளாகியிருந்த முன்னாள் அமைச்சர் மங்களசமரவீர சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் மரணமடைந்திருந்தார்.

இந்நிலையில் , பைசர் தடுப்பூசி இரண்டையும் பெற்றும் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர ஏன் மரணமடைந்தார் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

மங்கள சமரவீர, நிமோனியா காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குணமடைந்து வந்தார். வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அவரது உடல்நிலை மோசமான கட்டத்தில்தான் இருந்தது.

சாதாரண நிலைமைக்குத் திரும்பிக் கொண்டிருந்த நிலையிலேயே நேற்று திடீரென அவர் மரணமடைந்தார். கொவிட், நிமோனியா காரணமாக மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் மரணத்தைத் தழுவிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் அமைச்சர் சமரவீர ண்டகாலமாக நீரிழிவு மற்றும் சிறுநீரக நோயினால் அவதியுற்று வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்விகற்க வந்த சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிரதம பிக்கு – மட்டக்களப்பில் சம்பவம் !

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள புன்னைக்குடா விகாரையில் பிக்குவாக படிப்பதற்காக தங்கி இருந்து வந்த 11 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட விகாரையின் பிரதம பிக்கு ஒருவரை இன்று புதன்கிழமை (25) கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

பிறமாவட்டத்தைச் சேர்ந்த 11 வயதுடைய குறித்த சிறுவன் பிக்குவாக படிப்பதற்பாக விகாரையில் வந்து தங்கியிருந்து படித்து வந்துள்ள நிலையில்; நீண்டகாலமாக பிரதம பிக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்துவந்துள்ள நிலையில் சம்பவதினமான இன்று புதன்கிழமை (25) சிறுவன் பொலிசாரிடம் சென்று முறைப்பாடு செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இதனையடுத்து குறித்த பிக்குவை கைது செய்ததுடன் சிறுவனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இதில் கைது செய்த பிக்குவை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டோர் விவகாரம் – ஆலோசனை குழு நியமனம் !

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அல்லது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு பிணை அல்லது விடுதலை அளிப்பது தொடர்பாக ஜனாதிபதிக்கு பரிந்துரைகளை முன்வைக்க ஆலோசனை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த சபை நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதம நீதியரசர் அசோக்க டி சில்வா தலைமையில் மூவரடங்கிய இந்த ஆலோசனை குழு நியமிக்கப்பட்டுள்ளது.