இலங்கை அணிக்கு பாகிஸ்தானில் வழங்கப்பட்ட பாதுகாப்பை கடுமையாக விமர்சிக்கிறார் முரளி

crc-04032009.jpg பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் அணியினருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை கடுமையாகக் கண்டித்துள்ள இலங்கை அணியின் சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன், தங்களது நடமாட்டம் குறித்து தீவிரவாதிகளுக்கு உள்ளகத் தகவல்கள் ஏதாவது கிடைத்திருக்கலாமெனவும் சந்தேகம் தெரிவித்துள்ளார்
.
லாகூர் டெஸ்ட்போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்திற்காக கடந்த செவ்வாய்க்கிழமை காலை ஹோட்டலிலிருந்து கடாபி மைதானத்திற்குச் சென்றபோது இலங்கை அணி தீவிரவாதிகளின் தாக்குதலுக்கிலக்கானது.

இது தொடர்பாக முரளிதரன் அவுஸ்திரேலிய வானொலி ஒன்றுக்கு (“ரேடியோ 5mm’) வழங்கிய பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்தப் பேட்டியில் அவர் மேலும் கூறுகையில்;

எமக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு போதியதாயிருக்கவில்லை. எமது வாகனத்தில் ஆயுதம் தாங்கிய பொலிஸார் எவருமே கடமையில் இருக்கவில்லை. அப்படி எவராவது இருந்திருந்தால் எம்மை நாமே பாதுகாத்துக்கொள்ளக் கூடியதாயிருந்திருக்கும். வழமையாக நாம் செல்லும் போது எமக்கு பாதுகாப்பிற்காக நால்வர் அல்லது ஐவர் வருவர். அதேநேரம், கடாபி மைதானத்திற்கு நாம் செல்லும் பாதை குறித்த உள்ளகத் தகவல்கள் தீவிரவாதிகளுக்கு கிடைத்திருக்கலாம்.

ஹோட்டலிலிருந்து நாங்கள் காலை 8.30 மணியளவில் புறப்பட்டோம். பாகிஸ்தான் அணி 8.35 க்கு புறப்பட்டது. நாங்கள் இரண்டாகப் பிரிந்திருந்தோம். அவர்களுக்கு சரியான நேரம் தெரிந்திருந்திருக்கலாம். அவர்கள் எமது பஸ்சாரதியை சுட முயற்சித்தனர். பின்னர் அவர்கள் பஸ்ஸின் இரு புறங்களிலும் பலத்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருந்தனர். பஸ்ஸின் இரு பக்கங்களிலும் 39 குண்டுத்துளைகளை எண்ணக்கூடியதாயிருந்தது.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த வீரர்களான தரங்க பரண விதாண மற்றும் திலான் சமரவீர ஆகியோர் பலத்த காயம் காரணமாக இறந்திருப்பார்களெனத் தாங்கள் கருதியதாகவும் தெரிவித்தார். இதேநேரம், இந்தத் தாக்குதலானது ஒரு பெரிய சதித் திட்டத்தின் அங்கமாயிருக்கலாமெனத் தெரிவித்துள்ள போட்டி நடுவர் கிறிஸ் புரோட் (இங்கிலாந்து), துப்பாக்கிச் சூடு ஆரம்பமானவுடன் தாங்கள் பொலிஸாரால் கைவிடப்பட்டுவிட்டதாகக் கூறியுள்ளார்.

தாங்கள் யுத்த வலயமொன்றுக்குள் சிக்குண்டதாக நடுவர் சைமன் ரபெல் தெரிவித்தார். இரு அணியும் ஒரேநேரத்தில் புறப்பட்டிருந்தால் வீரர்கள் சென்ற வாகனத் தொடரணிக்கான பாதுகாப்பு அதிகமாயிருந்திருக்கும். ஆனால், இலங்கை அணி புறப்பட்டபோது புறப்படாது ஐந்து நிமிடம் தாமதித்தே பாகிஸ்தான் அணி புறப்பட்டதால் பாதுகாப்புப் பிரிவினர் இரண்டாகப் பங்கிடப்பட இலங்கை அணி வீரர்கள் தாக்குலுக்கிலக்கான போது அவர்களுக்கு பாதுகாப்பாகச் சென்றவர்களின் எண்ணிக்கை அரைவாசியாக இருந்தது. இதேநேரம், இலங்கை அணி வீரர்களின் பஸ்மீதான தாக்குதலின் போது பொலிஸார் செயற்பட்ட விதமும் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. தாக்குதலின் போது தங்களை பாதுகாக்க எவருமே முன்வரவில்லையெனவும் தாங்கள் தனித்து விடப்பட்டிருந்ததாகவும் இது தங்களை கடும் சீற்றமடைய வைத்ததாகவும் சைமன் ரபெல் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • nadesh
    nadesh

    /தாங்கள் யுத்த வலயமொன்றுக்குள் சிக்குண்டதாக நடுவர் சைமன் ரபெல் தெரிவித்தார்./
    இதையே யுத்தவலயம் எண்டு விமர்சித்தால் புதுக்குடியிருப்புக்கை உங்களைக் கொண்டுபோய் விட்டால் என்னண்டு சொல்லுவீங்கள்.

    Reply