உலக மனிதநேய தினம் World Humanitarian Day : புன்னியாமீன்

whd_posters.jpgஉலக மனிதநேய தினம் World Humanitarian Day (WHD). ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 19ம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

உலகளாவிய ரீதியில் யுத்தம், இயற்கை அனர்த்தங்கள், நோய், போஷாக்கின்மை போன்றவற்றால் பாதிக்கப்பட்ட பல இலட்சம் மக்களை நினைவுகூரும் வகையிலும், துன்பத்திலிருந்து விடுவிக்கப் படுவோருக்காகப் பணியாற்றுவோர் மற்றும் இப் பணிகளின் போது கொல்லப்பட்டோர், காயமடைந்தோர் ஆகியோரையும் நினைகூரும் வகையிலும் இத்தினத்தைஅனுஷ்டிக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

2008 டிசம்பர் 11 ம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் A/RES/63/139 இலக்கத் தீர்மானப்படி இத்தினம் ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டது. இதற்கமைய முதலாவது உலக மனித நேய தினம் World Humanitarian Day ஆகஸ்ட் 19 2009 இல் கொண்டாடப்பட்டது.
இத்தினத்தை நாடுகளின் அரசாங்கங்களும், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஸ்தாபனமும், அரச சார்பற்ற நிறுவனங்களும், மனித நேயம் கொண்டவர்களும் இணைந்து உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கையைப் பொறுத்தவரை மோதல் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக மேற்கொண்டுள்ள பணிகளில் எட்டிய வெற்றிகள் மற்றும் சவால்களை வெளிப்படுத்தும் தருணமாக இத்தினம் விளங்குவதாக ஐ.நா. தகவல் நிலையம் 2010 இல் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

உலக வரலாற்றில் மனிதகுலம் பல தடைகளைத் தாண்டி முன்னேறியுள்ளது. ஆரம்பத்தில் கடல் கொந்தளிப்பு, நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கையின் சீற்றங்களிலிருந்து தம்மைக் காத்துக்கொண்டு மனிதன் வளர்ந்தான். அடுத்தபடியாக, காட்டுவாழ்க்கையில் புலி, கரடி, சிங்கம், பாம்பு போன்ற கொடிய மிருகங்களின் தாக்குதல்களைச் சமாளித்து வாழக் கற்றுக் கொண்டான். மனிதன் குடும்பமாக வாழத்தலைப்பட்டதும் சமூக வாழ்வில் புதுவித ஆபத்து மனிதனுக்கு வந்தது. மனிதர்களிலேயே பலர் மிருகங்களாக மாறி, மற்றவர்களை இனத்தின் பெயரால், நிறத்தின் தன்மையால், தேசத்தின் பெயரால், மதத்தின் பெயரால் தாக்கத் தலைப்பட்டனர். இவ்வாறு மனிதர்களால் மனிதர்களுக்குத் தரப்படும் கொடுமைதான் இன்றைய காலம் வரை நீடித்து வருகிறது.

ஆயினும் ஒவ்வொரு காலகட்டத்திலும், அன்போடு, அருளோடு, தன்னலமற்ற பொதுநலத்துடன், மனித நேயத்துடன் மற்ற உயிர்களையும் காத்து நிற்கும் உத்தமர்கள் ஒரு சிலர் இருந்த காரணத்தால்தான் மனித குலம் இன்னமும் தழைத்து நிற்கிறது.

“உண்டால் அம்ம இவ்வுலகம்” என்ற புறநானூற்றுப் பாடலில் கூறியபடி, இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்தும், தமக்கென வாழாப் பிறர்க்குரிய சான்றோர்களில் சிலர் மனித நேயத்துடன் உலகில் வாழ்கின்ற காரணத்தால்தான், உலகம் என்பது இருக்கிறது. இன – மத – தேச வேறுபாடுகளைக் கடந்து, மனிதனை மனிதனாக மதிக்கும் மனித நேயம் மனித குலத்துக்கு நம்பிக்கையைத் தருகிறது.

“அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய், தம்நோய்போல் போற்றாக் கடை” என்பது வள்ளுவம். கல்வியறிவு, செல்வச் செழிப்பு, பட்டம், பதவி ஆகியவை பெருமளவில் ஒருவனுக்குக் கிடைத்திருந்தாலும், அவற்றுடன் மனித நேயம் என்பது அவனிடம் இல்லை என்றால், சேர்ந்துள்ள மற்ற வசதிகளால் அவனுக்கோ அவன் சார்ந்த சமுதாயத்துக்கோ எந்தப் பயனும் இல்லாமற் போய்விடும்!
மனிதரின் தன்மையின் உயர் போக்கினை அடிப்படையாகக் கொண்ட உலக நோக்கு மனிதநேயம் ஆகும். சிறப்பாக மீவியற்கை அம்சங்களில் கண்மூடித்தனமான நம்பிக்கை வைக்காமல் மனிதரின் பகுத்தறிவை, அறத்தை, ஆற்றலை மனிதநேயம் முன்னிறுத்துகின்றது. அனைத்து மனிதர்களையும் அது மதிப்போடு நோக்குகின்றது. தமிழில் மனிதநேயத்தை மனிதபிமானம், மனிதத்துவம் என்றும் குறிப்பிடுவர்.

மனிதநேயம் என்பது மனித வாழ்க்கையில் மிக உத்தமமான ஓர் உணர்வாகும். ஆனால் இன்று மனிதாபிமானம் மனிதனிடத்தே செத்துக் கொண்டு வருவதாக பொதுவாகக் கூறப்படுகின்றது. உலகத்தில் வாழக்கூடிய அனைவரும் ஒரே நிலையில் வாழ்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ள முடியும். வரலாற்றுக் காலம் முதல் சமூக ஏற்றத்தாழ்வுகள் ஒரு பொதுவான விடயமே. இன்றைய ‘உலகமயமாக்கல் யுகம்’ இந்த ஏற்றத்தாழ்வுகள் பெரிதும் விரிவடைந்துவிட்ட நிலையில் மனிதன் பணத்தையே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் காரணத்தினால் மனிதநேயம் என்பது வெகுவாக குறைந்த வண்ணமே உள்ளது.

இன்று உலகளாவிய ரீதியில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் நாடுகளின் எண்ணிக்கை அதிகம். பொதுவாக இந்நாடுகளில் போசாக்கின்மை, இதன் காரணமாக ஏற்படும் பாதிப்பான விளைவுகள் நாளுக்கு நாள் அதிகரித்தே வண்ணமே உள்ளது. ஒரு நேர உணவுக்குக் கூட சிரமப்படும் மக்கள் வாழும் நிலையில் அபிவிருத்தியடைந்த நாடுகள் மனிதாபிமானத்தைப் பற்றியும் மனிதநேயத்தைப் பற்றியும் கதைத்துக் கொண்டு தத்தமது நாடுகளின் அபிவிருத்தியையும், பாதுகாப்பினையும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக கோடான கோடி டொலர்களை மூலதனமாக்குவதை நோக்குமிடத்து மனிதநேயம் என்பதற்கு புதிய வரைவிலக்கணத்தை தேடவேண்டியுள்ளது.

உலகளாவிய ரீதியில் நோக்குமிடத்து போசாக்கின்மை, இயற்கை அனர்த்தங்கள், யுத்த அனர்த்தங்கள், பயங்கர நோய்கள், வறுமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களின் நிலையை ஆழமாக சிந்திக்க வேண்டியதாக உள்ளது. மனிதன் என்று வரும்போது அனைவரும் எலும்புகளாலும் தசைகளாலும் படைக்கப்பட்டவர்கள். அனைத்து மனிதர்களின் உணர்வுகளும் ஒன்றே. ஒரு மனிதன் இயற்கையாகவோ அல்லது வேறு காரணங்களினாலோ பாதிக்கப்படும்போது அந்த மனிதனின் உள நிலைகளை சிந்திக்க வேண்டியதும், அம்மனிதர்களுக்கு உதவ வேண்டியதும் பாதிப்புக்குட்படாத மனிதர்களின் மனிதாபிமானத்தின் உயர் பண்பாகக் காணப்பட்டாலும்கூட, இதனை எத்தனை பேர் நிறைவேற்றுகின்றார்கள் என்பது கேள்விக்குறியே!
முதலாளித்துவ சமூக அமைப்புக்கள் தலைவிரித்து தாண்டவமாடிக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட ஒருவனுக்கு செய்யும் உதவிகள் கூட பேருக்காகவும், புகழுக்காகவும், விளம்பரத்துக்காகவும் அமைந்திருப்பது வேதனைக்குரிய ஒரு விடயமே. நவீன தொழில்நுட்ப விஞ்ஞான யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் எல்லாவற்றையும் சிந்திக்கும்போது மனிதாபிமானத்தின் அடிப்படையை உணரத் தவறுகிறோம். மனிதாபிமான சிந்தனைகள் உயரிய முறையில் முன்னெடுக்கப்படுமிடத்து இன்றைய உலகில் எத்தனையோ பிரச்சினைகளுக்கு எப்போதோ முடிவெடுத்திருக்கலாம்.

ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச மனிதாபிமான தினத்தை பிரகடனம் செய்கையில் யுத்தம், இயற்கை அனர்த்தங்கள், நோய், போஷாக்கின்மை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதை கவனத்தில் எடுக்கும் தினமாகவும் இத்தகையோருக்கு உதவிகள் வழங்குவோரை கௌரவிக்கும் தினமாகவும் கொள்ள வேண்டும் என எதிர்பார்த்தது. இத்தகைய நிலைப்பாடுகளுக்கு ஒரு தினம் மாத்திரம் போதாது. பாதிக்கப்பட்டோரின் உணர்வுகளை புரிந்துகொள்ள வேண்டியது மனிதாபிமானமிக்க ஒவ்வொருவரினதும் கடமையாகும். இத்தகைய உணர்வூட்டல்கள் சமய ரீதியாக, கல்வியியல் ரீதியாக ஊட்டப்பட வேண்டியது அத்தியாவசியமான ஒன்றே.

மனித உணர்வுகளை ஓரிரு தினங்களுக்குள் மாற்றிவிட முடியாது. ஒரு மனிதனுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நிலை இயல்பாக உருவாக்கம் பெறுமிடத்து இதனால் ஏற்படக்கூடிய பலாபலன் நிலையானது. நிச்சயமாக புகழை எதிர்நோக்காமல் இலாப நோக்கங்களைக் கருத்திற் கொள்ளாமல் இவற்றையே வியாபாரமாக்காமல் உண்மையான நோக்குடன் மனிதநேயமிக்கவர்களை கௌரவிக்க வேண்டியது கடமையே. அதேநேரம், உண்மையான நோக்கமிக்கவர்கள் இத்தகைய கௌரவங்களை எதிர்பார்க்கப் போவதுமில்லை.

இலங்கையில் சர்வதேச மனிதநேய தினம்

இலங்கையில் சர்வதேச மனிதநேய தினம் நாடளாவிய ரீதியில் ஆகஸ்ட் 19ம் திகதி அனுஸ்டிக்கப்பட்டது. இதன் பிரதான நிகழ்வு கொழும்பிலுள்ள ஐ.நா.அலுவலகத்தில் நடைபெற்றபோது நிகழ்வுக்குத் தலைமை தாங்கி உரைநிகழ்த்திய ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ‘நீல் பூனே’ பின்வருமாறு தெரிவித்தார்.

‘……உலக மனிதநேய தினத்தை நாம் ஏன் அனுஷ்டிக்கின்றோம் என்பதற்கு முதலாவது காரணமாக 7 வருடங்களுக்கு முன்னர் ஈராக் பாக்தாத்தில் ஐ.நா.தலைமையகத்தின் மீது நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் 21 மனிதாபிமான பணியாளர்கள் பலியாகியிருந்த சம்பவத்தைக் கூறவேண்டும்….

….. இச்சம்பவத்தில் உலக நாடுகளைச் சேர்ந்தவர்களும் ஈராக்கியர்களும் பலியாகி இருந்தனர். அத்துடன் ஐ.நா.செயலாளர் நாயகத்தின் உதவிச் செயலர்களில் ஒருவரும் பலியானார். அத்துடன் பாக்தாத் சம்பவம் மட்டுமன்றி மேலும் பல காரணங்களும் உலக மனிதநேய தினம் அனுஷ்டிக்கப்படுவதற்கு ஏதுவாக அமைந்தது….

…. மோதல் வலயங்களிலிருந்து வெளியேறும் மக்களைப் பாதுகாப்பு வழங்கும் இலங்கை அரசின் முயற்சிக்கு நாமும் ஆதரவினை வழங்கியிருந்தோம். இம்மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் அரசுடன் எமக்குப் பரந்தளவிலான பங்கு இருந்தது. அக்காலப்பகுதியில் இலங்கையர்கள் (அரச தரப்பு, தனியார் தரப்பு), அரச சார்பற்ற நிறுவனங்கள், பாதுகாப்புப் படையினர், ஐ.நா.உதவி அமைப்புகளுடன் பணியாற்றும் உலகளாவிய நாடுகளைச் சேர்ந்தவர்கள், மக்களின் உயிரைப் பாதுகாக்க சிக்கலானதும் கடினமானதும் உடனடியான பணிகளை மேற்கொண்டிருந்தனர்….

….அத்துடன், மக்கள் தமது இயல்பு வாழ்வைத் தொடர்வதற்குத் தேவையான பலத்தினைப் பெற்றுக் கொள்ளவும் இவர்கள் ஆதரவாகச் செயற்பட்டுள்ளனர். இவற்றிற்கான நிதி அரசினாலும், உள்ளூர் மக்களாலும் வெளிநாடுகள் மற்றும் வெளிநாட்டு மக்களாலும் வழங்கப்பட்டுள்ளது….

….மக்கள் விரக்தி அடைந்திருந்த காலத்தில் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பல சவால்களும் பல சிக்கலான சூழ்நிலைகளும் இருந்தன. இறுதியில் கடின உழைப்பு, சிறந்த ஒத்துழைப்பு, மனிதாபிமானக் கொள்கைகளைப் பிரயோகித்தல், பாதிக்கப்பட்ட மக்களின் முயற்சி ஆகியவற்றின் ஊடாக சிறந்த பெறுபேறுகள் கிடைக்கப் பெற்றன. தமது வாழ்வை மீள ஆரம்பிக்கும் தகுதியை மக்கள் பெற்றுக் கொண்டனர். பாதிக்கப்பட்ட மக்களும் நாட்டிலுள்ள ஏனையவர்களும் சமாதானத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற வாய்ப்பை பயன்படுத்தும் சந்தர்ப்பத்தைப் பெற்றுள்ளனர்….

…..அனைத்து இலங்கையர்களுக்கும் தேவையான பாதுகாப்பான சுதந்திரமான வாழ்வுக்குரிய நிலையான அத்திவாரத்தை இடவும் மக்கள் மீட்சிபெற்று வாழ்வைக் கட்டியெழுப்ப ஐ.நா.தொடர்ந்தும் ஆதரவு வழங்கும்….

….இவ்வருட முதல் 6 மாதத்தில் 5 இலட்சம் மக்களுக்குத் தேவையான உணவு, வடக்கில் 130000 ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கான உணவு, மீளக்குடியேறிய 40 ஆயிரம் குடும்பங்களுக்குத் தலா 25 ஆயிரம் நிதி உதவி, 92,800 குடும்பங்களுக்கு உணவற்ற பொதிகள் ஐ.நா.வால் வழங்கப்பட்டது. அத்துடன் 2009 இலும், 2010 இலும் 3 இலட்சம் இடம்பெயர்ந்த மக்களுக்கு சுத்தமான குடிநீர், சுகாதாரச் சேவை வழங்கப்பட்டு நோய்களிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளனர்…

…இவ்வருடம் ஜனவரி முதல் மே வரை அரசும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இணைந்து 123 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் கண்ணிவெடிகளை அகற்றியுள்ளது….

….மக்கள் மீளக்குடியேறிய பகுதிகளில் 2915 கிணறுகள் சுத்திகரிக்கப்பட்டதுடன், 515 கிணறுகள் தரமுயர்த்தப்பட்டன. 275 வேலை நாட்களுக்கான பணப்பெறுமதியுடைய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், 19,000 குடும்பங்களுக்கு விவசாய, மீன்பிடி, பண்ணை வளர்ப்புக்கு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது….

