கூட்டங்களுக்கு வரக்கூடாதென ஐ.ரீ.என் – ரூபவாஹினிக்கு ஜே.வி.பி. ஊடகத் தடை

சுயாதீன தொலைக்காட்சி சேவை மற்றும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் ஆகிய தொலைக்காட்சி சேவைகள் தமது பொது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பக் கூடாது என்று மக்கள் விடுதலை முன்னணி கூறியுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் அனுர குமார திஸாநாயக்க நேற்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட் டின்போது மேற்படி இரு தொலைக்காட்சி சேவைகளுக்கும் தடைவிதித்தார். அங்கு கூடியிருந்த ஊடகவியலாளர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மக்கள் விடுதலை முன்னணியினர் எப்போதும் ஊடக சுதந்திரம் பற்றி பேசுவதை சுட்டிக்காட்டிய ஊடகவியலாளர்கள் சில குறிப்பிட்ட ஊடக நிறுவனங்கள் நிகழ்ச்சிகளை அறிவிப்பதை அவர்கள் ஏன் நிறுத்த வேண்டும் என்று கேள்வி எழுப்பியதுடன் மேற்படி தடையை மீள் பரிசீலனை செய்யவேண்டுமென்றும் ஊடகவியலாளர் மாநாட்டை ஏற்பாடு செய்திருந்த மக்கள் விடுதலை கூட்டணியிடம் கேட்டுக்கொண்டனர்.

எனினும் அந்த வேண்டுகோளை நிறைவேற்றவே முடியாது என்று அநுர குமார திசாநாயக்க அடித்துக் கூறினார். மக்கள் விடுதலை முன்னணியின் நிகழ்ச்சிகளுக்கு ரூபவாஹினி மற்றும் சுயாதீன தொலைக்காட்சி சேவைகள் வரக்கூடாது என மீண்டும் கூறினார்.

அதனையடுத்து அநுரகுமார திசாநாயக்க லேக் ஹவுஸ் தலைவர் பந்துல பத்மகுமார, ரூபவாஹினி தலைவர் ஆரியரட்ன அத்துகல, சுயாதீன தொலைக்காட்ச தலைவர் அனுர சிரிவர்தன ஆகியோர் மீது கண்டனம் தெரிவித்தார்.

ரூபவாஹினி மற்றும் சுயாதீன தொலைக்காட்சி மீது மக்கள் விடுதலை முன்னணி விதித்த தடை பற்றி கருத்து வெளியிட்ட ரூபவாஹினி தலைவர் அதுகல குறிப்பிடும்போது நாட்டுக்கும் மக்களுக்கும் ஊறுவிளைவிக்கும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத மக்கள் விடுதலை முன்னணி ரூபவாஹினி மற்றும் சுயாதீன தொலைக்காட்சி ஆகிய சேவைகளை மட்டும் தடைசெய்ய தீர்மானித்துள்ளது.  இது ஊடக சுதந்திரத்தை கணக்கில் எடுக்காத ஒரு செயல் என்பது நன்றாகத் தெரிகிறது என்று குறிப்பிட்டார்.

சுயாதீன தொலைக்காட்சி சேவையின் தலைவர் அனுர சிரிவர்தன இது பற்றி கூறும்போது, ஊடகங்கள் சிலவற்றை தடை செய்யும் மக்கள் விடுதலை முன்னணியின் தீர்மானம் குறுகிய நோக்குடன் கூடிய ஒரு தீய செயல் என்று குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *