ஐ.நா. தீர்மானத்தை இரு தரப்பும் நிராகரிப்பு இஸ்ரேல் தொடர்ந்து காஸா மீது தாக்குதல்

gaza_.jpgகாஸா வில் உடனடி யுத்த நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டுமென்ற ஐ.நா.வின் அழைப்பை இரு தரப்பும் நிராகரித்திருக்கும் நிலையில் காஸாவில் பாலஸ்தீன அதிகாரசபை புதிதாக கால்தடம் பதிப்பதற்கும் சர்வதேச கண்காணிப்பாளர்களை வர வழைப்பதற்குமான திட்டமொன்று நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இராஜதந்திரிகளால் தயாரிக்கப்பட்டுள்ளது.

மதச்சார்பற்ற பாத்தா பிரிவின் தலைமையின் கீழ் அதிகாரசபை மீண்டும் அங்கு திரும்புவதற்கு இடமளிப்பது திட்டத்தின் ஓரங்கமாகும். காஸாப்பகுதியிலிருந்து 18 மாதங்களுக்கு முன்னர் ஹமாஸ் அமைப்பால் பாத்தா அமைப்பு வெளியேற்றப்பட்டது. அத்துடன் காஸாவுக்குள் ஆயுதக் கடத்தலை நிறுத்துவதற்கு துருக்கி மற்றும் பிரான்ஸ் கண்காணிப்பாளர்களை எகிப்துக்கான ராபாகடவை, இஸ்ரேலுக்கான கிரெம் சாலொம் கடவை உள்ளடங்கலாக காஸாவின் தெற்கு முனையில் நிறுத்துவதும் இத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

காஸாப் பிராந்தியத்தில் சர்வதேச அங்கீகாரத்துடனான அரசாங்கமாக அதிகார சபை இயங்கும். 2007 ஜூனின் பின்னர் காஸாவில் ஹமாஸ் அதிகாரத்தை கைப்பற்றியதையடுத்து அப்பகுதியிலிருந்து போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டிருக்கிறது. புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் போக்குவரத்து மீள ஆரம்பிக்கப்படும்.

எகிப்தின் சமாதான முயற்சியின் ஓரங்கமாக இத்திட்டம் ஆராயப்பட்டுள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி சார்கோஸியுடன் பேச்சு வார்த்தை நடத்தியபின் எகிப்திய ஜனாதிபதி முபாரக் இதனை அறிவித்திருக்கிறார். உடனடி யுத்த நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்றும் அதன் பின்னர் காஸா எகிப்து எல்லைப்பாதுகாப்பு தொடர்பாக பேச்சு வார்த்தை இடம் பெற வேண்டும் எனவும் கடவைகளை திறந்து விடவேண்டுமெனவும் இத்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் எல்லைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பாக இணக்கப்பாடு இல்லாததால் எகிப்தின் முயற்சிகள் நிராகரிக்கப்பட்டு விடுமென இராஜதந்திரிகள் கூறுகின்றனர். எகிப்துடனான எல்லையில் அவதானிப்பாளர்களை அனுமதிப்பது தொடர்பாக பரிசீலிப்பதாக கூறியுள்ள ஹமாஸ் அமைப்பு ஆனால் சர்வதேச படையினர் பிரசன்னத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அதேசமயம் ஹமாஸின் 3 தலைவர்கள் பேச்சு வார்த்தைக்காக எல்லையைக் கடந்து இஸ்ரேலுக்கு வந்துள்ளதையும் ஹமாஸ் சுட்டிக்காட்டியுள்ளது.  ஆனால் எல்லைப்பகுதிகளிலுள்ள சுரங்கப்பாதைகளூடாக ஆயுதங்கள் கடத்தப்படுவதாகவும் அவற்றை அழிக்க சர்வதேசப்படை அவசியமெனவும் இஸ்ரேல் வலியுறுத்துகிறது.

தமது எல்லைப்பகுதியில் சர்வதேசப் படையின் பிரசன்னத்தை எகிப்து விரும்பவில்லை. ஆயினும் 2005 இல் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டை மீண்டும் புதுப்பிக்க வேண்டுமென கெய்ரோ விரும்புகின்றது. அந்த உடன்படிக்கையின்பிரகாரம் நடமாட்டம், விநியோகம் என்பன ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில் இடம் பெறும். ராபா கடவையூடாக மக்கள் போக்குவரத்து கேரம் சாலெம் கடவையூடாக வாகனங்களில் போக்குவரத்துக்கு அந்த உடன்படிக்கை வழிவகுத்திருந்தது. ஹமாஸ் அதிகாரத்திற்கு வந்ததையடுத்து அந்த உடன்படிக்கை செயலிழந்தது. ஐ.நா.வின் யுத்த நிறுத்த யோசனைக்கு பாதுகாப்பு சபை 140 அங்கீகாரமளித்திருந்தது. அமெரிக்கா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் உடனடியாகவே ஐ.நா.வின் தீர்மானம் நிராகரிக்கப்பட்டுவிட்டது.

அமெரிக்கா ஐ.நா.பாதுகாப்பு சபை தீர்மானத்திற்கு ஆதரவளிக்குமென எதிர்பார்க்கப்பட்டிருந்த போதும் கடைசி நிமிடத்தில் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. ஜனாதிபதி புஷ்ஷிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பை அடுத்து அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் கொண்டலீசா ரைஸ் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதாக இராஜதந்திரிகள் தெரிவித்தனர்.

நேற்று முன்தினமும் நேற்றும் இஸ்ரேல் காஸா மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தியது. தனது பிரஜைகளை பாதுகாப்பதற்கான உரிமை தொடர்பாக தீர்மானிப்பதற்கு வெளியார் செல்வாக்கு செலுத்த இஸ்ரேல் ஒரு போதும் இணங்கவில்லை என்று இஸ்ரேல் பிரதமர் ஈகுட் ஒல்மேர்ட் கூறியுள்ளார். இஸ்ரேல் மட்டும் தாக்குதல்களை நடத்தவில்லை. காஸாவிலிருந்தும் டோராட், பீர்சிபா போன்ற குடியேற்றப்பகுதிகளை நோக்கி ரொக்கட் தாக்குதல்கள் இடம்பெற்றன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *