வன்னி மக்களது பாதுகாப்பிற்கான வலியுறுத்தல் பிரார்த்தனை நிகழ்வு 9 ஆம் திகதியிலிருந்து யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்று வருகிறது. போர் நெருக்கடிகளால் எல்லா வகையிலும் பாதிப்படைந்துள்ள எமது மாணவர்களது உளநிலைக்கான அமைதிக்கும் எமது மக்களின் பாதுகாப்பான வாழ்வுக்கான வலியுறுத்தலாகவும் “மௌனப் பிரார்த்தனையும் உபவாசமும்’ என்ற இந்த நிகழ்வை யாழ்.பல்கலைக்கழக சமூகம் நடத்தி வருகிறது.
ஈழத்தில் என்றுமில்லாதவாறு மக்களது சாவுகளும் துன்பங்களும் அதிகரித்துள்ளன. உணவு, உடை, தஞ்சமடைவதற்கான இடம் என்பவற்றுக்காக அப்பாவி வன்னி மக்கள் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்ளுகிறார்கள். தாங்க முடியாத அனுபவிக்க முடியாத இந்த துன்பங்களிலிருந்து எமது மக்களை காப்பாற்றும்படி அனைவரையும் அவசரமாக வேண்டிநிற்கிறோம்.
வகைதொகையற்ற அழிவுகளையும் கசப்புகளையும் தருகின்ற போரை நிறுத்துவதன் மூலம் எமது மக்களை அழிவிலிருந்து காப்பாற்ற மனிதநேய அடிப்படையில் முன்வரும்படி அனைவரையும் வேண்டுகிறோம். இன்றைய மிகவும் துன்பகரமான சூழ்நிலையில் அமைதியான வழியில் தீர்வு காண்பதற்கும் மக்களை அழிவிலிருந்து காப்பதற்கும் பின்வரும் கோரிக்கைகளை யாழ்.பல்கலைக்கழகம் வலியுறுத்துகிறது. மக்களின் உயிர்ப்பலியை உடனடியாக தடுப்பதுடன், இடம்பெயரச் செய்தல் போன்ற நெருக்கடிகளை தவிர்க்க வேண்டும். இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டு பிரதேசங்களிலுள்ள முகாம்களில் தங்கியிருக்கும் வன்னி மக்களை மனிதாபிமான முறையில் நடத்த வேண்டும். போர் நடவடிக்கையில் இருந்து விடுபட்டு சமாதானத்திற்குச் சென்று அமைதியை உருவாக்க வேண்டும். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை, மரபுவழித்தாயகம், தமிழ்த்தேசியம் என்பவற்றுக்குள்ளான தீர்வை வழங்கவேண்டும். ஈழத்தில் சமாதானத்தை ஏற்படுத்த சர்வதேச சமூகம் உடனடியாக வலியுறுத்த வேண்டும்.
எமது மக்களது சாவுகளும் அவர்கள் அனுபவிக்கின்ற துன்பங்களையும் தவிர்த்து, அமைதியை ஏற்படுத்தும்படி மிகவும் அவசரமான வலியுறுத்தலாகவும் எமது மாணவர்களின் ஆத்ம அமைதிக்காகவும் இந்த பிரார்த்தனையும் உபவாசமும் நாள்தோறும் நடைபெறுகின்றது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.