நிவாரணக் கிராமங்களில் உள்ளோர் இன்று முதல் சுதந்திர நடமாட்டம்

srilanka_displaced.jpgயுத்தத் தினால் இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள சகலரும் இன்று முதல் சுதந்திரமாக நடமாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கம் ஏற்கனவே இதற்கான அறிவித்தலை வெளியிட்டிருந்த நிலையில், இன்றிலிருந்து இவ்வனுமதி நடைமுறைக்கு வந்துள்ளது.

இவ்வாறு நிவாரணக் கிராமங்களிலிருந்து வெளியே செல்வோர் தாம் தங்கியுள்ள கிராமத்தின் பொறுப்பானவர்களுக்கு அறிவித்துவிட்டு வெளியே சென்றுவர முடியும் என வவுனியா மாவட்டச் செயலகம் தெரிவித்தது. இதன் மூலம் இடைத்தங்கல் கிராமங்களில் தங்கியிருந்தோரின் நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறுவதுடன், அவர்கள் தொழில் வாய்ப்புகளில் ஈடுபடவும் சிறந்த சந்தர்ப்பம் கிட்டியுள்ளதென வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் திருஞானசுந்தரம் தெரிவித்தார்.

நிவாரணக் கிராமங்களில் தங்கியிருந்தோருக்கு விசேட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அவ்வட்டைகளை அவர்கள் நிவாரணக் கிராமங்களின் பொறுப்பாளர்களிடம் காட்டிவிட்டுத் தாம் திரும்பி வரும் தினத்தையும் குறிப்பிட முடியும்.  அவர்கள் எந்தவிதப் பதிவையும் மேற்கொள்ளத் தேவையில்லை. அதேநேரம் இவர்களுக்கான நிவாரணக் கொடுப்பனவுகளில் எவ்வித மாற்றமும் இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டது.

வடக்கின் பல்வேறு மாவட்டங்களிலுமி ருந்து யுத்தத்தினால் இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரிக் கிராமங்களில் தங்கியிருந்தோரில் பெருமளவிலானோர் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுள் யாழ்ப்பாணத்திலும் கிழக்கின் மூன்று மாவட்டங்களிலு முள்ளவர்கள் ஏற்கனவே சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டு விட்டனர். அத்துடன் வயோதிபர்கள். நோய்வாய்ப்பட்டவர்களும் தமது உறவினர்களுடன் போய் இணைந்துகொள்ளும் வகையில் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இவ்வாறு மீள் குடியேறியவர்களைத் தவிர வவுனியா நலன்புரிக் கிராமங்களில் மேலும் 1,20,000 பேர் தங்கியுள்ளனர். இவர்களுக்கே இன்றுமுதல் சுதந்திரமாக வெளியில் சென்றுவர அனுமதி வழங்கப் பட்டுள்ளது.  இதேவேளை, மேற்படி 1,20,000 பேரையும் எதிர்வரும் 2010 ஜனவரி மாத இறுதிக்குள் அவர்களது சொந்த இடங்களில் மீள் குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

இதேவேளை, இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ள நிவாரணக் கிராமங்களில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்குச் சாவடிகளை அமைத்து, அவர்களும் வாக்களிக்க உகந்த சூழலை ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது. இது தொடர்பில் வவுனியா மாவட்ட மேலதிக அரச அதிபர் கருத்து தெரிவிக்கையில்; மேற்படி விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தை யொன்றுக்குத் தேர்தல்கள் ஆணையாளர் அழைப்பு விடுத்துள்ளதுடன், அதனையடுத்து அவரது வழிகாட்டல்களுக் கமைய இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

மன்னார், அடம்பன் கிராமத்தில் மீள்குடியேற்றப்பட்ட 325 பேருக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன. இது தொடர்பான நிகழ்வு நேற்று அடம்பன் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இவர்களுக்கான சைக்கிள்களை வழங்கினார். மன்னார் அரச அதிபர் உள்ளிட்ட பாதுகாப்புப் படை உயர் அதிகாரிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • palli
    palli

    ஓடி விளையாடு பாப்பா;
    ஒழிந்து விட கூடாது பாப்பா,
    புலிகளிடம் பேசாதே பாப்பா;
    பேசினால் துலைந்தாய் நீ பாப்பா;
    மாடாடு கூட்டம் போல் பாப்பா;
    மாலையிலே வந்து விடு பாப்பா,
    தேர்தல் மட்டும் நீ பாப்பா;
    சுகந்திரமாய் வாழ்ந்து விடு பாப்பா,
    வோட்டை போட்டு விடு பாப்பா;
    அரசுக்கே போட்டு விடு பாப்பா;
    சர்வதேசத்துக்கு பாப்பா;
    அரசாங்கம் அசத்துகுது பாப்பா;
    சொன்னதை கேட்டு விடு பாப்பா;
    முடியட்டும் தேர்தல் பாப்பா,
    முள்கம்பி வேலிதான் பாப்பா,

    பாவபட்ட பாரதியாரின் கனவு மெய்த்திடவே

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    நல்ல விடயம். இதிலாவது சிக்கல்கள் இல்லாது அந்த மக்கள் வெளியில் சென்று வர அரசு சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் அரசின் அறிவிப்பும் அதிகாரிகளின் நடவடிக்கைகளும் ஒன்றுக்கொன்று சம்மந்தமில்லாமல் தொல்லைகளாகவே அமைந்தன. இதை அரசு கவனத்தில் எடுப்பது நல்லது…….

    Reply
  • sinna
    sinna

    கம்பிக்குள் இருத்தினாலும் குற்றம்தான் பாப்பா
    திறந்து விட்டாலும் குற்றம்தானா பாப்பா
    எங்களை வைத்துத்தானா பாப்பா
    உங்களுக்கெல்லாம் பிழைப்பு பாப்பா
    உங்கள் உதவிதான் இல்லாட்டிலும் பாப்பா
    உபத்திரமாவது தராதேங்கோ பாப்பா
    எங்கள் பாட்டையும் பாப்பா
    எங்கள் வோட்டையும் பாப்பா
    நாங்களே பார்த்துக்கிறோம் பாப்பாமாரே

    Reply
  • seelan
    seelan

    அடைச்சு வைச்சிருக்கிறான் அடைச்சு வைச்சிருக்கிறான் என்று கத்தின புலியள் இனியாவது சுருட்டிவைச்சிருக்கிற பணத்தை அந்த மக்களுக்கு குடுக்க முன்வருவார்களா?
    என் ரி ஜெகன் வாயில மண் இனி வாசிக்க செய்தியும் இல்லை. தமிழ் மக்களின் மிகப் பெரிய கல்விமான் IBC சின்னத்தம்பி அண்ணயிட்டதான் கேட்கவேணும்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    இந்தச் செய்திக்கும் இன்றைய நிலைக்கும் மாறுபட்ட தகவல்களே வவுணியாவிலிருந்து கிடைக்கின்றது. மக்கள் சுதந்திரமாக நடமாடலாமென வெளியுலகிற்குத் தான் செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் அடுத்த முகாமிற்கு விறகு பொறுக்கக் கூட செல்ல முடியாத நிலையிலேயே இன்றும் அந்த முகாம் மக்கள் இருந்துள்ளனர். மகிந்த அரசு முதலில் நாடகமாடுவதை நிறுத்த வேண்டும்.

    Reply
  • பல்லி
    பல்லி

    சின்னா பாட்டு நல்லாய் இருக்கு ஆனா கடுப்பு சிறிது கூடவாய் இருக்கு;

    //:எங்கள் வோட்டையும் பாப்பா
    நாங்களே பார்த்துக்கிறோம் பாப்பாமாரே//
    உன்மையை உளறியதுக்கு நன்றி; மாகானசபை தேர்தல் போல் வோட்டுகளை நீங்கள் கவனித்தால் மகிந்தா உங்களை கவனிக்காமலா விடுவார். நேரம் இருந்தால் பார்த்திபனின் பின்னோட்டத்தையும் கவனிக்கவும்,

    Reply