….75 ஆயிரம் ஏக்கர் வயலும் 17 ஆயிரம் ஏக்கர் நிலமும் மீண்டும் பயிர்ச்செய்கைக்கு உகந்ததாக சீரமைக்கப்பட்டுள்ளதுடன், மெனிக்பாம் உள்ளிட்ட முகாம்களில் தொற்றுநோய்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த மக்களில் 5 வயதுக்கு குறைவான சிறுவர்களின் போஷாக்கின்மை வீதம் 32 ஆக இருந்தது. தற்பொழுது 2 வீதமாக குறைக்கப்பட்டு சிறுவர்கள் போஷாக்குடன் உள்ளனர்…

….புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகளில் 57,673 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அத்துடன் 3,214 வீடுகள் இடம்பெயர்ந்த மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்டும் புனர் நிர்மாணம் செய்யப்பட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. இச்செயற்பாடுகள் ஐ.நா.உதவி அமைப்புகளினால் மேற்கொள்ளப்பட்டவை ஆகும். இருந்தாலும் இன்னும் பலதேவைகள் இடம்பெயர்ந்த மக்களுக்காக நிறைவேற்றப்படவேண்டியுள்ளது. இடம்பெயர்ந்த மக்கள் தற்பொழுதும் பாதிக்கப்பட்டவர்களாகவே உள்ளனர். இம்மக்களுக்கு அதாவது அண்மையில் மீளக்குடியமர்ந்த மக்களுக்குரிய அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படவேண்டும். மெனிக்பாம் மற்றும் ஏனைய முகாம்களில் இடம்பெயர்ந்த மக்கள் தொடர்ந்தும் தங்கியுள்ளனர்…

…அத்துடன் இம்மக்கள் அபிவிருத்தி என்பதையே எதிர்கொள்ளவேண்டியுள்ளது. அத்துடன் ஸ்திரமான சமாதானத்தையும் ஸ்திரமான அபிவிருத்தியினையும் ஏற்படுத்த வேண்டிய தருணம் இது..”வெனத் தெரிவித்தார்.

நிகழ்வின் ஓர் அங்கமாக மன்னாரிலும் இத்தினம் மிகவும் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஸ்தாபனமும், அரச சார்பற்ற நிறுவனங்களும் இணைந்து மன்னார் சிறுவர் பூங்கா வளாகத்தினுள் மேற்படி நிகழ்வினை நடத்தின. இதன் போது சுமார் 30 ற்கும் மேற்பட்ட அரச சார்பற்ற அமைப்புகள் கலந்துகொண்டதோடு நூற்றுக்கணக்கான மனிதாபிமான பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது இயற்கை அனர்த்தம் மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களையும் உயிர் இழந்தவர்களையும் நினைவு கூர்ந்தனர்.

இதனைத் தொடர்ந்து அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பினால் மன்னார், அடம்பன், மடு ஆகிய வைத்தியசாலைகளுக்கு பெறுமதி வாய்ந்த குடி நீரை சுத்தப்படுத்தும் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

அதேநேரம் ஏ.சீ.எப். தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த 17 ஊழியர் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு இதுவரையில் தண்டனை விதிக்கப்படவில்லை என பிரான்ஸ் அதிருப்தியை வெளியிட்டிருந்தது. 2006ம் ஆண்டு மூதூர் பிரதேசத்தில் தன்னார்வ தொண்டர்கள் 17பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

படுகொலையாளிகள் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சர் ‘பெர்னாட் குச்னர்’ தெரிவித்துள்ளார். இந்தப் படுகொலைச் சம்பவம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளும், அரசாங்கமும் ஒருவரை மாறி ஒருவர் குற்றம் சுமத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.

மனிதாபிமான தொண்டர்களின் பாதுகாப்பு மிகவும் முதன்மையானதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மனிதாபிமான தொண்டர்களின் பாதுகாப்பு குறித்து எதிர்வரும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் சபைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட உள்ளதாகவும் பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனின் மனிதநேயம் பற்றிய ஓர் தகவல்

இந்தியாவில் சிதம்பரத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க வாழ் அறிவியல் மேதை வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் 2009 ஆண்டு இரசாயண வியலுக்கான நோபல் பரிசு பெறுவோரில் ஒருவராக அறிவிக்கப்பட்டவுடன் உலகச் செய்தி ஊடகங்களில் அவரைப் பற்றிய செய்திகள் உலாவரத் தொடங்கின.அவர் பற்றி ‘தி ஹிந்து’ பத்திரிகை அக்டோபர் 08.2009இல் வெளியிட்ட செய்தியொன்றை இவ்விடத்தில் குறிப்பது பயனுள்ளதாக அமையும் எனக் கருதுகின்றேன்.
ஓர் விஞ்ஞான மேதையாக அகில அறிமுகம் பெற்ற வெங்கட்ராமன் ராம கிருஷ்ணனின் மனிதநேய மனத்தை அவரது சகாவும் ஓய்வுபெற்ற அணுக்கரு இயற்பியல் துறை பேராசிரியருமான ஜே.எஸ்.பண்டுக்வாலா வெளிப்படுத்தியுள்ளார். வெங்கி என்று செல்லமாக அழைக்கப்படும் டாக்டர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், சிறு வயது முதலே குஜராத் மாநிலம் வடோதராவில் வளர்ந்தவர். இவரது தந்தையார் வெங்கட்ராமன் மஹாராஜா சாயஜிரங் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், தாயார் ராஜலஷ்மியும் குழந்தை உணவூட்டம் மற்றும் உயிர் வேதியல் துறையில் பேராசிரியர்.

பெற்றோர் இருவரும் பேராசிரியர்கள். எனவே இவரையும், இவரது சகோதரியையும் வளர்த்த வேலைக்கார அம்மையார் மீது இவருக்கு பாசம் அதிகம். அவருடைய குடும்பத்தை இவர் இன்றும் பரிவோடு கவனித்து வருகிறார்.

2002ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் சங்பரிவார மதவெறியர்கள் மூட்டிய கலவர நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்தது. வடோதராவில் இருந்த பெஸ்ட் பேக்கரியில் 12 முஸ்லிம்கள் உயிரோடு எரிக்கப்பட்டார்கள். பேராசிரியர் பண்டுக்வாலாவின் வீடும் சூறையாடப்பட்டது. இதை அறிந்து மிகவும் வருந்திய டாக்டர் ராமகிருஷ்ணன், தனது நண்பர் பண்டுக்வாலா மூலம், வறுமையில் வாடும் முஸ்லிம் சிறுவர்கள் சிறுமிகளின் கல்வி தடைபடாமல் தொடர நிதியுதவி செய்து வருகிறார். பணம் கொடுத்தோம், கடமை தீர்ந்தது என்று இல்லாமல், அடிக்கடி ஏழை முஸ்லிம் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை விசாரித்து அறிவாராம். குறிப்பாக கணிதம், இயற்பியல், இரசாயணவியல் பாடங்களில் அவர்களுக்கு ஆர்வ மூட்டுமாறு பேராசிரியர் பண்டுக்வாலாவிடம் கேட்டுக் கொள்வாராம்.

சிதம்பரத்தில், பிராமண குடும்பத்தில் பிறந்து, குஜராத்திற்கு குடிபெயர்ந்து பின்னர் அமெரிக்காவில் கல்வி பயின்று, அந்நாட்டின் நிரந்தரக் குடியுரிமையையும் பெற்றுள்ள டாக்டர் ராமகிருஷ்ணன், குஜராத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து அக்கறை செலுத்துவதும், முஸ்லிம் சிறார்களின் கல்வி முன்னேற்றத்திற்கு உதவுவதும் பாராட்டிற்குரியது.

“மனிதன் அறிவாளியாவது எளிது, அறிவாளி மனிதநேயத்தோடு திகழ்வது தான் அரிதினும் அரிது.”

நோபல் பரிசு பெற்றுள்ள டாக்டர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அறிவாலும், மனிதநேயத்தாலும் உயர்ந்து நிற்பதுமூன்றாம் உலக நாடுகளில் வாழும் அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாகும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *