ஆஸ்திரேலியா அணி பங்காளதேஷில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளையும் பங்காளதேஷ் வென்றிருந்தது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வென்ற பங்காளதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது .
அதன்படி, பங்காளதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 இலக்கு இழப்புக்கு 127 ஓட்டங்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் மக்மதுல்லா அதிகபட்சமாக 52 ஓட்டங்கள் எடுத்தார்.
ஆஸ்திரேலியா அணி சார்பில் நாதன் எல்லிஸ் 3 விக்கெட், ஹேசில்வுட், சாம்பா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 128 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. ஆனால் வங்காளதேச அணியினரின் துல்லியமான பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கால் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா திணறியது.
தலைவர் வேட் ஒரு ஓட்டத்தில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். மெக்டொமெட்டுடன் ஜோடி சேர்ந்த மிட்செல் மார்ஷ் 63 ஓட்டங்கள் சேர்த்தார்.
மெக்டொமெட் 35 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மிட்செல் மார்ஷ் அரை சதமடித்து 51 ஓட்டங்களில் வெளியேறினார். அடுத்து இறங்கிய ஹென்ரிக்ஸ் 2 ஓட்டங்களில் பெவிலியன் திரும்பினார்.
ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற கடைசி 4 ஓவரில் 38 ஓட்டங்கள் தேவைப்பட்ட போதும் பங்காளதேஷ் அணியின் பந்து வீச்சை ஆஸ்திரேலியா அணியால் எதிர்கொள்ள முடியவில்லை.
இறுதியில், ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் இழப்புக்கு 117 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து பரிதாபமாக தோற்றது. இதன் மூலம் 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வங்காளதேசம் அபார வெற்றி பெற்றது. அத்துடன் டி20 தொடரைக் கைப்பற்றி தொடரில் 3-0 என முன்னிலை வகிக்கிறது. ஆட்டநாயகன் விருது மக்மதுல்லாவுக்கு அளிக்கப்பட்டது.
பங்காளதேஷ் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை முதல் முறையாகக் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.