பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு அதிக விலை கொடுத்து சேலைகளை வாங்குவதில் சிக்கல் நிலவி வருவதாக சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
அத்தோடு, போக்குவரத்து சிரமம் காரணமாக ஆசிரியர்கள் பலர் சைக்கிள், மோட்டார் சைக்கிள்களில் பாடசாலைக்கு வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
எனவே, புடவை அல்லது ஒசரியைவிட எளிதான எளிய உடையை அணிவதன் மூலம் ஆசிரியர்களால் மாணவர்களை கையாள்வதில் திறமையாக செயற்பட முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாடசாலை ஆசிரியைகள் வசதியான ஆடைகளை அணிந்து வர அனுமதிப்பது இந்நாட்டின் கலாசாரத்திற்கு புறம்பானது என மகாசங்கத்தினர் தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள ஜோசப் ஸ்டாலின் , ஆசிரியர்களின் உடையை மாற்றலாம், ஆனால் துறவறம் பூண்டவர்கள் தங்களது ஆடைகளை மாற்ற முடியாது என்பதால், இந்த கோரிக்கையை அந்நியப்படுத்த வேண்டாம் என்றுகேட்டுக்கொண்டுள்ளார்.
ஆசிரியர்களுக்கு ஆடை சுதந்திரம் அளிப்பதால் மகாசங்கத்தினர் குறிப்பிடுவது போன்று கலாசாரம் எந்த வகையிலும் அழிக்கப்படாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாடசாலைகளில் தற்போது நடைமுறையில் உள்ள ஆசிரியர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்யப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். எக்காரணம் கொண்டும் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் ஆடையில் மாற்றம் செய்யப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார்.
அரச சேவையின் கெளரவத்தை பேணும் வகையில் அரச உத்தியோகத்தர்களுக்காக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையை ஆசிரியர்களுக்கும் அமுல்படுத்த வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் அண்மையில் வேண்டுகோள் விடுத்திருந்தது.