“முதலில் காசை கட்டு – காசு இல்லாவிட்டால் தொலைக்காட்சியை பார்த்து படி – அவர் பிரபலமான வாத்தி அவரோட வகுப்புக்கு 1500 தரனும்.” – இலவசக்கல்வியின் தரத்தை கெடுக்கிறதா..? zoom மூலமான கல்வி !

அண்மைய நாட்களில்  இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரோனா காரணமாக முழுமையான இலங்கையும் ஏதோ ஒரு வகையில் முடங்கிப்போய் இருக்கின்றது. முக்கியமாக இந்த காலகட்டங்களில் பாடசாலைகள் நிறுத்தப்பட்டுள்ளமையானது இணைய வழிக் கல்விக்கான கதவுகளைத் திறந்து விட்டுள்ளது. பாடசாலை நடக்கிறதோ இல்லையோ அரசாங்கத்தால் அறிவிக்கப்படுகின்ற தரம் 5 பரீட்சை,  தரம் 11 பரீட்சை,  தரம்13 பரீட்சைகள் என அனைத்துமே தவறாத நேரத்தில் முறையாக நடத்தப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

 

இணையம் மூலமாக கல்வி கற்றுக் கொள்ளுங்கள்,  தொலைக்காட்சி மூலமாக கல்வி கற்றுக் கொள்ளுங்கள்,  உங்களிடம் இணைய தொலைபேசி – தொலைக்காட்சி வசதி இல்லாவிடில் கல்வி அமைச்சுக்கு தெரியப்படுத்துங்கள் என்றெல்லாம் அரசு ஏதோ ஒரு வகையில் தன்னுடைய கல்வி சார்ந்த நகர்வுகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றது. இலங்கை ஒரு இலவச கல்வி வழங்கும் நாடு என்கின்ற அடிப்படையில் தன்னுடைய கல்வி நடவடிக்கைகளை ஏதோ ஒரு வகை இலவசமாக கொடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து கொண்டே இருக்கின்றது. ஆரோக்கியமானது தான்.

பரீட்சைகள் – பாடத்திட்டங்கள் தொடர்பான விவாதத்திற்கான கட்டுரை அல்ல இது. தென்னாசியாவின் கல்வியறிவு வீதம் அதிகம் உடைய நாடுகளில் ஒன்றாக இலங்கை தனிச்சிறப்பு பெற்று இருக்கின்ற நிலையில் அதற்கான அடிப்படைக் காரணம் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன இலவசக் கல்வித் திட்டமேயாகும். இலங்கையின் நகர்ப்புறங்கள் தொடங்கி கடைமட்ட கிராமம் வரை இன்றும் உயிர்த்துடிப்புடன் இயங்கும் நூற்றுக்கணக்கான பாடசாலைகள் உள்ளன. ஆக இலவசக் கல்வியை பொருட்டு குறைசொல்ல முடியாத ஒரு நிலையில் எங்களுடைய நாடு இருக்கின்றது.  மறுக்கமுடியாத உண்மை.
SC stays HC verdict asking schools to provide gadgets, internet to poor students | India News - Times of India
விடயம் அதுவல்ல. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த வருடம் பாடசாலை மாணவர்களுக்கான நிகழ்நிலை வகுப்புகள் (zoom) ஆரம்பிக்கப்பட்டிருந்தன. கடந்த வருடமே இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துவிட்டது இணையவழிக் கல்வி திட்டம் மிகப்பெரும் தோல்வியடைந்த ஒரு திட்டமாக இலங்கையில் இருக்கின்றது என. முக்கியமாக கிராமங்களில் வலையமைப்பு வசதிகள் முறையாக சென்றடையாமை, பல ஏழை சிறுவர்களின் வீடுகளில் தொலைபேசி இன்மை, எனப் பல காரணங்களை குறிப்பிட்டு ஆசிரியர் சங்கம் அந்த தகவலை வெளியிட்டிருந்தது. எனினும் தொலைக்காட்சிகள் மூலமாக கல்வி அமைச்சின்  கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன – இன்றும் மேற்கொள்ளப்பட்டு கொண்டிருக்கின்றது. இந்தநிலையில் இலங்கையின் தொலைக்காட்சி மூலமான கற்பித்தல் முறைமை கூட 60 வீதம் தோல்வியடைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் இந்த வருடம் அறிவித்துள்ளது. எனவே இந்த இணைய வழி கல்வி மற்றும் தொலைக்காட்சி கல்வி என்பன தொடர்பாக கல்வி அமைச்சு மேலதிகமான ஆய்வுகளை மேற்கொண்டு அதற்கான முறையான திட்டங்களை அமுல்படுத்தும் என்பதில் சந்தேகம் ஒன்றுமில்லை. ஆக ஏதோ ஒரு வகையில் அரசின் இணைய வழிக்கல்வி திட்டங்கள் தோல்லியடைந்துள்ள நிலையில் ஒழுங்கான கல்வியை பெற மாணவர்கள் தனியார் கல்வி நிலையங்களின் இணையவழி – நிகழ்நிலை வகுப்புக்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.
உண்மையிலேயே இணைய வழி மூலமாக பாடசாலைகளில் அதிகம் கற்பிக்க முடிவதில்லை என்பதை ஏற்றுக் கொண்டாக வேண்டும். பாடசாலை குறிப்பிடக்கூடிய தவணைகளுக்குள் பாடத்திட்டங்களை முடித்து விட வேண்டிய தேவை அதிகம் காணப்படுகின்றது. எனவே பாடத்திட்டங்களை முடிக்காவிட்டால் பாடசாலை ஆசிரியர்கள் பதில் சொல்ல வேண்டிய உயர் அதிகாரிகள் பலர். எனவே பாடசாலையை பொறுத்தவரையில் ஆசிரியர்கள் ஓட்டமும் நடையுமாகவே கற்பிக்க வேண்டிய தேவை இன்றைய காலங்களில் அதிகம் இருக்கின்றது. முன்னைய காலங்களை காட்டிலும் இன்றைய நிலையில் பாடத்திட்டங்களின் அளவுகளும் அதிகரிக்கப்பட்டுள்ள அதே நேரத்தில் கொரோனா காரணமான விடுமுறையும் அதிகரித்துள்ளது.  வேறு வழி இல்லை ஆசிரியர்கள் மிக வேகமாக கற்பிக்க வேண்டிய தேவை இன்னும் அதிகரித்துள்ளது.  அப்படியானால் மாணவர்கள் வேறு வழியை தான் தேட வேண்டும். இந்த நிலையில் மாணவர்கள் பணம் கட்டியாவது கற்போம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றனர். எனினும் இதனை பல தனியார் கல்வி நிலையங்கள் தங்களுக்கான வாய்ப்பாக பயன்படுத்திவிடுகின்றனர்.
online class 1200
இலங்கை ஒரு இலவசக்கல்வி வழங்கும் நாடு என்ற அடிப்படையில் ஒரு பணக்காரனின் வீட்டு பிள்ளையும் ஒரு ஏழையின் பிள்ளையும் சமமாகவே பாடசாலைகளில் பெரும்பாலும் நடத்தப்பட்டு கற்பிக்கப்படுகின்றனர். எனவே வறுமை இலங்கையின் கடைக்கோடி கிராமம் மாணவர்களின் கல்வியை கூட பாதித்தது கிடையாது. ஆனால் இந்த இணைய வழி கல்வி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் ஏதோ ஒரு வகையில் இலங்கையின் பாடசாலை மாணவர்கள் கல்வி தொடர்பான ஒரு விதமான மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. முக்கியமாக வறுமை இந்த இணைய வழிக் கல்விக்கு மிகப்பெரும் தடையாக உள்ளது. தொலைபேசி ஏழை மாணவர்கள் எல்லோர் வீடுகளிலும் இருப்பது கிடையாது. மேலும் தொலை பேசி இருந்தால் கூட அந்த தொலைபேசிகளை எப்படி பாவித்து இந்த இணைய வழி கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்பது மாணவர்களுக்கும் தெரியாது அவர்கள் சார்ந்த பெற்றோருக்கும் தெரியாது. இது மிகப் பெரும் குறை. அடுத்த தலைமுறைகளில் இந்த பிரச்சனை பெரிதாக இருக்காது. ஆனால் இன்றைய தேதிக்கு இது ஒரு பெரும் பிரச்சனை தான்.
நாள் கூலிக்காக ஓடிக்கொண்டு அந்த வருமானத்தில் தன்னுடைய பிள்ளைகளை படிக்க வைத்துக் கொண்டிருக்கின்ற பெற்றோர்களுக்கு இந்த இணைய வழிக் கல்வி மிகப் பெரும் சுமையினையும் மன உளைச்சலையும் வழங்குகின்றது. இந்த இணைய வழி கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன சில ஆசிரியர்கள் ஆரோக்கியமான வழியில் இலவசமாக கல்வியை வழங்குகின்றனர். உண்மைதான் அது நேரம் அறிந்து செய்யப்படுகின்ற உதவி வரவேற்கத்தக்கது. அதுபோல கற்பிப்பதற்காக ஒரு குறிப்பிட்ட அளவிலான தொகையை பெற்று மாணவர்களுக்கு கல்வியை வழங்குகின்ற ஒரு சில ஆசிரியர்களின் சேவையும் பாராட்டத்தக்கது. இங்கு பேசுபொருள் இவர்களும் அல்ல.
அண்மையில் என்னுடைய பக்கத்து வீட்டு பையன் ஒருவனின் தந்தை என்னிடம் பேசும்போது கூறியது “நாங்களே நாள் கூலிக்காக வேலை செய்து உழைத்துக் கொண்டிருக்கும் ஒரு கூட்டம். மகள் 13 படிக்கிறாள். போன்ல தான் ஏதோ படிக்கனுமாம் என்று சொல்லி பெட்டை  கேட்டதால பாடசாலை லீவு விட்டதும் அந்த டிஸ்பிலே உடைஞ்ச போன கிடந்த கொஞ்சம் காசு போட்டு திருத்தி கொடுத்தன். சரி இனிமே மகள் படிக்கலாம் என்டு நினைச்சா – இந்த இன்டர்நெட் வகுப்புக்காக மாசம் 5000 க்கு மேல் கேட்குறாங்கள். தொடக்கம் மூவாயிரம் அப்படித்தான் காசு இருந்தது. அது கட்டவே கஷ்டம் இப்ப இன்னும் ஒரு கிளாஸ் மேலதிகமாக போகுது. பயணத் தடை காலத்துல அந்த 5,000 ரூபாய்க்கு நான் எங்க தம்பி போவேன். கொரோனா வந்து செத்தாலும் பரவாயில்லை அந்தப் பாடசாலையை திறந்தா கொஞ்சம் நிம்மதியா தானும் இருக்கலாம்.” என ஒரு வேதனை தோய்ந்த குரலில் கூறினார்.
பிறகு மேலதிகமாக விசாரித்தபோது தெரிந்தது அந்த மாணவி வழமையாக போகின்ற தனியார் கல்வி நிலைய ஆசிரியர்கள் தான் அந்த வகுப்பை செய்கிறார்களாம். அந்த மாணவி தரம் 11 இல் அந்த தனியார் கல்வி நிலையத்திலேயே படித்திருந்தாள். அதுபோல 12ஆம் தரம் வந்ததும் தொடர்ந்து சுமார் இரண்டு வருடங்களாக அவள் அங்கு தான் படித்துக் கொண்டிருக்கிறாள். சரி அந்த மாணவி அங்கே தானே படிக்கிறார். அதாவது கடந்த பல வருடங்களாக அந்த மாணவி அந்த கல்வி நிலையத்திலேயே படித்து அந்த கல்வி நிலையத்திற்கு என பல ஆயிரம் ரூபாய்களைக் கொடுத்து இருக்கிறாள். அவளை தன்னுடைய மாணவியாக அந்தக் கல்வி நிலையம் நினைத்து அரவணைத்திருக்க வேண்டியது அவர்களுடைய கடமை. மாறாக குடும்ப நிலையை கூறி அந்த மாணவி இந்த மாத வகுப்புக்கான பணம் கட்ட முடியாது என கூறியபோது அந்த மாணவியை குறித்த தரம் 13 மாணவர்களுக்கான தனியார் கல்வி நிலையத்தின் WhatsApp குழுமத்தில் இருந்து நீக்கியுள்ளதுடன் பணத்தைத் திரட்டி முடிய அழைப்பை ஏற்படுத்துங்கள் எனவும் கூறியுள்ளனர்.
 இதுதான் இன்றைய தேதியில் இணைய வழிக் கற்பித்தலில் ஈடுபடும் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் செய்கின்ற வேலை. சுதந்திரத்திற்கு பின்னரான  இலங்கையை பொறுத்தவரை இன்று வரை தரமிழகாக்காது காணப்படுகின்ற ஒரு சில விடயங்களில் கல்வியும் ஒன்று. ஆனால் இந்த இணைய வழி கல்வி மூலமாக அந்த தரம் இழக்கப்பட்டு விடுமோ என்கின்ற அச்சம் மேலோங்குகிறது. தனித்து அந்த ஒரு மாணவிக்கு மட்டுமே நடக்கின்ற விடயம் அல்ல இது. இதுபோன்ற பிரச்சனைகளுக்கு பல ஆயிரம் ஏழை மாணவர்கள் உள்ளாகின்றனர் இதுவே உண்மை.
வருடம் முழுவதும் தனியார் கல்வி நிலையங்களில் மாதப்பணம் , கருத்தரங்குக்கான பணம் என மேலும் அதிக அளவில் உழைத்துக் கொள்கிறார்கள் தானே இந்த இடர் காலங்களிலாவது கூலித் தொழில் செய்யும் குடும்பங்களின் நிலையை உணர்ந்து ஓரளவுக்காவது தொகையை குறைத்து வகுப்புகளை செய்கின்ற மனச்சாட்சி உடையவர்களாக குறித்த ஆசிரியர்கள் இல்லை. சொல்லப்போனால் இன்று ஆசிரியர்களாக இருக்கக்கூடிய பல்லாயிரக்கணக்கானோரை உருவாக்கியது இலங்கையின் இலவசக் கல்வி என்பதை மறந்துவிட்டவர்களாகவே இந்த இணைய வழிக் கல்விக்காக அதிக பணம் பெறும் ஆசிரியர்கள் செயற்படுகின்றனர்.
இன்னும் சில இடங்களில் இணையவழி நிகழ்நிலை வகுப்புக்காக இணைகின்ற போது பொது வெளியில் வைத்து பணம் கட்டாத மாணவர்களின் பெயர்களை வாசித்து அவர்களை பணம் கட்டும் வரை குழுமத்திலிருந்து விலக்குவதாக கூறுகின்ற கொடுமைகளும் அரங்கேறுகின்றன. இங்கு இரண்டு விதமான பிரச்சினைகள் மாணவர்களை மிகவும் தாக்கி விடுகின்றன.இந்த இணையக்கல்வி  பணம் நோக்கி இந்த சமூகம் ஓட வேண்டும் என உந்துவதுடன் பணம் இல்லாதவர்கள் படிப்பதற்கு தகுதியில்லாதவர்கள் என்ற சிந்தனையையும் மாணவர்களிடையே விளைத்து விடுகின்றது என்பதே உண்மை.
சில இணைய வகுப்புக்களில் 3000 நான்காயிரம் என்றெல்லாம் மாணவர்கள் படிக்கின்றனர். பாவம் ஒரு சில ஏழை மாணவர்கள் பங்கு பெறுவதால் தான் அவர்களுக்கு உழைப்பு இல்லாமல் போய்விட போகிறது. சில ஆசிரியர்களுடைய நியாயப்படுத்தல் வாதங்கள் நீங்களெல்லாம் ஆசிரியர்களா..? என்று சிந்திக்க வைத்து விடுகின்றது.
என்னிடம் பேசிய அந்த கூலித்தொழில் செய்கின்ற தந்தையின் மகள் கற்கின்ற கல்வி நிலையத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி இருந்தேன். பணம் எவ்வளவு எனக்கேட்டிருந்ததுடன் இல்லாத பிள்ளை தானே ஒரு பிள்ளையை இலவசமாக இணைத்துக் கொள்வதால் என்ன நடந்துவிடப் போகிறது என கேட்டேன். அந்த நிர்வாகி என்ன நினைத்தாரோ தெரியாது. ஒருவிதமான அதிகாரத் தொனியில் கதைக்க ஆரம்பித்தார். “ஒரு நிகழ்நிலை வகுப்புக்காக நாங்கள் எவ்வளவு செலவு செய்கிறோம் என்பது இங்கு யாருக்கும் தெரியாது. ஒவ்வொரு ஆசிரியர்களும் மிகப் பிரபலமான ஆசிரியர்கள். அவர்கள் கேட்கின்ற தொகையை நாங்கள் வழங்கியே ஆகவேண்டும். ஒவ்வொரு பிள்ளைகளும் இப்படி வறுமை வறுமை என கூறினால் நாங்கள் கல்வி நிலையத்தை இழுத்து மூடிவிட்டு செல்ல வேண்டியதுதான். அதுதான் பாடசாலைகள் இலவச வகுப்புகள் நடக்கின்றன தானே – மேலதிகமாக தொலைக்காட்சி வகுப்புகளும் நடக்கின்றன தானே அவற்றில் உங்கள் பிள்ளைகளை இணைத்துக்கொள்ள சொல்லுங்கள்.” என கோபமாக கூறிவிட்டு என் நம்பரையே ப்ளோக் செய்துவிட்டார் அந்தக் கல்வி கற்ற – கற்பிக்கின்ற பிரஜை. இவர்களிடம் என்னத்தைச் சொல்லி நிலையை ஏற்க வைப்பது…?
என்னுடைய வாதம் வகுப்புகளுக்கான பணம் வாங்கக் கூடாது என்பதல்ல. நியாயமான அளவு மனச்சாட்சியின் படியாக நிதியை அறவிடுங்கள் என்பதே என்னுடைய வாதம். தனியார் கல்வி நிலையங்கள் இயங்குகின்ற காலங்களில் மாணவர்களின் தொகை தேவை. ஆனால் இணையவழிக் கல்வி காலங்களில் மாணவர்களின் பணம்தான் தேவையாக இருக்கிறது பலருக்கு. அன்றாடம் வேலைக்கு சென்று உழைத்து ஆயிரம் ரூபாய் நாட்கூலி பெற்றால்ல்தான் இலங்கையில்  அதிகமான குடும்பங்களில் அடுப்பு எரியும். அந்த ஆயிரம் ரூபாயில் தான் மாணவர்களின் கல்விச் செலவுகள் வேறு.  ஆனால் இன்று பயண தடை என நாடு கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களாக முடங்கி இருக்கின்றது. வேலை வாய்ப்புகள் இல்லை. பொருட்களுக்கான விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இப்படியாக பல பிரச்சினைகள் அவர்களுக்கு.  சரி அரசாங்கம் கொடுத்த 5000 ரூபாய் இருக்கிறது என்று எடுத்துக்கொண்டால் கூட
“அவர் பிரபலமான ஆசிரியராம்..; அவருடைய ஒரு வகுப்புக்கு பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் வருகின்றார்கள். அப்படியான அவர் போல ஒரு மூன்று ஆசிரியர்களிடம் மாணவர்கள் படிக்க வேண்டும். அதற்கான தொகை 5,000 எனக்கூறி அரசாங்கம் கொடுத்த அந்த 5000 குடும்பத்தில் ஒரு மாணவனின் படிப்புகாகவே செலவழிந்து விடுகிறது. இங்கு இருப்பவர்கள் கட்டிவிடுவார்கள் அது பிரச்சனை இலலை..: இல்லாதவனும் இல்லாதவனின் பிள்ளைகளும் என்ன செய்வார்கள் என்பது தான் என்னுடைய ஆதங்கத்திற்கான அடிப்படை காரணம்.
கடந்த மாதம் ஒரு வகையில் சேர்த்து வைத்திருந்த பணத்தை கட்டிய மாணவனால் இந்த மாதம் பணத்தை கட்ட முடியவில்லை. உண்மைதான் பயணத்தடை அவனால் கட்ட முடியாது. தந்தை நாட் கூலி. பாவம்  பிள்ளை என்ன செய்யும்..? மாணவன் தொடர்பு கொண்டு கேட்டால் பணம் செலுத்திய ஆதாரத்தை புகைப்படம் எடுத்து அனுப்புங்கள் அப்பொழுதுதான் நிகழ்நிலை வகுப்புக்கான ID password , அனுப்புவோம் என்று கூறுமளவிற்கு ஆசிரியர்கள் மனச் சாட்சி இல்லாது வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறார்கள்.
 இதே நாட்டில்தான் யுத்த காலங்களில் தன் உயிரையும் பணயம் வைத்து நம் உயிரைக் காப்பாற்றிய ஆசிரியர்கள் வாழ்ந்தார்கள். வீட்டில் பிரச்சனை என்பதால் தன்னுடைய வீட்டிலேயே மாணவர்களை அழைத்துச் சென்று தன் செலவிலேயே படிப்பித்த ஆயிரம் ஆசிரியர்கள் வாழ்ந்த நாடு இது. இன்று உயர் பதவியில் இருக்க கூடிய ஒவ்வொருவரும் இதுபோன்ற சுயநலமற்ற யாரோ ஒரு ஆசிரியரை சரி சந்தித்து இருப்பார்கள். அவர்களுடைய தியாகத்தினால் தான் இன்று நீங்கள் ஒவ்வொருவரும் ஆசிரியர்களாக இருக்கிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். அவர்கள் உங்களிடம் அதிக அளவிலான தொகையை கேட்டு உங்களை விரட்டி இருந்தால் உங்களால் இன்றைய நிலையை எட்டி இருக்க முடியுமா என்பதை சற்று சிந்தனை செய்து பாருங்கள்.
முதலில் மனசாட்சிக்கு பயப்படுங்கள். அடுத்த மனிதருடைய பிரச்சினையை சிந்தியுங்கள். தனியார் கல்வி நிலையங்கள் மீது அவ்வளவு காழ்புணர்ச்சி இருக்குமாயின் – அறவிடப்படும் பணம் அதிகமாக இருக்குமாயின் உங்களுடைய பிள்ளைகளை பாடசாலைகளில் நடக்கும் இணைய வழிக் கல்விக்கே  அனுப்புங்கள் என இந்த இணைய வழிக் கல்வியில் காசு பறிக்கும் ஆசிரியர்கள் ஏதோ நியாயம் கதைப்பது போல கூறிவிடுகின்றனர்.
எப்படியாவது கற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என எண்ணி  வேறு வழியை தேடி வரும் மாணவர்கள் இவ்வாறான தனியார் இணையவழிக் கல்விகளில் இணைந்து கொள்கின்றனர். அவர்களின் கல்வி மீதான ஆர்வத்தை புரிந்து கொண்டு இந்த இணைய வழியில் கற்பிக்கும் ஆசிரியர்கள் கொஞ்சம் சலுகை கொடுக்க முன்வரவேண்டும். காசு தானே. கொரோனா பயணத்தடை காலம் முடிவடைய சேர்த்துக் கொள்ளலாம். இன்றைய சூழலில் இவர்களின் நிலையை அறிந்து ஓரளவுக்காவது மனச்சாட்சியுடன் செயற்படுங்கள். கல்வி ஒருவிதமான புனிதப் பணி போன்றது தான். அதற்காக இலவசமாக கற்பியுங்கள் என்றெல்லாம் கேட்கவில்லை. ஏழ்மையான குடும்பங்கள் தான் இங்கு அதிகம் உள்ளன. அவர்கள் தொடர்பாக அதிகம் கவனம் செலுத்துங்கள். உண்மையிலேயே மூன்று பாடங்களுக்காக 5000 ரூபாய் வாங்குவதெல்லாம் கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள முடியாதது. மனசாட்சிக்கு பயப்படுங்கள். பணம்  செலுத்தக்கூடிய மாணவர்களிடமிருந்து நீங்கள் குறித்த தொகையை வாங்குகின்ற அதே நேரம் வறுமைக்கோட்டிற்குட்பட்ட- பணம் இல்லாத மாணவர்கள் மீது குறித்த தொகையின் அரைவாசியை அறவிடுவதற்கான முன்வாருங்கள். போதுமானது.
 இணையவழிக் கல்வி தொடர்பாக புறுபுறுத்து கொண்டு இருக்கும் சமூக ஆர்வலர்களுக்கு – கோயில்களிலும் தேவையற்ற ஆடம்பரங்களுக்காகவும் எவ்வளவோ கொட்டித் தீர்க்கின்றோம். முடிந்தால் உங்கள் அயலில் உள்ள ஏழை மாணவர்களின் இணைய வழிக் கல்விக்கான ஏதாவது உதவிகளை செய்ய முன்வாருங்கள். உங்கள் வீடுகளில் பாவிக்கப்படாது பூட்டி வைத்தபடி சிறிய பழுதுகளுடன்  இருக்கக்கூடிய அண்ட்ராய்ட் போன்களை  உங்கள் அயலில் இருக்கக்கூடிய ஏழைச் சிறுவர்களுக்கு திருத்திக் கொடுக்க முற்படுங்கள். அவர்களுக்கான டேடாகார்ட் வசதிகளை செய்து கொடுங்கள்.
மனிதர்களாக இணைவோம் .
எல்லாம் ஒரு நாளில் அழிந்துவிடும்.
இங்கே எஞ்சி நிற்கப் போவது மனிதம்  மட்டுமே. சிந்தனை செய் மனமே. 
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *