கல்வி அமைச்சின் செயலாளர் பண்டாரவுக்கு எதிராக விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு

secretary_.jpgகல்வி அமைச்சின் செயலாளர் நிமால் பண்டாரவை சேவையில் இருந்து இடைநிறுத்துமாறு, ஜனாதிபதி புலனாய்வுப் பிரிவினர் சிபார்சு செய்துள்ள நிலையில், இது குறித்து விசாரணை நடத்தவென ஜனாதிபதி விசேட குழுவொன்றை நியமித்துள்ளார். வட மேல் மாகாண சபை செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற மோசடி தொடர்பாகவே, நிமால் பண்டாரவை சேவையில் இருந்து இடைநிறுத்துமாறு புலனாய்வு பிரிவு சிபார்சை தெரிவித்திருந்தது.

காணி விவகாரம் தொடர்பில், அரசாங்கத்தின் ஒரு தொகைப் பணத்தை கல்வி அமைச்சின் செயலாளர் மோசடி செய்ய முயன்ற குற்றச்சாட்டு தொடர்பாகவே, ஜனாதிபதியின் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்ததாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. பண்டார, வட மேல் மாகாண சபையின் செயலாளராக இருந்த காலத்தில், அரசாங்கத்தின் 10.25 மில்லியன் ரூபா பணத்தை அவர் மோசடி செய்ய முயற்சிகளை மேற்கொண்டதாகவும் ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. அதேசமயம் இந்த நிலத்தை கைமாற்றிய விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள ஏனைய அதிகாரிகளுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும் ஜனாதிபதி புலனாய்வுப் பிரிவு சிபார்சு செய்துள்ளது.

முறைகேடுகள் இடம்பெற்றதாகக் கூறப்படும் வட மேல் மாகாண சபையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஹெரலியவல தொழிற்சாலை தொகுதியை விஸ்தரிப்பதற்கான அஸ்வத்துவத்த நில கொள்வனவு தொடர்பில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் தொடர்பாகவே,ஜனாதிபதி புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த நிலத்துக்கான பெறுமதியை அரச மதிப்பீட்டாளர்கள் 10 மில்லியன் ரூபாவாக கணிப்பிட்டுள்ள நிலையில், இக் காணியை 20.25 மில்லியன் ரூபாவுக்கு கொள்வனவு செய்ய நிமால் பண்டார முயற்சிகளை மேற்கொண்டமையும் விசாரணையின் போது தெரிய வந்துள்ளது. அரச மதிப்பீட்டாளரின் அறிக்கை கிடைக்கும்வரை இந்த காணி விவகாரத்தை இடைநிறுத்தி வைத்துள்ளதாகவும் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர். இக் காணி விவகாரம் தொடர்பான கணக்காய்வுகளின்போதும், நிதி மோசடி இடம்பெற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *