ஊடகவியலாளர் அ.மயூரனின் “இராமாயணத்தின் வரலாற்று நம்பகத்தன்மை” நூல் வெளியீட்டு விழா

Mayooran_Bookகடந்த 05.06.2010. சனிக்கிழமை லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலய மண்டபத்தில் இராமாயணத்தின் வரலாற்று நம்பகத்தன்மை என்ற நூலின் வெளியீட்டு விழா, லண்டன் சுடரொளி வெளியீட்டகத்தினரின் அனுசரணையுடன் நடைபெற்றது. இதில் ஊடகவியலாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள் என நூற்றிஐம்பதிற்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர். சுடரொளி வெளியீட்டகத்தின் செயலாளர் ஐ.தி.சம்பந்தன் தனது துணைவியாரை இழந்ததனால் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.

கடந்த சனிக்கிழமை லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலய மண்டபத்தில் மாலை 3மணியளவில் நூல்தேட்டம் வாசகர் வட்டத்தினரின் ஏற்பாட்டில் ஈழத்துப் பதிப்பகங்களின் புதிய நூல்களின் கண்காட்சி நிகழ்வு இடம்பெற்றது. சுமார் 135 தலைப்புகளில் இந்நூல்கள் இடம்பெற்றிருந்தன. கண்காட்சியுடன் மலிவு விலையில் நூல்விற்பனையும் இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து மாலை 5மணியளவில் நூல் வெளியீட்டுவிழா நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இந்த நூல் வெளியீட்டுவிழாவிற்கு லண்டன் புவுஏ தொலைக்காட்சியின் அறிவிப்பாளர் தினேஷ்குமார் அவர்கள் தலைமைதாங்கினார். அதனைத் தொடர்ந்து ஆரம்ப நிகழ்வுகளான மங்கள விளக்கேற்றல், அகவணக்க நிகழ்வு, தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் என்பன நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர் திபாகரன் அவர்களின் வரவேற்புரையும் தினேஷ் அவர்களின் தலைமையுரையும், சிவஸ்ரீ கனக பாலகுமாரக்குருக்களின் ஆசியுரையும் இடம்பெற்றன. அதன் பின்னர் நாட்டிய விஷாரத் ஸ்ரீமதி ஜெயந்தி யோகராஜாவின் மாணவியான நாட்டியக் கலாயோகி செல்வி ஷஸ்ரியா யோகராஜா அவர்களின் தனிநடன நிகழ்வு இடம்பெற்றதனைத் தொடர்ந்து வாழ்த்துரைகள் இடம்பெற்றன. வாழ்த்துரைகளை திரு. ஸ்ரீரங்கன், திரு. யோகநாதன், திரு. ஜோய் பூரணச்சந்திரன், திரு. பரந்தாமன் ஆகியோர் நிகழ்த்தினர்.

இதன்பின்னர் கவிஞர் நிலா அவர்களின் நூலின் மீதான் பார்வை என்ற கவிதையும், சற்குணராஜா கனகசபையின் பாடல் நிகழ்வும், ஸ்ரீமதி ஜெயந்தி யோகராஜாவின் மாணவிகளின் குழுநடனமும் இடம்பெற்றது. இதனைத்தொடர்ந்து நூல் வெளியீட்டுவிழா இடம்பெற்றது. இந்த நூல் வெளியீட்டு விழாவினை நூலகவியலாளர் என். செல்வராஜா அவர்கள் சிறப்புரையாற்றி வெளியீட்டுவைக்க, நூலின் முதற்பிரதியை இந்த நூலுக்கு அணிந்துரை எழுதிய பிரபல வரலாற்றாய்வாளர் சிவ தியாகராஜா அவர்கள் பெற்றுக்கொண்டார்.

இதன் பின்னர் நூல் விமர்சன நிகழ்வு இடம்பெற்றது. இந்த நூல் விமர்சன நிகழ்வினை மாதவி சிவலீலன், மூத்த ஊடகவியலாளர் இளையதம்பி தயானந்தா, வேலன் இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த திரு. கருணானந்தராஜா ஆகியோரும் நிகழ்த்தினர். உன்மையில் இந்த நூல் விமர்சனம் ஒரு காத்திடமான நிகழ்வாகவே காணப்பட்டது. ஒரு காரசாரமான, சுவாரஸ்யம் நிறைந்த நிகழ்வாக இவை இடம்பெற்றதனைக் குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்விற்கு தனது உடல்நிலை காரணமாக வரமுடியாமல் போனாலும் தனது எழுத்துக்கள் மூலம் விமர்சன உரையினை சமூகவியல் ஆய்வாளர் சி.யோ பற்றிமாகன் அவர்கள் சமர்ப்பித்திருந்தார். அதேபோல்த்தான் சுடரொளி வெளியீட்டகத்தின் நிறுவனர் ஐ.தி. சம்பந்தன் அவர்களும் தனது உரையினை எழுத்துக்கள் மூலம் சமர்ப்பித்திருந்தார். இந்த எழுத்துமூலமான உரையினை ஸ்ரீரங்கன் அவர்கள் வாசித்தார்.

Mayooran_BookLaunchஅதன்பின்னர் திருமதி சுகதினி பாணுகோபன் அவர்களின் கவிதை நிகழ்வென்றும் திருமதி ஜெயந்தி யோகராஜாவின் மாணவியி;ன் நடனநிகழ்வும் இடம்பெற்றன. இந்நிகழ்வின் இறுதியாக இந்நூலின் ஆசிரியர் ஊடகவியலாளர் அ.மயூரன் அவர்களின் ஏற்புரையினை நிகழ்த்தினார். இவ்ஏற்புரை விமர்சனஉரைகளில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் விடையளிப்பனவாக அமைந்திருந்தன. கிட்டத்தட்ட மாலை 9.15 மணியளவில் இந்நூல் வெளியீட்டுவிழா இனிதே நிறைவுபெற்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *