மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வை முன்வைக்காமல் யுத்தத்தை முன்னிலைப்படுத்தி அரசு தேர்தல் பிரசாரம் – சாடுகிறது ஜே.வி.பி.

jvp-net.jpgமக்கள் பிரச்சினையை தேர்தல் தொனிப்பொருளாக முன்வைக்காது யுத்தத்தை முன்னிறுத்தி பிரசாரத்தில் அரசாங்கம் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ள ஜே.வி.பி, மாகாண சபைகளுக்கு அமைச்சர்களின் உறவினர்களையும் சமூக விரோதிகளையும் அனுப்ப முயற்சிப்பதாகவும் சாடியுள்ளது.

இத்தகைய கும்பலிடம் மாகாண சபைகள் சிக்கிவிடாது பாதுகாப்பதற்கு மக்கள் தமது வாக்குகளை நாட்டின் பிரிவினைக்கு இடமளிக்காத மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக செயற்படும் ஜே.வி.பி.க்கே வாக்குகளை அளித்து சக்தியளிக்க வேண்டுமென அக்கட்சி கோரியுள்ளது.

கொழும்பு தேசிய நூலகத்தில் ஜே.வி.பி நேற்று வியாழக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் அதன் செயலாளர் ரில்வின் சில்லா கலந்து கொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் பேசுகையில்:

வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கம் வெற்றி பெறுவதற்கு தனது முழுப்பலத்தையும் பயன்படுத்துகின்றது. அரச சொத்துகளை துஷ்பிரயோகம் செய்வதுடன் தேர்தல் சட்ட விதிகளை மீறுவது மற்றும் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவதென அனைத்தையும் மேற்கொள்கின்றது.

தேர்தல் வன்முறைச் சம்பவங்களை எடுத்து நோக்கும் போது அரசாங்கமே அதிகளவான வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டதைக் காணலாம். அச்சுறுத்துவது முதல் அரச வளங்களை துஷ்பிரயோகம் செய்வது மற்றும் தேர்தல் சட்டவிதிகளை மீறுவது என அனைத்திலுமே பெரியளவில் ஈடுபட்டதனையும் அவதானிக்கலாம்.

அரச கட்டிடங்கள் மற்றும் வாகனங்களை தனது தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்துவதுடன், அனுமதியின்றி தேர்தல் பிரசாரத்திற்கு ஒலிபெருக்கி வாகனங்களை பயன்படுத்துகின்றது. சட்ட விதிகளின் படி ஒரு வேட்பாளர் ஒரு ஒலிபெருக்கி வாகனத்தை மட்டுமே பயன்படுத்த முடியுமென்ற நிலையில் அரச தரப்பு தேர்தல் வேட்பாளர்கள் ஒன்றுக்கு அதிகமான ஒலிபெருக்கி வாகனங்களை பயன்படுத்துகின்றனர்.

அது மட்டுமன்றி, வரம்புக்கு மிறிய வகையில் ஒலி பெருக்கியின் சத்தங்களையும் கூட்டியும் பிரசாரத்தில் ஈடுபடுவதால் ஒலி மாசடைதலை ஏற்படுத்தி வருகின்றனர்.

அரசாங்கம் தனது வெற்றிக்காக இது மட்டுமன்றி, மக்களின் வாக்குகளை பிரித்தெடுத்து வெற்றிபெறுவதற்கு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது குறித்து பேசாது இராணுவத்தினர் தமது உயிர்களை தியாகம் செய்து பெற்றுவரும் வெற்றிகளை பொய்களைக் கூறி தனது வெற்றியாக காட்ட முனைகின்றது.

இவ்வாறு செய்து வெற்றி பெற்று மாகாண சபையை அரசாங்கம் கைப்பற்றுவதற்கு காரணம். அங்கும் குடும்ப ஆட்சியை நிலைநிறுத்துவதற்கேயாகும். இரு மாகாண சபை வேட்பாளர்களை பார்க்கின்ற போது அமைச்சர்களின் சகோதரர்களாகவும் மாமன், மருமகன் போன்ற உறவு முறையை நாம் காணலாம். அது போல் மாகாண சபையை அதிகாரத்துடன் கொண்டு நடத்த குண்டர்கள் பாதாள உலகத்தினர் குடுகாரர்கள் போன்ற சமூக விரோதிகளையும் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது.

இவர்களின் வெற்றிக்காக அரச ஊடகங்களை பயன்படுத்துகின்றது. இவர்களுக்காக பிரசாரம் செய்யும் ஊடகங்கள் அரச ஊடகங்கள் அல்ல. அது மாறாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஊடகமாகும். தனது வெற்றிக்காக அரசாங்கம் யுத்த வெற்றியையும் சகல பலத்தினையும் பாவித்து மக்களை ஏமாற்றுவோரை நிராகரித்து உங்கள் வாக்குரிமையை பாதுகாக்குமாறு கோருகின்றோம் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *