733 பொதுமக்கள் பலி; 2,615 பேர் படுகாயம் ஒரு வார வன்னி அவலம் குறித்து சபையில் சுரேஷ்

suresh-mp.jpgவன்னியில் ஜனவரி 26 ஆம் திகதி முதல் பெப்ரவரி 2 ஆம் திகதி வரையான ஒரு வார காலப்பகுதியில் மட்டும் படையினரின் ஷெல் மற்றும் விமானக் குண்டுவீச்சுகளினால் 733 அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், 2615 பேர் படுகாயப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழினப் படுகொலை மூலம் பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிடலாமென நினைத்து அரசு செயற்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார். தமிழ் மக்களுக்கான அதிகாரங்களை வழங்க அரசு முன்வராத வரையில் இப்பிரச்சினையை ஒருபோதும் தீர்க்க முடியாதென சுட்டிக்காட்டிய சுரேஷ் பிரேமச்சந்திரன், இந்தியாவோ, அமெரிக்காவோ எந்தவொரு தீர்வுத்திட்டத்தையும் தமிழ் மக்கள் மீது திணித்துவிட முடியாது. அதனை ஏற்பதற்கும் தமிழ் மக்கள் தயாரில்லையெனவும் கூறியதுடன், இலக்கினை அடையும் வரை விடுதலைப் போராட்டம் தொடருமெனவும் சூளுரைத்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் கூறியதாவது; இலங்கை அரசும் சிங்கள மக்களும் கோலாகலமாக கொண்டாடிய சுதந்திர தினம் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் கரிநாள். தற்போது தான் இலங்கைக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்திருப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார். ஆனால், தமிழ் மக்களுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை.

வன்னியில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் தமிழ் மக்கள் எவரும் இல்லை. குடாநாட்டில் அதியுயர் பாதுகாப்பு வலயம் என்ற பேரில் மூன்றில் ஒரு பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. கிழக்கில் சம்பூர் அதியுயர் பாதுகாப்பு வலயமென்ற பேரில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில், அகதிகளாக இடம்பெயர்ந்து அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் மக்கள் எப்படி சுதந்திரதினத்தைக் கொண்டாடமுடியும். எனவே, இச் சுதந்திரதினம் சிங்களவர்களுக்கு மட்டுமே உரிய தினமாகும்.

வன்னியிலிருந்து வாருங்கள் உங்களை சிறப்பாக பராமரிக்கின்றோமென அரசு கூறியது. இதையடுத்து படுகாயமடைந்த 300 பேர் வவுனியாவுக்கு வந்தனர். இவர்களில் கை, கால்களை இழந்த பச்சிளங்குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், வயோதிபர்கள் என பலர் இருந்தனர். இவர்களை அழைத்து வந்த பெற்றோர், பராமரிப்பாளர்களை இவர்களுடன் வைத்தியசாலைக்குச் செல்ல அனுமதி மறுத்த இராணுவம், காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு அனுப்பி விட்டு மற்றையவர்களை நலன்புரி நிலையமென்ற பேரில் இயங்கும் தடுப்பு முகாமில் தடுத்து வைத்துள்ளது.

கை, கால்களை இழந்த பச்சிளங்குழந்தைகள் வலியால் தாயைத் தேடி கதறுகின்றது. தாயோ தடுப்பு முகாமில் பிள்ளையை பார்க்க முடியாத வேதனையில் துடிக்கின்றார். பச்சிளம் குழந்தைகளின் வேதனையைக் கூட புரிந்து கொள்ள முடியாத ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், இராணுவத்தளபதி மற்றும் இங்குள்ள அமைச்சர்கள் எல்லாம் உண்மையான பெற்றோர்களாக இருக்க முடியாது. வேதனையை உணர்ந்திருந்தால் அவர்கள் இவ்வாறு மனிதாபிமானமற்ற வகையில் நடந்துகொள்ள மாட்டார்கள்.

ஜனவரி 26 ஆம் திகதி முதல் பெப்ரவரி 2 ஆம் திகதி வரையான ஒரு வார காலத்தில் மட்டும் வன்னியில் ஷெல் மற்றும் விமானக்குண்டு வீச்சுகளினால் 733 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 2615 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஜனவரி 3 ஆம் திகதி மட்டும் 322 பேர் கொல்லப்பட்டதுடன், 985 பேர் படுகாயமடைந்தனர். அரசு ஏவும் ஒவ்வொரு ஷெல்களும் சிங்களவர்களிடமிருந்து தமிழ் மக்களை விலகி ஓட வைக்கின்றது. தமிழ் மக்களின் மனங்களை கோரமாக்குகின்றது.

புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது தாக்குதல் நடத்தி அதனை அழித்துள்ளீர்கள். புதுக்குடியிருப்பு வைத்தியசாலை ஒரு இராணுவ இலக்கு. அங்கு புலிகள் சிகிச்சை பெற்றுவந்தனர் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோதாபய கூறுகின்றார். அவ்வாறானால் தென் பகுதியில் உள்ள பல வைத்திய சாலைகளிலும் இராணுவத்தினர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதனால், தென் பகுதி வைத்தியசாலைகளை புலிகள் இராணுவ இலக்குகளாகக் கருதினால் நிலைமை என்னவாகும்?

வன்னியிலிருந்து மக்கள் வெளியேறுவதற்கு 48 மணிநேர கால அவகாசத்தை வழங்கிய அரசு, மக்கள் வெளியேறும் வழிவகைகள் தொடர்பாகவோ, அவர்கள் வர வேண்டிய இடம் குறித்தோ, பாதைகள் குறித்தோ எதுவுமே அறிவிக்கவில்லை. அத்துடன், அந்த 48 மணிநேரமும் இராணுவத்தினர் தொடர்ச்சியாக ஷெல் தாக்குதல்களை நடத்தியதால் மக்கள் பதுங்குகுழிகளை விட்டு வெளியே வரவில்லை. இவ்வாறான நிலையில், அரசின் அறிவிப்பு மக்களுக்கு எப்படி தெரியவரும். எனவே, அரசு ஏமாற்று வேலையாகவே 48 மணிநேரத்தை அறிவித்து உலகை ஏமாற்றியது. வன்னியில் இடம்பெறும் விமான, ஷெல் தாக்குதல்களினால் பொது மக்கள் மட்டுமன்றி, ஐ.சி.ஆர்.சி. மற்றும் தொண்டர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் காயமடைந்துள்ளனர். புதுக்குடியிருப்பு வைத்தியசாலை தாதிஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

வன்னியில் ஒட்டுமொத்த தமிழினப்படுகொலை நடக்கிறது. மக்கள் துரத்தித்துரத்தி, கும்பல் கும்பலாக கொல்லப்படுகின்றனர். குடும்பம் குடும்பமாக கொல்லப்படுகின்றார்கள். படுகாயப்படுத்தப்படுகின்றனர். ஊனமாக்கப்படுகின்றனர். சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காகவே தமிழினப்படுகொலை இடம் பெறுகின்றது. சிங்களவர்களுடன் தமிழ்மக்கள் இணைந்து வாழ முடியாதென்ற நிலையை அரசு இதன் மூலம் உறுதிப்படுத்துகின்றது. என்றோ ஒருநாள் உலகம் உண்மையை புரிந்து கொள்ளும், நீதி பேசும் உங்களுக்காக பேசும் உலகம் நாளை எங்களுக்காக பேசும். தமிழர் தாயகம் தனிநாடாகும் நிலைக்கு நீங்கள் தான் கொண்டு செல்கிறீர்கள்.

நலன்புரி நிலையங்களென்ற பேரில் வவுனியாவில் தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. வன்னியிலிருந்து வருவோர் அங்கு சிறை வைக்கப்படுகின்றனர். பெண்கள் குளிப்பதற்காக ஆற்றுக்குச் சென்றால் இராணுவத்தினரும் கூடவே செல்கின்றனர். வன்னியிலிருந்து வரும் மக்களை தங்க வைப்பதற்காக 4 கிராமங்களை உருவாக்கியுள்ளதாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் கூறியுள்ளார். சொந்த நில முள்ள மக்களுக்கு அகதிமுகாம்கள் எதற்கு? சிங்கள, தமிழின விரோதத்தையே மேலும் மேலும் வளர்க்கின்றனர்.

யாழ்ப்பாணத்தில் துணைப்படைகள் இராணுவத்துடன் இணைந்துகொண்டு மக்களை ஆயுத முனையில் அச்சுறுத்தி ஊர்வலங்களை நடத்துகின்றார்கள். சுதந்திர தினம் கொண்டாட வைக்கின்றனர். இதேபோன்று கிழக்கில் கருணாவின் அடியாட்கள் மக்களை மிரட்டி ஊர்வலங்களை நடத்துகின்றனர். நாம் தமிழ் மக்களுக்காக கதவடைப்பு செய்யுமாறு அழைப்பு விட்டபோது வெறும் கதவடைப்பு செய்யக் கூடாதென இராணுவமும் துணைப்படையும் ஆயுத முனையில் அச்சுறுத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உண்ணாவிரதமிருந்த பங்குத் தந்தைகள் மிரட்டப்பட்டுள்ளனர். ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு விரட்டப்படுகின்றனர். கிழக்கில் கடத்தல், கொலை, கப்பம் அதிகரித்துச் செல்கின்றது. பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இன்னும் 1520 வருடங்கள் ஆட்சி புரிய வேண்டுமென்பதற்காக படை வீரர்களை ராஜபக்ஷ குடும்பம் பலி கொடுக்கிறது. அரச கட்டில்களை பாதுகாப்பதற்காக அப்பாவி படை வீரர்கள் பலி கொடுக்கப்படுகின்றார்கள். எமது போராட்டம் பிரபாகரனோடோ பிரேமச்சந்திரனோடோ முடிந்து விடாது. தமிழ் மக்களுக்கான அதிகாரங்களை பகிர அரசு முன்வராத வரையில் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியாது.

இந்தியாவோ அமெரிக்காவோ எந்தவொரு தீர்வையும் தமிழ் மக்கள் மீது திணித்து விட முடியாது. அவ்வாறானதொரு தீர்வுத்திட்டத்தை ஏற்கவும் தமிழ் மக்கள் தயாரில்லை. நாம் தமிழ் மண்ணுக்குச் சொந்தக்காரர்கள். எமது தாயகத்தை நாம் தான் ஆளுவோம். எமது பகுதிகளை நாம் தான் அபிவிருத்தி செய்வோம். இந்த உரிமைகள், அதிகாரங்கள் எமக்கு கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *