ஆப்கானிஸ்தான் தொடக்கமும் அல்ல முடிவும் அல்ல : மேற்குலகின் தலையீடுகள் எப்போதும் ஆபத்தானதே !

இன்று ஆப்கானின் நெருக்கடிகள் ஒன்றும் புதில்ல. அமெரிக்கா, பிரித்தானியா போன்ற மேற்கு நாடுகள் காலம் காலமாகச் செய்துவருகின்ற குறளி வித்தைகளின் தொடர்ச்சியே. செல்வத்தால் கொழுத்த மேற்கு நாடுகள் ஐநா வின் பொது உடன்பாடு இன்றி. ஏனைய நாடுகளில் தலையீடு செய்வது தங்களின் சொந்த நலன்களுக்காக மட்டுமே. அதனால் இத்தலையீடுகள் பெரும்பாலும் அந்நாடுகளைச் சீரழிவிற்குள்ளேயே தள்ளி விடுகின்றன. அண்மைய தசாப்தங்களில் வளைகுடா யுத்தம் – ஈராக், லிபியா, யேர்மன், ஆப்கானிஸ்தான், சிரியா ஆகிய நாடுகளில் தலையீடு செய்து அங்கிருந்த அதிகாரக் கட்டமைப்புகளை உடைத்து தங்களுக்கு சாதகமான பொம்மைத் தலைமைகளை உருவாக்கும் முயற்சி எதனிலும் மேற்குலகம் வெற்றிபெறவில்லை.

ஜனநாயகத்தை ஏற்றுமதி செய்கின்றோம் என்ற பெயரில் இந்த மேற்கு நாடுகள் நேரடி அல்லது மறைமுக தலையீடுகளைச் செய்து அந்நாடுகளின் மக்களையும் வளங்களையும் அழித்து அந்நாடுகளை பல தசாப்தங்களுக்கு முன்னேற முடியாதளவிற்கு சீரழித்து வந்துள்ளன. ஈராக், லிபியா போன்ற நாடுகளில் ஆராஜகப் போக்குகளை ஆரம்பத்தில் ஊக்குவித்தவர்களும் இந்த மேற்கு நாட்டினரே. ஈராக் அதிபராக இருந்த சதாம் ஹுசைனுக்கு உயிரியல் ஆயுதங்களை வழங்கியது, லிபிய அதிபராக இருந்த கேர்ணல் கடாபிக்கு ஆயுதங்கள், நிதியை வழங்கியது மேற்கு நாடுகளே. ஆப்கானிஸ்தானில் முஜாஹிதீன்களையும் தலிபான்களையும் தொடர்ந்து அல்ஹைடா பின்லாடனையும் வளர்த்துவிட்டது இந்த மேற்குலகமே. சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் க்கு ஆயுதம் வழங்கி வளர்த்ததும் இவர்களே. இப்போது தலிபான்களோடு பேச்சுவார்த்தை நடாத்தியதும் இந்த மேற்குலகமே.

இவ்வாறெல்லாம் சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுக்கும் இந்த மேற்குலகின் நடவடிக்கைகள் தங்களுக்கு லாபத்தை தரவில்லை என்றால், அவர்கள் அம்போ என்று அந்த நாடுகளை கைவிட்டு ஓடிவிடுவார்கள். இதுதான் ஒவ்வொரு தலையீட்டின் போதும் நடைபெற்றது. அதுவே ஆப்கானிஸ்தானிலும் இன்று நடந்து கொண்டிருக்கின்றது. இதற்கு முன்னர் அமெரிக்க நேட்டோ படைகளுடன் சேர்ந்து போரிட்ட குர்திஷ் போராளிகள் கைவிடப்பட்டனர். அமெரிக்க துருப்புக்கள் மீளப்பெறப்பட்ட போது குர்திஷ் வீரர்கள் ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு விடப்பட்டனர். அமெரிக்க நேசநாட்டுப் படைகளுக்கு மொழிபெயர்ப்பு மற்றும் உதவிகளுக்கு உதவிய உள்ளுரவர்கள் பல நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டனர். இவர்களில் பல நூற்றுக்கணக்கானோரை பயங்கரவாதிகளிடம் கைவிட்டுவிட்டே இந்த மேற்கத்தைய படைகள் வெளியேறின. வெளியேறிக் கொண்டிருக்கின்றன.

இதே மாதிரியான அரசியல் சூழல் இலங்கையிலும் இருந்தது. 1980களில் தனக்கு மாறாக அரெிக்காவுடன் உறவைப் பேணிய இலங்கை அரசுக்கு பாடம் புகட்ட இந்திய அரசு விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் ஆயுதப் பயிற்சியும் வழங்கி, ஆயுதங்களையும் வாரி வழங்கியது. ஆனால் இந்திய புலனாய்வுத்துறை இந்தப் போராளிகளுக்கு தமிழீழம் அமைவதை இந்தியா ஒரு போதும் அனுதியாது என்பதை மிகத் தெட்டத் தெளிவாக தெரிவித்தும் இருந்தது. ஆனால் இந்த ‘ஈ’ அமைப்புகள் (EPRLF & EPDP) தவிர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழீழ விடுதலை இயக்கம் என்பன மக்களை தொடர்ந்தும் தமிழீழம் என்ற போர்வையில் ஏமாற்றியே போராட்டத்தை முன்னெடுத்தன. ஈபிஆர்எல்எப், ஈபிடிபி மட்டுமே வெளிப்படையாக தமிழீழத்தைக் கைவிட்டு தூர நோக்கோடு ஐக்கிய இலங்கைக்குள் தீர்வை ஏற்று ஜனநாயக அரசியல் நீரோட்டத்திற்கு வந்தது. EPDP, தமிழீழ விடுதலைப் புலிகளோடு இருந்த முரண்பாட்டால் தொடர்ந்தும் ஆயுதம் ஏந்தியதும் விடுதலைப் புலிகள் போல ஆயுத வன்முறைகளில் ஈடுபட்டதும் வரலாறு.

1987இல் இலங்கையில் நேரடித் தலையீட்டை மேற்கொண்ட இந்திய இராணுவம் 1990இல் இலங்கையை விட்டு வெளியேறியதும் அக்கால கட்டத்தில் இந்திய இராணுவத்திற்கு உதவியவர்கள் அவர்களுக்கு ரற்றா காட்டியவர்கள், இந்திய இராணுவம் வெளியேறியதைத் தொடர்ந்து நூற்றக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டனர்.

மீண்டும் இலங்கைத் தமிழர்களுடைய அரசியல் சில தசாப்தங்களுக்கு பின் தள்ளப்பட்டு நிற்கின்றது. இந்த போராட்டங்கள் என்ற பெயரில் கொல்லப்பட்ட போராளிகள், பொதுமக்கள், இராணுவ வீரர்கள் என்று எந்த உயிரிழப்பிற்கும் எவ்வித அர்த்தமும் இல்லை. டட்ட கஸ்டங்களுக்கும் இழப்புகளுக்கும் கூட எவ்வித அர்த்தமும் இல்லை. ஏனெனில் நாங்கள் மீண்டும் ஆரம்பப் புள்ளியில் வந்து நிற்கின்றோம். எங்களிடம் எஞ்சியிருப்பது வெறும் அனுபவங்கள் மட்டுமே. அதிலிருந்தும் எதனையும் கற்றுக்கொள்ளவும் நாங்கள் தாரில்லை.

இன்று உலகமே ஒரு கிராமமாகிவிட்டது. இன்று ஆப்கானிஸ்தானில் வெளியேற்றம் பற்றி 24 மணிநேரச் செய்திச் சேவைகள் பிளந்து தள்ளுகின்றன. இன்னும் சில வாரங்களில் ஆப்கானிஸ்தான்காரர்கள் எங்கள் நாடுகளுக்கு அகதிகளாக படையெடுக்கிறார்கள் என்று இந்த மேற்கு நாட்டுச் செய்தி நிறுவனங்கள் ஒப்பாரி வைக்கும். ஈராக் அகதிகளுக்கு ஒப்பாரி வைத்தார்கள், லிபிய அகதிகளுக்கு ஒப்பாரி வைத்தார்கள், சிரிய அகதிகளுக்கு ஒப்பாரி வைத்தார்கள் இன்றும் இத்தாலியின் மெடிற்றிரேனியன் கடற் பரப்பில் தினமும் அகதிகள் உயிரிழக்கின்றனர். ஏன்? இந்த மேற்கு நாடுகள் தலையீடு செய்து அவர்களின் நாடுகளைச் சீரழித்து சின்னாபின்னமாக்கியதால், அவர்கள் வாழ வழியின்றி மேற்கு நோக்கி வருகின்றனர். அவர்களுடைய இந்த நிலைக்கு இந் நாடுகளே தார்மீகப் பொறுப்பு ஏற்க வேண்டும்.

நீங்கள் ஜனநாயகத்தை ஏற்றுமதி செய்து கிழித்தது போதும், உங்கள் சர்வதேச பொலிஸ்காரன் அடாவடிகள் போதும், மூடிட்டு இருங்கள் செய்த பாவங்களுக்கு, அனைவருக்கும் அகதி அந்தஸ்த்தை வழங்குகள்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *