Thursday, December 9, 2021

என்னதான் நடக்கின்றது ஆப்கானிஸ்தானில்….(பகுதி 3) : சிவா முருகுப்பிள்ளை

சோவியத் யூனியனுக்கு எதிராக அமெரிக்க ஆதரவுடன் பிரசவித்து… பாலூட்டி… தாலாட்டி…. பாகிஸ்தானால் வளர்க்கப்பட்ட தீவிரவாதம் முஹாஜிதீன் என்று ஆரம்பித்து தலிபான் என்ற இணைப்பாக பெரு விருட்சமாக வளர்ந்து கோலோச்சி ஆட்சியும் அமைத்தது ஆப்கானிஸ்தானில் இது சோவியத் படைகளின் விலகலுக்கு முந்தைய, பிந்தய காலகட்ட வரலாறு.

தலிபான்கள் நம்பும் மத அடிப்படைவாதம்தான் அவர்களின் ஆட்சி மொழியாக இருந்தன….. இனியும் இருக்கும்…. இந்நிலையில் தன் விருப்பமான சொல் கேட்காது வளர்ந்துவிட்ட இந்த தீவிரவாதத்தை தறிக்க சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்காவிற்கு 911 என அறியப்பட்ட செப்ரம்பர் 11, 2001 அமெரிக்க இரட்டைக் கோபுரம் மீதான தாக்குதல் ஒரு காரணமாயிற்று.

தனது நாட்டிற்குள் வந்து தாக்குதல் நடாத்தியது கடும் சினத்தை மட்டும் அல்ல கௌரவப் பிரச்சனையும் ஆகியது அமெரிக்காவிற்கு. உண்மையில் இத் தாக்குதலின் பின்னணி என்ன…? யார்…? என்பது இன்றுவரை அவிளாத முடிசாக இருப்பதுவும் அதனைத் தவிர்த்து இங்கு கடந்து செல்லவும் முடியாது.
இதன் அடிப்படையில் ஒரு கல்லில் பல மாங்காய் என்று ஈராக், ஆப்கானிஸ்தான் என்று தனது கழுகுக் கால்களை விரித்துக் கொண்டது அமெரிக்கா. இதற்கு அதன் நேட்டோ கூட்டாளிகளும் ஒத்து பிடில் வாசித்தனர். இதற்குள் லிபியாவையும் இணைத்துக் கொண்டனர்.

அக்டோபர் 2001 இல், செப்டம்பர் 11 தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என்று கூறிக் கொண்டு ஒசமா பின் லாடன் மற்றும் அவரது அல்-காய்தா இன் உறுப்பினர்களை அவர்கள் தலிபான்களின் விருந்தினர்கள் என்ற வகையில் தம்மிடம் ஒப்படைக்க மறுத்ததால் தலிபான் ஆட்சியில் உள்ள ஆப்கானிஸ்தானை அமெரிக்கா ஆக்கிரமித்தது.

இவர்களுடன் அமெரிக்காவின் நேட்டோ நட்பு நாடுகளும் இணைந்து கொண்டன. ஆரம்ப படையெடுப்பின் போது, அமெரிக்க மற்றும் இங்கிலாந்து படைகள் அல்-காய்தா பயிற்சி முகாம்கள் மீது குண்டு வீசின, பின்னர் ஆப்கானிஸ்தானில் செயற்பட்ட வடக்கு கூட்டணியுடன் இணைந்து செயற்பட்டு தலிபான் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தனர்.

மேலும் அமெரிக்காவும் நேட்டோ நட்பு நாடுகளும் உலகின் பல நாடுகளிலும் மனிதாபிமான செயற்பாட்டை செய்தல்…. ஜனநாயகத்தை மீட்டல்… தீவிரவாதத்தை இல்லாமல் செய்வதில் தாங்களே உலகப் பொலிஸ்காரர்கள் வழிகாட்டிகள் என்பது போன்ற செயற்பாட்டில் ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியாவில் தமது ஆக்கிரமிப்பிற்கு நியாயங்களை காட்டி நின்றனர்.

முதலில் போரை தொடுப்பதற்காக நியாயங்கள் உள்ளது போன்ற பிரச்சாரங்களை தமக்கு சாதகமான பிரபல்ய ஊடகங்கள் மூலம் ஆக்கிரமிப்பு யுத்தங்களுக்கு முன்பு மிக நேர்த்தியாக செய்ய ஆரம்பிப்பர்.
அமெரிக்க மக்களை ஏன் உலக மக்களை இது ஆக்கிரமிப்பு யுத்தம் அல்ல ஜனநாயகத்தை மீட்பதற்காக யுத்தம்… மனிதாபிமான யுத்தம்…. என்று எண்ணும் படியான கருத்தியலை ஓரளவிற்கு ஏற்படுத்துவதில் அமெரிக்கா ‘வெற்றிகரமாக’ செயற்பட்டனர் என்றே கூறவேண்டும்.

இதன் பின்பு அவர்களுக்கு சார்பான அந்தந்த நாடுகளின் உள்ளுர் தீவிரவாதிகளுக்கு பணம், ஆயுதம், ஆலோசனையை வழங்குதல்…. பின்பு போரைத் தொடங்குதல்… என்று ஆரம்பிப்பதே அமெரிக்க ‘மனிதாபிமான’ யுத்தங்கள் ஆகும்.

இதில் அதிகம் தரை மார்க்கமாக அமெரிக்க படைகள் நகருதலை சோமாலியாவில் அவர்களுக்கு கிடைத்து பாரிய இழப்பும்… அனுபவங்களும் கூடவே அமெரிக்க மக்களிடம் தமது பிள்ளைகள் அநியாயமாக சாகடிக்கப்படுகின்றார்கள் என்ற எதிர்ப்பு நிலையை சமாளிக்கும் முகமாக ஆகாய மார்க்கமாக தாக்குதலை அதிகம் செய்தல் மூலம் நாடுகளுக்கு எதிரான யுத்தங்களை செயற்படுத்தினர். இம்முறையையே ஆப்கானிஸ்தானிலும் 2001 அக்ரோபரில் நடைமுறைப்படுத்தினர்.

இங்கும் ஆகாயத் தாக்குதல் என்ற வார்த்தையை தவிர்த்து ஆகாய மார்க்க பிரச்சாராம் (Air campaign) என்பது போன்ற சொல்லாடலைப் பாவிப்பது என்பதுமாக ஆப்கானிஸ்தான் அமெரிக்க கூட்டமைப்பு படைகளிடம் 2001 இறுதியில் இல் வீழ்ந்து.

தலிபான்களின் முக்கிய தலைவர்கள் பாதுகாப்பான இடங்களில் மறைந்தும் கொண்டனர். இதற்கு பாகிஸ்தான் ஆப்கானிதானில் எல்லை பூராக தரையால் இணைக்கப்பட்டிருந்ததும் பெரும் உதவியாக அமைந்தது.

இதனைத் தொடர்ந்து தமக்கு சார்பான ஒரு அரசை அங்கு நிறுவுவதற்கான தேர்தலை நடாத்துவது…. அமையும் பொம்மை அரசை தமது விருப்பத்திற்கு ஏற்ப நடாத்துவது என்ற ‘ஜனநாயக’ வழி முறையைத்தான் ஆப்பானிஸ்தானில் நடாத்தினர் அமெரிக்க கூட்டமைப்பினர்.

இதில் உள்ளுர் ஆப்கானிஸ்தான் அரசியல் தலைவர்கள், பணியாளர்கள் தமது நாட்டின் செயற்பாட்டில் பொதுப் போக்கில ஈடுபட்டனர். இவ்வாறு அரசு அமைப்பதுவும் நிர்வாகத்தில் பங்கு பற்றுவதற்கும் எதிர் நிலையாக அமெரிக்காவின் படையிடம் தமது ஆட்சியை இழந்த தலிபான்கள் துரோகிகளின் செயற்பாடாகவே கருதினர். அமெரிக்க படைகளின் பிரசன்ன காலமாகிய கடந்த 20 வருடங்களும் நிலமை இவ்வாறுதான் நகர்ந்தது.

தொடர் ஆயுத மோதல்களாக நகர்ந்த இருபது வருடங்களில் மற்றைய எந்த நாடுகளையும் விட ஆப்கானிஸ்தானின் புவியியல் அமைப்பு தலிபான தீவிரவாதிகளின் மறைவிடங்களை முழுமையாக எந்த நவீன ரக ஆயுதங்களைக் கொண்டு அடக்க, அழிக்க முடியவில்லை.

கூடவே அருகில் எல்லைகள் முழுவதும் பரந்திருக்கும் பாகிஸ்தானின் தரையால் உள்ள இணைப்பு இந்த தீவிரவாத அமைப்புகள் பாகிஸ்தானை தமது மறைவிடமாக பாவிப்பதற்கு இருந்து ஏதுவான ‘தட்ப வெப்ப’ நிலமையும் இந்தத் தீவிரவாதிகளுக்கு எதிரான நிலைப்பாட்டுடன் பாகிஸ்தானில் ஆட்சியை தொடருதல் ஏன் உயிர்வாழுதல் என்பது கடினமானது என்ற ‘ஜனநாயகத்தை’ பாகிஸ்தான் கொண்டிருந்ததும் தலிபான்கள் ஆப்கனிஸ்தானில் நிலைத்து நிற்பதற்கு முக்கிய காரணமாகியது.

கூடவே தலிபான் தரப்பிலும் அமெரிக்க கூட்டமைப்பு படைகள் ஆப்கானிஸ்தான் அரசு என்று முத்தரப்பிலும் போதைவஸ்தில் உலக சந்தையில் பெருந்தொகை பணமீட்டல் என்பது இங்கு இந்த போர் தொடர வேண்டும் என்று முத்தரப்பினரும் விருப்பத்துடன் இருந்த துர்ப்பாக்கிய நிலமையை நாம் புறம் தள்ளிவிட முடியாது.

அமெரிக்க கூட்டமைப்பு படைகளின் பொது மக்களுக்கு எதிரான தாக்குதல், பெண்களுக்கு எதிரான செயற்பாடுகள் மக்களின் வாழ்வை மேம்படுத்த முடியாத ஆப்கான அரசின் செயற்பாடுகள் என்பன பொது மக்களை தலிபான், ஏனைய தீவிரவாத அமைப்புக்கள் பக்கம் சாய்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தியது.

உலக நவீன ஆயுதங்கள், பல லட்சம் பயிற்சி அளிக்கப்பட்ட ஆப்கான அரசு படைகள் என்று யாராலும் வெல்லப்பட முடியாத அதே வேளை அமெரிக்க அதன் கூட்டமைப்பு நாடுகளின் டாலர்களை தின்று கொண்டிருந்த அவமானகரமான யுத்தமாக அமெரிக்க அரசினால் உணரப்பட்டது. ஆனாலும் உலகப் பொலிஸ்காரனாக செயற்படும் அமெரிக்காவின் கௌரவ பின்வாங்கல் அவர்களால் செய்ய முடியவில்லை. ஆனால் டொனால் ட்றம் போன்ற ஒரு ‘வித்தியாசமான’ அமெரிக்க ஜனாதிபதி எடுத்த தீர்மானமே ஒரு கௌரவமான பின்வாங்கலை ஜோ பைடன் செய்வதற்கு வாய்ப்பை ஏற்படுதியது.

சில வருடங்களுக்கு முன்பு தலிபான் சீனா இடையில் ஏற்பட்ட தொடர்பும் அதனைத் தொடர்ந்து சீனாவை தலிபான்களிடம் கோர்த்துவிட்டுக் கழட்டிக் கொள்ள நினைத்த அமெரிக்காவின் முயற்சிகளில் சீனா இராணுவ ரீதியில் சிக்கிக் கொள்ளாமல் ‘வெற்றி” கண்டது உலக செய்தி ஊடகங்களில் அதிகம் பேசப்படாவிட்டாலும் வரலாற்று உண்மைகள் இவை.

அமெரிக்கா ஆப்கானில் தங்கியிருந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் மிகக் குறைந்த அளவிலான மக்களே தேர்தலில் பங்குபற்றினர் என்பதற்கு உருவாகப் போகும் ஜனநாயக அரசியல் மக்களுக்கு இருந்த நம்பிக்கையீனங்களும் கூடவே தேர்தலில் பங்கு பற்றினால் தலிபான்களின் துப்பாக்கிக் கோவத்திற்கு ஆளாகலாம் எ ன்பதால் அதனைத் தவிர்த்த செயற்பாடுகள் என்பன காரணங்களாக அமைந்தன.
இது ஒரு பொதுவான போக்குத்தான். நாம் இதனை 1989 ல் இந்தியப் படைகளின் பிரசன்ன காலத்தில் இலங்கையில் சிறப்பாக வடக்கு கிழக்கு மகாணங்களில் அன்றைய காலகட்டத்தில் நடைபெற்ற தேர்தல்களிலும் கண்டோம்.

அமெரிக்க படைகளின் பிரசன்ன காலத்தில் ஹமீத் கர்சாய் 2001 முதல் 2014 வரை நாட்டின் தலைவராக இருந்தார். டிசம்பர் 2001 இல், தாலிபான் அரசாங்கம் கவிழ்க்கப்பட்ட பிறகு, ஹமீத் கர்சாயின் கீழ் ஆப்கான் இடைக்கால நிர்வாகம் உருவாக்கப்பட்டது. கர்சாய் நிர்வாகத்திற்கு உதவுவதற்கும் அடிப்படை பாதுகாப்பை வழங்குவதற்கும் சர்வதேச பாதுகாப்பு உதவிப் படை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலால் நிறுவப்பட்டது.

2001 இற்கு முன்பு இரண்டு தசாப்த கால யுத்தம் மற்றும் கடுமையான பஞ்சத்திற்குப் பிறகு, ஆப்கானிஸ்தான் உலகின் மிக உயர்ந்த குழந்தை மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதங்களில் ஒன்றாக காணப்பட்டது.

குறைந்த ஆயுட்காலத்துடன் பெரும்பாலான மக்கள் பசியுடன் இருந்தனர், மற்றும் உள்கட்டமைப்புகள் யுத்தங்களால் இடிபாடுகளின் நடுவேயே காணப்பட்டன. பல வெளிநாட்டு நன்கொடையாளர்கள் போரால் பாதிக்கப்பட்ட நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஆளணி உதவி மற்றும் பொருட்கள் உதவிகளை வழங்கத் தொடங்கினர். இதற்கு பின்னாலும் தகவலறியும் ஒரு உள்நோக்கங்களும் இருந்திருக்கும் என்பதில் வியப்பேதும் இல்லை.

இதற்கிடையில், தலிபான் படைகள் பாகிஸ்தானுக்குள் மீண்டும் ஒருங்கிணைக்கத் தொடங்கின, மேலும் அமெரிக்க கூட்டணிப் படைகள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து புனரமைப்பு செயல்முறைக்கு உதவின. ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாட்டை மீட்க தலிபான் கிளர்ச்சியை தொடங்கியது.

அடுத்த தசாப்தத்தில், சர்வதேச பாதுகாப்பு உதவிப் படை மற்றும் ஆப்கான் துருப்புக்கள் தலிபான்களுக்கு எதிராக பல தாக்குதல்களை நடத்தின, ஆனால் அவற்றை முழுமையாக தோற்கடிக்க முடியவில்லை. வெளிநாட்டு முதலீடு இல்லாதது, அரசாங்க ஊழல் மற்றும் தலிபான் கிளர்ச்சி காரணமாக ஆப்கானிஸ்தான் உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக பயணப்பட்டது.

இதற்கிடையில், கர்சாய் நாட்டின் மக்களை ஒன்றிணைக்க முயன்றார், மற்றும் ஆப்கானிஸ்தான் அரசாங்கம் சில ஜனநாயக கட்டமைப்புகளை உருவாக்க முடிந்தது, 2004 இல் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய குடியரசு என்ற பெயரில் ஒரு அரசியலமைப்பை உருவாக்கியது.

நாட்டின் பொருளாதாரம், சுகாதாரம், கல்வி, போக்குவரத்து மற்றும் விவசாயத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் பெரும்பாலும் வெளிநாட்டு நன்கொடை நாடுகளின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டன. சர்வதேச பாதுகாப்பு உதவிப் படைகள் ஆப்கான் தேசிய பாதுகாப்புப் படைகளுக்கு பயிற்சி அளிக்கத் தொடங்கின.

2002 ஐத் தொடர்ந்து, கிட்டத்தட்ட ஆப்கானிஸ்தானுக்கு வெளியில் அகதிகளாக இருந்த ஐந்து மில்லியன் ஆப்கானியர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்த நேட்டோ படைகளின் எண்ணிக்கை 2011 இல் 140,000 ஆக உயர்ந்தது, 2018 இல் சுமார் 16,000 ஆக குறைந்தது.

செப்டம்பர் 2014 இல் அஷ்ரப் கானி 2014 ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு ஜனாதிபதியானார். ஆப்கானிஸ்தானின் வரலாற்றில் முதன்முறையாக அதிகாரம் ஜனநாயக ரீதியாக மாற்றப்பட்டது.
தொடர்ந்து 28 டிசம்பர் 2014 அன்று, நேட்டோ ஆப்கானிஸ்தானில் சர்வதேச பாதுகாப்பு உதவிப் படைகள் போர் நடவடிக்கைகளை முறையாக முடித்து, ஆப்கான் அரசு நாட்டின் முழு பாதுகாப்புப் பொறுப்பை பொறுப்பேற்றுக் கொண்டது.

ஆனால் நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தான் மண்ணில் நிலை கொண்டு இருந்தன. ஆயிரக்கணக்கான நேட்டோ துருப்புக்கள் ஆப்கானிய அரசாங்கப் படைகளுக்கு பயிற்சி அளிப்பதற்கும் ஆலோசனை வழங்குவதிலும் ஈடுபட்டனர்.

2015 இல் மதிப்பீட்டின்படி ஆப்கானிஸ்தான் போரில் 2001 முதல் சுமார் 147,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 38,000 க்கும் அதிகமானோர் பொதுமக்கள். ‘பாடி கவுன்ட்’ என்ற தலைப்பில், ஆப்கானிஸ்தானில் நடந்த மோதலில் 106,000 தொடக்கம் 170,000 வரையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையிலும் தலிபான்கள் அமெரிக்க விருப்பு அரசுக்கு எதிரான செயற்பாடுகளை எஞ்சிய நிலையில் தங்கியருந்த நேட்டோ படைகளுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்தன.

தலிபான்களை தம்மால் வெற்றி கொள்ள முடியாது என்பதுவும் ஏழு ட்றில்லியன் அமெரிக்க டாலர் வரையிலான கனிம வளங்களில் மிகச் சிறிய பகுதியையேனும் தம்மால் வறுக முடியவில்லை என்பதுவும் ஆனால் தினம் தினம் பணம் உயிர் விரயமாவதை உணர்ந்து நேட்டோ படைகள் ஒவ்வொன்றாக கழர தொடங்க அமெரிக்கா ‘மாயநிலை'(Virtual)யில் தனிமைப்படுத்தப்பட்ட நிலைமையை உணர்ந்தது.

தோல்விகரமாக பின்வாங்குதல் என்பதில் இருந்து…. தம்மை விடுவித்துக் கொள்ளுதல் என்பதை தாம் ஆப்கானிஸ்தானுக்கு சென்ற ஜனநாயக மீட்பு மனிதாபிமான செயற்பாடுகள் முடிவடைந்து விட்டன. ஆப்கானிஸ்தான் அரசை காத்துக் கொள்ள மூன்று இலட்சம் படைகள் தம்மால் பயிற்றுவிற்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர் என்று கூறி கொண்டு 2021 ஆகஸ்ட் மாதம் 31 இற்குள் தமது முழுமையான விலகலை செய்வது என்று தலிபானுடன் ஏலவே நடைபெற்ற நீண்ட சந்திப்புகள் பேச்சு வார்ததைகள் உடன்பாடுகள் அடிப்படையில் ஆகஸ்ட் 15, 2021 ல் படை விலகலை ஆரம்பித்தனர்.

மிகுதி அடுத்த பதிவில்…..

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *