கட்சித் தலைவரிடமிருந்து அழைப்பு வரும்வரையே காத்திருப்பதாக ஐ.தே.கவில் தனித்துச் செயற்பட தீர்மானித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தெரிவிக்கின்றது. இன்றோ நாளையோ அழைப்பு வரலாமென குழு நம்புவதுடன், எவ்வாறெனினும் கட்சித் தலைவருடனான பேச்சுவார்த்தையின் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படுமென இரத்தினபுரி மாவட்ட ஐ.தே.க எம்.பி. தலதா அத்துகோரள தெரிவித்தார். கட்சித் தலைவருடனான பேச்சுவார்த் தைக்குப்பின் குழு கூடி கலந்துரையாட உத்தேசித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஐ.தே.க வின் கட்சி உட்பூசலுக்கு ஒரு வாரகாலத்தில் தீர்வு காண தவறுமிடத்து அக்கட்சியின் 25 பாராளுமன்ற உறுப்பினர்கள் தனித்துச் செயற்படத் தீர்மானித்துள்ளனர். அத்துடன் எதிர்வரும் பாராளுமன்ற அமர்வின்போது அந்த 25 பேரும் தனியான குழுவாக அமரவும் எதிர்பார்த்துள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இது தொடர்பில் குருநாகல் மாவட்ட ஐ. தே.க எம்.பி. தயாசிறி ஜயசேகர பகிரங்க வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தார். எனினும் இதற்கான தீர்க்கமான பதிலொன்றை ஐ. தே. க. தலைமை நேற்று வரை முன்வைக்கவில்லை.
இதேவேளை, சஜித் பிரேமதாஸவை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளரெனத் தெரியவருகிறது. இதற்காக ஏனைய எதிர்க்கட்சிகளுடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரியவருகிறது. ஏற்கனவே 60 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து 17 உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்துவிட்டனர்.
இதனையடுத்து தற்போது 43 பேர் மட்டுமே உள்ளனர். இந்த நிலையில் மேலும் 25 பேர் விலகினால் 18 பேர் மாத்திரமே ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்திருப்பர் என ஐக்கிய தேசியக் கட்சிக்குள் உள்ள அதிருப்தி குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களும் கட்சியை விட்டு தனித்து இயங்கப் போவதாக எச்சரித்துள்ளனர். தமது கோரிக்கையை வலியுறுத்தி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவின் முன்னிலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தப் போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.