முன்னாள் குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க எதிர்வரும் மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிதாக உருவாக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றில் வேட்பாளராகவே இவர் எதிர்வரும் மேல் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.
சுசந்திகா தடகள விளையாட்டுகளில் இருந்து ஓய்வுபெறப்போவதாக கடந்தவாரம் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
முக்கிய அரசியல் கட்சியொன்றிலிருந்து அண்மையில் விலகிச் சென்ற குழுவினரே இப்புதிய கட்சியை உருவாக்கியுள்ளனர். இக்கட்சியின் தலைவர் மேல் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சுசந்திகா உட்பட பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களையும் அணுகியுள்ளதாகவும் அதற்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க கடந்த பொதுத் தேர்தலில் பொதுஜன ஐக்கிய முன்னணியில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இவரைப்போலவே தேர்தலில் போட்டியிடும் கிரிக்கெட் வீரர்கள் வெற்றிபெறுவார்கள் என்ற நம்பிக்கையுள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.