அமைச்சுப் பதவிகள் மூலம் கிடைக்கும் வரப்பிரசாதங்கள் உரிய முறையில் தொழிலாளர்களுக்கு கிடைக்கவேண்டும் – மனோ எம்.பி. தெரிவிப்பு

mano_ganesan_mp_.jpgஇன்று பெருந்தோட்ட மக்கள் அனுபவிக்கின்ற துன்பங்களுக்கும், வேதனைகளுக்கும் அரசாங்கங்களைக்குறை கூறுவதால் எவ்வித பிரயோசனமுமில்லை. மாறாக அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டு மக்களுக்கு உரிய சேவைகளைச் செய்யாதவர்களையே உண்மையில் குறை கூற வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

பொகவந்தலாவைப் பிரதேசத்திலுள்ள எலிபடை மேற்பிரிவு, கீழ்ப்பிரிவு, கேர்க்கஸ்வோல்ட் மத்திய பிரிவு, கேர்க்கஸ்வோல்ட் கீழ்ப்பிரிவு, பெற்றசோ ஆகிய தோட்டங்களில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மனோ கணேசன் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது;

இன்று பெருந்தோட்ட மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். அதிகமாக உழைத்துக் குறைந்த வருமானம் பெறுகின்ற ஒரே சமூகமாக பெருந்தோட்டச் சமூகம் இன்றும் இருந்து வருகின்றது. ஒவ்வொரு அரசாங்கத்திலும் அமைச்சுப்பதவிகளை வகிக்கின்ற இந்தப் பெருந்தோட்டச் சமூகப்பிரதிநிதிகள் இந்த மக்களின் தேவைகளை உணர்ந்து சேவை செய்யாமல் தத்தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதிலேயே கண்ணும் கருத்துமாய் இருக்கின்றனர்.

மலையகத்தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களெல்லாம் இன்று அமைச்சுப்பதவிகளை வகித்துக்கொண்டிருக்கின்ற போதும் இவர்களால் சமூகத்துக்கு எந்த வித பிரயோசனமுமில்லை. இந்த மக்கள் நாளுக்கு நாள் சொல்லிக்கொள்ள முடியாத வேதனைகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய ஏமாற்றுத் தலைமைகளைத் துடைத்தெறிவதற்கு தான் நாம் இன்று மலையகத் தேர்தல் களத்தில் குதித்துள்ளோம். மலையகம் எனது தாயகம், இந்த மண்ணையும் என்னையும் பிரிக்கமுடியாது.

இந்த மக்களுக்காக மனமுவந்து சேவை செய்வதற்கு முன்வந்துள்ளோம். எம்மை ஏன் இங்கு வந்தீர்கள் என்று கேள்வி கேட்பதற்கு யாருக்கும் எவ்வித அதிகாரமும் கிடையாது. எதிர்வரும் தேர்தலில் எமக்கு உரிய பலத்தை வழங்குவதற்கு மலையக மக்கள் முன்வரவேண்டும்.

தொடர்ந்து தோட்டத்தொழிலாளர்களுக்கு உரிய சம்பளம் கிடைக்காவிட்டால் உரிய தரப்பினருடன் நாம் பேச்சுவார்த்தை நடத்தி தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வைப்பெற்றுக்கொடுப்பதில் தயங்கப்போவதில்லை.
எனவே ஆளுகின்ற அரசாங்கங்களில் எம்மவர்கள் அமைச்சுப்பதவிகளை வகிப்பதை நான் ஒருபோதும் குறை சொல்லமாட்டேன். மாறாக அந்த அமைச்சுப்பதவிகள் மூலம் கிடைக்கின்ற வளங்கள், வரப்பிராசாதங்கள், அதிகாரங்கள் அனைத்தும் இந்த மக்களுக்குக் கிடைக்கவேண்டும் என்பதே எனது எண்ணமாகும். ஆகவே எதிர்வரும் தேர்தலில் மலையக மக்கள் எனக்கு வாக்களிக்கின்றீர்கள் என்று கருதி எனது அமைப்பின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *