இலங்கையின் மனிதாபினமாச் சட்ட மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறாத நிலைமை நீடிக்கின்றது – ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

இலங்கையில் நடைபெற்ற மனித உரிமைகள் மற்றும் மனிதாபினமாச் சட்ட மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறாத நிலைமை நீடிக்கின்றது என்பதை ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டியுள்ளதோடு, முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் பற்றியும் கரிசனைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக சிவில் சமூக பிரதிநிதிகளான, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் மற்றும் மாற்றுக்கொள்கை நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி. பாக்கியசோதி சரவணமுத்து ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின், இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய முற்கூட்டிய எழுத்துமூலமான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் பற்றிய கருத்து வெளியிடும்போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

அம்பிகா சற்குணநாதன் தெரிவிக்கையில்,

இலங்கை பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க விடயத்தில் முன்னேற்றங்கள் எட்டப்படாதுள்ளமையை உயர்ஸ்தானிகரது அறிக்கை வெளிப்படுத்தியுள்ளதோடு, முக்கியமான சில விடயங்கள் இம்முறை புதிதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

அதில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்துக்கு அமைவாக இலங்கையில் நிகழ்ந்த உரிமை மீறல்கள் பற்றிய சாட்சியங்களை சேகரிக்கின்ற பொறிமுறை பற்றிய விடயம் முக்கியமானதாகின்றது.

அதனடிப்படையில், தற்போதைய நிலையில் இலங்கையில் பத்து தனிநபர்களுடைய மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்கள் பற்றி வெவ்வேறு நாடுகளில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதால் அவற்றுக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் தொடர்பில் குறித்த பொறிமுறையின் பங்களிப்புச் செய்யும் தன்மை பற்றி வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஏனைய முகவரகங்கள் இலங்கைக்கு நிதி உள்ளிட்ட செயற்றிட்டங்களை வழங்குகின்றபோது, ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் சர்வதேச சமவாயச் சட்டங்கள் ஆகியவற்றின் நிலைமைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற விடயம் கூறப்பட்டுள்ளது.

மேலும், பொருளாதாரக் குற்றங்கள் உள்ளிட்ட மனித உரிமைகள் தொடர்பான குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் மீது இலக்கு வைக்கப்பட்ட பயணத்தடைகள், சொத்துக்களை முடக்குதல் உள்ளிட்ட செயற்பாடுகளை ஏனைய நாடுகள் முன்னெடுக்குமாறு உயர்ஸ்தானிகர் பரிந்துரைத்துள்ளார்.

இதனைவிடவும், படைக்குறைப்பு மேலும் செய்யப்பட வேண்டும் என்பதும், படைகளுக்கான செலவீனத்தை குறைக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஒன்றுகூடும் சுதந்திரம், பேச்சு சுதந்திரத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களை மறுதலிக்கும் வகையில் ஒலி,ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் சட்டமூலம், புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் ஆகிய நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முற்படுகின்றமையும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் உள்ள சிவில் சமூகத்தினர் மீதான அடக்குமுறைகள், அச்சுறுத்தல்கள், காண்காணிப்புச் செய்தல், பயங்கரவாத தடைச்சட்ட பிரிவினரால் விசாரணைகளுக்கு அழைத்தல், பின்தொடர்தல் உள்ளிட்டவை தொடர்ந்து இடம்பெறுகின்றமையும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தமது உறவுகளை தேடும் செயற்பாடுகள் நீடிக்கின்றமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என்றார்.

இதேநேரம், கலாநிதி.பாக்கியசோதி சரவணமுத்து தெரிவிக்கையில்,

இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக பொறுப்புக்கூறல் விடயத்திலிருந்து தவிர்ந்து வருகின்றமையை உயர்ஸ்தானிகர் தனது அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளார்.

அதேநேரத்தில் பொருளாதாரக் குற்றங்கள் நீடித்து வருவதோடு, மனித உரிமைகள் மீறப்படுகின்ற செயற்பாடுகள், கருத்துச்சுதந்திரத்திற்கும், ஒன்று கூடும் சுதந்திரத்திற்கும் விடுக்கப்படுகின்ற அச்சுறுத்தல்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

விசேடமாக, பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது வரையில் நீதிக்காக போராடிவருகின்றமை பற்றியும் அவர்கள் நெருக்கடிகளுக்கு உள்ளாகியிருப்பது பற்றியும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொருளாதார குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல்களுடன் தொடர்புடையவர்கள் மீது நாடுகள் இலக்கு வைக்கப்பட்ட தடைகள், மற்றும் சொத்துக்களை முடக்குதல் உள்ளிட்ட செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் பரிந்துரைத்துள்ளார்.

ஆகவே, இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் தனது பொறுப்புக்கூறலில் இருந்து விலகி நிற்கின்ற தருணத்தில் சர்வதேச ரீதியாக பாரிய பின்னடைவுகளைச் சந்திக்க வேண்டிய நிலைமைகள் ஏற்படும்.

குறிப்பாக, ஐ.நா.வின் முகவரகங்கள் தங்களது திட்டங்களை முன்னெடுக்கின்றபோது சர்வதேச தரங்களுக்கு அமைவான விடயங்களை கவனத்தில் கொள்ளுமாறு கோரியிருப்பதும் இங்கு முக்கியமான விடயமாகின்றது.

எனவே, அரசாங்கம், உயர்ஸ்தானிகரின் அறிக்கையை வழமைபோன்று கடந்து செல்லமுடியாது என்பதோடு, அவருடைய கரிசனைக்குரிய விடயங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *