நாடு மீண்டும் பிளவுபட இடமளிக்க முடியாது – ஜனாதிபதி

041109ma.jpgமீண்டும் இந்த நாடு பிளவுபட இடமளிக்க முடியாது. மக்கள் பலம் மிகவும் சக்திவாய்ந்தது. நாட்டை பலப்படுத்த சிந்திப்பவர்களே எப்போதும் வெற்றிபெறுவர் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கடந்த காலங்களையும் இன்றைய நிலையையும் மக்கள் தெளிவாக உணர்ந்துள்ளனர். சுபீட்சமான நாட்டை உருவாக்க நடவடிக்கை எடுக்கும் எம்முடனே மக்கள் பலமும் உள்ளது. அதனை எவரும் அசைக்க முடியாது எனவும் ஜனாதிபதி உறுதிபடத் தெரிவித்தார்.

நாம் யுத்தம், இன்னோரன்ன சவால்களுக்கு மத்தியிலும் கிராமிய அபிவிருத்திக்காக 38 பில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளோம். இலங்கையின் அபிவிருத்தி வரலாற்றில் இது ஒரு சாதனை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

புத்தளம் நகரில் திறந்த பல்கலைக்கழகத்தின் கிளையொன்றை நேற்று உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது :-

புத்தளம் மாவட்டத்திற்கு புதிய யுகம் பிறந்துள்ளது. இம் மாவட்டத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் நடைபெறுவதுடன் இன்று உயர்கல்வி சம்பந்தமான மூன்று முக்கிய நிறுவனங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் இப்பகுதியைப் பற்றி எவரும் சிந்திக்கவில்லை. நாம் பதவியேற்ற பின் நாட்டின் சகல பகுதிகளையும் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்தோம்.

அந்த வகையில் புத்தளம் பகுதி அபிவிருத்தி பற்றியும் சிந்தித்தோம். இப்போது பல அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இன்னும் பல திட்டங்கள் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும். 30 வருட பயங்கரவாதத்தின் பின் தற்போது அபிவிருத்தி யுகம் பிறந்துள்ளது. பயங்கரவாதிகள் தமது ஈழ விவரணத்தில் சிலாபம் வரைக்குமான எல்லையைக் குறிப்பிட்டிருந்தனர். அப்படியானால் புத்தளம் உட்பட இப்பகுதிகளில் புலிகளின் வங்கி, புலிகளின் பொலிஸ், புலிகளின் பாடசாலையே இயங்கியிருக்கும். அந்நிலையை நாம் மாற்றினோம்.

இன, மத பேதமின்றி சகல மக்களும் சம உரிமை பெற்று வாழும் நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பு எமக்கு உள்ளது. அதனை நாம் மறக்கவில்லை. இப்பகுதியில் பிரதியமைச்சர் பாயிஸ் சிறந்தபல அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வருகிறார். நான் வடக்கிற்குப் போனேன். அங்குள்ள மக்கள் மத்தியில் சூழ்ந்திருந்த பயமும் அச்சமும் சந்தேகமும் தற்போது நீங்கியுள்ளன. கிளிநொச்சி மக்களும் இன்று நாட்டின் சகல பகுதிகளுக்கும் சென்று வரக்கூடிய நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் இந்நிலையை நன்குணர்ந்து தெளிவுடன் எதிர்காலத்தில் செயற்பட வேண்டும்.

இன்று வடக்கு, கிழக்கில் மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடிக்கச் செல்ல வழி பிறந்துள்ளது. நுரைச்சோலை மின் நிலையத்திட்டத்தை ஆரம்பிக்க நாம் வந்தபோது கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் இன்று நீலக் கொடிகளால் தோரணமிட்டு எம்மை வரவேற்கின்றனர். தலைவர்களின் உத்தரவுகளை கட்சியிலுள்ளோர் நிறைவேற்ற வேண்டும் என்பதற்கான அர்த்தம் அது.

நாட்டு மக்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். கடந்த காலங்களில் அபிவிருத்தி பற்றி பேசினாலே அன்றைய தலைவர்கள் யுத்தம் நிறைவுபெறட்டும் பார்க்கலாம் என்றனர். நாம் அப்படியல்ல. யுத்தத்தையும் அபிவிருத்தியையும் ஒன்றாக முன்னெடுத்தோம். நாம் ஏற்றுள்ள பொறுப்புகளுக்கு இணங்கவே நாடு அபிவிருத்தியிலும் பொருளாதாரத்திலும் முன்னேறும். இதில் அனைவரும் பங்காளிகளாகச் செயற்பட வேண்டும். இந்த அழகிய நாட்டை ஒரே சிங்கக் கொடியின் கீழ் கட்டியெழுப்ப அனைவரும் அர்ப்பணிப்புடன் உழைப்போம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

புத்தளம் நகரில் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் கிளை நிறுவனம், வட மேல் மாகாண பல்கலைக்கழக வெளியடைவு நிறுவனம், மும்மொழி விஞ்ஞான கல்லூரி ஆகியவற்றை நேற்று ஜனாதிபதி உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment