க.வி.விக்னேஸ்வரன்

Thursday, September 23, 2021

க.வி.விக்னேஸ்வரன்

மாகாண சபை கையிலிருந்த போது எதையும் செய்யாது இன்று புலம்பிக்கொண்டிருக்கிறார் க.வி.விக்னேஸ்வரன் !

மாகாண பாடசாலைகளை மத்திய அரசு கையகப்படுத்துவதற்கு எதிராக வெகுவிரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

நேற்று யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

தற்போதுள்ள அரசானது மாகாணங்களுக்கு உரித்தான கல்வி ,சுகாதாரம் போன்ற விடயங்களை மாகாணங்களுக்கான அதிகாரங்களை தன் வசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. அதற்கு சிலர் துணை போகிறார்கள். சில மாயைகளை நம்பி சிலர் மாகாண அதிகாரத்தை மத்திக்கு தாரை வார்க்கும் முகமாக செயற்படுகிறார்கள்.

ஆனால் தற்போதுள்ள அரசானது 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு உட்பட்ட கல்வி ,சுகாதாரம் போன்ற விடயங்களை தனது ஆளுகைக்கு உட்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பில் நாம் நேற்று கல்வியலாளர்களுடன் ஒரு சந்திப்பினை மேற்கொண்டு ஒரு தீர்மானத்தை எடுத்துள்ளோம். அதாவது இந்த மாகாணத்திற்குட்பட்ட பாடசாலை மற்றும் வைத்தியசாலைகளை மத்திய அரசு கையகப்படுத்துவதற்கு எதிராக வெகுவிரைவில் வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்ய உள்ளதாக தீர்மானித்துள்ளோம் என்றார்.

……………………………………………………………………………………………………………………………………………………

வடமாகாணசபை இறுதியாக இயங்கிய காலத்தின் போது முதலமைச்சராக விளங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் இதனை தெரிவிப்பது வேடிக்கையாக உள்ளது. அதிகாரம் இவர்களுடைய கைகளில் இருந்த போது மாகாணசபைக்குள் நிதி மோசடியும் – கட்சிப்பேதங்களுமே அதிகரித்து காணப்பட்டிருந்தது. இன்று இவர்கள் அழுது கொண்டிருக்கும் பாடசாலைகள் தொடர்பாகவும் அதிகமாக அக்கறைப்பட்டிருக்கவில்லை.  மாகாணசபை இயங்குநிலையிலிருந்த போது பாடசாலைகளின் விடயங்களில் பெரிய தலையீடு செய்யவில்லை. வேறு மாகாணங்களின் பாடசாலைகளில் நவீன வகுப்பறைகள் என்ற தொனியிலான பல வகுப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் இதன் எண்ணிக்கை வடக்கில் மிகச்சொற்பமே. இது தவிர பல பாடசாலைகளில் ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை நிலவுகிறது. ஆங்கிலம் முறையாக கற்பிக்கப்படுவதில்லை. ஆய்வுகூட வசதிக் குறைவு . இப்படியான நிறைய குறைபாடுகள் உள்ளன. இவற்றை நீக்க எந்த மாதிரியான நகர்வுகளை மேற்கொண்டுள்ளார்கள் என்பது யாருக்குமே தெரியாது. பாடசாலைகள் தேசியமயமாவது தொடர்பாக அலட்டிக்கொள்ளும் நீங்கள் மாகாணபாடசாலையாக காணப்பட்ட போது என்ன செய்தீர்கள் என்பது ஆராயப்படவேண்டியது.

உண்மையிலேயே மாகாணசபைகளின் பால் அதீத அக்கறையுடையவர்களாயின் இவர்கள் பொறுப்பிலிருந்த போதே அதனை பலப்படுத்தியிருக்க வேண்டும். பிரச்சினைகளை சுமூகமாக முடித்திருக்க வேண்டும். இதையெல்லாம் செய்யாது விட்டுவிட்டு இன்று மாகாணசபை அடக்கப்படுகின்றது – ஒடுக்கப்படுகின்றது என்றெல்லாம் கூறுவது என்ன வகையான மனோநிலை என்பது தான் தெரியவில்லை.

இது தவிர அரசினால் ஒதுக்கப்பட்டிருந்த நிதியை வடமாகாணசபையினர் மீள அரசுக்கு அனுப்பிவைத்ததாக கடந்த காலங்களில் அதிக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. குறித்த விடயம் தொடர்பாக அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன , பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ ஆகியோரும் பதிவு செய்திருந்தனர். இவ்வளவு தான் இவர்களுடைய கால  தூரநோக்கான செயலாக அமைந்திருந்தது. இது தவிர புலம்பெயர் தேசங்களில் வாழும் முதலீட்டாளர்களை வடக்குக்கு அழைத்து வருவதற்கான எந்த நடவடிக்கைகயும் வடமாகாண சபை மேற்கொண்டிருக்கவில்லை.

 

சரி வேறு என்ன தான் சாதித்தார்கள் என்று கேட்டால் , மாகாணசபையால் கிடைத்த பெயரை வைத்துக்கொண்டு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் எழுக தமிழ்- தமிழ்தேசியம் என்றெல்லாம் கூறி அவர் தமிழ்தேசிய கூட்டமைப்பு கட்சியை உடைத்து புதிதான ஒரு கட்சியை உருவாக்கியதை தவிர வேறெதுவுமே நடந்தாகவில்லை என்பதே உண்மை. இனிவரும் காலங்களில் பதவிக்கு வரும் மாகாணசபைகளாவது இவர்கள் போல நடந்து கொள்ளாமல் இருந்தாலே போதுமானது என்ற மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு விட்டனர் என்பதே உண்மை.

“மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மறந்து அரசு முழுமையான இராணுவமயமாக்கலுடன் சர்வாதிகார ஆட்சியை மேற்கொள்கிறது.” – க.வி.விக்னேஸ்வரன்

“மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மறந்து அரசு முழுமையான இராணுவமயமாக்கலுடன் சர்வாதிகார ஆட்சியை மேற்கொள்கிறது.” என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்டநாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நேற்று கொழும்பு சுதந்திர சதுக்கப் பகுதியில் நடைபெற்ற அரசின் அடக்குமுறைகளுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

ஜனநாயக ரீதியில் தேர்தல் ஒன்று நடைபெறும்போது வேட்பாளர்களுக்கும் வாக்காளர்களுக்கும் இடையில் எழுத்தில் அடங்காத உடன்பாடு ஒன்று எட்டப்படுகின்றது. நாம் உங்களுக்கு வாக்களித்து நீங்கள் வென்றால் எமது பிரச்சினைகளைப் பேச வேண்டும். அவற்றுக்கு தீர்வு காண வேண்டும். அதிகாரம் கிடைத்த பின்னர் எம்மை விரட்டக் கூடாது என வாக்காளர் வேட்பாளர்களுடன் உடன்பாடு செய்கின்றனர்.

வேட்பாளர்களும் இந்த எழுத்தில் அடங்காத உடன்பாட்டை ஏற்றுக்கொண்டு, நாம் வென்றால் உங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்போம், சுயநலம் கருதிச் செயற்படமாட்டோம். உங்களுடன் ஒன்றாக நிற்போம் என்று கூறுகின்றனர். இதுதான் ஜனநாயகத்தின் தாற்பரியம்.

ஆனால், இவ்வாறு வாக்காளர்களுக்கு வாக்குறுதி கொடுத்து வென்ற பின்னர் மக்களை மறந்து, அவர்களுடனான உடன்பாடுகளை மீறி ஜனநாயகத்துக்கு முரணாகச் செயற்படத் தொடங்குகின்றனர். இதனால் மக்கள் இந்த அரசியல்வாதிகளுடனான தமது உடன்பாட்டை எடுத்துக்காட்ட வேண்டிய தேவை ஏற்படுகின்றது.

இதனை எடுத்துக்காட்ட முற்படும்போதே ஆர்ப்பாட்டங்களுக்குத் தடை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் கைது என ஜனநாயகத்துக்கு எதிரான சர்வாதிகாரம் தலைதூக்குகின்றது.

தற்போது நிர்வாகம் சம்பந்தமான சகல விடயங்களிலும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதன் மூலம் சர்வாதிகாரம் வித்திடப்படுகின்றது.

இலங்கையில் சர்வாதிகார ஆட்சிக்கான சகல தயார்படுத்தல்களும் முழுமையடைந்துள்ளன. இவ்வாறான நிலையில்தான் தம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மக்கள் ஆர்ப்பாட்டங்கள் மூலம் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றனர். இவற்றையும் சர்வாதிகாரம் மூலம் அடக்கவே ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்கின்றனர்.என்றார்.