ஈரான் அணுஆயுத திட்டத்தின் மூத்த விஞ்ஞானி சுட்டுப்படுகொலை !

ஈரானின் ரகசிய அணு ஆயுத திட்டத்தின் பின்னணியில் உள்ள சூத்திரதாரி என்று மேற்கத்திய புலனாய்வு அமைப்புகளால் கருதப்படுபவர் ஈரானின் மிக மூத்த அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே. அதனால் அவர் “ஈரான் அணு குண்டின் தந்தை” என்று வர்ணிக்கப்பட்டார்.
மொஹ்சென் பக்ரிசாதே தலைநகர் தெஹ்ரான் அருகே  காரில் சென்று கொண்டு இருந்தபோது அவரது கார் வெடிகுண்டு மூலம் குறிவைக்கப்பட்டது. தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் படுகாயம் அடைந்த பக்ரிசாதே மருத்துவமனையில் இறந்தார்.
ஈரானில் பயங்கரம் - மூத்த அணு விஞ்ஞானி துப்பாக்கிச் சூட்டில் படுகொலை
ஈரான் உற்பத்தி செய்யும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் அளவு அதிகரித்திருப்பது குறித்த புதிய கவலையின் மத்தியில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. செறிவூட்டப்பட்ட யுரேனியம் சிவில் அணு மின் உற்பத்தி மற்றும் இராணுவ அணு ஆயுதங்கள் இரண்டிற்கும் ஒரு முக்கிய அங்கமாகும்.
ஈரான் தனது அணுசக்தி திட்டம் அமைதியான நோக்கங்களுக்காக மட்டுமே என்று ஈரான் வலியுறுத்தி வந்தது.
2010 மற்றும் 2012-க்கு இடையில் நான்கு ஈரானிய அணு விஞ்ஞானிகள் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் கொலைகளுக்கு இஸ்ரேல் உடந்தையாக இருப்பதாக ஈரான் குற்றம் சாட்டியது. மே 2018-ல் ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அளித்த விளக்கத்தில் பக்ரிசாதேவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈரானின் ஆன்மீக தலைவரின் ஆலோசகர் ஹொசெய்ன் டெகான் என்பவர் “இது இஸ்ரேலின் செயல் என டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். சியோனிஸ்ட்கள் அவர்களது சூதாட்ட சகாவின் அரசியல் வாழ்க்கையின் இறுதி நாட்களில், முழுமையான யுத்தமொன்றை ஈரான் மீது திணிப்பதற்காக ஈரான் மீது அழுத்தங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *