“28 வருட ஜனநாயக அரசியல் அனுபவத்திலிருந்து சொல்கிறேன் ரணில் தான் நாட்டை மீட்பார்.”- டக்ளஸ் தேவானந்தா

இடைக்கால ஜனதிபதி பதவிக்கு, தற்போதைய பதில் ஜனாதிபதியாக பதவி வகிக்கும்  ரணில் விக்ரமசிங்கவே பொருத்தமானவராக இருப்பார் என தாம் நம்புவதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்வுக்கான போட்டியில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால் அவரையே தாம் ஆதரிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் கொழும்பு ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

அதிபர் தேர்வுக்கான விடயம் தொடர்பில் சஜித் பிரேமதாசா என்னுடன் பேசியிருந்தார். அதன்போது அவர் என்னை தனது தந்தையின் நண்பர் என்றும் தனக்கு குறித்த அதிபர் போட்டியின்போது ஆதரவு தருமாறும் கோரியிருந்தார்.

ஆனால் நான் கருத்தில் எடுப்பதாக தெரிவித்திருந்தபோதிலும் குறித்த போட்டியில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால் அவரையே ஆதரிக்கவுள்ளேன்.

மேலும் போராட்டக்காரர்கள் தங்களது நிலைமையை உணர்ந்து அமைதிவழியில் இந்த பிரச்சினையை சமாளிக்க எண்ணுகின்றனர். இது குறித்து பதில் அதிபருடன் கலந்துரையாடி எனது கருத்தையும் அவரிடம் முன்வைத்திருந்தேன். குறிப்பாக குறித்த ஆர்ப்பாட்டக்காரர்களின் போராட்டத்தில் முன்வைக்கும் நியாயத் தன்மைக்கு ஏற்ப தீர்வு காணப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.

அதற்கு அவர் அதைத்தான் தானும் எண்ணியிருப்பதாகவும் 20 ஆம் திகதி நாடாளுமன்றில் தான் எஞ்சிய காலத்திற்கான ஜனாதிபதியாக நியமனமானால் அவர்களை அழைத்து பேசவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல மஹிந்த தரப்பினரை பாதுகாப்பதற்கான தேவைப்பாடு ரணில் விக்ரமசிங்க இருக்கப்போவதில்லை.ஆனால் தற்போதுள்ள அரசு ஆட்சியில் இருக்கவேண்டும் என்ற அரசியல் தேவை அவருக்கு இருக்கலாம். அவரும் இந்நாட்டின் ஒரு சிறந்த அரசியல்வாதிதான்.

நாடு குழப்ப நிலையில் இருந்தபோது யாரும் பிரதமர் பொறுப்பை ஏற்க முன்வராதிருந்தபோது ரணில் விக்ரமசிங்கவே முன்வந்து அந்த பொறுப்பை ஏற்றிருந்தார். அதன்பின்னர் தற்போது அவருக்கு இந்த சந்தர்ப்பமும் கிடைத்துள்ளது. அதற்கு அவர் சரியானவராகவே இருப்பதாக நான் கருதுகின்றேன். ஏனெனில் எனக்கும் இந்த நாடாளுமன்றில் 28 வருட ஜனநாயக அரசியல் அனுபவம் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *