உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட 40 பேர் மயக்கமடைந்து வைத்தியசாலையில் அனுமதி

பொத்துவில் பிரதேச செயலகம் முன்பாக கடந்த மூன்று நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 40 பேர் மயக்கமடைந்த நிலையில், நேற்று புதன்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  கடந்த ஆறு மாதத்திற்கு முன்னர் பொத்துவில் காட்டுப் பிரதேசத்தில் விறகு வெட்டச் சென்றபோது கைது செய்யப்பட்ட 30 முஸ்லிம்கள் வழக்கு விசாரணை எதுவுமின்றி தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் காலவரையறையற்ற உண்ணாவிரத போராட்டத்தை திங்கட்கிழமை காலை 8 மணிக்கு பொத்துவில் பிரதேச செயலகத்தின் முன் ஆரம்பித்தனர்.

தொடர்ந்து மூன்று நாட்களாக இரவு, பகலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் மயக்கமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இவர்கள் பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 10 மாணவர்களும் அடங்குவர்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் கோரிக்கை அடங்கிய மகஜர் பிரதேச செயலாளர், பிரதேச சபைத் தவிசாளர் உட்பட பலரிடம் கையளிக்கப்பட்ட போதிலும் நேற்று வரை இவர்கள் தொடர்பாக அதிகாரிகளோ அரசியல் வாதிகளோ எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் உறவினர்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *