அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அதிக வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். டிரம்ப் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கி உள்ளார். இந்நிலையில் தேர்தல் நிலவரம் தொடர்பாக ஜனாதிபதி டிரம்ப் வெள்ளை மாளிகையில் உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
நாம் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளோம். டெக்சாஸ், ஜார்ஜியா மாகாணங்களில் வெற்றி பெற்றுள்ளோம். டெக்சாஸில் 7 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று இருக்கிறோம். பென்சில்வேனியாவில் மிகப்பெரிய வெற்றி பெற உள்ளோம்.ஒப்பிட்டு பார்க்க முடியாத வெற்றியை நாம் பெற்று இருக்கிறோம். மீண்டும் ஆட்சி மீண்டும் ஆட்சியை அமைக்கவும், கொண்டாடவும் நாங்கள் தயாராகி வருகிறோம்.
இது புதிய சாதனை. என் மனைவிக்கும், குடும்பத்திற்கும் நன்றி. நாங்கள் மிகப்பெரிய கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறோம்.
இந்த தேர்தலில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. எதிர்க்கட்சியினர் வெற்றியை திருடப் பார்க்கிறார்கள். தேர்தலுக்குப் பின்னரும் வாக்களிக்க முயற்சி நடக்கிறது. தேர்தலுக்குப் பின்னரும் வாக்களிக்க முயற்சி நடக்கிறது. இதனை தடுக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கையை நிறுத்துவதற்காக உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பென்சில்வேனியா உள்ளிட்ட 3 முக்கியமான மாநிலங்களில் டிரம்ப் முன்னிலையில் உள்ளார். இழுபறியில் உள்ள இந்த மாநிலங்களில் முடிவுகள் வெளியாகவில்லை.