உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா தொற்று 2019ம் ஆண்டின் இறுதியில், சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்டது. இந்த வைரசின் தோற்றம் குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் பலனாக சர்வதேச நிபுணர் குழு ஒன்றை ஜனவரி முதல் வாரத்தில் சீனாவுக்கு அது அனுப்பி வைக்க முடிவு செய்தது.
இந்த சிறப்புக்குழு வுகான் நகரில் மனிதர்களிடம் முதன் முதலில் கொரோனா கண்டறியப்பட்ட இடங்களில் முழுமையாக ஆய்வு செய்யும் என தெரிவித்தது.
இதற்கிடையே, சீனாவில் ஆய்வு செய்யவுள்ள நிபுணர் குழுவுக்கு அந்நாட்டு அரசு அனுமதி அளிக்கவில்லை என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில், சர்வதேச நிபுணர் குழுவை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்கத் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
நிபுணர் குழுவை வுகான் நகருக்கு வரவேற்க தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ள சீனா, ஆய்வுக் குழுவினர் எப்போது வருவார்கள் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளது.