13வது திருத்தச் சட்டத்தினை ஆரம்பப் புள்ளியாக வைத்து ஒரு நிரந்தரத் தீர்வுக்கு அரசாங்கம் முன்வர வேண்டும் நல்லிணக்க ஆணைக்குழுவில் புளொட் தலைவர் சாட்சியம்

sitharthan.jpg13வது திருத்தச் சட்டத்தினை ஆரம்பப் புள்ளியாக வைத்து இலங்கை இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண அரசாங்கம் முன்வர வேண்டும் என புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் நேற்று (ஒக்ரோபர் 25 2010) சாட்சியம் அளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

த சித்தார்த்தன் தனது சாட்சியத்தில் கூறியதாவது, ”யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள போதிலும் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைத் தீர்வுக்கான எந்தவொரு அறிகுறியும் தென்படாதிருப்பதால் தமிழ் சமூகம் தாங்கள் செய்த தியாகங்கள், அர்ப்பணிப்புகள் எல்லாமே வீணாகி விட்டதோ என்ற ஏக்கத்தில் உள்ளனர். இந்நடவடிக்கையானது அரசாங்கம் இவ்விடயத்தில் அக்கறை எடுக்காமல் இருக்கும் தன்மையையே வெளிக்காட்டி நிற்கின்றது.

அத்துடன் வடக்கில் பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்றமையானது சிங்களக் குடியேற்றத்திற்கான முன்னேற்பாடுகள்தான் என மக்கள் மத்தியில் சந்தேகமும் நிலவி வருகின்றது. இந்நடவடிக்கையினை வன்னியில் ஏற்கனவே இருந்த இன விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் ஒரு கபட நோக்கம் கொண்ட செயலெனவும் மக்கள் கருதுகின்றனர்.

இதேவேளை 13வது திருத்தச் சட்டத்தினை ஆரம்பப் புள்ளியாக வைத்து அதிலிருந்து தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக முன்னெடுக்க வேண்டும். இதுவே நாட்டின் எதிர்காலம் செழிப்பாவதற்கும், நாட்டு மக்கள் ஒற்றுமையாகவும், அமைதியாகவும் வாழ்வதற்கும் வழிவகுக்கும்.

கடந்த இரு தலைமுறையினர் அனுபவித்து வந்த துன்பங்களும், துயரங்களும், இழப்புகளும், வேதனைகளும், நெருக்கடிகளும் வருங்கால சந்ததியினருக்கு வரக்கூடாதென்பதே எமது ஆத்மார்த்தமான விருப்பமாகும்” என்று தெரிவித்துள்ளார்.

புளொட் சர்வதேசக் கிளைகளின் மாநாடு : புளொட்

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சர்வதேசக் கிளைகளின் மாநாடு இம்மாதம் 30ம் 31ம் திகதிகளில் ஜெர்மனியின் ஸ்ரூட்காட் நகரில் நடைபெறவுள்ளது. இதன்போது கழகத்தின் கடந்தகால, நிகழ்கால மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளது.

இம்மாநாட்டில் புளொட்டின் அனைத்து கிளைகளையும் சேர்ந்த அமைப்பாளர்கள், மற்றும் உறுப்பினர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு மாநாட்டு ஏற்பாட்டுக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

முதல்நாள் நிகழ்வுகளாக மௌன அஞ்சலி, வரவேற்புரை, கிளைப் பொறுப்பாளர்களின் உரை என்பவற்றைத் தொடர்ந்து கழகத்தின் செயற்பாடுகளில் வெளிநாட்டுக் கிளைகளின் பங்களிப்பு, அரசாங்கத்தின் நடவடிக்கைகள், எதிர்காலத்தில் கழகம் எடுக்க வேண்டிய நிலைப்பாடுகள் என்பன தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளன.

இரண்டாம் நாள் நிகழ்வுகளாக தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் மற்றும் அரசியல் தீர்வு, அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் மற்றும் உதவிகள், வெளிநாட்டுக் கிளைகளின் செயற்பாடுகள், நாட்டில் கழகத்தின் செயற்பாடுகள் என்பன தொடர்பில் ஆராயப்படவுள்ளன.

 நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் அடுத்த மாதம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்.

படிப்பனைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் அடுத்த மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தமாதம் 11ஆம் திகதியிலிருந்து 13ஆம் திகதி வரை மூன்று தினங்கள் ஒன்பது இடங்களில் அமர்வுகள் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாம் நாள் அமர்வு ஊர்காவற்றுறை மற்றும் நெடுந்தீவு மக்களுக்காக புனித அந்தோனியார் தேவாலயத்திலும், வேலணை மக்களுக்காக மண்கும்பான் பிள்ளையார் ஆலய கல்யாண மண்டபத்திலும், யாழ்ப்பாணம் மற்றும் கரைநகர் மக்களுக்காக குருநகர் கலாசார மண்டபத்திலும், நல்லூர் மக்களுக்காக அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்திலும் நடைபெறும்.

இரண்டாம் நாள் அமர்வுகள் கோப்பாய் பிரதேச மக்களுக்காக நீர்வேலி கிராம முன்னேற்றச் சங்க மண்டபத்திலும், தெல்லிப்பழை, சண்டிலிப்பாய், சங்கானை, உடுவில் பிரதேச மக்களுக்காக அளவெட்டி மகாஜன சபை மண்டபத்திலும், கரவெட்டி, பருத்தித்துறை மக்களுக்காக நெல்லியடி முருகன் கோவிலிலும் நடைபெறும்.

மூன்றாம் நாள் அமர்வுகள் மருதங்கேணி மக்களுக்காக குடத்தனை தேவாலயத்திலும், சாவகச்சேரி மக்களுக்காக சாவகச்சேரி கலாசார மண்டபத்திலும் நடைபெறும். இந்த அமர்வுகளில் சாட்சியமளிக்க இதுவரை 366 பேர் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பதிவு செய்யாத, சாட்சியமளிக்க விரும்பும் எவரும் முன்வந்து ஆணைக்குழுவின் முன்னால் சாட்சியமளிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *