“அனைத்து அமெரிக்கர்களுக்கும் இலவச கொரோனா தடுப்பூசி ” – அறிவித்தார் ஜனாதிபதி ட்ரம்ப் !

உலகின் பிற எந்த நாட்டையும் விட கொரோனா வைரஸ் பெருந்தொற்று, அமெரிக்க வல்லரசு நாட்டை பாடாய்ப்படுத்தி வருகிறது. அங்கு நேற்று மதிய நிலவரப்படி 1.58 கோடி பேருக்கும் அதிகமானோருக்கு இந்த வைரஸ் பாதித்து இருப்பதாகவும், 2.95 லட்சம் பேருக்கும் கூடுதலோனார் பலியாகி இருப்பதாகவும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையம் தெரிவிக்கிறது.

இந்நிலையில் அங்கு கடந்த மாதம் 3-ந் திகதி நடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக கொரோனா தடுப்பூசியை கொண்டு வர வேண்டும் என்று ஜனாதிபதி டிரம்ப் விரும்பினார். ஆனால் அது நடக்கவில்லை.

தற்போது அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோ என்டெக் நிறுவனமும் கூட்டாக தயாரித்துள்ள தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தனது இறுதி ஒப்புதலை வழங்கி உள்ளது.

கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிறுவனம் தனது ஒப்புதலை வழங்கி இருப்பதற்கு ஜனாதிபதி டிரம்ப் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதையொட்டி அவர் வெளியிட்டுள்ள காணொளி பதிவில், “இன்று நமது நாடு ஒரு மருத்துவ அதிசயத்தை சாதித்துள்ளது. நாம் இந்த 9 மாதங்களில் பாதுகாப்பான மற்றும் பயனுள்ள ஒரு தடுப்பு மருந்தை வழங்கி உள்ளோம். இது வரலாற்றில் மிகப்பெரிய விஞ்ஞான சாதனைகளில் ஒன்றாகும். இது கோடானுகோடி உயிர்களை காப்பாற்றும். கொரோனா வைரஸ் பெருந்தொற்றை முடிவுக்கு கொண்டு வரும். இந்த தடுப்பூசி அமெரிக்கர்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிப்பதில் நான் பெருமைப்படுகிறேன். 24 மணி நேரத்தில் முதல் தடுப்பூசி செலுத்தப்படும்” என கூறி உள்ளார்.

இதேபோன்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் கமிஷனர் ஸ்டீபன் எம்.ஹான் கூறுகையில், “அமெரிக்காவிலும், உலகமெங்கும் உள்ள எத்தனையோ குடும்பங்களை பாதித்த இந்த பேரழிவு தொற்றுநோயை எதிர்த்து போராடுவதில் இது ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல், இந்த தடுப்பூசி” என பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *