எம்.ஏ.சுமந்திரன்

Wednesday, October 27, 2021

எம்.ஏ.சுமந்திரன்

லொகான் ரத்வத்தைக்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு – மனுதாரர்கள் சார்பாக ஆஜராகிறார் எம்.ஏ.சுமந்திரன் !

இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தையின் அநுராதபுர சிறை அச்சுறுத்தல் சம்பவம் தொடர்பில் SCFR 297/2021 அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

May be an image of 1 person and text that says "வழக்கு எண் SCFR 297/2021 இல் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு ஆனது தமிழ் அரசியல் கைதிகளினால் தாக்கல் செய்யப்பட் டுள்ளது, ஜனாதிபதி சட்டத்தரனி எம்.எ சுமந்திரன் மற்றும் சட்டத்தரனி கேசவன் சயந்தன் ஆகியோர் கைதிகள் சார்பில் நீதிமன்றில் ஆயர் ஆவார்கள். MASUNTHIRA #JUSTICE_ THE PEOPL"

குறித்த சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எட்டு தமிழ் அரசியல் கைதிகளினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுதாரர்கள் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி  எம். ஏ சுமந்திரனும் சட்டத்தரணி கேசவன் சயந்தனும் ஆஜாரராகவுள்ளனர்

“பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கி அதன் கீழ் உள்ள அனைத்து கைதிகளையும் விடுவிக்க வேண்டும்.” – எம். ஏ. சுமந்திரன்

நாட்டிற்கு வரும் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு செவ்வாயக்கிழமை தமிழ் தேசியக்கூட்டமைப்பை சந்திக்கின்ற போது பயங்கரவாத தடைச் சட்டத்தினை முற்று முழுதாக நீக்க வேண்டும் என்பதனை நாம் வலியுறுத்துவோம் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

அனுராதபுரத்தில் இராஜாங்க அமைச்சரொருவரால் அச்சுறுத்தப்பட்ட அரசியல் கைதிகளை இன்று (25) பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்,

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

இராஜாங்க அமைச்சரினால் துன்புறுத்தப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை சந்தித்து பேசியிருக்கின்றோம்.  கடந்த 12 ஆம் திகதி மாலை 6.05 மணியளவில் சிறைச்சாலைக்கு பொறுப்பாக உள்ள இராஜாங்க அமைச்சர் சிறைச்சாலைக்கு வந்து பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் இருக்கின்ற கைதிகளை தன் முன்பாக கொண்டு வந்து நிறுத்தி அவர்களை மிரட்டி அனைவரையும் முழங்காலில் நிற்க வைத்து மிக மோசமாக நடந்துகொண்ட சம்பவம் பற்றியும் அதில் இருவரை மிகவும் கூடுதலாக பயமுறுத்தி தன்னுடைய கைத்துப்பாக்கியை அவர்களின் தலையில் வைத்து சுடுவதற்கு ஆயத்தமான விடயங்கள் அனைத்தையும் நாங்கள் நேரடியாக கேட்டறிந்துள்ளோம்.

இது தொடர்பான விசாரணைகள் இடம் பெறுவதாகவும் அறிந்துள்ளோம். மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை மேற்கொண்டுள்ளது. தற்போது சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நியமித்துள்ள விசாரணைக் குழுவும் விசாரணை செய்கின்றது. இதனைவிடவும் கூடுதலான விசாரணைகள் இடம்பெறும் என நாம் அறிகின்றோம். இந்த சம்பவங்கள் உண்மையாக இடம்பெற்ற நிகழ்வுகள் இதில் எவருக்கும் சந்தேகம் இருக்கவில்லை.

கடந்த நாடாளுமன்ற தினத்தில் இவ்விடயம் எழுப்பப்பட்ட போது இந்த விடயத்திற்கு பொறுப்பாக உள்ள அமைச்சரவை அமைச்சரான நீதி அமைச்சர் அலி சப்ரி இந்த சம்பவங்களுக்காக மன்னிப்பு கேட்டார். இரண்டு தடவைகள் திரும்ப திரும்ப மன்னிப்பு கேட்டார். கைதிகளிடமும் அவர்களின் உறவினர்களுக்கு இதன் காரணமாக ஏற்பட்ட மன உழைச்சலுக்காகவும் மன்னிப்பு கேட்டார். ஆகவே நடக்காத விடயத்திற்கு அவர் மன்னிப்பு கேட்கவில்லை.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் இந்த சிறைச்சாலைகளில் இருந்து தமிழ் பிரதேச சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட வேண்டும். கொரோனா காலத்தில் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அவர்கள் மாற்றப்பட்டு இருந்தவர்கள். எனவே யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்ற முடியாது என எவரும் சொல்ல முடியாது. வவுனியாவில் உள்ளது விளக்கமறியல் சிறையே. அது சிறிய இடம். எனவே முன்னர் நிர்வாகத்திற்கு தேவையானதாக யாழ்ப்பாணத்திற்கு மாற்றியிருந்தது போல இவர்களது பாதுகாப்பு கருத்தியும் விசாரணைகள் சுயாதீனமாக இடம்பெற வேண்டுமாக இருந்தால் அவர்கள் அவ்வாறான சூழலுக்குள் மாற்றப்பட வேண்டும். எனவேதான் அவர்கள் விசாரணைகளுக்கு முகம் கொடுக்க கூடியதாக இருக்கும். பயம் இல்லாமல் சாட்சியம் வழங்க கூடியதாக இருக்கும். வெளியில் இருக்கும் சாதாரண மக்களே சாட்சியம் வழங்க அச்சப்படும் சூழலில் சிறைச்சாலைக்குள் அடைக்கப்பட்டுள்ளவர்கள் அது குறித்து பயப்படுவது நியாயம் என்பதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எனவே அவர்கள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என அரசாங்கத்திடம் கோருகின்றோம்.
இவர்கள் நீண்ட காலமாக விசாரணைகள் பூர்த்தி செய்யப்படாமல் வழக்குகள் நிறைவு பெறாமல் வைக்கப்பட்டுள்ளவர்கள். அவர்களுக்கு எதிராக நீண்ட காலமாகியும் வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை. வெறுமனே நீதவான் நீதிமன்றத்தில் விளக்கமறியல் நீடிப்பு மாத்திரம் நடைபெறுகின்றது. ஆகவே இவர்களது காலம் நீடிக்கப்படாமல் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். நாம் பல காலமாக கேட்டு வரும் விடயம் இது.

முற்றுமுழுதாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என கோருகின்றோம். பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றது. அதனை நீக்குவதாக வாக்குறுதி கொடுத்து நீக்காத காரணத்தால்தான் ஐ எஸ் பி வரிச்சலுகை இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு எதிர்வரும் வாரங்களில் இங்கு வருகின்றார்கள். தமிழ் தேசியக்கூட்டமைப்புடனும் செவ்வாய்க்கிழமை மாலை சந்திப்புக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை முற்றுமுழுதாக நீக்கப்பட வேண்டும் என்பதனையே நாம் வலியுறுத்துவோம். அதன் கீழ் தடுத்து வைக்கப்பட்டவர்கள் அதன் கீழ் குற்றவாளிகளாக காணப்பட்டவர்கள் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கின்றவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும்.

இதனை அரசாங்கம் செய்தால் மாத்திரமே ஐரோப்பிய ஒன்றியத்தினால் கிடைக்க கூடிய சில சலுகைகளை அவர்கள் கோரக்கூடியதாக இருக்கும். இது நாட்டு மக்களுக்கும் முக்கியமான விடயம். பொருளாதார நெருக்கடியை நாடு எதிர்கொள்ளும் நிலையில் வரிச்சலுகையும் இல்லாமல் போவது மக்களின் வயிற்றில் பாரிய அடியாக இருக்கும். ஆகவே அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கி அதன் கீழ் உள்ள அனைத்து கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என நாம் கோருகின்றோம் என தெரிவித்தார்.

“ஐ.நாவில் ஜனாதிபதி கூறிய விடயங்களை தமிழ்தேசிய கூட்டமைப்பு வரவேற்கிறது.” – நாடாளுமன்றில் எம்.ஏ.சுமந்திரன் !

“வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் புலம்பெயர்ந்தோருடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் ஜனாதிபதி அறிவித்திருந்த நிலையில் அதனையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டுடன் செயற்படுவதே தற்போதிருக்கும் பிரச்சினை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார நாடாளுமன்றில் முன்வைத்த ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தின் போது அவர் இதனைக் கூறினார்.

இது தொடர்பில் மேலும் பேசிய அவர் ,

ஐக்கிய நாடுகளின் பொது செயலாளரை சந்தித்த ஜனாதிபதி நாட்டின் பொறுப்புக்கூறல் தொடர்பாக வினைத்திறனாக செயற்பட தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார். இதனை உடனடியாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்றது.

ஆனால் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அந்த கூற்றுக்கு முற்றிலும் மாறுபட்டவகையில், எந்தவிதமான வெளிவாரி பொறிமுறைகளையும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்துள்ளது. அதேபோன்றுதான் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் புலம்பெயர்ந்தோருடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் ஜனாதிபதி அறிவித்திருந்த நிலையில் அதனையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

ஆனால் ஜனாதிபதி தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கடந்த யூலை மாதம் நடத்தவிருந்த சந்திப்பு இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டதுடன், பின்னர் அந்த சந்திப்பை நடத்த திகதி ஒதுக்குவதாக கூறி 2 மாதங்கள் கடந்துவிட்டன. இன்னும் அதற்கான திகதி ஒதுக்கப்படவில்லை.

அரசாங்கம் புலம்பெயர்ந்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னதாக, தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று எம்.ஏ.சுமந்திரன் கோரினார்.

“தமிழர்களை தொடர்ந்தும் ஏமாற்றாமல் தயவுசெய்து உங்கள் வீட்டிற்கு திரும்புங்கள்.” – எம்.ஏ.சுமந்திரனிடம் காணாமல் போனவர்களின் உறவுகள் கோரிக்கை !

“ரோம் சாசனத்தில் கையெழுத்திட இலங்கையை வலியுறுத்துங்கள். இல்லையேல் தயவுசெய்து தமிழர்களை விட்டுவிட்டு உங்கள் வீட்டிற்குத் திரும்புங்கள்.” என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினரால் வவுனியாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

அங்கு மேலும் பேசிய அவர்கள்,

காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதற்கான திறவுகோல் ரோம் சாசனத்தில்தான் உள்ளதே தவிர OMP இடத்தில் அல்ல. தமிழர்களையும் விசாரிக்க விரும்புவதாக சுமந்திரன் கூறுகிறார். நீதி பெறுவதற்கான சிறந்த வழி அவர்கள் அனைவரையும் விசாரிப்பது என்றும் கூறுகிறார். அனைத்து தரப்பினரையும் விசாரணைக்கு கொண்டு வருவதன்  ஊடாக சுமந்திரன் தனது வழக்கு வலுப்பெறும் என்று கூறுகிறார்.

அவர் இங்கே என்ன பேசுகிறார் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்களான நாங்கள் கூறுகிறோம். சுமந்திரன் மற்றும் அவரது நண்பர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோரை இலங்கையை ரோம் சட்டத்தில் கையெழுத்திடச் செய்யுமாறு வலியுறுத்துகிறோம்.

இந்த ரோம் சட்டத்தில் கையெழுத்திடாமல், நீதி வழங்கப்படாத நிலமையே உள்ளது.  எனவே, நாங்கள் இந்த விடயத்தில் சுமந்திரனை மழுப்ப வேண்டாம் என கேட்கிறோம். சில செயல்களைக் செய்து காட்டுங்கள். ரோம் சட்டத்தில் கையெழுத்திடுமாறு இலங்கையைக் கோருவதற்கு உங்களால் முடியாவிட்டால், தயவுசெய்து தமிழர்களை விட்டுவிட்டு உங்கள் வீட்டிற்குத் திரும்புங்கள்.

நீங்கள் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. நீங்கள் தமிழர் தரப்பை அழிக்கிறீர்கள்” என குறிப்பிட்டுள்ளனர்.

 “நாங்கள் எந்த சமூகத்துக்கும் எதிரானவர்கள் அல்ல.” – அம்பாறையில் எம்.ஏ.சுமந்திரன் !

“நாங்கள் எந்த சமூகத்துக்கும் எதிரானவர்கள் அல்ல. இனவாதத்தின் பெயரால் தமிழ்  சமூகத்திற்கு தீமை செய்ய வேண்டாம்.” என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி முக்கியஸ்தர்களுடன் காரைதீவு பிரதேசத்தில் நூலக வளாகத்தில் இன்று   இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் பேசிய அவர்,

நாங்கள் நீதி , நியாயத்தை தூய மனதோடு செய்பவர்கள் . எந்த சமூகத்திற்கும் தீங்கு வரக்கூடாது என்று மிக தெளிவோடு எமது கருத்துகளை முன்வைக்கின்றோம் .

முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக நாட்டில் கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாதத்திற்கு எதிராக முஸ்லிம் தலைவர்களை விட குரல் கொடுத்தோம். ஆனால் தமிழ் மக்களுக்கு எதிராக பலவித இனவாத செயற்பாடுகளுக்கு எதிராக சரியாக நியாயமாக முஸ்லிம் அரசியல் தலைவர்கள் குரல் கொடுக்கவில்லை என்று ஆதங்கம் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்றது. இதனை சீர்செய்ய வேண்டிய கடப்பாடு முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு இருக்கிறது.

முஸ்லிம் மக்கள் இந்த விடயம் தொடர்பாக கவனிக்கப்பட வேண்டியது நியாயத்திற்காக பேசுகின்றார்கள் யார் என்பதனை கண்டறிய வேண்டும். தங்களது சொந்த நன்மைக்காகவும், வியாபாரத்திற்காகவும் செயற்படுகின்றவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும். இனவாத அடிப்படையில் அல்லாமல் நீதி நியாயத்திற்காக முன்னிற்கின்றவர்களை ஆதரிக்க வேண்டும்.

நாங்கள் எந்த சமூகத்திற்கும் எதிரானவர்கள் அல்ல. நாட்டில் வாழ்கின்ற பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் எங்கள் தமிழ் சமூகத்திற்கு எதிரான அநீதிகளை தட்டி கேட்கின்ற பிரதான பொறுப்பு எங்கள் தோள்களில் இருக்கின்றது. அதனை செய்வோம். பாதிக்கப்பட்ட எந்த சமூகத்திற்கும் குரல் கொடுக்கப்பட்டதை அண்மை காலத்தில் பலர் கண்டுள்ளனர் சிலர் நன்மை பெற்றுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான அராஜகங்கள் கூடிக்கொண்டே போகிறது. கொரோனாவை காரணம் காட்டி செய்வதொன்று மற்றது காலாகாலமாக மாற்று சமூகத்தினர் செய்கின்ற அடாவடிகள் வீரியம் பெறுகின்றன. அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படுவதாக முக தோற்றத்தை வைத்து கொண்டு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்கள் சார்பாக அரசாங்கம் செய்ய வேண்டிய பல விடையங்களை தடுத்து வருகின்றனர். இங்கிருந்து அவர்களுக்கு சொல்ல வேண்டிய செய்தி உங்களுடைய சொந்த நன்மைக்காக அம்பாறை மாவட்ட தமிழ் மக்களது இருப்பை கேள்விக்குறியாக்க வேண்டாம்.

இனவாதத்தின் பெயரால் தமிழ்  சமூகத்திற்கு தீமை செய்ய வேண்டாம் என அம்பாறை மாவட்டதிலிருக்கும் ஏனைய சமூகத்திற்கு விடுக்கும் வேண்டுகோள் என தெரிவித்தார்.

“ஜனநாயகத்தை கருத்தில் கொண்டு சீனாவினுடைய செல்வாக்கு இலங்கையில் அதிகரிப்பதை நாங்கள் விரும்பவில்லை.” – எம்.ஏ. சுமந்திரன்

“ஜனநாயகத்தை கருத்தில் கொண்டு சீனாவினுடைய செல்வாக்கு இலங்கையில் அதிகரிப்பதை நாங்கள் விரும்பவில்லை.” என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாகரசபை முதல்வர் ரி.சரவணபவான் மாநகரசபை ஆணையாளருக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு இன்று வியாழக்கிழமை (22) வந்தது அதில் ஆஜரான பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் பேசிய அவர்,

அரசுக்கு எதிரான இந்த போராட்டங்களை கடந்த பெப்பிரவரி நாங்கள் தான் ஆரம்பித்து வைத்தோம். ஆகவே மக்களுடைய போராட்டங்கள் அனைத்துக்கும் எங்களுடைய ஆதரவு இருக்கின்றது அரசாங்கம் நாங்கள் எதிர்பார்த்ததைவிட அவசரமாக மக்களிடம் இருந்த செல்வாக்கை முழுமையாக இழந்து நிற்கின்றது.

நாங்கள் எந்த நாட்டுக்கும் சாந்தவர்கள் அல்ல. எதிரானவர்களும் அல்ல ஆனால் இலங்கைவாழ் தமிழ் மக்களை பொறுத்தளவிலே எங்களுடைய அரசியல் பிரச்சனை சம்மந்தமாக இந்தியா தமிழ் மக்கள் சார்பிலே சர்வதேச உடன்படிக்கையை 1987 ம் ஆண்டு கைச்சாத்திட்டது அது முழுமையாக அமுல்படுத்தவேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை. அதன்காரணமாக நாங்கள் இந்தியாவுடன் நெருங்கி செயற்படுகின்றோம் இந்திய அரசும் தொடர்ச்சியாக அதிலே உள்ள விடயங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தங்களுடைய கருத்தை மிகவும் ஆணித்தரமாக சொல்லிவருகின்றனர்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பகையிருப்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். இந்தியாவினுடைய கரை எல்லை இலங்கை கரை எல்லை 30 கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கின்றது. இந்தியாவினுடைய பாதுகாப்பு நிமிர்த்தமாக இந்தியா கரிசனையாக இருப்பது எவரும் ஏற்றுக் கொள்ள கூடிய விடயம்.

அதேவேளையிலே சீனா இலங்கைக்குள் வந்து காலடி எடுத்து வைக்கும் விடயமாக மற்றைய நாடுகள் விசேடமாக ஜனநாயகத்தை பேணுகின்ற மனித உரிமையை மதிக்கின்ற நாடுகள் இங்கே வந்து இலங்கை அரசாங்கத்தோடு நட்புறவு பேணி தங்களுடைய விழுமியங்களை பரப்புவது நல்ல விடையம்.

ஆனால் சீனாவை பெறுத்தவரையில் அங்கு ஜனநாயகம் இருப்பது எவருக்கும் தெரியாத விடயம் ஒரு கட்சி ஆட்சி. மாற்று கருத்துக்களுக்கு இடமில்லை மனித உரிமைகள் என்றால் அது என்னவென்று கேட்கின்ற அளவுக்குதான் சீனாவினுடைய நிலைப்பாடு

ஐ.நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக 2012 இருந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் சீனா அந்த தீர்மானங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை மிக வெளிப்படையாக எடுத்திருக்கின்றது. ஆகவே தமிழ் மக்களை பெறுத்தவரையிலே பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையிலே மனித உரிமை மீறல்களுக்கு அதிகமாக முகம் கொடுக்கின்றவர்கள் என்ற வகையிலே. ஜனநாயகம் பேணப்படவேண்டும் என்று குரல் கொடுக்கின்ற வகையிலே. சீனாவினுடைய செல்வாக்கு இலங்கையில் அதிகரிப்பதை நாங்கள் விரும்பவில்லை.

ஆகவே நாங்கள் உயரியதாக கருதுகின்ற விழுமியங்களை கொண்ட நாடுகள் இலங்கைக்கு அறிவுரை கூறுவது இலங்கையில் ஈடுபடுவது வரவேற்கதக்க விடயம் என்றார்.

“ரிஷாட்பதியுதீன் வீட்டில் நடந்த அசம்பாவிதம் இனிமேல் இடம்பெறாது தடுக்க வேண்டும்.” – எம்.ஏ சுமந்திரன்

“ரிஷாட்பதியுதீன் வீட்டில் நடந்த அசம்பாவிதம் இனிமேல் இடம்பெறாது தடுக்க வேண்டும்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரனினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

“முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்கள் வீட்டிலே பணிபுரிந்து, தீக்காயங்களுக்கு உற்பட்டு, கடந்த 15ம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் மரணமும் அதைத் தொடர்ந்து வெளிவருகின்ற தகவல்களும் முழு நாட்டு மக்களுக்கும் மிகவும் வேதனையை அளிக்கின்றதாக இருக்கின்றது.

ஈடு செய்ய முடியாத இவ் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பினராகிய நாம் தெரிவித்து நிற்பதோடு, அவர்களது துயரில் நாமும் பங்கெடுக்கின்றோம் என்பதனையும் தெரிவிக்கின்றோம்.

இந்த துர் செயலை நாம் மிக வன்மையாக கண்டிப்பதோடு, சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகள் எந்தவித தலையீடுகளும் இன்றி நேர்மையான முறையில் இடம்பெற வேண்டும் என்றும் குற்றவாளிகள் யாராக இருப்பினும் அவர்களை வெளிக்கொண்டுவர வேண்டும் என்றும் முறையான தண்டனை வழங்கப்பட்டு நீதி நிலைநாட்டப்படவேண்டும் என்பதனையும் இச்சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் நாட்டு மக்கள் சார்பாக நாம் வேண்டி நிற்கின்றோம்.

வறுமை மற்றும் குடும்ப சூழ்நிலையின் காரணமாக  கல்வியை தொடரமுடியாது சிறுவர்கள் பணிக்கமர்த்தப்படுவதும், பல்வேறு வகையான துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல்களுக்கு சிறார்கள் முகம்கொடுப்பதும் அண்மைய காலகட்டத்தில் மிகவும் அதிகரித்திருக்கின்றது. இதனை நாம் வன்மையாக கண்டிப்பதோடு சிறுவர்கள் பாதுகாப்பு மற்றும் அவர்களது கல்வி உரிமைகள் தொடர்பான நாட்டின் சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தபடுவதனை வலியுறுத்துகிறோம்.

தொடர்ந்தும் எதிர்காலத்தில் இவ்விதமான அசம்பாவிதங்கள் இடம்பெறாது இருக்க அரசு மற்றும் அதிகாரிகளோடு பொதுமக்களும் அவதானத்துடனும் பொறுப்புணர்வுடனும் செல்லப்பட வேண்டியது.“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“குருந்தூர் மலையில் இந்து மக்கள் சென்று வழிபடுவதற்கான முழு உரித்தையும் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையினை நாங்கள் மேற்கொள்வோம்.” – எம்.ஏ.சுமந்திரன்

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்புப் பகுதியில் அமைந்துள்ள தமிழர்களின் பூர்வீக வழிபாட்டுத்தலமான குருந்தூர்மலையில், இந்து மக்கள் வழிபடுவதற்கான முழு உரித்தையும் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

குருந்தூர் மலையில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் வழக்கொன்றினைத் தொடர்வது தொடர்பில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோர் கடந்த 30.01.2021 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்தினைச் சந்தித்து கலந்துரையாடியதுடன் அன்று வழக்குத் தொடர்வதற்கான ஆவணங்கள் சிலவற்றினைக் கையளித்திருந்தனர்.

இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக இன்று வெள்ளிக்கிழமை முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோர் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைச் சந்தித்து வழக்குத் தொடர்வது தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிலவற்றினை கையளித்திருந்தனர்.

இச் சந்திப்பினையடுத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

குருந்தூர்மலை சம்மந்தமாக சில வருடங்களுக்கு முன்பிருந்தே ஒரு பிணக்கு ஏற்பட்டது. அது தொடர்பாக முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றிலே வழக்கொன்று தாக்கல்செய்யப்பட்டு அதிலே ஒரு இணக்கப்பாடு எய்தப்பட்டிருக்கின்றது. இதேவேளை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொல்லியல் திணைக்களத்தினர், அமைச்சரோடு வந்து அங்கே இருந்த வழிபாட்டுச்சின்னத்தை அகற்றி ஒரு புத்தர் சிலையை வைத்து புதியதாக தொல்பொருள் ஆராய்ச்சி என்று ஆரம்பித்துள்ளார்கள்.

ஆகையினாலே இது தொடர்பாக வழக்கு நடவடிக்கை ஒன்றை மேற்கொள்வதற்காக, கடந்த 2018ஆம் அண்டு தாக்கல்செய்யப்பட்ட AR/673/18 என்ற வழக்கின் ஆவணப் பிரதியை முழுமையாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் என்னிடம் கையளித்திருக்கின்றார்.

அந்தவகையில் இது தொடர்பான அடுத்தடுத்த நடவடிக்கைகள், அதாவது அந்த இடத்திலே இந்து மக்கள் சென்று வழிபடுவதற்கான முழு உரித்தையும் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையினை நாங்கள் மேற்கொள்வோம் என்றார்.

“மாகாண சபை முறைமை முழு அதிகாரங்களைப் பெற்றதாக ஒரு சமஷ்டிக் கட்டமைப்பில் வடக்கு, கிழக்கு இணைந்ததாக ஓர் ஆட்சியாக மலர வேண்டும்.”  – எம்.ஏ.சுமந்திரன்

“மாகாண சபை முறைமை முழு அதிகாரங்களைப் பெற்றதாக ஒரு சமஷ்டிக் கட்டமைப்பில் வடக்கு, கிழக்கு இணைந்ததாக ஓர் ஆட்சியாக மலர வேண்டும்.”  என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ். அல்வாய் கிழக்கு, இலகடியில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடமராட்சி கிளை அலுவலகத்தில் நடைபெற்ற தமிழ் – சிங்களப் புத்தாண்டு பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டிலே பலவிதமான பிரச்சினைகள் இருக்கின்றன. பொருளாதாரப் பிரச்சினை இப்போது முக்கியமாக மேலோங்கி நிற்கின்ற இந்தச் சூழ்நிலையிலேயே இந்தப் புத்தாண்டைக் கொண்டாடுவதற்கு வழியில்லாமல் இருப்பவர்களை நினைவு கூருகின்றோம். தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இந்தப் புத்தாண்டிலாவது ஒரு விடிவு ஏற்பட வேண்டும் என்ற ஏக்கத்துடன் இருக்கின்றார்கள். அந்த இலக்கை அடைய வேண்டும் என்று நாங்கள் பிரார்த்திக்கின்றோம்.

எங்களுடைய முயற்சி ஒருபோதும் கைவிடப்படமாட்டாது. ஆகையினாலே அனைத்து மக்களுக்கும் நாங்கள் வாழ்த்துச் சொல்லுகின்ற அதே வேளையில், விசேடமாக வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுடைய அரசியல் விடுதலையை நாங்கள் வேண்டி அதற்காக உழைப்போம் என்று உறுதி கூறுகின்றோம்.

அரசுக்குள்ளே மாகாண சபைத் தேர்தல் நடத்துவது பற்றி பெரியதொரு இழுபறி நடந்து கொண்டிருக்கின்றது என்று எங்களுக்குத் தெரிகிறது. அரசு அனைத்து மாகாண சபைகளையும் கைப்பற்ற வேண்டும் என்று சிந்திக்கின்றார்கள். ஆனால், கடும்போக்குவாத பின்னணியைக் கொண்ட பலர் – குறிப்பாக இந்த அரசைக் கொண்டு வந்தவர்கள் – விசேடமாக ஜனாதிபதியின் வெற்றிக்காக உழைத்த இனவாத சிந்தனை உள்ள கடும்போக்குவாதிகள் மாகாண சபை முறை அகற்றப்பட வேண்டும் என்று தங்களுடைய நிலைப்பாட்டைத் தெளிவாகத் தெரிவித்து வருகின்றார்கள்.

எங்களைப் பொறுத்தவரையில் மாகாண சபை முறையை ஒழிப்பதற்கு நாங்கள் இடம் கொடுக்கமாட்டோம். ஆனால், வெறுமனே இருக்கின்ற மாகாண சபை முறைமையே நாங்கள் எங்கள் பிரச்சினைக்குத் தீர்வு என்றும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். மாகாண சபை முறைமை இருக்க வேண்டும். ஆனால், அது முழு அதிகாரங்களைப் பெற்றதாக ஒரு சமஷ்டிக் கட்டமைப்பில் வடக்கு, கிழக்கு இணைந்ததாக ஓர் ஆட்சியாக மலர வேண்டும். அதற்கான எங்களுடைய யோசனைகளை இந்த அரசு நியமித்துள்ள அரசமைப்பு வரைபு குழுவிடம் முன்வைத்துள்ளோம். ஆகையினாலே எங்களுடைய முயற்சி இது தொடர்பாக தொடர்ந்து நடைபெறும். மாகாண சபைத் தேர்தல் மிக விரைவில் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு என மேலும் தெரிவித்துள்ளார்.

“தொல்லியல் திணைக்களத்துக்கு புதிதாக ஆலயங்கள் கட்டுவதற்கோ விகாரைகள் கட்டுவதற்கோ அவர்களுக்குரிய சட்டத்திலே எந்தவொரு அதிகாரங்களும் கிடையாது.” – எம்.ஏ.சுமந்திரன்

“தொல்லியல் திணைக்களத்துக்கு புதிதாக ஆலயங்கள் கட்டுவதற்கோ விகாரைகள் கட்டுவதற்கோ அவர்களுக்குரிய சட்டத்திலே எந்தவொரு அதிகாரங்களும் கிடையாது.” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன்,  என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி, உருத்திரபுரம் பகுதியில் அமைந்துள்ள உருத்திரபுரீஸ்வரர் கோயிலில் பௌத்த விகாரை அமைப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக கோயில் வளாகத்தில் நேற்று(10.04.2021) விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

அந்தக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “உருத்திரபுரீஸ்வரர் கோயில் வளாகத்தில் உள்ள மேட்டில் பௌத்த விகாரை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தொல்லியல் திணைக்களத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ள சட்டத்தில் அவர்களுக்கு உள்ள அதிகாரமானது, தொன்மை வாய்ந்த புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது மட்டுமேயாகும். புதிதாக ஆலயங்கள் கட்டுவதற்கோ விகாரைகள் கட்டுவதற்கோ அவர்களுக்குரிய சட்டத்திலே எந்தவொரு அதிகாரங்களும் கிடையாது.

கிளிநொச்சி, உருத்திரபுரீஸ்வரர் கோயிலில் பௌத்த விகாரை அமைக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. கோயில் வளாகத்தில் தொல்பொருள் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள தாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. அவ்வாறான ஆராய்ச்சிகள் தமிழ் தரப்பையும் இணைத்து மேற்கொள்ளப்பட வேண்டும்.

கடந்த தடவை குறித்த கோயிலுக்கு வந்திருந்த தொல்பொருள் திணைக்களத்தினரின் நடவடிக்கைக்கு ஊர் மக்கள் ஒன்றுகூடி எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் அவர்கள் நடவடிக்கையைக் கைவிட்டுப் போயுள்ளார்கள். இந்நிலையில், தொல்லியல் திணைக்களம் விகாரைகள் கட்டுவதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்தால் அதனை நாம் வலுவாக எதிர்ப்போம்.

இதேவேளை, எமது பிரதேசங்களிலே புராதனச் சின்னங்கள் ஏராளமாக இருக்கின்றன. அவ்வாறான புராதனச் சின்னங்களை அவர்கள் ஆராய்ச்சி செய்யலாம். நாம் தொன்மை வாய்ந்த ஒரு இனம் என்ற நிலையில் எமது பிரதேசங்களில் நிச்சயமாக பல தொன்மை வாய்ந்த இடங்கள் இருக்கும். எனவே, அவை ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும். இதன்போது, தமிழர்கள் எப்போதிருந்து இங்கே வாழ்ந்தார்கள் என்பதை உறுதிப்படுத்தக் கூடியதாக இருக்கும்.

எனவே, அவ்வாறான ஆராய்ச்சிகள் செய்யப்படும்போது தமிழ் மக்களினுடைய பிரதிநிதிகள், துறைசார் உத்தியோகத்தர்கள், துறைசார் மாணவர்கள் எல்லோரையும் இணைத்து அந்த ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.