தனியார் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு; இன்று முதல் ஆர்ப்பாட்டம்

sri-lanka-universities.jpgஇலவசக் கல்வித் திட்டத்தை ஒழிப்பதற்கு அரசாங்கம் மறைமுகமாக செயற்பட்டு வருவதாக குற்றச்சாட்டு சுமத்தியிருக்கும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அதன் ஒரு நடவடிக்கையே தனியார் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு எடுக்கப்படும் முயற்சியெனவும் சுட்டிக் காட்டியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியின்போது அறிமுகப்படுத்தப்பட்ட மீண்டெழும் இலங்கை வேலைத்திட்டத்தின் மூலமாக முன்னெடுக்கப்பட்ட கல்வித்துறையை தனியார் மயமாக்கும் செயற்பாட்டை இன்றைய அரசாங்கம் முன்னெடுத்துச் செல்ல முனைகிறது. இதனடிப்படையில் பிலியந்தல மாலபே எனுமிடத்தில் தனியார் மருத்துவக் கல்லூரியை ஆரம்பிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளதாகவும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளர் உந்துல் பிரேமரத்ன நேற்று திங்கட்கிழமை கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த டாக்டர் நெவில் பெர்னாண்டோ கொழும்பு ஆசிரி வைத்தியசாலையில் தமக்கிருந்த பங்குகளை விற்று அந்தப் பணத்தை முதலீடு செய்து இந்த தனியார் மருத்துவக் கல்லூரியை தொடங்கவிருப்பதாகவும், அதற்கு எதிராக நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களையும் ஒன்று திரட்டிப் போராடத் தயாராகி வருவதாகவும் பிரேமரத்ன செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார். முதற்கட்டமாக தனியார் மருத்துவக் கல்லூரியை ஆரம்பிக்க அனுமதியளித்துவிட்டு படிப்படியாக நாட்டில் தனியார் மருத்துவப் பல்கலைக் கழகங்களுக்கும் அங்கீகாரமளிப்பதற்கு அரசாங்கம் மறைமுகமாக திட்டமிட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கமும், பிரதான எதிர்க் கட்சியும் புத்திஜீவிகள் எனத் தம்மைக் காட்டிக் கொள்ளும் சிலரும் திட்டமிட்டு இதனைச் சாதிக்க முயற்சிப்பதாக கண்டனம் தெரிவித்த அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சில காலத்துக்கு முன்னர் இதனை முன்னெடுக்கத் தயாரான போது ஒன்றியம் எதிர்ப்பை வெளியிட்ட வேளையில் அவ்வாறு நடக்காது எனக் கூறி விவகாரத்தை கிடப்பில் போட்டு காலம் தாழ்த்தி மீண்டும் அதனைக் கொண்டு வர அரசு தயாராகி வருவதாகவும் தெரிவித்தது.

அமைச்சர்கள் பேராசிரியர் விஸ்வ வர்ணபால, பந்துல குணவர்தன போன்றோரும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல உட்பட ஐக்கிய தேசியக் கட்சியினரும் இந்த விடயத்தில் ஒரே நிலைப்பாட்டில் காணப்படுகின்றனர்.  இலவசக் கல்வித் திட்டத்தை பாதுகாப்பதாகவும், காணப்படும் குறைபாடுகளை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், கூறிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பதவிக்கு வந்து மூன்று வருடங்கள் கடந்த நிலையிலும் கல்விக்குறைபாடுகளுக்கு எந்த விதமான தீர்வையும் மேற்கொள்ளவில்லை.

இந்த தனியார் மருத்துவக் கல்லூரி திட்டமானது மக்களின் நலன் கருதி மேற்கொள்வதல்ல. முற்று முழுதாக வர்த்தக நோக்கம் கொண்டதாகும். ஒரு மாணவர் தனியார் மருத்துவகல்லூரியில் படித்து பட்டம்பெறுவதற்கு 60 இலட்சம் ரூபாவை செலவிடவேண்டும். இது இந்த நாட்டின் கஷ்டப்படும் மக்களை சுரண்டும் ஒரு முறைகேடான வர்த்தக நடவடிக்கையாகும். இதனை எந்தவிதத்திலும் அனுமதிக்க முடியாது. எனவே நாம் இத்திட்டத்திற்கு எதிராக நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் எதிர்ப்புப் போராட்டங்களை உடனடியாக ஆரம்பிக்கவிருக்கின்றோம். முதலாவது ஆர்ப்பாட்டப்பேரணி இன்று செவ்வாய்க்கிழமை ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்துக்கு முன்பாக நடத்தப்படும்.

நாளை முதலாம் திகதி புதன்கிழமை றுகுணு பல்கலைக்கழகத்திலும் இரண்டாம் திகதி வியாழக்கிழமை பேராதனைப் பல்கலைக்கழகம் ,கொழும்பு பல்கலைக்கழகம் அழகியல் பீடத்துக்கு முன்பாகவும் நடத்தப்படும். இதற்கு சாதகமான பதில்கிட்டாது போனால் அடுத்த கட்டப்போராட்டம் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தொடர்ச்சியான போராட்டம் முன்னெடுக்கப்படும். இலவசக் கல்வித்திட்டத்தை தொடர்ந்து பாதுகாப்பதற்கான அனைவரதும் ஒத்துழைப்பை நாம் கோருகின்றோம் எனவும் உந்துல பிரேமரத்ன தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • MANITHA NEYAN
    MANITHA NEYAN

    KNOW YOURSELF AND YOU WILL WIN ALL BATTLES

    Reply
  • murugan
    murugan

    இலங்கையின் உள்நாட்டு நிலமைகளை சாதகமாக்கிக் கொண்டு சந்தடிசாக்கில் இந்த அநியாயத்தை அரங்கேற்றப் பார்க்கிறார்கள் சுதந்திர வர்தக வலயத்தை கொண்டு வந்ததைப் போல.

    Reply