Tuesday, September 21, 2021

10 ஆயிரம் முன்னாள் புலிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பதில் முன்னுரிமை -சிறைச்சாலைகளை மறுசீரமைப்பதும் முக்கிய பணி என்கிறார் அமைச்சர் டியூ

gunasekara.jpgபுலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் பத்தாயிரம் பேருக்குப் புனர்வாழ்வு அளிப்பதும் சிறைச்சாலைகளை மறுசீரமைப்பதும் தமது முக்கிய பணியாகுமென்று புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்தார். சிறைச்சாலை செயற்பாடுகளில் அரசியல் அழுத்தங்கள், பழிவாங்கல்களுக்கு இடமளிக்கப்போவதில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

பொரளையிலுள்ள அமைச்சில் நேற்று (29) கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் அமைச்சர் குணசேகர இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார். அமைச்சர் குணசேகர நேற்றுக் காலை 10. 45 இற்கு சுபவேளையில் கடமைகளைப் பொறுப்பேற்று ஆவணங்களில் கைச்சாத்திட்டார். இந்நிகழ்வுக்குப் பிரதமர் டி. எம். ஜயரத்ன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். பிரதியமைச்சர் விஜித் விஜயமுனி சொய்ஸா மற்றும் நிதிப் பிரதியமைச்சர் சந்திரசிறி கஜதீர, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் ரணசிங்க, சிறைச்சாலைகள் ஆணையாளர் வீ. ஆர். சில்வா, பாராளுமன்றத்தின் முன்னாள் செயலாளர் நாயகம் சாம் விஜேசிங்க, கட்சி முக்கியஸ்தர்கள், அதிகாரிகள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

அமைச்சர் டியூ மேலும் கூறியதாவது, “நாட்டின் பதில் அரச தலைவராக பிரதமர் விளங்குகின்ற சமயத்தில், அவர் இந்நிகழ்வுக்குப் பிரதம அதிதியாகக் கலந்துகொள்வது பெருமையளிக்கிறது. அவருக்கும் எனக்கும் நான்கு தசாப்தகால உறவு உண்டு. அவர் கண்டியில் கல்வி கற்றபோது வகுப்புகளுக்குச் செல்வதை விடுத்து கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டங்களில் பங்கேற்றிருக்கிறார்.

1956 இல் 1970 இல், 1994 இல், 2004 இல், 2010 இல் அரசாங்கத்தை அமைப்பதற்குப் பெரும்பங்காற்றி இருக்கிறார். மிகவும் சிரேஷ்ட அரசியல் தலைவர். அவர் பிரதமராக இருப்பதைவிட பதில் அரச தலைவர் என்பது இப்போதுதான் தெரியும். இது ஒரு புதிய அமைச்சு, இதனைப் பொறுப்பேற்றபோது அதன் பொறுப்புகள் புரியவில்லை. பின்னர்தான் தெரிந்துகொண்டேன். 30 வருடகால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்குப் புனர்வாழ்வு அளிக்கவேண்டும்.

இதில் வடக்கு, கிழக்கு மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளார்கள். புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் 10 ஆயிரம் பேருக்குப் புனர் வாழ்வளித்து அவர்களை சமூகத்தில் உள்வாங்கவேண்டும். சிறைச்சாலைகளை மறுசீரமைப்பதுடன், சிறைக்குச் செல்வோரின் எண்ணிக்கையைக் குறைக்கவேண்டும்.

இதற்குப் பொலிஸ், நீதித்துறையினர் ஒத்துழைப்பு அவசியம். இன்று சிறுவர், முதியோர், பெண்கள் எனப் பல பிரிவினரும் சிறையில் உள்ளனர். இவர்களைக் குறைக்க வேண்டும். நான் நீர்கொழும்பு சிறையில் மூன்று மாதம் இருந்தேன். எமக்கு வெளியில் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. விஜேகுமாரதுங்கவும், சந்திரிகாவும் காலை ஆறு மணிக்கே வந்துவிடுவார்கள். எனக்காக சரத் முத்தெட்டுவேகம பாராளுமன்றத்தில் ஒரு மாதம் போராடினார். அதன் பின்னர் தான் வீட்டிலிருந்து எமக்கு உணவு வந்தது.

ஆகவே, சிறைச்சாலைகளில் அரசியல் அழுத்தம், பழிவாங்கல்களுக்கு இடமளிக்கமாட்டேன். சமூகத் தேவைகளின் அடிப்படையில்தான் சிறை வைக்கின்றோம். அவர்களை சிறந்த பிரஜைகளாக்கி மீண்டும் வீடுகளுக்கு அனுப்பவேண்டும். குற்றச் செயல்கள் உருவாக வறுமையும் காரணம். சிறைச்சாலை உத்தியோகத்தர்களை சமூகம் ஏற்றுக்கொள்ளும் நிலைக்குக் கொண்டு வருவேன். அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி பயிற்சியளிக்க வேண்டும். அப்போதுதான் பாதாள உலகத்திற்கும் சிறைக்குமான உறவைத் தடுக்க முடியும். இதுவிடயத்தை உளவியல் நோக்கில் சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்றார் அமைச்சர் டியூ.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *