இலங்கைத் தமிழருக்கென தனி நடனக்கலை தொடர்பாக அறிஞர்கள் ஆய்வுசெய்ய வேண்டும்

dance.jpgஇலங்கையில் வடக்கு, கிழக்கு தமிழருக்கு என தனித்துவமான நடனக்கலை ஒன்று இருக்கிறது. தென்மோடி, வடமோடி என அக்கலை அமைகிறது. எமது நடனக்கலை எது என்பதை நமது அறிஞர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்று கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சின் ஆலோசகராகப் பதவியேற்றுள்ள சுந்தரம் திவகலாலா தெரிவித்தார்.

இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சின் செயலாளராகப் பணிபுரிந்து பின்பு ஜேர்மன் நாட்டு ஜிரிஇஸட் நிறுவனக் கல்வி அலகின் நிபுணத்துவ ஆலோசகராகப் பணிபுரிந்த சுந்தரம் திவகலாலா, புதிய பதவியை ஏற்றபின், கடந்த சனிக்கிழமை திருகோணமலை சென்.மேரிஸ் கல்லூரியில் திருகோணமலை இராஜரெட்ணம் நடனாலயத்தின் 18 ஆவது ஆண்டு நிறைவாக நடத்தப்பட்ட அபிநய சாதனா நாட்டிய விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பேசினார். அவர் மேலும் கூறுகையில்;

உலகில் வாழும் 770 இலட்சம் தமிழ் மக்களின் ஜீவநாதமான கலையாக பரதநாட்டியம் விளங்குகின்றது. கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தில் பரதம் சமயம் சார்ந்த கருவியாக அடையாளம் காணப்பட்டது. இந்தியாவில் பரதம் செழித்து வளர்வதற்கு பல விற்பன்னர்கள் காரணமாக இருந்தார்கள், இருந்து வருகின்றார்கள். எமது இனம் எதனைச் செய்யினும் அதிலே ஒரு பாண்டித்தியம் இருக்க வேண்டும். பரதம் தமிழ் மக்களின் பொக்கிஷமாகும். இந்தியாவிலிருந்து எமக்கு கிடைத்தது. எமக்கென்றொரு தனித்துவம் இருக்க வேண்டும்.

இலங்கைத் தமிழராகிய எமக்கு வடக்கு, கிழக்கிலே தென்மோடி, வடமோடி மற்றும் கிராமிய நடனங்கள், காத்தவராயன் கூத்து என இருக்கிறது. இலங்கைத் தமிழர்களுக்கென தனி நடனக்கலை பற்றி எமது அறிஞர்கள் ஆய்வுசெய்ய வேண்டும்’ என்றார். கௌரவ அதிதியாகப் பங்குபற்றிய கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் சி. தண்டாயுதபாணி பேசும்போது;  “நகரத்தில் அழகான அரங்கில் குழந்தைகளின் நேர்த்தியான அற்புதமான நடன நிகழ்வுகளை நாம் ரசிக்கிறோம், அனுபவிக்கின்றோம். இவ்வாறான சூழல், வாய்ப்பு எம் பிரதேசத்தின் ஏனைய பகுதிகளில் வாழும் எமது குழந்தைகளுக்கு இருக்கிறதா? இது எனது உள்ளத்தை நெருடுகிறது.

“மூதூர் இலங்கைத் துறைமுகத்துவாரம் பாடசாலை 2006 அனர்த்தத்தில் இடம்பெயர்ந்தது. மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட பின்னர் அப்பாடசாலை 2007 இல் மீண்டும் இயங்க ஆரம்பித்தது. அப்பாடசாலையின் பரிசளிப்பு விழாவில் நான் கலந்துகொண்டேன். அவ்விழாவில் இடம்பெற்ற கலை நிகழ்வுகளில் அம்மாணவர்கள் பங்குபற்றினார்கள். நகர மாணவரின் அளவுக்கு கிராமப்புற மாணவரின் ஆற்றல் அமையவில்லை. அவர்களுக்குள் புதைந்து இருக்கும் ஆற்றலை வெளிப்படுத்தும் வாய்ப்பும் அவர்களுக்கு அங்கு இல்லை. பூநகர் திருவள்ளுவர் பாடசாலை பரிசளிப்பு நிகழ்வுக்கு சென்றிருந்தேன். கூரையின்றி பாடசாலையின் வகுப்பறைகள், பாதுகாப்பான அறை பாடசாலையில் இல்லை. ஆனால், நிகழ்வில் பிள்ளைகள் ஆடினார்கள், பாடினார்கள், கலையின் மெருகை அக்குழந்தைகளுக்குக் கொடுக்க முடியுமா? என்பதை பெரியோர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்’ என்றார். மூத்த கலைஞர்கள், பெரியோர்கள் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. அதிதிகளும் கௌரவிக்கப்பட்டனர். பின்னர் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • kalaikurusil
    kalaikurusil

    தென்மோடி வடமோடி கூத்து சம்மந்தமாக அறிய விரும்புவோர் http://kalaikurusil.com அழுத்தவும்

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    பரதநாட்டியத்தைப் பற்றி நான் பலமுறை எழுதியிருக்கிறேன்.அது எவ்வாறு “புலம்பெயர் சூழலில்” மருவி அபத்தமாக திரிபு பட்டுள்ளது என்பதையும் எழுதியுள்ளேன்.இதை வெளிப் படுத்தும் கோணத்தில்,சிந்திக்க எத்தனித்த திரு.சுந்தரம் திவகலாலா அவர்களுக்கு பாராட்டுகள் வணக்கங்கள்.கமலஹாசனின் “தசாவதாரம்” படத்தை புரிந்துக் கொள்ள முடியாதவர்கள் எப்படி பரதநாட்டியத்தை புரிந்துக் கொள்ள போகிறார்கள்.

    Reply