Tuesday, January 25, 2022

‘தந்தையர் தினம்’ – புன்னியாமீன்

fathers-day.jpgஇன்று ஜுன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை. பொதுவாக ஜுன்மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையை தந்தையர் தினமாக கொண்டாடுவர். நாட்டுக்கு நாடு,  இத்தினம் வேறு வேறு நாட்களில் கொண்டாடப்படும். குறிப்பிட்ட தினத்தில் தான் கொண்டாட வேண்டும் என்று ஒரு விதிமுறை இல்லை. நவீன யுகத்தில் வேலைப்பழுகள் அதிகரித்த இக்கால கட்டத்தில் அன்னையர், தந்தையர் தினங்களை வைத்துத்தான் இன்றைய பிள்ளைகள் அம்மாவையும் அப்பாவையும் நினைவு வைத்திருக்கிறார்கள். இந்த அடிப்படையில் பிள்ளைகளுக்காகவாவது இத்தினத்தை நினைவு கூரவேண்டியுள்ளது.  பெற்றோர்களை மறக்காமல் இருக்க இப்படியான தினங்கள் கட்டாயம் கடைப் பிடிக்கப்பட வேண்டும் என்ற அளவிற்கு இந்நினைவு தினங்கள் மாறி விட்டன. எவ்வாறாயினும் ‘தந்தையர் தினம்’ என்ற அந்த நாள் உணர்வுபூர்வமான,  அர்த்தபூர்வமான ஒரு நாள் என்பதனை மறுக்க முடியாது.

தந்தையர் தினம் அவசியம் கொண்டாடப்பட வேண்டியதொன்று என்ற கருத்து சிலரிடம் காணப்படுகின்றது.ஏனெனில் சர்வதேசதினமாக நினைவு கூரப்படுகிறது என்றால் சமூகத்தில் அதற்கான அந்தஸ்து குறைந்து விட்டது  என்பதுதானே பொருள்? தந்தைக்குரிய அந்தஸ்தை இந்த சமூகம் வழங்க மறுக்கும் பட்சத்தில் அதனை நினைவுகூருவது கடமையல்லவா என்பது இன்னும் சிலரின் வாதம். ஒரு குடும்பத்தை எடுத்துக் கொண்டால் தாயுடன் ஒப்பிடுகையில் தந்தைக்கு அந்த வீட்டில் வழங்கப்படும் அந்தஸ்து மிகவும் குறைவுதான். வயோதிபர் மடங்களில் கூட பெண்களைவிட ஆண்களின் சதவீதமே அதிகமாக காணப்படுகிறது. காரணம் குடும்பங்களில் தாய்க்கு வழங்கும் அந்தஸ்து தந்தைக்கு வழங்கப்படுவதில்லை.

த‌ன்னை வ‌ள‌ர்த்த‌ த‌ந்தை,  என்ற‌ பாச‌மிகுதியால் ம‌ன‌ம் கோணாம‌ல் க‌வ‌னித்துக் கொள்கிற‌ பிள்ளைகள் இருக்கும்வ‌ரை  த‌ந்தைய‌ர்க‌ளுக்கு எத்தினமும் சுப‌தின‌ம்தான்! எல்லா அப்பாக்களுக்கும் இப்படி மகன்கள் அமைவதில்லை; பிள்ளைகளின் அன்பு கிடைக்காத அப்பாக்களுக்கு ஒரு தினம் மாத்திரம் சுபதினமாக வருவதில் என்ன இலாபம் உண்டு என்பதும் கேள்விக்குறியே.

அன்னையர் தினம் வரும்,  பின்னே….. தந்தையர் தினமும் வரும் என்பது இப்போது உலக வழக்கமாகி வருகிறது. தாயிற் சிறந்த கோவிலுமில்லை,  தந்தை சொல் மிக்க மந்திரமுமில்லை என்ற வைர வரிகளை வழங்கிய அவ்வை மூதாட்டி வாழ்ந்த காலத்தில் இத்தினங்கள் இருக்கவில்லை. அப்படியாயின் இத்தினத்தின் உருவாக்கம் பற்றி சற்றேனும் தெரிந்து கொள்ள வேண்டும். தந்தையர் தினம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது என்ற கேள்விக்கு,  பலவிதமான பதில்கள் கூறப்படுகின்றன. அமெரிக்கா நாட்டின்,  மேற்கு வேர்ஜினியாவில் 1908 ஆம் ஆண்டு தந்தையர் தினம் ஆரம்பமானது என்று ஒரு சிலரும்,  வாஷிங்டனில் உள்ள வான்கூவர் நகரத்தில் தந்தையர் தினம் முதன் முதலாக கொண்டாடப்பட்டது என்று சிலரும் சொல்வதுண்டு. சிக்காகோ நகரின் ‘லயன்ஸ் கழகத்தின்’ தலைவரான ஹாரிமீக் என்பவர் தந்தைகளைப் போற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பலதரப்பட்ட பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்தார் என்றும்,  அதன் காரணமாக அவருடைய பிறந்த தினத்தை ஒட்டி அமெரிக்க லயன்ஸ் கழகம் அவருக்கு ‘தந்தையர் தின நிறுவனர்’,  என்று பட்டமளித்ததாகவும் சில வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.

எவ்வாறாயினும்,  ‘தந்தையர் தினம்’ என்ற ஒரு தினம் ஏற்படுத்தப்படுவதற்கான அடிப்படைக் காரணமாக விளங்குவது ஓர் ஆணின் கடமையால்,  நன்றி கொண்ட ஒரு பெண்தான் என்பதனை வரலாறு பதிவு செய்து நிற்கிறது.

வில்லியம் ஜாக்சன் ஸ்மார்ட் அமெரிக்க இராணுவத்தில் பணிபுரிந்தவர்! 1862ல் நடந்த போரில் கலந்துகொண்ட பிறகு வாஷிங்டன் அருகேயுள்ள ஸ்போகனேவுக்கு குடும்பத்தோடு சென்று வசித்தார். மகள் சொனாரா டோட்டுக்கு 16 வயதாகும்போது மனைவி எல்லன் விக்டோரியா மரணமடைந்தார். தன் மனைவி இறந்ததும் 5 மகன்கள் மற்றும் மகள்களுடன் வசித்தார். அவரை மறுமணம் செய்துகொள்ள சிலர் முன்வந்தபோது மறுத்துவிட்டு பிள்ளைகளை வளர்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார். வாலிபம் வீணாகிறது என்று செல்லமாகச் சொல்லி வளைத்துப் போடப் பார்த்த பெண்களின் ஆசை வார்த்தைகளுக்கு அடிமையாகிவிடாமல் தம் இல்லாள் இல்லை என்ற குறை தெரியாமல் ,  சான்றோன் ஆக்குதல் தந்தைக்கு கடனே, என்பதாக‌ பிள்ளைகளை வளர்த்து வாலிபமாக்கினார். தம் தந்தையின் வாழ்க்கையை மிகப்பெரிய தியாக வாழ்க்கையாகக் கருதினார் – மகள் ஸொனோரா ஸ்மார்ட் டோட். அதுமட்டுமல்ல தமக்காக வாழாமல் பிள்ளைகளுக்காகவே வாழ்ந்து மறைந்த தியாக சீலரான தம் தந்தையை கெளரவிக்கவேண்டும் என்று எண்ணினார்.
அந்தக் கெளரவமும் தம் தந்தையோடு நின்றுவிடாமல் தந்தையர் ஒவ்வொருவருக்கும் அந்தக் கெளரவிப்பு கிடைக்க வேண்டும் என்றும் திருமதி.டோட் கருதினார்.

சுய நலத்தோடு கலந்த அவரின் பொதுநலம் தம் தந்தை பிறந்த ஜூன் 19ம் தேதியை தந்தையர் தினமாக அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கையை 1909ம் ஆண்டு எழுப்பினார். கிறிஸ்தவ தேவாலயத்தின் ஊடாக,  மதகுருமார்கள் ஊடாக,  திருமதி. டொட் அவர்கள் தனது பிரச்சாரத்தை,  பரப்புரையை ஆரம்பித்தார். ஏற்கனவே,  தாய்மார்கள் தினத்தை ஆதரித்து கருத்து வெளியிட்டிருந்த பத்திரிகைகள்,  திருமதி சொனாரா டொட்டின்,  தந்தையர் தினத்தை வரவேற்றுச் செய்திகளை வௌயிட ஆரம்பித்தன. ஸ்போக்கேன் நகர பிதாவும்,  கவர்னரும்,  திருமதி டொட் அவர்களின் வேண்டுகோளை ஏற்று அறிக்கைகளை விடுத்தார்கள். 1916 ஆம் ஆண்டளவில் அமெரிக்க ஜனாதிபதி வுட்ரோ வில்சன் இந்த தந்தையர் தினக் கருத்தை ஏற்றுக் கொண்ட போதும் அது,  தேசிய மயமாக்கப்படவில்லை.

1924 ஆம் ஆண்டு,  ஜனாதிபதி கல்வின் கூலிட்ஜ் தந்தையர் தினத்தை,  ஒரு தேசிய நிகழ்வாக பிரகடனம் செய்தார். 1926ல் நியூயார்க் நகரில் தேசிய தந்தையர் தினக்கமிட்டி அமைக்கப்பட்டு அதன் சாத்தியம் பற்றி ஆராய்ந்தது. அதன் பின் அந்த விசயம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. அதற்கும் 30 வருடங்கள் கழித்து 1956ல் கோரிக்கை தூசி தட்டப்பட்டுதந்தையர் தினத்தை அங்கீகரித்து அமெரிக்க காங்கிரஸ் தீர்மானம் கொண்டு வந்தது. அதன் பிறகும் அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து அறிவிக்கவில்லை. 1966 ஆம் ஆண்டு, அமெரிக்கா ஜனாதிபதியாக இருந்த லின்டன் ஜோன்சன்,  யூன் மாதத்து 3 ஆவது ஞாயிற்றுக்கிழமையை அமெரிக்காவின் தந்தையர் தினமாக பிரகடனம் செய்தார்.

அதற்குப்பின் சில வருடங்கள் கழித்து ஆட்சிப்பொறுப்பை ஏற்ற அதிபர் ரிச்சர்ட் நிக்சன் 1972ல் அதிகாரப்பூர்வமாக தேசிய அளவில் “தந்தையர் தினம்” அனுசரிக்க ஆணை பிறப்பித்தார். ஆயினும்,  உலகின் பல்வேறு பாகங்களில் வெவ்வேறு மாத தினங்களில்,  தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றதனை நாம் காணக் கூடியதாக இருக்கிறது. உதாரணமாக அவுஸ்திரேலியாவிலும்,  நியுசிலாந்திலும் செப்டெம்பர் மாதத்து முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருவதனை இங்கு சுட்டிக் காட்டலாம்.

தனது கோரிக்கைக் கனவு பலிக்காமல் போய்விட்டதே என்ற கவலையோடு இருந்த திருமதி. டோட்,  அவரின் கனவு நனவானபோது அதைப்பார்த்து சந்தோஷப்பட அவர்உயிரோடு இல்லை. ஆனால் இன்றைக்கு அமெரிக்காவில் மட்டுமல்ல பெரும்பாலான நாடுகள் “தந்தையர் தினம்” என்று உச்சரிக்கத் துவங்கியுள்ளதை அவரின் முயற்சிக்குக் கிடைத்தவெற்றி என்றே சொல்லலாம்.

தந்தையர் தினத்தில் மேலை நாடுகளில் அப்பாவுக்கு ஒரு சிவப்பு ரோஜாவைக் கொடுத்து வாழ்த்துவதும்,  பிள்ளைகள் சிவப்புரோஜாவை தங்கள்சட்டையில் அல்லது தலையில் செருகிக்கொள்வதையும் வழக்கில் கொண்டுள்ளனர்! அப்பா இயற்கை எய்திவிட்டால் தங்கள் சட்டையில் ஒரு வெள்ளை ரோஜாவை செருகிக்கொள்வது வழக்கம்! கடந்த ஆண்டு அமெரிக்காவில் அன்னையர் தினத்தன்று 150 மில்லியன் வாழ்த்தட்டைகள் விற்பனையானது; தந்தையர் தினத்தில் 95 மில்லியன் வாழ்த்தட்டைகள்! அன்னையர் தினத்தில் அன்னையர்களை வாழ்த்திய தொலைபேசி அழைப்புகள் 150 மில்லியன்! தந்தையர் தினத்தில் 140 மில்லியன்!அன்னையர் தினத்தில் அன்னையர் விரும்பும் துணிகள் பரிசுபொருட்களாகவும் தந்தையர்க்கு பரிசுப் பொருளாக “டை” யையும் அளித்திருக்கின்றனர்! அன்று விற்பனையான டைகள் எட்டு மில்லியன்! தந்தையர் தினத்தில் 23 விழுக்காடு தந்தையர்கள் உணவுவிடுதிகளுக்கு அழைத்துச் சென்று விருந்து கொடுத்து மகிழ்வித்ததாக புள்ளிவிபரங்கள் புள்ளிகூறுகின்றன!

மறுபுறமாக தந்தையர்கள் தனது குடும்பத்திற்காக ஆற்றும் பணிகளையும் சற்று சிந்தித்தல் வேண்டும்

இந்திய உபகண்ட பிராந்தியத்திலும் சரி,  இலங்கையிலும் சரி தாய்க்குத் தான் சகல கெளரவங்களும்,  அம்மாதான் தியாகி,  பாசத்தில் இலக்கணம் என்றெல்லாம் போற்றிப் புகழ்கிறார்கள்,  தெய்வத்தின் அளவுக்கு தூக்கி வைக்கிறார்கள். எனினும் குடும்பத்துக்காக மெளனமாக ஏகப்பட்ட தியாகங்களைச் செய்யும் தந்தையர் பற்றி நாம் அலட்டிக் கொள்வதேயில்லை. அம்மாவை வாங்க முடியுமா? என்ற ஒரு பாடல் இருக்கிறது. ஏனோ அப்பாவை வாங்க முடியுமா? என்று எழுதுவதில்லை.

எத்தனையோ இன்னல்கள் பட்டாலும் அதை வெளிக்காட்டாமல் துன்பத்தின் சாயல் தம் பிள்ளைகள் மீது படிந்துவிடாமல் அனைத்தையும் தம் தோளில் சுமந்தே கூன் விழுந்து போன தந்தையர்கள்! இராத்தூக்கம் பகல்தூக்கம் இன்றி வளர்த்து வாலிபமாக்க எவ்வளவு தியாகங்கள் புரிந்த,  புரியும் தந்தையர்கள்! பற்றி எழுதுவதில்லை.

அப்பா என்பவர் ஒரு குடும்பத்தின் தியாகச் சுடர். குடும்ப த்தில் அவரது பங்களிப்பு ஐம்பது சதவீதமாக இருக்கின்ற போதிலும் நமது சமூகம் தாயையே முன்நிலைப்படுத்துவதால் தந்தை வகிக்கும் அந்த மிக முக்கியமான பகுதி மதிப்பீடு செய்யப்பட வேண்டிய ஒன்றே. இந்த மதிப்பீட்டை வருடத்துக்கு ஒருமுறையேனும் செய்வதற்கும் விவாதிப்பதற்கு ஒரு தினம் அவசியம். இவ்வகையில் தந்தையர் தினம் இன்றியமையாதது

தந்தை தான் ஒரு குடும்பத்தைக் கட்டி எழுப்புகிறார். பொருளாதாரம்,  கல்வி,  கெளரவம்,  சுற்றம்,  வாழ்க்கைத்தரம் என்பனவற்றை பெற்றுத் தந்து பாதுகாப்பது தந்தையே. தனது தியாகத்தின் மூலம் குடும்பத்துக்கு பெறுமதியைத் தருகிறார். தந்தையின் இந்த நடவடிக்கைகளின் போது அவர் குடும்பத்தின் மத்தியில் சில அபிப்பிராயங்களையும் தோற்றுவித்து விடுகின்றார்.

கண்டிப்பானவர்,  வளைந்து கொடுக்காதவர்,  கர்வம் கொண்டவர் என்றெல்லாம் பெயர்களை அவர் சம்பாதித்துக்கொள்ள வேண்டியதாகிறது. இவற்றையும் கூட தியாகம் என்றுதான் கூறவேண்டும். அப்பா வின் இந்த நிலையை அம்மாதான் பிள்ளைகளுக்கு புரிய வைக்க வேண்டும். இவை புரிந்து கொள்ளப்படாத விளக்கப் படாத நிலையிலேயே அப்பாவுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே பிணக்குகள் தோன்றுகின்றன.

தியாகங்கள் பலவற்றை எதிர்பார்ப்பின்றி செய்யும் தந்தை மார் தன் வயதான காலத்தில் பிள்ளைகளின் அரவணைப்பை விரும்புவது இயற்கையே. தனது குறைந்தபட்ச தேவைக ளையாவது பிள்ளைகள் நிவர்த்தி செய்யலாமே என எண்ணுவார்கள். ஆனால் வாய் திறந்து கேட்பதில்லை. எனவே எதிர்காலத்தில் இதே நிலைக்கு ஆளாகவுள்ள பிள்ளைகள் தந்தைமாரின் தேவைகளை அறிந்து அவற்றை பூர்த்தி செய்ய வேண்டியது அவர்களது கடமை.

இதேசமயம் தந்தைமாரும் ஒரு காலக்கட்டத்தின் பின்னர் தனது ‘குழந்தை வளர்ப்பு கால’ தன்மைகளை,  விட்டுக் கொடுக்காத நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்ள வேண்டும். தான் தலைவனாகவும் நிர்வகிப்பவனாகவும் இருந்ததால் இப் போதும் அப்படித்தான் இருப்பேன் எனப் பிடிவாதம் பிடிப்பது அவருக்கு சாதகமாக அமையாது.

இது இப்படி இருக்க,  பெரும்பாலான தந்தைமார் தமது பிள்ளைகளின் தயவை அல்லது கவனிப்பை எதிர்பார்க்கின்ற பருவத்தில் அந்தப் பிள்ளைகள் திருமணம் செய்து அவர்களது குடும்பங்களை நடத்துவதில் மிகுந்த நாட்டம் கொண்ட வர்களாகி விடுகின்றார்கள். இதனாலும் தந்தைமார் கவனிப்பின்றி கஷ்டப்பட நேர்ந்துவிடுகின்றது. பல தந்தைமார் வயதான காலத்தில் தமது கவச குண்டலங்களை இழந்து பேரப்பிள்ளைகளைக் கவனிப்பதில் காலத்தை ஓட்டிக் கொண்டிருப்பதைக் காணும்போது பரிதாபமாகத் தான் இருக்கிறது. தந்தையர் தினத்தில் இவர்களைப் பற்றி நாம் அதா வது பிள்ளைகள் சிந்திக்கத்தான் வேண்டும்.

“மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல். “

என்ற வள்ளுவர் வாக்குக்கிணங்க நாம் இனியாவது செயல்பட்டு,  தன் த‌ந்தையின் முதிய காலத்தில் அவர் மனம் நோகாமல் அவரை நன்கு கவனித்துக்கொள்வோம் என்று இந்த‌ ந‌ன்னாளில் நாம் உறுதி எடுத்துக்கொள்வோமாக‌!!

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *